Prakash’s Chronicle 2.0

Movies, a meme

Posted by: Prakash on: அக்டோபர் 9, 2008

நாகார்ஜுனன், ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். அதை அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு மீம் ஆகச் செய்கிறேன். கோச்சுக்கமாட்டார் ன்னு நினைக்கிறேன் :-)

அந்த இடுகைக்கான பின்னூட்டத்தை இங்கே அப்படியே எழுதுகிறேன். நான் குறிப்பிடும் நண்பர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எட்டு வயதில். முதன் முதலில் பார்த்தது மந்தைவெளி கபாலீ டாக்கீஸில் , சங்கராபரணம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. சில வாரங்களுக்கு முன்பு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நேற்று இரவு டிவிடியில் முக்தா ராமசாமி இயக்கிய பொம்மலாட்டம் பார்த்தேன். ஒரு துறையில் அற்புதமான திறமை கொண்டிருக்கும் சோ, அரசியலரங்கில் ஏனிப்படி கோமாளியாகிப் போனார் என்பதுதான் உடனடி நினைப்பு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மௌலியின் ‘ மற்றவை நேரில்’, மகேந்திரனின் ‘மெட்டி, ஸ்ரீதர்ராஜனின் ‘ கண்சிவந்தால் மண் சிவக்கும்’
(பார்த்த மாத்திரத்தில் அவள் அப்படித்தான் படமும் தாக்கிற்றுதான் என்றாலும், ஸ்ரீபிரியா கதாபாத்திரம் மத்திய-தர-மக்களின்-பல்ஸ்-பிடித்துப்-பார்த்ததாகச்-சொல்லப்படும் பாலச்சந்தரின் பட பாத்திரம் போல கொஞ்சம் phony ஆக இருந்தது)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1996 இலே. கலைஞருக்கு ஆதரவாக தலைவர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மைடியர் குட்டிச்சாத்தானின் முப்பரிமாண சினிமா, அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசிப்பதுண்டு. ஆனால் பொதுவாகத் திருப்தி இல்லை. ஒரு பக்கம், சுவாரசியமான விஷயத்தை dry ஆக எழுதும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள். இன்னொரு பக்கம், frivolous ஆன விஷயத்துக்கு முக்கியத்துவம் தரும் ராண்டார்கை போன்றார்களின் சுவாரசியமான எழுத்து, இதற்கிடையில் மயிர்பிளக்க வைக்கும் சிற்றிதழ் எழுத்துகள், தகவல்கள் அதிகம் நிரம்பிய அறந்தை, அவ்வப்போது ஆயாசம் ஏற்படுத்தும் யமுனா ராஜேந்திரன், இந்தாள் தமிழ்ல எழுதித் தொலைக்க மாட்டாரோ என்று நினைக்கும் எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்கள் எழுத்துக்களை மேய்வதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றால், தமிழனுக்கு தமிழ்ச் சினிமா இசைதானே? அதிலே ஏன் ஒரு கேள்விக்குறி.

இதை derogatory ஆகச் சொல்ல வில்லை. இசை நுட்பங்கள், வடிவங்கள், நவீனங்கள், இசை படைப்புகள் போன்றவற்றுக்கு, தமிழ்ச் சினிமா இசை அமைப்பாளர்கள் சிலர், குறிப்பாக இளையராஜா, எம்.எஸ்.வி போன்றோர் பங்களிப்பு செய்ததுக்கு ஈடாக, கவிதைக்கு பாரதியார் கூடச் செய்ததில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம் உலக மொழி என்றால், பாப்புலரான ஹாலிவு சினிமா பார்ப்பதுண்டு. உலக சினிமா பார்ப்பதில்லை. இந்திய சினிமா பார்ப்பதுண்டு. எமெர்ஜென்ஸிக்குப் பின்னான நாட்களில் கன்னடத்தில் நல்ல படங்கள் வந்ததுண்டு.நாகபரணா, கிரிஷ்கர்நாட், சங்கர்நாக் போன்றவர்கள் எடுத்த படங்கள் விருப்பம்.கன்னடம் போல அல்லாமல், மலையாளத்தின் நல்ல படங்களுக்கு பொதுவாக அங்கீகாரம் கிடைத்துவிடுவதுண்டு. அவற்றையும் பார்ப்பேன். இந்தி மொழியிலும் அப்படியே. தங்களின் கலாசாரத்தை, நிலபரப்பை, உணவுப்பழக்க வழக்கங்களை, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரிய , வங்காள, அசாமிய மொழிப்படங்களைப்ப் பார்க்க விரும்புவேன். அதை லோக்சபா தொலைக்காட்சி நிறைவேற்றி வருகிறது. நாம் உலக மொழிப் படங்களைப் பார்க்கும் முன்பு, இந்திய மொழிப் படங்களை பார்க்கவேண்டும் என்று சொல்வேன். மாநிலங்களுக்கு இடையில் உள்ள வெளியைக் குறைப்பதில் திரைப்படங்கள் உதவி செய்யும் என்பது என் கருத்து. உதாரணமாக ஆந்திரா சாப்பாடு காரம் என்று தெரியும், ஆனால் ஜார்க்கண்ட் சாப்பாடு?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. இதுவரை இல்லை :-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வளமாக இருக்கிறது. கலைப்படைப்புக்கு உதவி செய்யும் நுட்பத்தில் விலை மட்டுப்படும் பொழுது அங்கே ஜனநாயகம் தலை தூக்கும். நேர் நேர் நிரை நேர் போன்ற இலக்கண நுட்பம் எல்லாம் தேவை இல்லை, வெறும் போஸ்ட்கார்ட் போதும் புதுக்கவிதை எழுத என்று ஆனது போல. இந்த நிலைமை, குறைந்த செலவில் நிறைய நல்ல படங்களுக்கு வழி வகை செய்யும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இதற்கு, ஒரு அரசு உயர் அதிகாரி , பிரஸ் மீட்டில் சொல்வது போல பதில் சொல்ல வேண்டும் என்றால், ” We appreciate your interest in this issue. There can, however, be no clear answer to such hypothetical questions.”

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

பரத்
பாஸ்டன் பாலாஜி
பா.ரா
லக்கிலுக்
சித்தார்த்

google க்கு மட்டும் வாய் இருந்தா

Posted by: Prakash on: அக்டோபர் 3, 2008

ஓ ன்னு அழும்

[ ஒரு அவசர பின்குறிப்பு : சுழித்துக் காட்டப்பட்டுள்ள பதங்கள் நான் தேடியதல்ல. அதைத்தான் தேடுகிறேனாக்கும் என்று க்ரோம் உலாவி நினைத்துக் கொண்டு, auto suggest மூலம் காட்டியது. ]

Use only Internet Explorer please

Posted by: Prakash on: அக்டோபர் 2, 2008

சொல்றது நான் இல்லை… துக்ளக் சோ ராமஸ்வாமி

Hardware X Software

Posted by: Prakash on: செப்டம்பர் 30, 2008

[ஐந்து வருடங்களுக்கு முன்பு, குறிப்பாக நவம்பர் 2003 இலே ராகாகி குழுமத்தில் எழுதியது]

ம்மா, எத்தனை தரம் சொன்னாலும் கேக்க மாட்டியா? இந்த பெண் பார்க்கிற பிசினஸ் எல்லாம் வேண்டாம்..

அப்படி சொன்னா எப்படிடா ரங்கா? பொண்ணு பாக்காமே எப்படி கல்யாணம் செய்யறது.

அதல்லாம் வேண்டாம். நீயும், அப்பாவும் போய்ப் பாருங்க. கூட வேணா சியாமளாவை கூட்டிக்கோ. வந்து பாத்துட்டு ஓகேன்னா சொல்லு. நான் பண்ணிக்கிறேன். தலைக்கு மேல வேலை இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதே.

சரிடா.

0

என்னடி, திருச்சிலேந்து போன் வந்துது போல இருக்கே. என்ன சொல்றாங்க?

அவங்க கைக்கு அஸ்வின் ஜாதகமும் போயிருங்குங்க. அஸ்வினையே முடிக்கலாம்னு அபிப்ராயப் படறாங்க போல இருக்கு. நம்ம பையன் வேலை வேற ஒரு சிக்கல்.

யாரது அஸ்வின்? நம்ம சம்மந்தியோட, அக்கா பையனா? அமெரிக்காலே இருந்தானே அவனா? அவன் இப்ப மெட்ராஸ்லே வேலைன்னா தேடிக்கிட்டு இருக்கான்? ஆனா பத்து பேருக்கு வேலை குடுக்கறாண்டி நம்ம சிவில் எஞ்சினியர். இவன விட அவன் ஒசத்தியா?

ஆமாம். அவனுக்கு வேலையில்லேனாலும் அவன் சா·ப்ட்வெர் தான். உங்க புள்ளே மொதலாளின்னாலும் உள்ளூர்லே மேஸ்திரி வேலைதான்

John Abraham – Nagarjunan – Jeyamohan

Posted by: Prakash on: செப்டம்பர் 24, 2008

ஜான் ஆபிரகாம் பற்றி, நாகார்ஜுன னுடைய மூன்று ( ஒன்று, இரண்டு, மூன்று ) பகுதிகள் தொடர், ஒரு முக்கியமான ஆவணம். ஜெயமோகன், இதே ஜான் பற்றி எழுதி இள மனங்களில் ஏற்படுத்த முயன்ற பிம்பத்தை, நாகார்ஜுனன் எழுத்து முற்றிலுமாகக் கலைத்துப் போடுகிறது. ஜானின் முதல் படமான, ‘ வித்யார்த்திகள் இதிலே இதிலே’ என்ற படத்தைப் பற்றி நாகார்ஜுனன் இவ்வாறு எழுதுகிறார்.

வித்யார்த்திகளே இதிலே இதிலே (1971).

கதை என்றால், பள்ளியில் கால்பந்தாட்டம். ராஜு என்ற மாணவன் பந்தடித்து, பள்ளி நிறுவனரின் சிலை உடைந்துவிடுகிறது. சிலை ரிப்பேர் செய்யப் பணம் தர வேண்டும் இல்லையேல் பள்ளியிலிருந்து விலக்கப்படுவான் ராஜு என்ற நிலை. மாணவர்கள் ஒன்றிணைந்து ஷூ பாலிஷ் செய்து, லாட்டரி டிக்கெட் விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். தலைமையாசிரியருக்கு இது பிடித்துப்போகிறது. நிர்வாகமே சிலையை ரிப்பேர் செய்கிறது. மாணவர்கள் சேர்த்த பணத்தில் சுற்றுலா போக அவர் ஏற்பாடு செய்கிறார். மீண்டும் கால்பந்தாட்டத்தில் சிலை உடைகிறது.

இந்தப்படத்தில் அடூர் பாஸி, ஜெயபாரதி, எஸ். பி. பிள்ளா தவிர மனோரமா, எஸ். வி. ரங்காராவ் போன்ற தமிழர்கள் கொண்டாடும் நடிகர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழர்கள் இந்தப்படத்தைப் பேசுவதில்லை.

சமகாலச்சூழல் கண்டுணரத் தவறிய ஜி.நாகராஜன், கோபிகிருஷ்ணன் போன்ற பெரும் படைப்பாளிகள் போலவே, நாசூக்கற்ற சில பழக்க வழக்கங்களைக் கொண்டு இருந்த ஜான் ஆபிரகாமை, அதன் காரணமாகவே, அவரது படைப்புகளை நிராகரிக்கும் ஜெயமோகனுக்கும்,

‘அவரை நண்பர் என்று கூறமுடிகிற சமயம், அதை அறுத்துக்கொள்ளும் வகையில் எதையாவது செய்துவிடுவார். இதையெல்லாம் கண்ட உடனிருந்த சில தமிழ் நண்பர்கள் “இவர் படமெல்லாம் எடுப்பவரா என்ன, அறையைக் காலிசெய், அல்லது நாங்கள் காலிசெய்வோம்” என்று பயமுறுத்தினார்கள். மலையாள நண்பர்கள் பரவாயில்லை, உதவினார்கள்’

என்று இரண்டே வாக்கியங்களில் ஜானின் இயல்பு பற்றிச் சொல்லிக் கடந்து விடுகிற நாகார்ஜூனனுக்கும் தான், அணுகுமுறை அளவில் எத்தனை வேறுபாடு? எத்தனை நேர்மை?

நிசத்தில், இந்தத் தொடரை வாசித்து முடிந்ததும், நாகார்ஜுனனை கட்டிப் பிடித்துக் கைகுலுக்க வேண்டும் போல இருந்தது. விசாரித்தால், அவர் இலண்டனில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே, எனக்கு விசா கிடைத்து பாங்க் பாலன்ஸு உயரும் வரை நாகார்ஜுனன் பொறுமை காக்க வேண்டும்.

ஜான் ஆபிரகாமின் திரைப்படப் பிரதிகள் பற்றி, நிழல் திருநாவுக்கரசுவிடம் விசாரித்தால் தெரியும் என்கிறார்.திருநாவுக்கரசை, செல்ஃபோனில் முயற்சி செய்தால், ஒரு அக்கா இங்கிலீஸில் என்னமோ சொல்கிறது. என்ன அர்த்தமோ எவன் கண்டான்?

*********

ஸ்டாலின் ராஜாங்கம் என்ற சிற்றிதழ் எழுத்தாளர், ஒரு கட்டுரையில்

‘ இந்திய தத்துவ வரலாற்றில், நாத்திகம் என்பது தனித்த சிந்தனைப் போக்காக எப்போதும் இருந்து வந்துள்ளது. என்றாலும், நாத்திகம் வெகுஜன அரசியல் தளத்தை எட்டியது பெரியார் ஈ.வெ.ரா.காலத்தில் தாம். ‘

என்று எழுதியிருந்தார்.

இந்த பெரியாருக்கு முன்பான நாத்திக மரபிலே, முக்கியஸ்தர்கள் யாவர்? யாருக்காவது தெரியுமா?

********

சுகுணா திவாகர், ‘ மறக்கப்பட்ட கலைஞர்கள்’ என்ற வரிசையிலே, கவுண்டமணி பற்றி எழுதும் தொடர், முக்கியமான பதிவு. முதல் பகுதியை வாசித்த பொழுது, எங்கே கவுண்டமணியை, ஒரு எதிர்கலாச்சாரவாதி பிம்பத்துக்குள் அடைக்க முயல்கிறாரோ சுகுணா என்று கொஞ்சம் அச்சமாக இருந்தது. இரண்டாம் பகுதியில் அச்சத்ததைப் போக்கினார்.

திரையில் இருந்து கொண்டே, திரையுலகம் கட்டமைத்த தோற்ற வழிபாடுகளையும், ‘பக்தி’ கலாசாரத்தை, கவுண்டர் போல எதிர்த்தவர் இன்னொருவரில்லை என்கிறார் சுகுணா. முழுமையாக உடன்படுகிறேன்.

பாபாவில் ரஜினிகாந்தும், சிங்காரவேலன், இந்தியனில் கமல்ஹாசனும் கவுண்டமணியின் சொல்வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியது நினைவுக்கு வருகிறது.

********

நீண்ட நாட்களுக்குப் பிறகு நியூபுக்லாண்ட்ஸ் விஜயம்.

புத்தகம் வாங்கி நீண்ட நாளாகிறது. முருகனின் ரெட்டைத் தெரு வந்துருச்சா என்று, சமீபத்திய சாருநிவேதிதா மொட்டை மாடிச் சந்திப்புக்காக கிழக்குக்கிருக்கப் போன பொழுது கேட்டால், வந்துருச்சு, ஆனா வரலை, என்றார்கள் வைகைப்புயல் பாணியில்.

அரிப்பு தீர்வதற்குள் வாங்கிவிட வேண்டும் என்பதால், இன்று புக்லாண்ட்ஸுக்கு ஒரு அவசர விஜயம். தி.நகர் என்ற நிலப்பரப்பு நம் கையை விட்டுப்போய் , வணிகர்கள் கையில் சிக்கிச் சீரழிவது நிதர்சனமாகத் தெரிகிறது. மேம்பாலம் கட்டி முடிந்து போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின்புதான், புக்லாண்ட்ஸ் பக்கமெல்லாம் போக முடிகிறது. சில புத்தகங்களும், நிழல், தமிழினி பிரதிகளும் வாங்கி வந்தேன். மாதந்திரச் சிற்றிதழ் ஒன்று டிவிடி வடிவத்தில் வருகிறது. 70 ரூபாய். வாங்கவில்லை.

*********

TwitterCounter for @icarusprakash

அண்மைய மறுமொழிகள்

SnapJudge மேல் Movies, a meme
WA மேல் Movies, a meme
கற்றதும் பெற்றதும் ஹ… மேல் மிக்சர் – II
WA மேல் Movies, a meme
செந்தழல் ரவி மேல் சங்கச் சித்திரங்கள்- ஜெயம…

RSS Latest From Gilli

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

Subscribe

c

Blog Stats

  • 54,837 hits