EID Parry க்கு ஒரு விசிட்

இன்றைக்கு EID Parry அலுவலகத்துக்கு ஒரு வேலையாகப் போயிருந்தேன். பாரிமுனையில் இருக்கும் பாரம்பரியமிக்க பல அடுக்குக் கட்டடம். முருகப்பா குழுமத்தின் பெரும்பான்மையான நிறுனவங்களுக்கு அங்கே தான் தலைமை அலுவலகம்.

19 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதுக்கும், தற்போதையை விசிட்டுக்கும் பெரிய வித்தியாசத்தை உணரவில்லை. இந்த மாதிரி, ‘பழம் பெரும்’ நிறுவனங்களின் நடைமுறைகள், புதிய தலைமுறை ஆசாமிகளுக்கு ரொம்ப காமெடியாக இருக்கும். பிரிட்டிஷ் காரன் கூட தூக்கிப் போட்ட விஷயங்களை, ‘மயிர் நீப்பின் உயிர் வாழா’ ரேஞ்சுக்குப் போற்றிப் பாதுகாப்பார்கள்.

நான் பார்க்கவெண்டிய ஆசாமி, அந்த கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் ஒரு மூலையில் இருந்தார். சரியான நேரத்துக்கு உள்ளே நுழைந்தவுடன், விசிட்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு ‘மேடம்’ என் ஜாதகம் தவிர அனைத்துச் சமாசாரங்களையும் விசாரித்து, ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தார். தற்காலிக அடையாள அட்டை(!). ஆசாமியைச் சந்தித்து விட்டு வரும் பொழுது, அந்தக் காகிதத்திலே, அவரைச் சந்தித்ததுக்கு அத்தாட்சியாக கையெழுத்தைப் பெற்று வரவேண்டும். இது அனேகமாக எல்லா பெரிய நிறுவனங்களிலும் இருக்கும் நடைமுறைதான்.

துண்டுக் காகிதத்தை வாங்கிக் கொண்டு ஐந்தாவது மாடிக்குச் சென்ற பொழுது, உள்ளே ஏகப்பட்ட நிறுவனங்களின் ( முருகப்பா குழுமத்துக்குச் சொந்தமானவை) அலுவலகங்கள் இருந்தன. அதிலே நான் போகவேண்டிய அலுவலகத்தைக் கண்டு பிடித்து உள்ளே நுழைந்தால்,

” Yes sir, how may i help you..?” என்று ரிசப்ஷனில் ஒரு அக்கா இருக்கவேண்டுமல்லவா?

ஆனால் அப்படி யாருமே இல்லை.

காலியான ஹால். மூலையில் 3 seater குஷன் சோபா. உள்ளே போக ஒரு தேக்குமரக்கதவு. அடையாள அட்டையைத் தேய்த்தால் தான் கதவு திறக்கும்.சரி உள்ளேயிருந்து யாராவது வருகிறார்களா பார்க்கலாம் என்று குஷனில் இருக்கையில் காத்திருந்தேன்….

அப்போதுதான் அதைப் பார்த்தேன்.

இண்டர்காம். அத்தனை நேரமாகக அதைக் கவனிக்கவே இல்லையே. பக்கத்திலேயே ஒரு பெரிய அட்டை. அதிலே அனைத்து ஊழியர்களின் பெயர், பதவி, எக்ஸ்டென்ஷன் எண்கள் இருந்தன. ச்சே. இது தெரியாம இவங்களை கன்னா பின்னான்னு திட்டிபுட்டோமேன்னு லைட்டாக வருத்தப்பட்டு நம்ம ஆளின் எண்ணைக் கண்டுபிடித்து ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தேன்.

ஏன் நேத்திக்கி லீவு என்று கேட்டால் பசங்களிடம் ஒரு அமைதி நிலவுமே.
அம்மாதிரி ஒரு பேரமைதி.

phone out of order.

அந்த நேரத்தில் கதவைத் திறந்து ஒருவர் அவசரமாகச் வெளியே வந்தார்… அல்ல. சென்றார். அலுவலகச் சீருடை. ஆகவே ஊழியர்தான்..

அவரை இழுத்துப் பிடித்து, ” நான் நான் இன்னாரைப் பாக்கணும், கொஞ்சம் உள்ள போய் சொல்லுங்க..”

” சாரி, நான் வேற கம்பெனி.. நீங்க இண்டர்காம்ல கூப்பிடுங்க” என்று சொல்லிக்கொண்டே வெளியே விரைந்தார். இண்டர்காம் ஃபோன் வேலை செய்யலை என்று சொல்வதைக் காதில் வாங்குவதற்குள் அந்தக் கடமை வீரர், அவ்விடத்தைச் சடுதியில் விட்டு அகன்றார்.

இந்த உழக்கு கேபின்க்குள்ள எத்தனை ஆஃபீஸ்? செட்டியார் கொஞ்சம் கட்டு செட்டுதான். அதற்காக இப்படியா.

இன்றைக்குப் பார்த்து, அந்த ஆசாஃமியின் செல்ஃபோன் எண்ணை சேமித்து வைக்க வில்லை. அதனால் என்ன? நம்பர் தான் ஈமெயிலிலே இருக்குமே? சுறுசுறுப்பாக ஐஃபோனை எடுத்தேன்.

No network.

ஒரு நிமிஷம் நிஜமாகவே நான் அலுவலக வேலையாக இங்கே வந்திருக்கிறேனா அல்லது சூதுகவ்வும், மூடர்கூடம் மாதிரி ஒரு அப்சர்ட் காமெடியின் ஒரு பாத்திரமாக இருக்கிறேனா என்று பெருங்குழப்பமே வந்துவிட்டது.

ஆனால், எல்லாம் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் தான். பிறகு உடனே என் மக்களை தொடர்பு கொண்டு செல்ஃபோன் எண்ணக் கண்டுபிடித்து, அந்த ஆசாமியை வரவேற்பறைக்கு அழைத்து செக்கை வாங்கி சம்பிரதாயங்களை முடித்து சில மணித்துளிகளிலேயே வெளியே வந்துவிட்டேன் தான்.

ஆனாலும், இணையத்திலேயே தொடங்கி, வழங்கி, நிறைவேற்றி முடிக்கும் ஒரு சேவைக்கு, online payment, net banking, NEFT, RTGS ஆகிய விரைவுவழிகள் வெகுஜனப் புழக்கத்துக்கு வந்துவிட்ட காலத்திலும், காசோலை எழுதி, அதை நேரிலே சென்றுதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறையை ( சாரி சார், கொரியர்ல எல்லாம் அனுப்ப முடியாது, நேர்ல தான் வந்து வாங்கிக்கணும், அஸ் பர் த கம்பனி பாலிசி) இன்னமும் பின்பற்றுகிற முருகப்பா குழுமம் போன்ற நூறாண்டைக் கடந்த நிறுவனங்கள் மிகவும் சுவாரசியமான கதைகளை, வரலாறுகளைக் கொண்டவை.

நிறைய எழுதலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s