Senthil’s (@4sn) Wedding

வரணும் ஆனால், மேனேஜர் லீவ் குடுக்கலை, வாட்டர் கேன் ஸ்ட்ரைக்கு, கூட நானும் வருவேன் என்ற மனைவிமார்களின் பயமுறுத்தல், மானாட மயிலாட கலாக்கா ப்ரோக்ராமை மிஸ் பண்ண முடியாது போன்ற காரணங்களுக்காக, அழைக்கப்பட்டும், செந்தில் கல்யாணத்துக்கு வர இயலாமல் போனவர்களுக்கான சிறுகுறிப்பு இது.

சனிக்கிழமை

  • திருமணம் நடக்க இருப்பது நகரத்தார் கலாசாரத்தின் நடு செண்டரான தேவகோட்டை என்பதற்காகவே ஆர்வத்துடன் கிளம்பினேன். டைம்லைன் நண்பர்கள் ஒரு ஒன்பது பத்து பேர், இரண்டு கார்களை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை கிளம்பி, மதியம் திருச்சியிலே உணவு முடித்துட்டு சுமார் நாலு மணிக்கு தேவகோட்டையை அடைந்தோம் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை, அதன் சொந்தக்காரர் Murali ஒரு பூனைக்குட்டியைப் போலப் அழகாகப் பழக்கி வைத்திருக்கிறார். அட்டகாசமான ட்ரைவிங். ஊரை அடைந்ததும், புதுமாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல், சாதா சட்டை, சாதா பேண்ட், முன் கொக்கியில் ஒரு மஞ்சப்பை சகிதம், ஒரு டிவிஎஸ் 50 இலே, எங்களை, செந்தில்நாதன் (@4sn) திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.
  • அது ஒரு நாலுகட்டு செட்டிநாடு வீடு. ஓபன் ஏர் முற்றத்தை மட்டும் மேலே ‘கவர்’ செய்துவிட்டு, அப்படியே மண்டபமாக மாற்றியிருந்தார்கள். செந்தில் நாதனின் அம்மா, அப்பா, தங்கை, தங்கையின் 1/2 வயசு மகன் அண்ணாமலை ஆகியோருடன் நல்ல விதமாக அறிமுகப் படலம் நடந்தது. பிறகு, பஜ்ஜி, காஃபி, பச்சரிசி, கருப்பட்டி போட்டுச் செய்த நெய்ப் பணியாரத்தை சுவாகா செய்துவிட்டு பின் யதார்த்தமாக ,

-“பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்களா?”

என்று கேட்க,

செந்தில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

-அவங்க வேற மண்டபம், நாங்க வேற மண்படம். அவங்க இங்க வரமாட்டாங்க.அப்ப தாலி கட்டறது எப்படி, கூரியரிலா? என்று ஒரு பெருங்குழப்பம் எங்களுக்கு. செந்திலே விளக்கினார்.

-திருமணத்துக்காக, மூன்று நாட்கள் முன்பாகவே, தனித்தனியாக ( ஆனால் அருகருகே) இரண்டு திருமண மண்டபங்கள் பிடித்து, ஒன்றில், மாப்பிள்ளை உள்பட பையன் குடும்பத்தினரும், மற்றொன்றில் பெண் உள்பட , மணப்பெண் குடும்பத்தினரும் தங்கிக் கொள்வார்கள். அன்றிலிருந்தே சடங்குகள் துவங்கும். ( இவற்றை செந்திலின் அம்மா விளக்கினார். முழுமையாக எழுதும் அளவுக்கு ஞாபகத்தில் இல்லை). சடங்கின் முக்கிய அம்சம், முதல் நாள் அன்றே, மணமகனுக்கு மெட்டி அணிவித்து ( தாய்மாமன் அணிவிப்பார்) , மண்டபத்தில் சிறை வைப்பது ஆகும். இது போல அடுத்த மண்டபத்தில் மணப்பெண்ணும் சிறை வைக்கப்படுவார் ( என்று தான் நினைக்கிறேன்). திருமணம் நடக்க இருக்கும் அந்த முகூர்த்த நேரத்தில், மாப்பிள்ளையை, அழைத்துக் கொண்டு வந்து, தாலி கட்டவைப்பார்கள். தப்பிக்க வழியே கிடையாது.

-முகூர்த்தத்துக்கு முன்பாகவே, முந்தைய நாள் ரிசப்ஷனில் , மணமக்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட சென்னைகாரர்களான எங்களுக்கு இது சற்று வித்தியாசமாக இருந்தது.

-மேலும், ஊர்முழுக்க உறவினர்களைக் கொண்ட இரு வீட்டு முக்கியஸ்தர்களும், அல்ப சொல்ப காரணங்களுக்காக முட்டிக் கொண்டு, அதன் மூலமாக ‘சம்பந்தி சண்டை’ உருவாக , இந்த format இலே வாய்ப்புகள் குறைவு என்பதைக் கண்டுபிடித்தவர்களின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கிறேன்.

-என்றாலும், முகூர்த்த நேரத்துக்கு முன்பாக, இரு வீட்டினரும், சம்பந்தி இடத்துக்குப் போவதும் வருவதுமாக இருக்கின்றனர். அதாவது, மணமக்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவர்கள், குறிப்பாக வீட்டுப் பெரியவர்களும் நிச்சயதார்த்ததுக்கு வர இயலாமல் போனவர்களும் போய்ப் பார்க்கலாம். பெண்ணும் மாப்பிள்ளையும் மட்டும் தான் பார்த்துக் கொள்ளக் கூடாது. நிச்சயதார்த்துக்கே கூட மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அனுமதி கிடையாது.

  • இரவு தங்கலுக்கு , செந்தில், ஏசி வசதியுடன் கூடிய நாலைந்து அறைகளை ஏற்பாடு செய்திருந்தார். பெட்டிப் படுக்கைகளை போட்டுவிட்டு, refresh செய்து கொண்டு, மண்டபத்துக்கு வந்து இரவு உணவை முடித்துக் கொண்டோம்.
  • சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து, பின்னர் விஜய்மல்லயா துணையுடன் நள்ளிரவுப் பேச்சுக் கச்சேரி. நோ மேல்விவரம்.

ஞாயிற்றுக்கிழமை

  • 8.30 மணிக்கு காலைப் பலகாரம். மெனு : செட்டிநாடு இட்லி, சட்னி,சாம்பார்,கவுனி அரிசி (இனிப்பு) உருளைக்கிழங்கு பஜ்ஜி, தலைக்கறி அவியல், வெள்ளையப்பம், காஃபி. பரிமாறுவதிலும் ஒரு வித்தியாசம். மொத்தமாக அடுக்கிக் கொண்டே போவதில்லை. எல்லாவற்றிலும் கொஞ்சமாக வைத்து, பிறகு வேண்டும் என்பதை கேட்டுக் கேட்டுப் பரிமாறுகிறார்கள். செந்தில் உள்பட, வீட்டினர் அனைவரும் சுற்றி இருந்து, பார்த்துப் பார்த்து விசாரிக்க, சற்று கூச்சமாகவே இருந்தது. பந்தி உபசரணை பற்றி ஜெயமோகன் எழுதியது நினைவுக்கு வந்தது.
  • உறவினர்கள் நடமாட்டம் அதிகம் ஆனதும், ஊர் சுற்றலாம் என்று கிளம்பி, கானாடுகாத்தான் என்று ஒரு குக்கிராமத்துக்குச் சென்று, அங்கே, ஏசி முத்தையா, எம்.ஏ.எம்.ராமசாமி போன்றவர்களின் சின்னஞ்சிறு குடிசைகளை ஆ என்று பராக்குப் பார்த்து விட்டு வந்தோம். ஒவ்வொரு குடிசையும் ஏக்கரா கணக்கில் இருக்கின்றன.
  • மண்டபத்துக்கு வந்து சேர்வதற்குள், பெண் வீட்டார், மாப்பிள்ளைக்கான சீதனத்தை அளித்து விட்டுச் சென்றிருந்தனர். ஒரு குடும்பம் நடத்தத் தேவையான அனைத்துப் பொருட்களும் ( பூரிக்கட்டை மட்டும் மிஸ்ஸிங்) அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹால், ஒரு குட்டி ரங்கநாதன் தெரு போலக் காட்சி தந்தது.
  • அன்று மதியமே கிளம்பி, இரவு சென்னையை அடைவதாக இருந்ததால் ( முகூர்த்தம் திங்கள் அன்றுதான்), புறப்படுமுன்னர், அனைவரும் மணப்பெண்ணை, அவர்களுடைய மண்டபத்துக்குச் சென்று பார்க்க செந்தில் ஏற்பாடு செய்ய, செந்திலின் தங்கை, எங்களை அழைத்துச் சென்று மணப்பெண்ணிடம் அறிமுகம் செய்தார். பார்த்தால் ரொம்ப சாந்தமானவராகத் தெரிந்தார். ( வளர்ந்தவன் போடுகிற ஆட்டத்துக்கு சாந்தமெல்லாம் சரிப்படாதே என்று தோன்றினாலும் சொல்லவில்லை) தஞ்சாவூரில் இஞ்சினியரிங் படிப்பு. பார்த்தால்கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது… என்ன செய்ய, விதி வலியது….அறிமுகப்படலம் முடிந்ததும், கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினோம்.
  • திரும்ப மண்டபத்துக்கு வந்ததும் மாலை இரவு விருந்துகளைச் சொல்லி செந்தில் ஆசை காட்டினாலும், முகூர்த்த நேரம் வரை இருக்க, சூழ்நிலை அமையவில்லை. என்றாலும், திருமணத்தின் மிக முக்கிய பலகாரமான ‘கும்மாயம்’ என்கிற ஐட்டத்தின் மகாத்மியத்தை விளக்கி, தயாராகிக் கொண்டிருக்கும் பொழுதே, அடுப்பில் இருந்து டைரக்டாக இலையில் கொஞ்சம் வைத்து சுடச் சுடச் தந்தார், செந்திலின் அம்மா. (இந்த சூவீட்டைச் சாப்பிடாம, யாரும் கல்யாண வீட்டை விட்டுப் போகமாட்டாங்க, போவக்கூடாது ). நெய்க்குளத்தில் மிதக்கும் அல்வா டெக்ஸ்ச்சரில் ஒரு இனிப்பு. கொலஸ்ட்ரால் காரர்கள், செட்டிநாட்டுத் திருமணங்களை தயவு செய்து தவிர்க்கவும்.
  • முறுக்கு, பணியாரம் போட்ட தாம்பூலப் பையுடன் கிளம்பி, இரவு சென்னையை அடைந்தோம்.

நிறைவு.

post script

டைம்லைனிலே இத்தனை அடக்க ஒடுக்கமாக இருக்கும் இவரா என்று ஆச்சர்யப்படும் வண்ணம் எல்லோரையும் மானாங்காணியாகப் போட்டு வாரும் ராஜேஷ் பத்மநாபன்

மிகப் பொறுப்பாக வண்டி ஓட்டி அனைவரையும் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போய் திரும்பி அழைத்து வந்தமுரளி

கிடைக்கிற ஒரு சான்ஸையும் மிஸ் செய்யாமல் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் / global warming பற்றிப் பேசிப் பொங்கல் வைக்கும் இளவல் / என் namesake

ஆர்கனைசர் என்ற பெயரிலே ஓபி அடித்துச் சுற்றி வந்த food entrepreneurராஜபாண்டியன்

இவர்தான் official காமிராமேனோ என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் சதா அந்த கருப்பு வஸ்த்துவுடன் சுற்றி வந்து, கடைசியில் ஒரு ஃபோட்டோவைக் கூட கண்ணில் காட்டாத இளா ,

நல்லா ஜாலியாக அரட்டை அடித்து, சரிக்குச் சரியாக பெருசுகளுடன் ஈடு குடுத்து, எல்லாம் முடிந்து திரும்பும் வேளையில், ‘ஆமாங்க, நான் இளைய தளபதி விஜய் ஃபேன் தான்’ என்று திடீர் அதிர்ச்சி கொடுத்த சின்னப்பய்யன்அர்ஜூன்

புதிதாக அறிமுகமாகி ராஜேஷிடம் அவ்வப்பொழுது பல்பு வாங்கிக் கொண்டே இருந்த Marathoner / Engineer / Birdwatcher / Trekker ./ Spices Trader என்ற பன்முகம் கொண்ட swaran

நீண்டநாட்களாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவெங்கிராஜா

மற்றும், காண்டீனிலே டீ குடிக்கப் போனால் கூட, இடத்துக்கு 4sq check in, போட்டோவுக்கு instagram, அதுக்கு ஒரு ட்விட்டு, அதையே ஃபேஸ்புக்கிலே மறுஒளிபரப்பு என்று ஆரவவாரமாக இருந்தாலும், ஊட்டுக்காரம்மாவும் மாமனாரும் அருகில் இருக்க, கீச்ச் மூச் சத்தம் எதுவுமில்லாமல் பவ்வியமாக இருந்த சேலம் டாக்டர்

என்று

பயணத்தை இனிமையாக்கிய , அறிமுகமான / புதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மணமக்கள் செந்தில் மற்றும் சௌந்தரம் ஆகிய இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s