உன்னைப் போல் ஒருவன்.

unnaipoloruvan

முதலில், வெள்ளித்திரையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் அண்ணன் இரா,முருகன் அவர்களுக்கு பழைய ராகாகி தோஸ்துகள் சார்பாக ஒரு பெரிய ‘ஓ’

சும்மா சொல்லக்கூடாது, மனுஷர், வசனங்களிலே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.

கதை? இந்தியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. தீவிரவாதத்தின் மேல் கோபம் கொண்டு ‘பொதுஜனங்களிலே ஒருவன்’ கோபம் கொண்டு எழுந்தால் என்னாகும் என்பதுதான் கதை.

இந்த மாதிரி ஒரு நடிகன், தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் மோகன்லால், நல்லவேளை ஆலிவுட்டில் பிறக்காமல், ஆழ்வார்ப்பேட்டையில் ஜனித்தாரே என்று பெருமிதம் கொள்ள வைக்கும் கமல்ஹாசன், இந்தக் சீஃப் செகரட்டரி கேரக்டருக்கு , இவங்களை விட்டா வேற யார் இவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்க வைக்கும் ‘மேக்கப் தூக்கலான’ லக்ஷ்மி, ஒரு டிவி ஜர்னலிஸ்ட் கேரக்டரை கண்முன்னே இயல்பாகக் கொண்டு வந்து நிறுத்தும் அனுஜா ஐயர், சீனியர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான உடல்மொழியை திரையில் பிரதிபலிக்கும் பரத்ரெட்டி (சேது), ethical hacker ஆக ஒரே சீனிலே வந்து கலக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( மணிரத்னத்தின் அந்த நாள் படங்களின் செட் பிராபர்ர்டியான குட்டி ஆனந்த்) என்று அத்தனை பேரும் கலக்கி இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமன் ( இந்தியில் ஜிம்மி ஷெர்கில் செய்த பாத்திரம்) இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்.

காவல்துறை, ஆட்சித்துறை ஆகிய அதிகார மையங்களுக்கு இடையே இருக்கும் நுண் அரசியல், அழகாக வெளிப்படுகிறது, முக்கியமான காட்சிகளின் மூலமும், வசனங்களின் மூலமும்.

தமிழ்நாட்டு மக்கள், எளிதிலே connect செய்ய இயலாத வெடிகுண்டு கலாசாரத்தை, இவர் எப்படி ‘ அமைதிப்பூங்கா’ என்று அறியப்படும் நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றித் தரப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இனிய ஆச்சர்யம் காத்திருக்கிறது, க்ளைமாக்ஸில், மோகன்லாலுக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் நீண்ட உரையாடலின் மூலம்.

கமலஹாசனை, ஏன் எல்லோரும் கமலஹாசன் என்று சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், அக்காட்சியும் உரையாடலும்.

மற்றபடி, இப்படத்தில் லாஜிக் இருக்கிறதா, இப்படத்தின் மையக்கரு, எம்மதத்திற்கு ஆதரவானது / எதிரானது, எந்த எந்த காட்சிகள், எந்த எந்த மதங்களை தூக்கிப் பிடிக்கிறது / குப்பையில் வீசுகிறது போன்ற விமர்சனங்களை எழுதித் தள்ள ஸ்கோப் அதிகம் கொடுத்ததற்காக, சம்மந்தப்பட்டவர்கள், கமலஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு முறை தலைவரிடம், தூர்தர்ஷன் பேட்டியிலே, ‘ உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டார் ஒரு ரசிகர். அதற்கு தலைவர் சொன்ன பதில், ‘ கமல்ஹாசன்’

தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.

18 thoughts on “உன்னைப் போல் ஒருவன்.

  1. அய்யா! தங்களின் பதிவைக் கண்டேன்.
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    படம் நெடுகிலும் கூண்டில் அடைபட்ட வேங்கையாய் உறுமும் ‘மாரார்’ நமக்குப் புதுசு. கமிஷனர் ‘மாரார்’ முன்னிலையில் ‘common man’ கொஞ்சம் ‘stupid’-ஆகத்தான் படத்தில் தெரிகிறார். மோகன்லாலின் மற்றுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தி, தன்னை மேம்படுத்திக் கொண்ட கலைஞன் கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சபாஷ்!

    சற்றே கூன் விழுந்த தோற்றம். கறுப்பும் வெளுப்புமாய் தலை. நேர்த்தியான மீசை. சராசரி மனிதன் போடும் கண்ணாடி. கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம். தோற்றத்தில் முதுமை இருந்தாலும், பேச்சில் ‘தோற்றுப் போன/கையாலாகாத’ வருத்தம் + ‘என்னாலும் முடியும்’ கோபம். இப்படி ஒரு பாத்திரத்தை நஸ்ருதீன் ஷா ஏற்றுச் செய்ததை கமலஹாசன் ஏன் செய்ய வேண்டும்? செய்யத்தான் முடியுமா? என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.

    நல்ல விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் ‘மாசு குறையாமல்’ ஜனங்களுக்கு எடுத்துச்செல்ல / எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற வெறி.

    பொன்விழா நாயகர் வாழ்க பல்லாண்டு!

    திரு ப்ரகாஷ், தங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்!

  2. // தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் மோகன்லால், நல்லவேளை ஆலிவுட்டில் பிறக்காமல், ஆழ்வார்ப்பேட்டையில் ஜனித்தாரே என்று பெருமிதம் கொள்ள வைக்கும் கமல்ஹாசன்

    நச்

    // ஒரு முறை தலைவரிடம், தூர்தர்ஷன் பேட்டியிலே, ‘ உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டார் ஒரு ரசிகர். அதற்கு தலைவர் சொன்ன பதில், ‘ கமல்ஹாசன்’ தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.

    அது சரி 🙂

    // சற்றே கூன் விழுந்த தோற்றம். கறுப்பும் வெளுப்புமாய் தலை. நேர்த்தியான மீசை. சராசரி மனிதன் போடும் கண்ணாடி. கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம். தோற்றத்தில் முதுமை இருந்தாலும், பேச்சில் ‘தோற்றுப் போன/கையாலாகாத’ வருத்தம் + ‘என்னாலும் முடியும்’ கோபம். இப்படி ஒரு பாத்திரத்தை நஸ்ருதீன் ஷா ஏற்றுச் செய்ததை கமலஹாசன் ஏன் செய்ய வேண்டும்? செய்யத்தான் முடியுமா? என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.

    Summarizes my feedback abt the movie 🙂

  3. //தமிழ்நாட்டு மக்கள், எளிதிலே connect செய்ய இயலாத வெடிகுண்டு கலாசாரத்தை, இவர் எப்படி ‘ அமைதிப்பூங்கா’ என்று அறியப்படும் நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றித் தரப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இனிய ஆச்சர்யம் காத்திருக்கிறது, க்ளைமாக்ஸில், மோகன்லாலுக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் நீண்ட உரையாடலின் மூலம்.//

    கிகி, இந்த விளையாட்டு நல்லாயிருக்கே! தமிழனுக்கு தேசப்பற்றுப் போதிக்கிறதைத்தான சொல்றீங்க. நல்லாயிருங்க!

    கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாய் சிவாஜியாய் மாறிக் கொண்டு வருகிறாரோன்னு எனக்கு ஒரு டவுட் இருந்தது. இனி டவுட்டே வேண்டாம் ஆய்ட்டார். இனி தலைமுழுகிட்டு இளைஞர்களைத் தொடர வேண்டும், பாவம் எல்லாருக்கும் வயசாய்டுறது. 😦

  4. நான் ரசித்த கமல் படங்களிலே இது சிறந்த படம். என்னுடைய ஆவல் எல்லாம் இந்த படம் வியாபார ரீதியாகவும் வெற்றியடைய வேண்டும் என்பது தான்.

  5. Eswar :
    உய் உய் உய் உய் நான் தான் பர்ஸ்டு.

    விசிலடிச்சான் குஞ்சு கணக்கா ஒரு வேகத்தில் எழுதி விட்டேன். தயவு செய்து அழித்து விடவும்.

  6. ‘என்னைப் போல் ஒருவன்’ நேர்த்தியான ஒரு திரைப்படம் என்ற கருத்து இங்கு நிலவுகின்றது. படத்தின் மையக் கருத்தைத் தவிர்த்து மற்றபடி படம் சிறந்ததாகவே எனக்குத் தோன்றியது.

    படத்தில் இடம் பெறாத பல விஷயங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன – கனாக் காட்சிகளோ, பாடல்களோ இல்லை; அத்தகைய காட்சிகளுக்காகவே தோன்றும் நாயகிகள் யாருமில்லை; பத்து இருபது பேரை அடித்துத் துவைக்கும் நாயகனில்லை; கதைக்குத் தொடர்பில்லாத கதையோட்டத்திற்குத் தடையாக அமையும் நகைச்சுவை பாத்திரங்களில்லை; நடிகனைத் தூக்கிப் பிட்டிக்கும் ‘பஞ்ச்’ வசனங்களேதுமில்லை.

    இருப்பினும், கதையின் மையக்கரு சிருபிள்ளைத்தனமாகவும், அறிவுக்கும் யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டதாகவும் அமைந்திருந்தது. அது தொட்டு இங்கு எழுதியுள்ளேன்: http://inioru.com/?p=5541#comments

Leave a comment