மழை….

“நைட்லேந்து ஒரே மழை. இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம்.”

” ம்மா.. அவ என்ன ரோட்ல நடந்தா போகப் போறா? வீட்டு வாசல்லேந்து, க்ளாஸ்ரூம் வரைக்கும் வேன்..ஒண்ணும் ஆகாது. லீவெல்லாம் வேணாம்”

” இல்லடா.. சன் ந்யூஸ்ல சொல்றாங்க… பள்ளி கல்லூரி எல்லாம் விடுமுறையாம்… நீ வேணா ஸ்கூல்க்கு ஃபோன் செஞ்சு பாரேன்….”

” ய்யோ…அதல்லாம் அரசாங்க பள்ளிக்கூடத்துக்குத் தான்மா….. ஒரு நிமிஷம் இரேன்.. ஒரு முக்கியமான வேலையா இருக்கேன்..”

” அதுக்குச் சொல்லலைடா…மழையாருக்கே… ரெண்டு நாளா ஜலதோஷமா வேற இருந்தது…நனைஞ்சு கினஞ்சு…..”

மனைவிகள் போல அம்மாக்களை, சில நேரங்களிலே அத்தனை ஈசியாக டீல் செய்ய முடிவதில்லை. பக்கத்து வீட்டு பசங்கள் எல்லாம் தங்கள் பள்ளிகள் விடுமுறை என்று அறிந்ததும், சீருடையைக் கூடக் கழட்டாமல் விளையாடிக் கொண்டிருக்க, வேதிகா மட்டும் முற்பகலுக்கான ஸ்னாக்ஸ், மதியத்துக்கான சாப்பாடு, செய்து முடித்த ஹோம் ஒர்க் நோட், காய்ச்சி வடிகட்டிய குடிநீர் என்று ஃபுல் செட்டப்பில் வேனுக்காகக் காத்திருந்த பொழுது, பள்ளிக்கு விடுமுறை என்று குறுஞ்செய்தி வந்தது.

*

மழை இன்னும் நின்ற பாடில்லை…

பவர்பாய்ண்ட்டின் 12 ஆவது ஸ்லைடில் வேலையும் , குளிப்பதற்கான நீரும் கொதித்துக் கொண்டிருந்தது.

“ஹல்லோ.. இன்னும் கெளம்பலியா? இன்னிக்கு வெளியில எங்கயாச்சும் வேலை இருக்கா இல்லை ஆபீஸ்லயேதான் வேலையா?. மதிய சாப்பாடு கட்டணுமா ன்னு இப்பவே தெரியணும். ” கடமை உணர்ச்சிக்கு புடவை கட்டினால், அவள் தான் மனைவி. ரொம்ப மழையாருக்கே வீட்லேந்துதான் வேலை பாருங்களேன் என்று ரெண்டாவது டோஸ் காஃபியுடன் யாராச்சும் வந்து நிற்க ஒரு கொடுப்பினை வேண்டும்.

*லொக் லொக்*

” இல்ல..மழையாருக்கே… அதான் work from home போடலாமான்னு…”

மெதுவாத்தான் சொன்னேன்.. ஒருவேளை கூடத்தில் இருந்த அம்மாவின் காதில் அது…

சேச்சே… இருக்காது

டியர் எஞ்சினியரிங் பாய்ஸ்…..

Disclosure : இந்த மாதிரி அட்வைஸ் பண்றதுல நான் எக்ஸ்பர்ட் கிடையாது. இது எங்கஊட்டு பசங்களுக்கு நான் சொன்னது. இதை பொதுவிலே ஜஸ்ட் பகிர்ந்து கொள்கிறேன்.

நெருக்கமான சுற்றம் நட்பு வட்டத்துலேந்து ஒரு நாலஞ்சு டிக்கெட்டுங்க இந்த வருஷம் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகுதுங்க.. அவ்வப்போது சொல்லிட்டு வந்த அறிவுரை மொக்கைகளிலே சில :

10. படிப்பை நிப்பாட்டுங்க – நல்ல எஞ்சினியரிங்க் கல்லூரிக்கு ‘உள்ள’ போகத்தான் 98% வேணும். ஆனா, வெளில வரதுக்கு மெனக்கெடல் தேவை இல்லை. அப்படி 98% மார்க்கு வேணும்ன்டு ஒக்காந்து முட்டி மோதிப் படிச்சா, அதுல கிடைக்கிற கோல்ட் மெடல் தவிர்த்து வாழ்க்கைல ஒண்ணும் கெடைக்காது. நல்ல வேலை வேணும்னா கூட, படிப்பத் தவிரவும் பல விஷயம் தெரிஞ்சிருக்கணும். எவ்ளோ மார்க் எடுத்தா safe ன்னு சொல்றாங்களோ, அதை மட்டும் மெய்ண்டைன் செய்யவும்.

20.இப்பமே, campus interview, வேலை பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. இந்த நாலு வருஷ கோர்ஸுல, 50% மட்டும் தான் வகுப்பு. மீதி அம்பது பர்சண்ட், கேம்பஸ் வாழ்க்கை. எஞ்சாய் பண்ணி படிங்க. இப்ப படிக்கிற ஏதாவது ஒரு சப்ஜெக்ட்தான், பெரும்பாலான சமயத்துல, நீங்க பாக்கப் போற வேலைக்கும் அடிப்படையா அமையும். அதை பிடிச்ச மாதிரி தேர்வு பண்ணிட்டம்னா, அத விட ஒரு சொகம் கிடையாது.

30. ஆஸ்டல் வாழ்க்கைங்கறது மாதிரி ஒரு குடுப்பினை கிடையாது. எல்லா சாதிக்காரன், மதத்துக்காரன் கூடவும் பழகலாம். துணி தோய்க்கிறது. நீச்சலடிக்கிறது, வெளயாடறது, மத்த ஊர்க்காரய்ங்க பத்தி தெரிஞ்சுக்கிறது, முள்ளு மாட்டிக்காம மீன்சாப்புடறது, , அவசரத்துக்கு பொண்ணுக கிட்ட செய்னை வாங்கி அடகு வெக்கறது இதல்லாம் இங்கதான் நான் கத்துக்கிட்டேன். நல்ல சான்ஸ் இது. நல்ல விஷயம் கத்துக்கிடுங்க. கெட்ட விஷயம் செஞ்சு பாத்து மறந்துருங்க.

40. சினிமா பாருங்க. அஜித் விஜய் தனுஷ் சிம்புன்னு ஏதாச்சும் ஒரு கோஷ்டில சேந்துக்கங்க. எதிர்கோஷ்டி கூட சண்ட போடுங்க. குறிபாத்து அடிக்க விஷயம் தெரியணும். விஷயம் தெரிஞ்சுக்க படிக்கணும். படிச்ச பாய்ண்ட்டைச் சொல்ல, பேச்சுத்திறமை வேணும். passion இருந்தா, பேச்சு திறமை தானா வரும். vocabulary வளரும். விவாதம் பண்ற நேக்
வரும். இந்தத் திறமையை வளர்த்துக்கிட்டோம்னா, க்ரூப் டிஸ்கஷன்ல, ம்வேலைக்குச் சேர்ந்தா business development side ல, க்ளையண்ட்டுகிட்ட பேரம் பேசறதுல அடிச்சு தூள்கிளப்பலாம்.

50. கேம்பஸ் இண்டர்வ்யூக்கு நாலு நாள் முன்னால, திடீர்னு கம்யூனிகேஷன் ஸ்கில் வளந்துராது. தொடர்புகொள் திறன்ஙறது, end product அல்ல. அது ஒரு process. அதுக்கு பாய்ண்ட்டு நம்பர் 40 தான் அடிப்படை. மேல சொல்லணும்னா, அடுத்த பாய்ண்ட்டைப் பார்க்கவும்.

60. communication skill அப்படின்ன உடனே, எல்லாரும் இசுடைலான இங்கிலீஸில் பேசறதுன்னு தப்பா நினைச்சுக்கறாங்க. நல்ல தெளிவான, இலக்கணச் சுத்தமான ஆங்கிலத்துல, ஒரு மண்ணும் புரியாமப் பேசறதுக்கு பர்க்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் ன்னு ரெண்டு பேர் இருக்காங்க. நமக்கு அந்த நாய்ப்பொழப்பு வேணாம். புரியும் படியா சொல்றது / எழுதறதுதான் நல்ல தொடர்புகொள் திறனுக்கு அடிப்படை. மொழி அல்ல. என்னதான் IIM A எம்பிஏ ன்னாலும், Hindustan Lever sales manager ஆ வாழ்க்கையத் துவங்கினா, ஸ்டாக் போட, ஒழுங்கா வித்துச்சான்னு பாக்க, ஃபீட்பேக் வாங்க ன்னு எல்லாத்துக்கும் முருகன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட தமிழ்ல தான் மொக்க போட்டாவணும். ஆக, மேட்டர் தான் முக்கியம். என்ன மேட்டர்னு மனசுக்குள்ள யோச்சிச்சு, சரிபார்த்து, பளிச்சுன்ன்ட்டு சொல்லிறணும். இந்த பேச்சுத் திறமையை நல்லா வளத்துக்கிட்டம்னா, பின்னால, சீமான் மாதிரி கச்சி கிச்சி ல்லாம் ஆரம்பிச்சு பெரியாளாயிறலாம். ஆனா, இது மட்டுமே கம்யூனிகேஷன் ஸ்கில் அல்ல. இன்னும் ஒரு மேட்டர் இருக்கு. என்னன்னாக்க,

70. வேலை வெளம்பரத்துல பாத்திருப்பீங்க. communications skills – oral & written. தொடர்புகொள் திறன் ங்கறது தெளிவா பேசறது மட்டுமில்லை. எழுதறது மூலமா தொடர்பு கொள்றதும் சேர்ந்ததும்தான். நல்லா யோசிச்சுப் பாத்தீங்கன்னா, பேசக் கத்துக்கறது ரொம்ப சுலபம். நாலாங்க்ளாஸ் மட்டுமே படிச்ச, தமிழ் தவிர ஒரு மொழியும் தெரியாத சித்தி ஒருத்தங்களை, முப்பது வருஷம் முன்னால, மைசூர்ல கட்டிக் குடுத்தாய்ங்க. ஆறே மாசத்துல கன்னடம் பேச, புரிஞ்சுக்கக் கத்துக்கிட்டாங்க? எப்படி? சர்வைவல்.இல்லைன்னா உப்பு புளி மொளகா கூட வாங்க முடியாது. ( இதே நல்லா படிச்சு எம்என்சி வேலைபாக்க பெங்களூர் போற பசங்களில பாதிப்பேருக்கு கன்னடம் முழுசா ஒரு வாக்கியம் பேச வராது. ஏன்? அதுக்கான அவசியம் வரலை). ஆனா எழுத்துங்கறது வேற ஜாதி. அடிப்படை இலக்கணம் தெரியாம ஒழுங்கா எழுத வராது. பள்ளிக்கூடத்துல இலக்கணம் படிச்சுருப்பீங்க. ஆனா, அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்துருக்காது. தட்டுத் தடுமாறி, சின்னச் சின்னதா எழுதப் பழகிட்டீங்கன்னா, க்ளீனா எழுத வந்துரும். இந்த இலக்கணச் சுத்தமாக எழுதும் திறன் அப்படிங்கறது, பிற்கால வாழ்க்கைக்கு மிக மிக அவசியம். எழுத வரலியா? அப்படி எழுத வந்தாலும் இலக்கணம், வாக்கிய அமைப்பு பத்தில்லாம் சந்தேகம் வருதா? அது ஒரு வழி இருக்கு. GOTO 80

80. படிக்கணும். ஆங்கிலத்துல, தமிழ்ல. கண்டதையும்.

இந்த கண்டபடி படிக்கறது, உண்மைல, ‘ ஒரே கல்லுல மூணு மாங்காய்’ டெக்னிக்.

– முதல் மாங்காய் : இதுல தெரிஞ்சுக்கற நல்ல நல்ல வார்த்தைகளை நாம எழுதும் பொழுது யூஸ் பண்ணிக்கலாம் ( காசா பணமா) . படிச்சுப் பழக்கம் இருந்தாதான், நாம உட்கார்ந்து வாக்கியம் அமைக்கும் பொழுது, அதுல ஏதாச்சும் பிழை ( பொருட்பிழை / இலக்கணப் பிழை) இருந்தா, கொஞ்சம் நெருடும். சோதிச்சுப் பாத்துத் தவறு இருந்தா திருத்திக்கலாம். நிறையப் படிக்க படிக்க, நிறைய சொற்றொடர்கள், idioms எல்லாம் பழக்கமாகும். வேகமா படிக்க வரும். இதல்லாம் ரொம்ப நல்லது.

– ரெண்டாவது மாங்காய் : இந்த வாழ்க்கையின் சிக்கல்களுக்கான தீர்வுகள் எல்லாமே 90% எழுத்து வடிவில் தான் இருக்கு. ரேடியோ மெக்கானிசம் கற்றுக்கொள்வது எப்படில ஆரம்பிச்சு, வேர்ல்பூல் semi automatic வாஷிங்மிஷின் மேனுவல் வரைக்கும் எல்லாமே கருப்பு மையிலே பூச்சி பூச்சியா எழுத்துகள்தான். புதுசா வாங்கின, ஆண்ட்ராய்ட் ஃபோனை கைல வெச்சுகிட்டு ‘ரூட்டிங்’ செய்வது எப்படின்னு கூகிள்ட்ட கேட்டா, அது கொட்டும் தீர்வுகளில் பெரும்பாலானவை எழுத்து வடிவில் இருக்கிறவைதான். படிக்கிற பழக்கம் இல்லாம அத்தனாம் பெரிய வெப் பக்கங்களை எப்படி படிச்சு புரிஞ்சு பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள? இது என்ன ட்விட்டரா ஃபேஸ்புக்கா? பொம்பிளப் பிள்ளய ஃபோட்டோ போட்டுகிட்டு கேள்வி கேட்டா, உதவிகள் வந்து குவிய?

-தேர்ட் மேங்கோ : புஸ்தகப் பிரியன்னா, கோஎஜுகேசன் காலேஜ்ல சில பல சௌகரியங்கள் உள்ளன. நல்ல ‘மரியாதை’ கிடைக்கும் ( he’s a voracious reader you know!! – oh, really? ) . என்னடாது, வயசுக்குத் தொடர்பில்லாம விவஸ்தை கெட்டத்தனமாபேசறானேன்னு யோசிக்காதீங்க. காலேஜ்ல ஃபைன் போட்டாலும், டிசி குடுத்துருவேன்னு பிரின்சிபால் மிரட்டினாலும் ரகசியமாவாச்சும் கூடப் படிக்கிற பொம்பிளைப் பிள்ளைங்க கிட்ட பேசிப் பழகியே ஆகோணும்.

90. அப்படி இல்லைன்னா, கல்லூரி வாசம் முடிஞ்சு இண்டர்வியூக்கு, இல்லை வேற எதுக்காச்சமோ, ஒரு அலுவலகம் போனீங்கன்னா, நல்ல பளிச்சுன்னு லட்சணமா front office desk க்ல ஒரு அக்கா இருக்குமில்லே, அதுங்கிட்ட போறப்பவே உதறும். மிரட்சி பளிச்சுன்னு வெளில தெரியும். கிட்டப்போய் பேசினீங்கன்னா டங் ரோலிங் ஆவும். ஆனா, யோசிச்சுப் பாருங்க, காலேஜுல, இத விட அப்பாடக்கர் பொண்ணுங்கல்லாம் இருந்துருக்குமே…அதுங்க கிட்ட சாதாரணமாப் பேசிப் பழகியிருந்தோம்னா, இந்த inhibition ல்லாம் இப்ப இருந்திருக்காது இல்லையா? ( இதுக்கே இவ்ளோ சீனா? நாங்கலாம் காலேஜுலெயே.. அப்படின்னு மனசுக்குள்ள தைரியம் ஃபார்ம் ஆயிடும்.) தைரியமா யார்ட்ட வேணா பேசலாம். அதுவும் இல்லாம, அப்படிப் பேசிப் பழகினாதான், பொம்பிளைப் புள்ளைங்க கஷ்ட நஷ்டமல்லாம் லேஸ்பாஸா தெரிஞ்சுக்கலாம். இதுவும் நல்லது.

100. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. தமிழ்நாட்டுல எல்லா ஊர்லயும் ஒரு புது பஸ்ண்டாண்ட் பழைய பஸ்ஸ்டாண்ட் இருக்கும். அது போல, எல்லா ஊர்லயும் மினிமம் அஞ்சு எஞ்சினியரிங் கல்லூரி. வருஷா வருஷம் லட்சக்கணக்கிலே புது எஞ்சினியருங்க பட்டம் வாங்கிகிட்டு வெளிய வராங்க. அசம்பிளி லைன்ல உருவான injection moulded component போல எந்த தனிப்பட்ட ஐடெண்ட்டியும் இல்லாத இந்த கூட்டத்துலேந்து தனியாத் தெரியணும்னா எப்படி? ஏதாச்சும் தனிப்பட்ட இன்ட்ரஸ்ட் வளர்த்துக்கிட்டு அதையே வெறிபுடிச்ச மாதிரி pursue பண்ணுங்க. அது ஆட்டோமொபைல் எஞ்சினியரிங்ல ஒரு பெட் ப்ராஜக்டாக இருக்கலாம். கவிதை எழுதறதா இருக்கலாம். வரலாற்று ஆராய்சி செய்யறதா இருக்கலாம். வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்துல ஸ்காலர்ஷிப் வாங்கறதா, சிவில் சர்வீஸுக்குக் குறிவைக்கறதா, கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துவதாக .. எது வேணுமானாலும்… ஆனா நிச்சயமா ஏதாச்சும் ஒண்ணு…

குறைந்த பட்சம், ” இவன் இருக்கானே, இவன், ச்சில்லுன்னு ஒரு பாட்டில் Foster’s Beer கிடைக்கும்னா நாலு கிலோமீட்டர் வரைக்கும் நடந்தே கூடப் போவான் என்கிற அளவுக்காச்சும்,

ஒரு தனிப்பட்ட அடையாளம்…

அது போதும்… மத்ததெல்லாம் பட்டம் வாங்கினப்பிறகு வெச்சுக்கலாம்….

குட்லக்…

ஒரு டயட்டுக்காரன் டைரியில் இருந்து….

மதிய உணவு நேரம். கொலைப் பசி.

மூன்றடுக்குக் காரியர். முதலடுக்கில் பொன்நிறத்தில் மெத்து மெத்தென்ற சப்பாத்திகள். அடுத்த அடுக்கில், நல்ல மஞ்சள் நிறத்தில், உருளைக்கிழங்கு மசாலா. நீளமாகக் கீரிய பச்சை மிளகாய்களும், எண்ணையில் வதங்கிய வெங்காயமும், சற்றே அதிகமாக மிதந்த எண்ணையும், கலந்து கட்டிய மணமும், அம்மாவின் கைவண்ணம் என்று சொல்லாமல் சொன்னது.

அடுக்கில் இருந்தது, மொத்தம் நான்கே நான்கு சப்பாத்திகள் தான்.

கொஞ்ச நாளாக நான் டயட்டில் இருக்கிறேன். எந்த உணவாக இருந்தாலும், வழக்கமாகச் சாப்பிடுவதில் பாதி அளவு மட்டும். அப்படியும் அடங்காத பசிக்கு மீதம், பச்சைக் காய்கறி அல்லது பழம் அல்லது வேகவைத்த பயறுவகைகள் . இன்று, மூன்றாவது அடுக்கில் அனேகமாக மாதுளம்பழம். அதைத்தான் வைக்கச் சொல்லி இருந்தேன்.

எனக்கு, வழக்கமாக மனைவிதான் மதிய உணவு, தயார் செய்து, கட்டிக் கொடுத்து அனுப்புவார். ஏனெனில், , என்னுடைய அம்மாவும், எல்லா அம்மாக்களைப் போலவும், ‘வாயைத் திறந்தால் காக்கா கொத்தும்’ என்கிற அளவுக்குப் பாத்தி கட்டி அடித்த பின்பும் கூட, ‘ இன்னும் ரெண்டு சப்பாத்தி போட்டுக்கோயேண்டா…. நெய் சக்கரைன்னா உனக்குப் புடிக்குமே’ என்று பொழிகிற டைப். நல்ல சாப்ப்ட்டு ஆரோக்கியமா இருந்தா எந்த வியாதியும் வராது என்று நம்புகிற தலைமுறையைச் சேர்ந்தவர். ஆனால், மனைவி, என்னுடைய operation – weight loss திட்டத்தின் டிசைனர். ரொம்ப ப்ராக்டிகல். நெய் வெண்ணை எல்லாம் கண்ணிலேயே காட்டமாட்டார். பரிமாறுகையில், நாலாவது சப்பாத்தி முடிந்த உடனே தட்டைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார். ‘ இன்னும் பசிக்குதே..’ என்றால் பச்சைக் காய்கறிகளைக் கொடுத்து ‘மேயச்’ சொல்வார்.

ஆக, இன்றைக்கு, அம்மா செய்து கொடுத்ததை , மனைவி டயட் ஃபார்முலாவுக்கு ஏற்றாற்போல அளவாகக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

டிஃபன் காரியரில் இருந்த அந்தச் சப்பாத்திகள், கொஞ்சம் மோசமானவை. எத்தனை உள்ள தள்ளினாலும், இன்னும் இன்னும் என்று கேட்கும் குணம் படைத்தவை. சரியான பசியிலே, அடுக்கடுக்காகப் பிரியும் அந்த முக்கோணச் சப்பாத்தியில், காரசாரமான உருளைக்கிழங்கை வைத்துச் சுருட்டி உள்ளே தள்ளத் தள்ள, க்‌ஷண நேரத்தில் அனைத்தும் காலி.

நிச்சயம் நான்குக்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை. “ஏன் நிறைய வைச்சே?” என்று நேத்துதான் செம்மை கடுப்பிலே வீராவேசமாக வம்புக்கு இழுத்து, பின் வாங்கிக் கட்டிக்கொண்டேன்., [“பாத்த்துட்டே இருங்க, நாளைலேந்து ரெண்டு ஸ்பூன் சாதம், அரை தோசை, ஒண்ணரை இட்லி, அதுக்கு வெச்சா, ஏண்டி இவளேன்னு கேளுங்க.. ஒங்களுக்குத் தொப்பையதானே குறைக்கணும்.. இருங்க இருங்க…பட்னி போட்டே, ஒரே வாரத்துல குறைக்கிறேன்”] . மீதமிருந்த உருளைக்கிழங்கை ஏக்கமாகப் பார்த்தேன். இதை வைத்துக் கொண்டு நிச்சயம் இரண்டு சப்பாத்த்திகளாவது உள்ளே தள்ளலாம். ஹ்ம்ம்ம்.. கொடுப்பினை இல்லை.

இனிமேல், அம்மா சமையலின் பொழுது மட்டும், டயட்டுக்கு ரிலாக்ஸ்சேஷன் கொடுப்போமா என்று பலமாக யோசனை. இல்லை. வேண்டாம். அது ஆபத்தான வளைவுகளைக் கொண்ட யோசனை.

சரி, மீதமுள்ள பசி அடங்க அந்த மாதுளம்பழத்தையாவது சாப்பிடுவோம் என்று காரியரின் மூன்றாவது அடுக்கைத் திறந்தேன்.

அதிலே இரண்டு சப்பாத்திகள் இருந்தன.

Senthil’s (@4sn) Wedding

வரணும் ஆனால், மேனேஜர் லீவ் குடுக்கலை, வாட்டர் கேன் ஸ்ட்ரைக்கு, கூட நானும் வருவேன் என்ற மனைவிமார்களின் பயமுறுத்தல், மானாட மயிலாட கலாக்கா ப்ரோக்ராமை மிஸ் பண்ண முடியாது போன்ற காரணங்களுக்காக, அழைக்கப்பட்டும், செந்தில் கல்யாணத்துக்கு வர இயலாமல் போனவர்களுக்கான சிறுகுறிப்பு இது.

சனிக்கிழமை

  • திருமணம் நடக்க இருப்பது நகரத்தார் கலாசாரத்தின் நடு செண்டரான தேவகோட்டை என்பதற்காகவே ஆர்வத்துடன் கிளம்பினேன். டைம்லைன் நண்பர்கள் ஒரு ஒன்பது பத்து பேர், இரண்டு கார்களை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை கிளம்பி, மதியம் திருச்சியிலே உணவு முடித்துட்டு சுமார் நாலு மணிக்கு தேவகோட்டையை அடைந்தோம் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை, அதன் சொந்தக்காரர் Murali ஒரு பூனைக்குட்டியைப் போலப் அழகாகப் பழக்கி வைத்திருக்கிறார். அட்டகாசமான ட்ரைவிங். ஊரை அடைந்ததும், புதுமாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல், சாதா சட்டை, சாதா பேண்ட், முன் கொக்கியில் ஒரு மஞ்சப்பை சகிதம், ஒரு டிவிஎஸ் 50 இலே, எங்களை, செந்தில்நாதன் (@4sn) திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.
  • அது ஒரு நாலுகட்டு செட்டிநாடு வீடு. ஓபன் ஏர் முற்றத்தை மட்டும் மேலே ‘கவர்’ செய்துவிட்டு, அப்படியே மண்டபமாக மாற்றியிருந்தார்கள். செந்தில் நாதனின் அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் 1/2 வயசு மகன் அண்ணாமலை ஆகியோருடன் நல்ல விதமாக அறிமுகப் படலம் நடந்தது. பிறகு, பஜ்ஜி, காஃபி, பச்சரிசி, கருப்பட்டி போட்டுச் செய்த நெய்ப் பணியாரத்தை சுவாகா செய்துவிட்டு பின் யதார்த்தமாக ,

-“பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்களா?”

என்று கேட்க,

செந்தில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

-அவங்க வேற மண்டபம், நாங்க வேற மண்படம். அவங்க இங்க வரமாட்டாங்க.அப்ப தாலி கட்டறது எப்படி, கூரியரிலா? என்று ஒரு பெருங்குழப்பம் எங்களுக்கு. செந்திலே விளக்கினார்.

-திருமணத்துக்காக, மூன்று நாட்கள் முன்பாகவே, தனித்தனியாக ( ஆனால் அருகருகே) இரண்டு திருமண மண்டபங்கள் பிடித்து, ஒன்றில், மாப்பிள்ளை உள்பட பையன் குடும்பத்தினரும், மற்றொன்றில் பெண் உள்பட , மணப்பெண் குடும்பத்தினரும் தங்கிக் கொள்வார்கள். அன்றிலிருந்தே சடங்குகள் துவங்கும். ( இவற்றை செந்திலின் அம்மா விளக்கினார். முழுமையாக எழுதும் அளவுக்கு ஞாபகத்தில் இல்லை). சடங்கின் முக்கிய அம்சம், முதல் நாள் அன்றே, மணமகனுக்கு மெட்டி அணிவித்து ( தாய்மாமன் அணிவிப்பார்) , மண்டபத்தில் சிறை வைப்பது ஆகும். இது போல அடுத்த மண்டபத்தில் மணப்பெண்ணும் சிறை வைக்கப்படுவார் ( என்று தான் நினைக்கிறேன்). திருமணம் நடக்க இருக்கும் அந்த முகூர்த்த நேரத்தில், மாப்பிள்ளையை, அழைத்துக் கொண்டு வந்து, தாலி கட்டவைப்பார்கள். தப்பிக்க வழியே கிடையாது.

-முகூர்த்தத்துக்கு முன்பாகவே, முந்தைய நாள் ரிசப்ஷனில் , மணமக்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட சென்னைகாரர்களான எங்களுக்கு இது சற்று வித்தியாசமாக இருந்தது.

-மேலும், ஊர்முழுக்க உறவினர்களைக் கொண்ட இரு வீட்டு முக்கியஸ்தர்களும், அல்ப சொல்ப காரணங்களுக்காக முட்டிக் கொண்டு, அதன் மூலமாக ‘சம்பந்தி சண்டை’ உருவாக , இந்த format இலே வாய்ப்புகள் குறைவு என்பதைக் கண்டுபிடித்தவர்களின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கிறேன்.

-என்றாலும், முகூர்த்த நேரத்துக்கு முன்பாக, இரு வீட்டினரும், சம்பந்தி இடத்துக்குப் போவதும் வருவதுமாக இருக்கின்றனர். அதாவது, மணமக்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவர்கள், குறிப்பாக வீட்டுப் பெரியவர்களும் நிச்சயதார்த்ததுக்கு வர இயலாமல் போனவர்களும் போய்ப் பார்க்கலாம். பெண்ணும் மாப்பிள்ளையும் மட்டும் தான் பார்த்துக் கொள்ளக் கூடாது. நிச்சயதார்த்துக்கே கூட மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அனுமதி கிடையாது.

  • இரவு தங்கலுக்கு , செந்தில், ஏசி வசதியுடன் கூடிய நாலைந்து அறைகளை ஏற்பாடு செய்திருந்தார். பெட்டிப் படுக்கைகளை போட்டுவிட்டு, refresh செய்து கொண்டு, மண்டபத்துக்கு வந்து இரவு உணவை முடித்துக் கொண்டோம்.
  • சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து, பின்னர் விஜய்மல்லயா துணையுடன் நள்ளிரவுப் பேச்சுக் கச்சேரி. நோ மேல்விவரம்.

ஞாயிற்றுக்கிழமை

  • 8.30 மணிக்கு காலைப் பலகாரம். மெனு : செட்டிநாடு இட்லி, சட்னி,சாம்பார்,கவுனி அரிசி (இனிப்பு) உருளைக்கிழங்கு பஜ்ஜி, தலைக்கறி அவியல், வெள்ளையப்பம், காஃபி. பரிமாறுவதிலும் ஒரு வித்தியாசம். மொத்தமாக அடுக்கிக் கொண்டே போவதில்லை. எல்லாவற்றிலும் கொஞ்சமாக வைத்து, பிறகு வேண்டும் என்பதை கேட்டுக் கேட்டுப் பரிமாறுகிறார்கள். செந்தில் உள்பட, வீட்டினர் அனைவரும் சுற்றி இருந்து, பார்த்துப் பார்த்து விசாரிக்க, சற்று கூச்சமாகவே இருந்தது. பந்தி உபசரணை பற்றி ஜெயமோகன் எழுதியது நினைவுக்கு வந்தது.
  • உறவினர்கள் நடமாட்டம் அதிகம் ஆனதும், ஊர் சுற்றலாம் என்று கிளம்பி, கானாடுகாத்தான் என்று ஒரு குக்கிராமத்துக்குச் சென்று, அங்கே, ஏசி முத்தையா, எம்.ஏ.எம்.ராமசாமி போன்றவர்களின் சின்னஞ்சிறு குடிசைகளை ஆ என்று பராக்குப் பார்த்து விட்டு வந்தோம். ஒவ்வொரு குடிசையும் ஏக்கரா கணக்கில் இருக்கின்றன.
  • மண்டபத்துக்கு வந்து சேர்வதற்குள், பெண் வீட்டார், மாப்பிள்ளைக்கான சீதனத்தை அளித்து விட்டுச் சென்றிருந்தனர். ஒரு குடும்பம் நடத்தத் தேவையான அனைத்துப் பொருட்களும் ( பூரிக்கட்டை மட்டும் மிஸ்ஸிங்) அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹால், ஒரு குட்டி ரங்கநாதன் தெரு போலக் காட்சி தந்தது.
  • அன்று மதியமே கிளம்பி, இரவு சென்னையை அடைவதாக இருந்ததால் ( முகூர்த்தம் திங்கள் அன்றுதான்), புறப்படுமுன்னர், அனைவரும் மணப்பெண்ணை, அவர்களுடைய மண்டபத்துக்குச் சென்று பார்க்க செந்தில் ஏற்பாடு செய்ய, செந்திலின் தங்கை, எங்களை அழைத்துச் சென்று மணப்பெண்ணிடம் அறிமுகம் செய்தார். பார்த்தால் ரொம்ப சாந்தமானவராகத் தெரிந்தார். ( வளர்ந்தவன் போடுகிற ஆட்டத்துக்கு சாந்தமெல்லாம் சரிப்படாதே என்று தோன்றினாலும் சொல்லவில்லை) தஞ்சாவூரில் இஞ்சினியரிங் படிப்பு. பார்த்தால்கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது… என்ன செய்ய, விதி வலியது….அறிமுகப்படலம் முடிந்ததும், கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினோம்.
  • திரும்ப மண்டபத்துக்கு வந்ததும் மாலை இரவு விருந்துகளைச் சொல்லி செந்தில் ஆசை காட்டினாலும், முகூர்த்த நேரம் வரை இருக்க, சூழ்நிலை அமையவில்லை. என்றாலும், திருமணத்தின் மிக முக்கிய பலகாரமான ‘கும்மாயம்’ என்கிற ஐட்டத்தின் மகாத்மியத்தை விளக்கி, தயாராகிக் கொண்டிருக்கும் பொழுதே, அடுப்பில் இருந்து டைரக்டாக இலையில் கொஞ்சம் வைத்து சுடச் சுடச் தந்தார், செந்திலின் அம்மா. (இந்த சூவீட்டைச் சாப்பிடாம, யாரும் கல்யாண வீட்டை விட்டுப் போகமாட்டாங்க, போவக்கூடாது ). நெய்க்குளத்தில் மிதக்கும் அல்வா டெக்ஸ்ச்சரில் ஒரு இனிப்பு. கொலஸ்ட்ரால் காரர்கள், செட்டிநாட்டுத் திருமணங்களை தயவு செய்து தவிர்க்கவும்.
  • முறுக்கு, பணியாரம் போட்ட தாம்பூலப் பையுடன் கிளம்பி, இரவு சென்னையை அடைந்தோம்.

நிறைவு.

post script

டைம்லைனிலே இத்தனை அடக்க ஒடுக்கமாக இருக்கும் இவரா என்று ஆச்சர்யப்படும் வண்ணம் எல்லோரையும் மானாங்காணியாகப் போட்டு வாரும் ராஜேஷ் பத்மநாபன்

மிகப் பொறுப்பாக வண்டி ஓட்டி அனைவரையும் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போய் திரும்பி அழைத்து வந்தமுரளி

கிடைக்கிற ஒரு சான்ஸையும் மிஸ் செய்யாமல் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் / global warming பற்றிப் பேசிப் பொங்கல் வைக்கும் இளவல் / என் namesake

ஆர்கனைசர் என்ற பெயரிலே ஓபி அடித்துச் சுற்றி வந்த food entrepreneurராஜபாண்டியன்

இவர்தான் official காமிராமேனோ என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் சதா அந்த கருப்பு வஸ்த்துவுடன் சுற்றி வந்து, கடைசியில் ஒரு ஃபோட்டோவைக் கூட கண்ணில் காட்டாத இளா ,

நல்லா ஜாலியாக அரட்டை அடித்து, சரிக்குச் சரியாக பெருசுகளுடன் ஈடு குடுத்து, எல்லாம் முடிந்து திரும்பும் வேளையில், ‘ஆமாங்க, நான் இளைய தளபதி விஜய் ஃபேன் தான்’ என்று திடீர் அதிர்ச்சி கொடுத்த சின்னப்பய்யன்அர்ஜூன்

புதிதாக அறிமுகமாகி ராஜேஷிடம் அவ்வப்பொழுது பல்பு வாங்கிக் கொண்டே இருந்த Marathoner / Engineer / Birdwatcher / Trekker ./ Spices Trader என்ற பன்முகம் கொண்ட swaran

நீண்டநாட்களாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவெங்கிராஜா

மற்றும், காண்டீனிலே டீ குடிக்கப் போனால் கூட, இடத்துக்கு 4sq check in, போட்டோவுக்கு instagram, அதுக்கு ஒரு ட்விட்டு, அதையே ஃபேஸ்புக்கிலே மறுஒளிபரப்பு என்று ஆரவவாரமாக இருந்தாலும், ஊட்டுக்காரம்மாவும் மாமனாரும் அருகில் இருக்க, கீச்ச் மூச் சத்தம் எதுவுமில்லாமல் பவ்வியமாக இருந்த சேலம் டாக்டர்

என்று

பயணத்தை இனிமையாக்கிய , அறிமுகமான / புதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மணமக்கள் செந்தில் மற்றும் சௌந்தரம் ஆகிய இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே….

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் என்று தமிழ்த்திரைக்கதைச்சுனாமி கே.பாக்யராஜ், ஒரு முறை சொல்லியிருந்தபடியால், ஒரு நாலுசக்கர மஞ்சள் போர்ட் வண்டியை எடுத்துக் கொண்டு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு. தஞ்சை – திருச்சி மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் பயணம் . சின்னதும் பெரிதுமாக நிறையக் கோயில்களுக்கு ஒரு சூறாவளி விசிட். எல்லாக் கோவில்களிலும் பிரசாதம் அட்டகாசம். சிரீரங்கத்தில் கிடைத்த அந்த குண்டு ( கோதுமை நிறத்தில்) தோசை பெயர் மட்டும் தெரியவில்லை.

பயணத்தின் மிகப் பெரிய சந்தோஷம், எந்த அர்ச்சகர் தட்டிலும் சில்லறை போடவில்லை. சாதா, ஸ்பெஷல் சாதா, ஸ்பெஷல் ரவா என்று ‘சிறப்பு தரிசனத்துக்கு’ காசை வீணாக்கவில்லை. பிரசாதங்களை மட்டும் ஒரு கை பார்த்தேன்.