நாலு வரி நோட்டு – ஒரு பார்வை

திரைப்படக்கலை என்பது, பல திறமைகள், வித்தைகள், நுட்பங்களின் கூட்டுக்கலவை.

chokkan இந்தியத் / தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, இதன் பல நுட்பங்களுக்கு சம்பிரதாயமான முன்னோடிகள் கிடையாது. உதாரணமாக நம் திரைப்படங்களின் பிரதான அம்சமான dance & stunt choreography ஆனது பல பாரம்பரியமான கலைகளில் இருந்து இரவல் பெற்று பின்னர் அவை தனிக்கலைகளாகச் சுயாதீனம் பெற்றிருக்கின்றன ( இல்லை என்று வரிந்து கட்டும் ப்யூரிஸ்ட்டுகளை பின்னர் கவனித்துக் கொள்ளலாம்). நடனத்தில் வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால் தொடங்கி பிரபுதேவா, தினேஷ் மாஸ்டர் ( 2011 ஆண்டு தேசிய விருது பெற்றவர்) வரையிலும் ஸ்டண்ட்டில் ஷ்யாம்சுந்தர் தொடக்கம் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் வரையில் பலரும் இப்படித் தனித்துவம் பெற்ற கலைஞர்கள்தாம்.

தமிழ்த் திரைப்படக்கலையின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையும், புதியனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் தான், இக்கலையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

இதிலே திரைப்படப் பாடல் எழுதும் திறன் என்பது மேற்சொன்னவற்றில் இருந்து சற்றே வேறுபட்டது.

giraதொடக்கத்தில் தமிழ்த் திரைப்படங்களானது, புராணங்களையும் கர்ண பரம்பரைக்கதைகளையும் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டன. எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தப் பாடல் என்ன பாணியில் இருக்கவேண்டும் என்பதற்கு, அந்தப் புராணத்தின் / கதையின் மூல வடிவம், ஒரு வழிகாட்டி போல அமையும். உதாரணமாக, கர்ணன் படத்தின், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலுக்கான situation ஒரிஜினல் மகாபாரதக் கதையிலே உண்டு ( என்று நினைக்கிறேன்). அப்பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு சங்க இலக்கியப் பரிச்சயமும் இருந்ததால், சரியான ரெஃபரன்ஸுடன், கச்சிதமாக இரண்டையும் ( பாடல் சூழல் / மூலக்கதை) map செய்து, தமிழ் சினிமாவின் மெலோட்ராமாவுக்கு ஏற்ப ” செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி…” என்று சிக்சர் அடித்து, கர்ணனின் பாத்திரத்துக்கான நியாயத்தைச் சாரமாகப் பிழிந்து வைத்து விடுகிறார்.

கண்ணதாசன் மட்டுமல்ல, கவித்திறனும், இலக்கியப் பயிற்சியும் இருக்கப் பெற்ற பல திரைப்படப் பாடலாசிரியர்கள் பட்டையைக் கிளப்பினார்கள்.

ஆனால் காலம் மாறிவிட்டது.

அதாவது இலக்கியப் பரிச்சயமும், இலக்கணப் பயிற்சியும் கொண்ட கவிஞர்கள் திரைப்பாடல்கள் எழுதிய வரையிலும் அப்பாடல்களை அதன் திரைப்படத் தொடர்பு / இசை தாண்டியும் அனுபவித்து ரசிக்க, ஆராய்ந்து மகிழ, பிரித்து மேயச் சில காரணங்கள் இருந்தன. நாளாவட்டத்தில் அது குறைந்து, இந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ காலத்திலும் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களிலே பாடல் இடம் பெறவேண்டியதற்கான காரண காரியங்களிலே அதிரடியாக மாற்றங்கள் ஏற்படும் பொழுது ( ஹீரோயினை, நம்ம ஹீரோ,  பஸ்ல வெச்சு லிப்டுலிப்  கிஸ் அடிக்கற இந்த இடத்துல சட்டுன்னு கட் பண்ணி ஒரு ஃபாரீன் சாங் , அப்படியே இண்டர்வல் ப்ளாக்குக்கு அப்பறம் மாங்கா தேங்கா எல்லாம் போட்டு ஒரு குத்துப் பாட்டு …. அப்படியே அள்ளிக்கும்) , மானாங்காணியாக எதையோ எழுதி வரிகளை இசைக்குள் மறைத்து ஒப்பேற்றி வரும் காலட்டத்தில் திரைப்படப் பாடல்களிலே அர்த்தமாவது இலக்கியமாவது என்று நினைக்கிறோம் இல்லையா? ]

அது தவறு என்கிறார்கள், சொக்கன், மோகனகிருஷ்ணன், & ஜிராகவன் ஆகிய மூவரும்.

mohanakirshnanஇவர்கள், நாலுவரி நோட்டு என்ற ஒரு நூல் வரிசை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். மூவரும் ஆளுக்கொரு பாகமாக எழுதியிருக்கிறார்கள்.

அதாவது, தம் ரசனையின் அடிப்படையில் சில பாடல்களைத்  தெரிவு செய்து,  அப்பாடல்களின் வரிகளை ஆராய்ந்து அதன் reference ஐ புராணங்களிலும், சங்க இலக்கியத்திலும், பழங்கதைகளிலும் பழமொழிகளிலும், வட்டார வழக்குகளிலும் அடையாளம் கண்டு, அந்தத் தேடலைச் சிறு குறிப்புகள் / கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்துவதுதான் மூவர் குழுவின் திட்டம்.

அதில் தெரிவு செய்யப்பட்ட குறிப்புகள் நூல் தொகுப்புகள் ஆகியிருக்கின்றன. ( இதிலே இன்னொரு சிறப்பு, இந்த நூல் வரிசை, ஜெயமோகன் ஃபார்முலாவைப் பின் பற்றி வந்திருக்கிறது. அதாவது முதலிலே இலவசமாக இணையத்திலும், பின்னர் அச்சிலும் கொண்டு வரும் ஹிட் ஃபார்முலா)

இதை, ஒரு நூல் வடிவத்தில் வந்திருக்கும் ஒரு project என்றே சொல்லுவேன்.

ஒரு பாடலை இசை ரசிகர்கள் எப்படி, அதன் நுட்பங்களையும் கலை அம்சங்களையும் நட்டு போல்ட்டுத் தொடக்கம் அனைத்தையும் பிரித்துப் போட்டு ஆராய்கிறார்களோ அதே போல நாலுவரி நோட்டு பாடல்வரிகளை அணுகியிருக்கிறது. எழுதிய இம்மூவரின் இலக்கிய / இலக்கணப் பயிற்சியும் இம்முயற்சிக்குக் கைகொடுத்து, ஒரு வேறுபட்ட ஆனால் authentic ஆன வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

உதாரணமாக சின்னக் கவுண்டரின் ஈவ் டீசிங் பாட்டிலே ஒரு வரி, ” வீணா வரிஞ்சு கட்டி வம்பிழுத்ததாலே,,’ என்று வருகிற வரியில் வரும் ‘வரிஞ்சு கட்டி’ என்கிற பதத்துக்கான உண்மையான அர்த்தத்தை ஆராய்கிறது சொக்கனின் ஒரு குறுங்கட்டுரை. நிலவு தென்படும் பாடல்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதி, அதை இறுதியில் அருணகிரிநாதரின் கந்தரகராதியில் கொண்டு போய் முடிச்சுப் போடுகிறார் ஜிரா. ‘அடியே நாளையேனும் மறக்காமல் வா’ என்கிற பாலகுமாரனின் பிரபல கவிதைக்கும் சோளம் வெதைக்கையிலே பாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்கிறார் மோகனகிருஷ்ணன்.

இது போன்ற பல சுவாரசியமான interpretations தான் நூல் முழுவதும்.

இதை வாசிக்கும் பொழுது நமக்குக் கிடைக்கும் இன்பத்தை விடவும் இந்தத் திட்டத்துக்கான பாடல்களைத் தெரிவு செய்ததும், ஆராய்ச்சியில் இறங்கியதும் அவர்கள் மூவருக்கும் அதிகமான இன்பத்தைத் தந்திருக்க்கும் என்று நினைக்கிறேன். அது குறித்தும் முன்னுரையில் ஆசிரியர்கள் கோடி காட்டியிருக்கலாம். இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கும்.

இது இணையத்தில் வெளியான பொழுதே வாசித்திருக்கிறேன். இந்தத் திட்டத்துக்காகவே ஒரு புதிய பதிப்பகத்தைத் தொடங்கி இந்த நூல் வரிசையை வெளியிட்டிருக்கிறார்கள் எனும் பொழுது, இது எவ்வளவு சீரியாசன விஷயம் என்று எனக்கு உறைக்கிறது. நன்றாக விற்பனை ஆகக் கூடிய புத்தகங்களை வெளியிட்டுக் காசு பார்க்கும் சூழலிலே, தனிப்பட்ட ஆர்வத்திலும், ஈடுபாட்டிலும், இம்மாதிரி, குறிப்பிட்ட ரசனைக்காரர்களுக்கென்று நூலைக் கொண்டு வந்திருக்கும் முயற்சியை வாழ்த்துகிறேன்.

தமிழ்ச் சினிமா பாடல் ரசனை கொண்டவர்கள் தங்கள் collectors edition இலே அவசியம் வைத்துக் கொள்ளவேண்டிய நூல்கள் இவை மூன்றும்.

நாலுவரி நோட்டு (1,2,3) | சொக்கன், ஜிரா, மோகனகிருஷ்ணன் | முன்னேர் பதிப்பகம் | Rs.125 each.

நூலை இங்கே வாங்கவும்.

எம்.எஸ்.வியின் மந்திரப்புன்னகை…..

mid 70’s – mid 80’s வரையிலான மெல்லிசை மன்னரைக் கொஞ்சம் தனியா கவனிக்கணும் போலயே… அவர்கள், மூன்றுமுடிச்சு, லலிதா, வணக்கத்துக்குரிய காதலியே, நினைத்தாலே இனிக்கும், பொல்லாதவன், போக்கிரிராஜா, திரிசூலம், இமயம், பில்லா, வறுமையின் நிறம் சிவப்பு, ராணுவ வீரன், சிம்லா ஸ்பெஷல், வசந்தத்தில் ஓர் நாள், சந்திப்பு, வசந்தராகம்….

ஒரு சாம்பிள்….

Malaysia Vasudevan

நம்ம பக்கத்து ஆள்களுக்கு எப்பவுமே கொஞ்சம் லக் உண்டு.. அதிக யத்தனம் இல்லாமலேயே ரசனையான விஷயங்கள், ரொம்ப ஈசியா கெடச்சுரும்..

கொள்ளையடிக்கும் ஓட்டல்கள் கூட, சமயத்தில் ட்ரை ஃப்ரூட் ரவா மாதிரி, தேவலோகத்துப் பலகாரங்களை ஓரளவுக்குச் சல்லிசான விலையில் கொடுத்து அசத்துவார்கள். நடு மத்தியான வேளையில், என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப் போயிருக்கும் சமயத்தில், ‘அட்டகத்தி’ மாதிரி ஒரு fresh air வந்து முகத்தில் தாக்கும். பாரதி மணி மாதிரி பைப் பிடிக்கும் தாத்தாக்கள் வாத்யார் நாடகத்தை இலவசமாகப் நடித்துக் காண்பிப்பார்கள். வேற எந்த மண்டலத்திலும் இல்லாதபடிக்கு கவியரசரும் மெல்லிசை மன்னரும் நான்ஸ்டாப் ஆக முப்பது வருடங்கள் களிநர்த்தனம் ஆடி கிறுகிறுக்க வைப்பார்கள். ஆட்டோவில் 200 ரூபாய் ரேட் ஆகும் தூரத்தை MTC பஸ்ஸில் 13 ரூபாயில் பயணிக்கலாம். எல்லா ரேட்டிலும் நல்ல ஆங்கிலம் பேசும் ஒயிட்காலர் பயல்கள் வேலைக்குக் கிடைப்பார்கள்…ஸ்வர்ணலதா மாதிரியான பாடகியின் குரலை அஞ்சு பைசா செலவில்லாமல் தினம் தினம் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுக்கலாம் …..

இந்தக் கொடுப்பினைக்கு நம் மெனக்கடல் தான் என்ன?

zilch

இந்தச் செருக்கினாலேயே தமிழ்நாட்டு ஆசாமிகளிடம் கொஞ்சம் taken for granted தனம் கொஞ்சம் அதிகம். அதிலே பலியான / கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பலரில் மலேசியா வாசுதேவன் முக்கியமானவர்.. கடந்த சில மாதங்களில், MV பாடல்கள் ஒவ்வொருமுறை கேட்கும் பொழுதும் புதுசாக ஏதோ தட்டுப்படுகின்றது.. ஒவ்வொரு பாடலாக எடுத்து பிரித்து போட்டு அலசுவது அவசியமாகிறது.. யாராச்சும் செய்ங்கப்பா…

http://mayilsenthil.wordpress.com/2013/04/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

ente kalbile

என்டெ கல்பிலே வெண்ணிலாவு நீ
நல்ல பாட்டுக்காரா
தட்டமிட்டு ஞான் கத்துவெச்சொரென்
முல்லமுட்டிலூரும்

இது போல கிறங்கடிக்கும் பாடலை சமீபத்தில் கேட்டதாக நினைவில்லை.. நீங்களும் கேளுங்க..

படம் : க்ளாஸ்மேட்ஸ் (2006)
இசை : அலெக்ஸ் பால்.