இளவரசன் – திவ்யா

இளவரசன் தற்கொலை செய்தி ஏற்படுத்திய மன உளைச்சல் ஓரளவுக்கு அடங்கிய நிலையிலே இதை எழுதுகிறேன்.

அகமண முறையும், குடும்பம் என்கிற அமைப்பும் தான், நடுத்தர வர்க்கத்தில் சாதியைக் கட்டிக்காப்பாற்றுகின்றன. எந்தப்பக்கமும் யார் முணுமுணுப்பும் இல்லாமல், ஒரு பிராமணப் பெண்ணும் , ஒரு செட்டியார் பையனும் கலப்புமணம் செய்துகொள்ள, முன்னவர் , சென்னை நகரத்தின் பிரபலமான மருத்துவர் குடும்பத்தின் குத்துவிளக்காகவும் , பின்னவர் மத்திய அமைச்சர் குடும்பத்தின் குலக்கொழுந்தாகவும் இருந்தால் மட்டுமே முடியும். இந்த போன்ற எலைட் சமூகம் தவிர்த்த அத்தனை மட்டங்களிலுமே, சாதிக் கலப்பு மணம் உரசல்களை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும்.

உறவுகளை, பற்றுக்கோடாகச் சார்ந்து வாழத் தலைப்பட்ட நம் நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகள், அந்த உறவுகளைப் பேணும் பொருட்டே, பெரும்பாலும் இந்தக் காதல் கலப்புமணங்களைத் தவிர்த்து வந்திருக்கின்றனர். வருகின்றனர். நாளிதழ்களில் வரும் மாட்ரிமொனி விளம்பரங்களின் அதிகரிப்பும், சாதிக்கொரு subdomain போட்டுப் பிரித்து வைத்து சில்லறை தேற்றும் பாரத்மேட்ரிமொனி கம்பெனியின் நிகரலாபமும் இதை உறுதிப் படுத்துகின்றனர்.

சில சமயம், பெரியவர்கள், பிள்ளைகளின் நிம்மதியான இல்வாழ்க்கைதான் முக்கியம் என்று உணர்ந்து சாதிக் கலப்பு மணங்களை மனதளவில் ஒப்புக் கொண்டாலும், சாதிச்சமூகத்தில் தனிமைப் படுத்தப்படுவோம் என்ற அச்சத்தினால், இத்திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. சாதிச் சமூகத்தில் இருந்து வெளியே வந்து தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனதிடமும், பொருளும் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் இது போன்ற கட்டுக்கோப்பான சமூகங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நிகழும் கலப்பு மணங்கள் தான், சாதியற்ற சமூகமும் / சமூகநீதியும் தான் வாழும் காலத்திலேயே ஏற்படும் என்று எதிர்பார்ப்பவர்களின் ஆதார நம்பிக்கை.

“வேறு சாதியிலே காதல் மணம் செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்” என்கிற பெற்றோரின் மிரட்டல், “குடும்பத்துக்குப் பெரியவன், நீயே இப்படிச் செய்தால் நாளை உன் தங்கையை யார் கல்யாணம் செய்வா?” என்ற எமோஷனல் ப்ளாக்மெய்ல், ” போயும் அந்த ஆளுங்களா? அவங்க குலத்தொழில் என்ன தெரியுமா?” என்ற வெற்றுப் பெருமை, ” இப்படி எல்லாம் செஞ்சா, ஒட்டுறவே இல்லாமப் பண்ணிடுவோம்” என்ற ஒட்டுமொத்த உதறல் போன்ற எந்த மனோதிடத்தையும் குலைக்கும் அளவுக்கான தடைகளையும் மீறி, இந்த நடுத்தர வர்க்கத்தில் சாதிக் கலப்புமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில தடைகளைச் சந்திக்கின்றன. பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன.

ஒரு கட்டத்தில் , குடும்பத்தினரும் கூட, ‘ ஏதோ நல்லா இருந்தாச் சரிதான்’ என்று ஒத்துக் கொள்ள, குடும்பத்தின் அடுத்து வரும் காதல்மணங்களுக்கு தடைகள் மெதுவாகக் குறைகின்றன.

காதலிக்கும் பொழுது, அந்தப் பெண் மட்டுமே பிரதானமாகத் தோன்றினாலும், திருமணம் என்று வரும் பொழுது , அப்பா, அம்மா, தங்கை, தங்கை வீட்டுக்காரன், அவரது அண்ணன் அனைவரின் ஆமோதிப்பும் அவசியமாகிறது. இப்படிப்பட்டவர்களிடம் மாறுதல் மெதுவாக, ஆனால், உறுதியாக நடக்கும். நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால்,

இந்தச் சமூகமாறுதலை அனுமதிக்கவே மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து, அந்தப் பிள்ளைகளைத் துரத்தி துரத்தி அடித்து, இறுதியில், அந்தப் பையனைக் கொன்று வெற்றிக் களிப்பில் நடனமாடி, அதை விட முக்கியமாக, இனிமேல், யாராவது சாதி விட்டு சாதி மாறி காதல் திருமணம் செய்தால் செய்பவர்களுக்கும் இதேதான் கதி என்று இளவரசன் (தற்)கொலை மூலமாக தமிழகம் முழுமைக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கும்

மருத்துவர் தமிழ்குடிதாங்கியையும், அவரது கட்சியையும் தமிழத்தில் புல்பூண்டு அளவுக்கும் இல்லாமல் செய்வதே இளவரசன் (தற்)கொலைக்கு நாம் செய்யக் கூடிய பரிகாரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s