Katrathu Thamiz, Must See

kt.jpg

“சென்னையில் வசிப்பவர்களை இரண்டே இரண்டு பிரிவுகளுக்குள்ளே அடக்கி விடலாம். ஸ்பென்ஸர் ப்ளாசாவுக்கு உள்ளே இருப்பவர்கள், ஸ்பென்ஸர் ப்ளாசாவுக்கு வெளியே இருப்பவர்கள்’.

இது படத்தில் வரும் வசனம். பொறியியல் , மருத்துவம் என்று மாணவர்கள், நான்கு வருடங்களுக்குப் பிறகு கிடைக்க இருக்கும் லட்சங்களை மனதில் வைத்து, அலைமோதிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலே, ‘ எங்க தமிழய்யா மாதிரி வாத்தியார் ஆகணும்’ என்று வெள்ளந்தியாக நினைத்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற பிரபாகருக்கும் ( ஜீவா ), வீக்கத்தை வளர்ச்சி என்று நம்பும் ‘மாடேர்ன்’ சமூகத்துக்கும் நடக்கிற பிரச்சனைதான் கதை.

இதற்குள்ளாக, தொடர்ந்த அவமானங்களால், பிரபாகர், மனநிலை குழம்பி இருபத்து இரண்டு கொலைகள் செய்து விடுகிறான்.

எளிமையான வாழ்க்கையைக் கூட வாழ விடாமல் விழுங்க நினைக்கும் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் நகரத்திடம் இருந்து தப்பித்து, வெளியூருக்கு ஓடி சாமியார்களிடம் தஞ்சம் அடைந்து, கஞ்சா அடித்து, ஊர் ஊராகச் சுற்றித் தன் பால்யகாலத் தோழியைக் தேடிக் கண்டுபிடிக்க முயலும் அந்த இரண்டு வருடங்களில், குற்ற உணர்ச்சியே இல்லாமல், அந்தக் கொலைகளைச் செய்கிறான்.

உடனே, இது தமிழ் மொழிக்காகப் பாடுபடும் கதை என்றோ, ஒற்றை ஆளாகச் சமூகத்தை வன்முறை மூலமாகத் திருத்த முயலும் அன்னியன் மாதிரியான கதை என்றோ நினைத்து விட வேண்டாம். மாநகரங்களிலே income inequality என்பது பரவலாக இப்போது தெரிய வந்திருக்கும் பிரச்சனை. இந்தப் பிரச்சனை பற்றிய தன் பார்வையை, ஆவேசமான வாக்குமூலமாக சன் டிவி செய்தியாளரிடம் ( கருணாஸ் )வைக்கும் போது, front bench இல் இருந்து விசில் பறக்கிறது. பால்கனி அமைதியாக இருக்கிறது.

இது ஜீவாதானா அல்லது நிசமாகவே பிரபாகர் என்று யாரையாவது கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறாரா என்று சில சமயம் சந்தேகம் வருகிறது. ஜீவாவின் அழுத்தமான நடிப்பும், உடல் மொழியும்,. ஒப்பனையும் வசன உச்சரிப்பும், தேசிய விருதுக்கான தரத்தில் இருக்கிறது.

நல்ல சிந்தனைகள் மட்டுமே ஒரு படத்தை, சிறந்த படமாக ஆக்கி விடாது. இயக்குனர் ராமிற்கும் அது தெரிந்திருக்கிறது. முழுப்படத்தையும் தன் தோளில் தாங்கும் ஜீவா மட்டுமல்லாது, மிகக் குறைச்சலாக வரும் துணைப் பாத்திரங்கள் அனைவருமே – தோழியாக வரும் ஆனந்தி, தமிழய்யாவாக வரும் அழகம் பெருமாள், கருணாஸ் – நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஸ்ரீகர் ப்ரசாத்தின் தொகுப்பும் அபாரம். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் – நிஜத்தைச் சொல்ல வேண்டும் என்றால் – பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். அங்கங்கே தொய்வடையும் திரைக்கதையை மட்டும் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல், சிக்கலையும், சிக்கலால் பாதிக்கப்பட்ட வாழ்க்கையையும் நம் முன்னே விரித்துக் காட்டி விட்டு, ‘ பார்த்துக்கங்க சார், நாளைக்கே உங்களுக்கும் இது போல ஏதாவது….’ என்று சொல்வதோடு முடித்துக் கொள்வதற்காக இயக்குனருக்கு ஒரு நன்றிக் கைகுலுக்கல்.

அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து 🙂 ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று.

கற்றது தமிழ் – அவசியம் பார்க்கணும்.

**************

* பவித்ரா ரிடிஃபில் எழுதிய விமர்சனம் : Katrathu Thamizh is hard hitting

* Behindwoods விமர்சனம் : Kattradhu Tamil – A Kurinji flower in Indian cinema

10 thoughts on “Katrathu Thamiz, Must See

  1. ப்ரகாஷ்,
    கற்றது தமிழ் பற்றி நேற்றுதான் என் நண்பர் ஒருவர் போன் போட்டு சிலாகித்துச் சொன்னார். பார்த்துவிடவேண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன். உங்கள் பதிவு மேலும் அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  2. // front bench இல் இருந்து விசில் பறக்கிறது. பால்கனி அமைதியாக இருக்கிறது.//

    superb comments….. thats the truth happening

  3. //சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
    தீர்வுகள் சொல்லாமல், // – இந்த ஒரு வரிக்காக தான் 50% நான் பதிவே போட்டேன். 🙂 அங்க வந்து //சமுதாயத்தைச் சுத்தம் செய்ய்றேங்கற பேரில பார்க்கில தூங்கறவனையும், ரோட்டிலே எச்ச துப்பறவனையும் போட்டுத் தள்ளின அன்னியனை கைதட்டி ரசிச்சமில்லையா? அதே லாஜிக் தான்.// இப்படி சொல்லிட்டீங்களே. 🙂

    உங்க சமுதாய கருத்துல எல்லாம் எனக்கு உடன்பாடு தான், 100%, ஆனா படம் கண்டிப்பா அதைய ரொம்ப தப்பான ஒரு வகையில பிரதிபலிக்குதுன்னு தான் நினைக்கிறேன்.
    தனியா இதே கருத்தை பத்தி சொல்லிங்க, பெரிய ‘ஓ’, ஆனா கண்டிப்ப இந்த படமும், ஷங்கர் படம் மாதிரி, (ஏவிஎம்’ல சிவப்புமல்லி எடுத்த மாதிரி) ஒரு கேப்மாரித்தனம் தான்

  4. The worst sadistic movie of the century award must be crowned on this movie…and reviews like yours have made me waste 240Rs… 😦

    Movie goers want to have fun and entertainment forgetting their stressfull life throughout the week. When we see such movies we are more stressed and depressed… Such movies must be banned… (Just my personal view)

  5. பிரகாஷ்

    உங்கள் பதிவை எதேச்சையாக கூகுலில் எதையோ தேடப்போய் இங்கு வந்து சேர்ந்தேன்.

    நானும் கற்றது தமிழ் குறித்து எனது கருத்துகளை எழுதி உள்ளேன். அது கதையாடல் பற்றியது. உங்கள் விமர்சனம் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பாராட்டக்கள்

    //சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
    தீர்வுகள் சொல்லாமல், சிக்கலையும், சிக்கலால் பாதிக்கப்பட்ட வாழ்க்கையையும் நம் முன்னே விரித்துக் காட்டி விட்டு, ‘ பார்த்துக்கங்க சார், நாளைக்கே உங்களுக்கும் இது போல ஏதாவது….’ என்று சொல்வதோடு முடித்துக் கொள்வதற்காக இயக்குனருக்கு ஒரு நன்றிக் கைகுலுக்கல்.//

    ஷங்கர் கறித்த உங்கள் கருத்துகள்தான் எனது கருத்தும். அருமையான வாசகங்கள் இவை.

    நன்றி.

  6. நன்றி ஜமாலன். நீங்க எழுதிய விமர்சனத்தை அப்பவே வாசித்தேன். உடனடியாக மறுமொழி தர முடியாதபடிக்கு சில வேலைகள் வந்து விட்டன. பிறகு மறந்து விட்டேன் 🙂

    வருகைக்கு நன்றி.

Leave a comment