எனக்குத் தெரிந்தவர்.. வயது ஐம்பதைத் தொடும். ரொம்பச் சின்ன வயசுலேயே அரசுப் பணியில் சேர்ந்து , இப்போது ஏதோ ஒரு துறையில் மிக மூத்த அதிகாரி. இருந்தது முழுக்க உள்ளாட்சி / வருவாய்த்துறை துறை. ரியல் எஸ்டேட்டுக்காரகளும் வியாபாரிகளும் கொண்டு வந்து கொட்டுவார்கள். ஆனால் நம்ம அண்ணனுக்குக் கொஞ்சம் கை சுத்தம். அதனால் டயரி, பால்பாய்ண்ட் பேனா தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ள மாட்ட்டார். நட்பு வட்டாரங்களில், பணி நேர்மை, கடுமையான உழைப்பு ஆகியவ்ற்றுக்கு அவரை உதாரண புருஷராகச் சொல்வார்கள். சமீபத்தில் மிகப் பெரிய பதவி உயர்வு வந்தது. இதே ரேஞ்சில் போட்டு மிதித்தார் என்றால், இன்னும் ஒரு சில வருடங்களில் பெரிய பதவியில் ரிட்டையர் ஆவார்.
அவருடைய சக ஊழியர்கள் எல்லாரும் பெருசாகப் பதவி உயர்வு இல்லையென்றாலும், மெடிக்கல் சீட்டு,. ஓரகடத்தில் ப்ளாட்டு, நகைகள் என்று ‘வளமாக’ இருந்தார்கள். அண்ணனுடைய வீட்டுக்காரம்மாவுக்கு இதிலே லேசாக மனவருத்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களை அதிகமாகப் பழக்க்கம் இல்லை.
சமீபத்தில் அவரைச் சந்தித்த பொழுது, இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
எழுபதுகளில் இறுதியில் தற்காலிகமாக சென்சஸ் துறையில் நாள் கூலியாக வேலைக்குச் சேர்ந்தது. அப்போது அதிக அளவு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் ( முந்தைய ஆட்சியைக் கவிழ்த்த கோபத்தில் மக்கள் கொல குத்து குத்தியிருந்தார்கள்) , ஒரு உற்சாகமான மூடிலே தற்காலிகப் பணியாளர்கள் பலரை எந்தக் கணக்கு வழக்குமில்லாமல் நிரந்தர ஊழியர்களாக்கியது, அதன் மூலம் அரசிலே ஜுனியர்ர் அஸிஸ்ட்டெண்டாக வேலை கிடைத்து, மேலதிகாரி என்ன சொன்னாலும் சிரமேற்கொண்டு செய்து முடித்தது, உள்ளாட்சித்துறை அடைந்த மாற்றங்கள், லஞ்ச ஊழலில் மாட்டிக் கொண்டு கைதான நண்பர்கள், மாட்டிக் கொள்ளாமல் மல்டி மில்லியனராக வலம் வரும் சில குமாஸ்தாக்கள் என்று சுவாரசியமாகப் பேச்சு நீண்டு, பிள்ளைகள் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு… கடன் தொல்லை என்று cash flow பிரச்சனையில் வந்து நின்றது.
” அது எப்படிண்ணா இப்படிப் பணங்கொட்டற டிப்பார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு … கொஞ்சம் கூட சபலப்படாம.. நீ கேக்கலைன்னாகூட வந்து குடுத்துடுவாங்களே…?ஆனா எனக்குத் தெரியும் நீ அவ்ளோ உத்தமன்லாம் இல்லைன்னு …எக்ஸாக்டா என்ன பிரச்சனை?
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார்.
” பணம்னா யாருக்கு வேண்டாம்? எனக்கும் ஆசைதான்… கை நீட்டி வாங்கிட்டு… அப்பறம் மாட்டிக்கிட்டா என்ன பண்றதுன்னு பயம்… அதான் சர்வீஸ் முழுக்க நல்லவனாவே இருந்துட்டேன்…