டி.ராஜேந்தர் என்கிற இசையமைப்பாளர்..

image source : http://anikartick.blogspot.in/
image source : http://anikartick.blogspot.in/

ஏ.ஏ.ராஜ் ஒரு தலைராகத்தின் ஒரு சில பாடல்களுக்கு இசை அமைத்தார். ( எந்தப் பாடல்களுக்கு என்று யாருக்கும் தெரியாது) அந்தப் படத்தின் மூலமாகக் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. பின்னர் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே படம் தணியாத தாகம். அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு பாடல் நன்றாக இருக்கும் ( சிலோனில் நானே பலமுறை கேட்டுருக்கிறேன்) அவ்வளவுதான். ஒருவேளை பல படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் எம்எஸ்வி, ராஜா, ரகுமான் ரேஞ்சுக்கு இருந்திருக்குமா அல்லது சங்கர் கணேஷ், சந்திரபோஸ் லெவவில் இருந்திருக்குமா தெரியாது. வெறுமனே இந்தத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு,

சின்னச் சின்னக் கண்ணா ( கிளிஞ்சல்கள்), ஜூலி ஐ லவ் யூ ( கிளிஞ்சல்கள்)., அமைதிக்குப் பெயர்தான் சாந்தி, வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள், வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில்), கதிரவனைப் பார்த்து பூக்கள் விடும் தூது, மூங்கில் காட்டோரம் ( பூக்கள் விடும் தூது), நெஞ்சம் பாடும் புதிய ராகம் ( நெஞ்சில் ஒரு ராகம்), தினம் தினம் உன் முகம், தங்க நிலவே உன்னை உருக்கி ( தங்கைக்கோர் கீதம்), எந்தன் பாடல்களில் ஒரு ( உறவைக் காத்த கிளி)., இதயம் அதைக் கோயில் என்பேன், இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கரை காற்றே நில்லு ( உயிருள்ளவரை உஷா), எங்கும் மைதிலி எதிலும் மைதிலி, கண்ணீரிலே மீனழுதால், நானும் உந்தன் உறவை, பொன்மானை நான் காண ( மைதிலி என்னைக் காதலி), மாலை எனை வாட்டுது, சோலைகெள்ளாம் பூக்களைத் தூவி ( பூக்களைப் பறிக்காதீர்கள்), எனது கானம் உன் காதில் விழவில்லையா, சொல்லாமத்தானே ( ஒரு தாயின் சபதம்), தோள்மீது தாலாட்ட (என் தங்கை கல்யாணி), உயிரே வா, காதலே காதலே ( மோனிஷா என் மோனாலிசா), வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ( கூலிக்காரன்),

போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை தொடர்ந்து தந்து, தனது முதல் வெற்றி தற்செயலானதில்லை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்த பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரை, ( டி.ஆருக்கு படைப்பாளிகளுக்கு உரித்தான கிறுக்குத்தனம் சற்றே அதிகம் என்ற காரணத்தால்) அலட்டல் பேர்வழிஏன்று ஒரே வார்த்தையில் ஒதுக்கி, அவரது அத்தனை சாதனைகளையும் குப்பைக்கூடையில் தள்ள, ஜெயமோகன் சார் அவர்களால் மட்டும் தான் முடியும்.

http://www.jeyamohan.in/?p=42900

ஏர்டெல் சூப்பர் சிங்கரும் மிசுகினும்….

இளையராஜா ரவுண்டு என்பதால் ரெண்டு நாளாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மிஷ்கின் வந்திருந்தார். பாவனா ஜாலியாக வரவேற்றுப் பேச, மகாபா ஆனந்த் மட்டும் மம்மியை கண்ட மந்திரி மாதிரி பம்மினார். பேசும் பொழுது கொஞ்சம் அதிகப்படியான பயபக்தி. ஓ.நா.ஆ.கு படத்தை critically acclaimed என்று பாவனா குறிப்பிட, மிஷ்கின் சட்டென்று குறுக்கிட்டு

” அதல்லாம் இல்லை, அப்பறம் இது ஜோல்னாப் பையர்களுக்கான படம்னு நினைச்சுக்கப் போறாங்க… இது ஒரு சாதாரணமான திரில்லர் படம் .. என்ன குத்துப்பாட்டு மட்டும் கிடையாது”

என்றார்.

மிஷ்கின்,இந்த ஞானம் உங்களுக்கு கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாம். அடுத்த படத்துல கொஞ்சம் பாத்துகிடுங்க, ப்ளீஸ்

ஆமாம். நிகழ்ச்சி நடக்கையிலே, இளையராஜா மீதான தன்னோட பக்தி, காதல் பத்தியெல்லாம் நிறையப் பேசினார். அப்படிப் பேசறப்ப சீனியண்ணன் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கணுமே…செம காமெடி. இருக்காதா பின்னே?

இலக்கியம் வளர்த்த மாதநாவல்கள்….

80 களிலே வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கியதில் மாதநாவல்களுக்கு முக்கியமான இடம் உண்டு.

மாதநாவல் என்றாலே, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்ககு பல வருடங்கள் முன்பாகவே, மாலைமதியும் ராணிமுத்துவும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள் அதிலே வெளியாகியிருக்கின்றன.

நினைவில் இருந்து சொன்னால், அசோகமித்திரனின் ‘பாவம் டல்பதடோ’, சுப்ரமணியராஜுவின் ‘இரவுகள் தவறுகள்’ மாலைமதியிலும், சுஜாதாவின் நைலான் கயிறு, சாவியின் வாஷிங்டனில் திருமணம் ( மறு பதிப்பு) ஆகியவற்றை ராணிமுத்துவிலும் வாசித்த நினைவிருக்கிறது. இவற்றின் வெற்றிக்குப் பிறகு குங்குமம் க்ரூப்பில் இருந்து குங்குமச்சிமிழ், சாவியில் இருந்து மோனா போன்ற இதழ்கள் வெளியாகி சக்கை போடு போட்டன. மேகலா, சுஜாதா, வான்நிலா, நவரத்தினம் போன்ற இதழ்களும் வந்தன. ஜெயகாந்தன் கூட ஒரு மாத நாவலை நடத்தி வந்தார். அதில் அவரது கேள்வி பதில்கள் மிகவும் சுவாரசியமானவை. இவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருந்தன. அட்டை டு அட்டை முழுக்கதை. நாவல் போரடித்தது என்றால் தூக்கிப் போட வேண்டியதுதான்.

இந்த மாத நாவல்களில், துப்பறியும் கதை , திரில்லர் கதைகள் நல்ல விற்பனை ஆகவே, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஜியே பப்ளிகேஷன்ஸ் ஜி.அசோகன், ராஜேஷ்குமாரை வைத்துக் கிரைம்நாவல், பட்டுக்கோட்டைப் பிரபாகரை வைத்து, எ நாவல் டைம், assorted எழுத்தாளர்களைக் கொண்டு பாக்கெட் நாவல் என்று மூன்று மாத நாவல்களைத் துவங்கினார். பிற மாதநாவல்களை, எழுதியவரின் பெயரை பார்த்து வாங்குவார்கள் ( அல்லது வாங்காமல் விடுவார்கள்). ஆனால் ஜீயேவின் நாவல்கள், பிரபாகர், ராஜேஷ்குமார் வாசகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. அந்த நாவல்களுக்கான வாசகர் கூட்ட விழாக்கள், திருவிழாக்கள் போல நடக்கும். பிறகு, பிரபாகரும், சுபாவும் இணைந்து உங்கள் ஜூனியர் என்று ஒரு நாவலைச் சொந்தமாக நடத்தி அதுவும் பலத்த வெற்றி பெற்றது..இவை வெறும் நாவல்களாக மட்டும் இல்லாமல், பல்சுவை வார இதழ் போல ஏகப்பட்ட features இருக்கும். கேள்விபதில், சினிமா பேட்டி, சிறுகதை வாசகர் பங்கேற்பு என. தேவிபாலா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, ஆர்னிகா நாசர் என்று பலரும் எழுதி வந்தார்கள்…

இதிலே முக்கிய வசதி என்ன என்றால், நாவல் வெளியான நாலாவது நாள் பழைய பேப்பர் கடைக்கு வந்துவிடும்… நான் படித்த அத்தனையும் நாலணா எட்டணாவுக்கு வாங்கிப் படித்தவைதான்.. கொஞ்சம் வளர்ந்ததும் லாயிட்ஸ் ரோட் ஈசுவரி லெண்டிங் லைப்ரரி, அபிராமபுரம் செந்தில் லெண்டிங் லைப்ரரி பக்கம் எல்லாம் போகவே, 87 – 88 வாக்கிலே இவற்றை எல்லாம் ஏறகட்டிவிட்டு திசை மாறினேன். காகிதமலர்களிலே ஆதவனும், கொலையுதிர்ககாலத்திலே சுஜாதாவும் அறிமுகம் ஆனார்கள்.

அதற்குப் பிறகு மாத நாவல் ஏரியா எப்படி இருக்கிறது என்ன ஆனது என்றே தெரியாமல் போனது…யாராச்சும் எழுதுங்களேன்…

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – அட்டகாசம்…

நான் ரொம்ப லேட்டு.

படத்துக்கான விமர்சன / திறனாய்வுப் பதிவுகளிலே, காட்சிகள், பாத்திரங்களின் பெயர்கள், அதிலே வரும் சம்பவங்கள் , தர்க்கப் பிழைகள் எல்லாவற்றையும் ரொம்ப ‘குறிப்பாக’ போட்டுப் பலரும் பலவிதமாகப் பிரித்து மேய்ந்திருந்ததிலே ( அதாவது படம் பார்த்தாலொழிய எழுதப்பட்ட விஷயம் புரியாது என்கிற அளவுக்கு) அளவுக்கு மீறிய குழப்பம் தான் எஞ்சியிருந்தது. ஆனால், அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்குத்தான் என்று படம் பார்த்தபொழுது தெரிந்தது. எந்த கேள்விகளையும் மனதிலே வைத்துக் கொள்ளாமல், ஒரு திறந்த மனதுடன் நடிப்பு, காட்சிகள், கேமிரா கோணம், இசை, நடிப்பு, வசனம் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல், ஒரு முழு அனுபவமாக , ஓரிடம் கூடத் தொய்வில்லாமல் படத்துடன் ஒன்றி ரசித்துப் முடிந்தது.

ஒரு ரசிகன், இயக்குனரிடம் கோரும் மிக அடிப்படையான விஷயம் இதுவே.

அந்தக் குறைந்த பட்ச கோரிக்கையை நிறைவேற்றித் தந்ததற்காக மிஷ்கினுக்கு நன்றி.

ஆரம்பம் முதல்கொண்டே, இப்படத்தை ஒரு கலைப்படம் ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டு, பத்தாததுக்கு motormouth மிஷ்கினும் தத்துவம் அது இது அந்தரேஞ்சிலேயே பேசி, இது போன்ற அட்டகாசமான திரில்லர் படத்துக்கு ஏங்கி இருக்கும் ரசிகர்களை தியேட்டர் பக்கம் வர விடாமல் ஒழித்துவிட்டார்கள்.

குறைந்தபட்சம், ஆக்‌ஷன் ப்ளாக், நறுக் சுறுக் வசனங்களை எல்லாம் சேர்த்து, விறுவிறுப்பாக ட்ரையெலர் கட் செய்திருந்தாலே படத்துக்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.

_

படத்தை இன்னும் மூன்று முறை பார்க்கணும். அப்புறம் பின்னணி இசையை மட்டும் கேட்கணும் அப்ப படத்தை நாலாவது முறை பார்த்த கணக்கு ஆகிவிடும். சந்தேகம் இருந்தால் நாயகன் பின்னணி இசையைக் கேளுங்க காட்சிகள் துல்லியமாகக் கண்முன் விரியும். அந்த அளவுக்கு மொட்டையின் ஆவர்த்தனம்.

இந்த மாதிரி பழிவாங்குதல் வகை action படங்களிலே ஃப்ளாஷ்பேக் அமைக்கிறது ரொம்ப இம்சை. அதுவும் ஆரம்பத்துல, ஆடியன்ஸ் கிட்ட எதையும் லீக் பண்ணாம இஷ்டத்துக்குப் படம் காட்டினா, ஃப்ளாஷ்பாக் கொஞ்சம் வெய்ட்டா இருக்கணும். அப்பதான் அந்த impact சரியா அளவுல இருக்கும். [ஷங்கர் படங்கள் நல்ல உதாரணம்] இல்லைன்னா இதுக்காடா இவ்ளோ சீன் போட்டீங்கன்னு திட்ட்டுவாங்க.

அதுபோல இந்தப் படத்துலயும், சம்பவங்கள் வேகமா நகர்ந்து, செம்ம விறுவிறுப்பாக படம் ஓடினாலும், நான் கொஞ்சம் தெனாவட்டா “செரி செரி மேட்டருக்கு வா…., அப்படி என்னதான் சொல்லப் போறேன்னு” காத்திருந்தேன்.

ஆனா எதிர்பாராத விதமா, மொத்த முன்கதையையும் ஒரு அஞ்சு நிமிஷ monologue ல சொல்லி ஆடியன்ஸை அசர வைக்கிற அந்தக் காட்சி…

அது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை.. ( உதவி1 : சார், இதல்லாம் ஜனங்களுக்குப் புரியாது சார். உதவி2 : ஆமா சார், ஆமா சார்) அந்தக் காட்சியிலே ஓநாயோட உடல் மொழி, posture, diction, வசனத்துக்கான வார்த்தைத் தேர்வு, ‘இது நான் படைச்ச கேரக்டர், எல்லாம் என் கண்ட்ரோல்லதான் இருக்கு, எதும் கை மீறிடாது’ ன்னு முகத்துலயே தெரியற அந்த கான்ஃபிடன்ஸ்….. பிரமாதம்.

ஆடியன்ஸுலேந்து எவனாச்சும் ‘ஹெஹ்ஹே… மூட்றா டேய்..” ன்னு சவுண்டு விட்ருந்தா மொத்தப் மேட்டரும் நாஸ்தி… எவ்ளோ பெரிய calculated risk ?

நீண்ட நாள் கழித்து படம் பார்க்கையில் பேஜாராகிப் போன தருணம் அது.
_

முதல் பார்வையிலே, படத்துக்குப் பின்னே பெரிய லெவல் தத்துவங்கள் எல்லாம் இருக்கிற * எனக்குத்* மாதிரி தோணலை. ஒருவேளை இன்னொரு முறை பார்த்தால் தெரியவரலாம். மிஷ்கின் ஒரு காரியக்கிறுக்கர். இது புத்திசாலித்தனமான படைப்பு. இந்த படத்தின் shelf life என்ன என்பதை காலம் முடிவு செய்யும் அல்லது தியாகராஜன் குமாரராஜா தீர்மானிப்பார்.

ரைட்…. போலாம்…

நெஸ்ட் யாருப்பா லைன்ல…

தமிழுக்கு டான் பிரவுன்கள் தேவையா?

நமக்குத் தேவை டான் பிரவுன்கள்

இதத்தான் நான் ரொம்ப நாளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன்னால எங்களைப் போலச் சிறுவர்கள் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசித்தது கண்டபடி படித்து பண்டிதனாகும் நோக்கத்துல இல்லை. முழுக்க முழுக்க கதைகள் தர இன்பத்துக்காகவே வாசித்தோம். லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, ஹேமா ஆனந்ததீர்த்தன், பிவிஆர் வழியாக சுஜாதா கிட்ட வந்து அங்கேர்ந்து இருந்து ஜேஜே வழியாக நவீன இலக்கியவீதிக்குச் சென்றவர்கள் ஒரு விழுக்காடு தான் என்றாலும் மீதம் உள்ளவர்கள்?

எண்பதுகளிலே ராஜேஷ்குமார் , ஆயிரக்கணக்கான நாவல்களை எழுதி, எவ்விதமான மார்க்கெட்டிங் உத்திகளும் இன்றி வெறுமனே பெட்டிக்கடைகளில் வாழைப்பழத்தார்களுக்கு இடையிலே தொங்கவிட்டு விற்பனை செய்தே பல்ப் ஃபிக்‌ஷன் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று, இன்றைக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை என்றும் தமிழ்ப்புத்தகங்கள் விற்பதில்லை என்றும் புலம்பித் திரியும் எழுத்தாளர்கள் / பதிப்பாளர்கள் யாராவது ஒரு அடிப்படை ஆய்வு செய்திருக்கிறார்களா?

நவீன இலக்கிய கதைகளுக்கும் , குமுதத்தின் ஒருபக்கக் கதை சல்லித்தனத்துக்கும் நடுவாந்திரமாக ஒரு பாதை இருக்கிறதென்றும் அந்தப் பாதையிலே வந்தவர்கள் தான் வேற வழியில்லாமல் டீவி சீரியல்களிலே மூழ்கிவிட்டார்கள் என்றாவது யாருக்காவது தெரியுமா?

இன்றைக்கு ஹிந்துவிலே ஜெயமோகன்,

” அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து தமிழில் இல்லை என்றால், இளம் வாசகர்கள் ஆங்கிலத்தில்தான் அவற்றை வாசிக்க ஆரம்பிப்பார்கள். இன்று சுஜாதா இல்லை. ஆகவே, நம் இளைய தலைமுறை டான் பிரவுனையும் சேத்தன் பகத்தையும் வாசிக்கிறது. அவர்களில் நுண்ணுணர்வு உள்ளவர்கள் பின்பு நேராக ஓரான் பாமுக்குக்கும் முரகாமிக்கும் சென்றுசேர்கிறார்கள்.

க.நா.சுப்ரமணியமும் சுந்தர ராமசாமியும் வணிக எழுத்தை அத்தனை ஆவேசமாக எதிர்த்தார்கள் என்றால், அதற்கான காரணம் அது இலக்கியத்தை மறைத்தது என்பதுதான்; இலக்கிய மேதைகளும் பேரிலக்கியப் படைப்புகளும் தமிழில் இருந்தும் வணிக எழுத்தாளர்களும் கேளிக்கைப் படைப்புகளும் கொண்டாடப்பட்டன என்பதுதான். ஆனால், இனிமேல் அப்படி வணிக எழுத்து இலக்கியத்தை மறைக்க முடியாது. இன்றைய உச்சக்கட்டத் தகவல்தொடர்புமுறை எல்லாவற்றையும் கொண்டுசென்று சேர்த்துவிடும்.

ஆகவே, தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல, ஸ்டீபன் கிங்போல,சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்!”

என்று எழுதுகிறார்…

வாங்க ஜெயமோகன், இப்பதான் நம்ம ரூட்டுக்கு வரீங்க…..வந்த வேகத்துல அப்படியே சிவகாமியின் சபதம் மாதிரி ஒரு திரில்லிங்கான ஹிஸ்டாரிக்கல் நாவலுக்குப் பூஜை போடுங்க பாக்கலாம்…

புலம்பல்

திரைப்படம் , இசை போன்ற நுகர் கலைகள் தருகின்ற அனுபவங்கள் அனைத்தையும், வெறும் வார்த்தைகளாலேயே தோரணம் கட்டி, படம் வரைந்து பாகம் குறித்திட முடியுமென்று, தமிழிணையச் சூழலில் புழங்கும் ஒரு தலைமுறையினரையே கெடுத்து வைத்திருப்பதுதான், எழுத்தாளர் ஜெயமோகன் / எஸ்ரா போன்றோர் இக்கூட்டத்திற்கு இழைத்து வரும் ஆகப் பெரிய துரோகம்.

பேச்சுத் திறன் மூலமாக மயக்கும் திராவிடக் கட்சிகளின் மேடைப் பேச்சு ராக்ஸ்டார்களை விடவும், ஜெமோ / எஸ்ரா போன்றோர் ( அறிந்தோ அறியாமலோ) தீனி போட்டு வளர்த்து வரும் இந்த டெஸ்க்ட்டாப் சிந்தனையாளர்கள் ஆபத்தானவர்கள்.

பிகு : fanboys, நான் எளுத்தாளர்களைத் திட்டறேன்னு நினைச்சா, மேல இருக்கிறதை இன்னொருமுறை படிச்சுப் பார்க்கவும். #Mysskin