மிக்சர் – II

‘A wednesday’ என்று ஒரு படம் பார்த்தேன். மும்பை குண்டு வெடிப்புகள் ஈன்ற மற்றொரு திரைப்படம். Cinematic என்று வர்ணிக்கத் தக்க கதைக் கருவை, அசலான களத்தில் படமாக்கியிருந்தார்கள். படத்தின் சஸ்பென்ஸை, பாதியிலேயே ஊகிக்க முடிந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படத்தில், பாடல்கள் கிடையாது.

சின்ன வயசிலே, ‘பார்’ ( Paar), என்ற படத்தைப் பார்த்து, இந்த ஆளலெல்லாம் எனன் நடிகன் ( நசீருத்தின்ஷா) என்று, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது. இந்தப் படத்தில் தான் சந்தேகம் விளங்கியது.

பல வருடங்களுக்கு முன்பு, மணிரத்னத்திடம், பிடித்த நடிகர்கள் யார் என்று கேட்ட பொழுது, மோகன்லால், நசிரூத்தின் ஷா என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்த விஷயங்களில் எப்படியோ, இந்த விஷயத்தில் நானும் மணிரத்னமும் ஒண்ணு.

*****

சென்ற வார காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா வந்திருந்து சிறப்பித்தார். மனம் திறந்து பேசினார் என்று சொல்லிவிட முடியாது. ஷோபா, மூன்றாம் பிறை பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கற்றது தமிழ் ராமும் , ‘பொல்லாதவன்’ வெற்றிமாறனும் இடையில் புகுந்து நிகழ்ச்சியின் போக்கை திசை திருப்பினார்கள்.

*******

சஞ்சிகைகளில் வரும் தொடர்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் போய் மாமாங்கம் ஆகிறது. என்றாலும் ஆனந்த விகடனில், நாஞ்சில் நாடன் எழுதும், ‘தீதும் நன்றும்’ என்ற தொடரும், ‘உயிர்மை’ இதழில் ‘ பாரதி மணியின் எழுதும் தில்லி அனுபவங்களும், பிரபஞ்சன் சமீபத்தில் தொடங்கியிருக்கும் ‘குமுதத்தின் கதையும்’ கீழே வைக்க இயலாதவாறு இருக்கின்றன.

பாரதி மணி. பொலிடிகல் கரக்ட்னெஸ் இல்லாத அவர் எழுத்து, தில்லியின், நடுத்தர, உயர்நடுத்தர தமிழர்கள் பற்றிய அருமையான பதிவு. நிறையத் தகவல்கள். சென்ற இதழில் தொடரை நிறுத்துவதாகச் சொல்லியிருக்கிறார். நிறுத்த வேணாம், தொடர்ந்து எழுதுங்க என்று, மெயில் ஒன்று தட்டிவிட்டேன்.

பிரபஞ்சன் எழுதும் தொடர், குமுதத்தில் அவரது உதவி ஆசிரிய வாழ்க்கையை விவரிக்கிறது. தொடரெங்கும் எஸ்.ஏ.பி. அண்ணாமலை பற்றிய , அதிகமாக புழக்கத்தில் இல்லாத தகவல்கள் விரவியிருக்கின்றன. இது போல எழுதி, புனித பிம்பங்களைக் கலைக்கலாமா என்று, ‘பெரியவர்கள்’ பேசித் தீர்மானிக்கட்டும். அது வரை நான் கொஞ்சம் வாசித்துக் கொள்கிறேன்.

நாஞ்சில் நாடனை, அவரது ‘ தலைகீழ் விகிதங்கள்’ படமாக்கத்தைப் பார்த்து விட்டு, ஒரு கே.எஸ் கோபால கிருஷ்ணன் அல்லது பீம்சிங் டைப் படைப்பாளி என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ( குற்றம் என்னுடையதல்ல, தங்கர் பச்சானுடையது 🙂 ), இல்லை, தானொரு கி.ராஜநாராயணன் வகையறா என்று விளங்க வைத்துவிட்டார். விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து, அவரது கட்டுரைகளில் தெறிக்கும் அக்கறை, இதம்.

******

சமீபகாலமாக நிறைய எழுத்தாளர்களை வலைப்பதிவில் பார்க்கிறேன். [அனேகமாக அனைவருமே வலைப்பதிவு என்ற வடிவத்தை, கட்டுரை எழுதுவதற்கான ஊடகமாக customize செய்து, எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.]அவர்களிலே, வலைப்பதிவு என்ற வடிவத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கும் மிகச்சிலரில், ஆர்.பி.ராஜநாயகமும் ஒருவர். சின்னச் சின்னப் பதிவுகள், occasional name dropping, பின்னூட்டங்கள். வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் மரியாதை , சுவாரசியமான எழுத்து, இன்ன பிற….

*********
அ.இ.அ.தி.மு.க உறுப்பினரும், திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சருமான, ஆற்காடு வீராஸ்வாமியவர்கள், ஜெயலலிதாவின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசுகையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டதாக கலைஞர் செய்தியில் பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு அம்மா எப்படிச் சமாளிக்கிறார் என்று யோசனையாக இருக்கிறது.

**********

8 thoughts on “மிக்சர் – II

  1. Perhaps you dont know much about Pirapanchan.Who knows persons who know him well may write a serial like this revealing awkward truths about him. Pirapanchan worked in Kumudam and Vikatan.

  2. பிரபஞ்சனின் “பகவத் கீதையும் பலான படங்களும்” என்ற கட்டுரையைப் படித்தேன். அது எஸ் ஏ பி என்ற குமுதம் ஆசிரியரைக் காட்டிலும் பிரபஞ்சன் பற்றி நிறையவே தெரிவித்தது. முதலில் “பகவத் கீதையும் பலான படங்களும்” என்ற தலைப்பு ஏன்? எஸ் ஏ பிக்கு பகவத் கீதை மட்டுமல்ல திருக்குறளும் பிடிக்கும் என்று தெரிகிறது. “திருக்குறளும் திறந்த மார்பும்” என்று தலைப்பிடாமல் பகவத் கீதையை ஏன் தலைப்பிலிட வேண்டும்? தத்துவ மரபும், காப்பிய நலனும் கொண்ட பகவத் கீதையை ஹிந்து பிரதியாகவும், அறம்- பொருள்- இன்பம் என்ற ஹிந்து கருத்தாக்க அடிப்படையை வேராய்க் கொண்ட திருக்குறள் திராவிடப் பிரதியாகவும், இன்றைய தமிழக ஆளும் வர்க்கத்தினரால் கட்டமைக்கப் பட்டுவிட்டதல்லவா? திருக்குறளைத் தலைப்பில் இட்டால் என்ன ஆகியிருக்கும்?

    எஸ் ஏ பி-யின் கீதை ஈடுபாடும், இலக்கிய ஈடுபாடும் ரகசியமான விஷயங்கள் அல்ல. குமுதத்தில் வேலைக்குச் சேரும்போது குமுதம் எப்படிப் பட்ட பத்திரிகை என்று பிரபஞ்சனுக்குத் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. பிரபஞ்சனின் வாழ்க்கையில் மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் குமுதம் அவருக்கு வேலை அளித்தது. அவர் மேற்கொண்ட சமரசங்கள் போன்றே தான் அநேகமாய் எல்லா தமிழ் எழுத்தாளர்களும் மேற்கொண்டுள்ளார்கள். தமிழின் பிரபல பத்திரிகைகளில் தேநீர் விநியோகிக்கும் சிறுவனுக்கு இருக்கும் மரியாதை கூட எழுத்தாளனுக்குக் கிடையாது என்பதும் ரகசியம் அல்ல. சமரசங்களை மேற்கொண்டு , அதன் மூலம் பலன்களை அனுபவித்து விட்டு, பின்னோக்கில் அந்த சமரசங்களுக்குக் காரணமானவர்கள் மீது சேறு வாரி இறைக்கும் பிரபஞ்சனின் கட்டுரையினால் எஸ் ஏ பிக்கோ, குமுதத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் பிரபஞ்சனுடன் இணைந்திருந்த பிறர் தம்மைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ என்று அஞ்சி நிற்கும் காட்சி என் கண்முன் வந்து மறைகிறது.

    கோபால் ராஜாராம்

    From uyirmmai

  3. கோபால் ராஜாராம் : நிஜமாகவே, அவரது எழுத்துக்களைத் தாண்டி, பிரபஞ்சன் பற்றி எதுவும் தெரியாது.

    எல்லாருக்கும் ஒரு ‘பாலிடிக்ஸ்’ இருக்கிறது. திருக்குறளை ஏன் தலைப்பில் வைக்கவில்லை என்று கேட்டு, நீங்கள் உங்கள் பாலிடிக்ஸை ( இதை ஒரு அவச்சொல்லாகக் குறிப்பிடவில்லை) வெளிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? அது போல, பகவத் கீதை மேலே இருக்கும் ‘பாலிடிக்ஸை’ வெளிப்படுத்த உயிர்மை அவருக்கு வாய்ப்பு தருகிறது. எது சரி, எது தவறு என்பதை கூர் இரண்டாகப் பிரிந்து நிற்பவர்களில் யார் சொல்வது? to each his own, இல்லையோ? 🙂

    பிரபஞ்சன் எழுதுவது சரியா தவறா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நீங்கள் சொல்கிற தகவல்களை , உறுதிப்படுத்தப்படாத வாய்மொழியாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சுமார் 25 ஆண்டுகளாக , 1300 குமுதம் இதழ்களை வாசித்திருக்கிறேன் என்ற அடிப்படையில், அவர் உதிர்க்கும் தகவல்கள் சுவாரசியமாகவும், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு போன்றோர் அவ்வப்போது எஸ்.ஏ.பி. பற்றி ‘பாலீஷாக’ எழுதி வந்ததை ஓரளவுக்கேனும் உறுதிப்படுத்துதாகவும், எஸ்.ஏ.பியை அவமதிப்பதை பிரபஞ்சன் தன் முக்கிய நோக்கமாகக் கொள்ளவில்லை என்று தோன்றியதாலும், பிரபஞ்சனின் தொடர் என்னை ஈர்த்தது.

    அவ்வளவே.

    வருகைக்கு நன்றி, கோ,ராஜாராம்.

  4. நசீருதீன் ஷாவை நானும் கொஞ்சம் தயக்கத்துடன் தான் அணுகினேன். தூர்தர்ஷன் புண்ணியத்தில் அவரின் ‘மிர்ச் மசாலா’, கண் தெரியாத வாலிபராக ஒரு படம், மற்றும் சிலப் படங்கள் ‘இந்த ஆள் வேறு ரகம்’ என்று புரிய வைத்தன.

    தமிழில் எதற்கு எடுத்தாலும் 20000 டெசிபலில் கத்தும் நடிகர்களைப் பார்த்து பழ்கிய கண்களுக்கு இவரின் நடிப்பு சொர்க்கமாக இருந்தது. ஷா மசாலாப் படங்களுக்கும் சென்று வந்தவர். இவரின் ‘Hero Hiralal’ (typical telugu masala) படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தாலும், அவரின் பல பரிமானகளில் ஒன்று என சமாதனம் அடைந்திருக்கிறேன்.

  5. பிரகாஷ்!
    பரிந்துரைக்கு நன்றி!
    ரொம்ப நாள் நினைச்சுட்டிருந்தேன்! இன்னிக்கு உங்களால உந்தப்பட்டு இரண்டாண்டு சந்தாவே கட்டிட்டேன் (http://www.uyirmmai.com/SubscribeEdition.aspx) உயிர்மைக்கு!

    வெங்கட்ரமணன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s