எதிர்நீச்சல் – ஓகே. பார்க்கலாம்.

கைகேயி என்று பெயர் கொண்ட ஒரு பெண், அந்தப் பெயரினால் பல இம்சைகளுக்கு ஆளாகிறாள். பிறகு புத்திசாலித்தனமாக சிந்தித்து, அந்தப் பெயரில் கதை எழுதி, பெரிய எழுத்தாளர் ஆகி ( வித்தியாசமான பெயர் இருந்தாத்தானே எழுத்தாளர்?) அந்தப் பெயர் ஏற்படுத்திய அவமானங்களைக் கடந்து வெற்றியடைவார். இதைக் கருவாகக் கொண்ட ஒரு சிறுகதை வாசித்திருந்தது என் நினைவுக்கு வந்தது. ( சிறுகதை , எழுதியவர் பெயர் நினைவில்லை. வே.சபாநாயகம் அவர்கள் தொகுத்த கணையாழிக் களஞ்சியத்தின் இருபாகங்களில் ஒன்றில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது)

இதுதான் எதிர்நீச்சல் படத்தின் பேஸ்லைன்.

குஞ்சிதபாதம் என்ற பெயர் ஏற்படுத்தும் அவமானங்களில் இருந்து தப்பிக்க ஹரீஷ் என்று வைத்துக் கொள்ளும் புதிய பெயர், அவனுக்கு அழகான காதலையும், இன்னும் பல அதிருஷ்டங்களையும் கொண்டு வந்தாலும், விரைவிலேயே சில புதிய சிக்கல்களை ஏற்படுத்தி, இறுதியில் பெயரில் ஒன்றும் இல்லை என்கிற உண்மையை நாயகனுக்குப் புரிய வைக்கிறது.

நல்ல லைன் தான் என்றாலும், திரைக்கதை, படத்துடன் ஒன்றவிடாமல் செய்து விடுகிறது.

பழைய ட்ராமாக்களில் எல்லாம் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா? ஒரு டாக்டரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், அப்ப ஒரு கேரக்டரே ” அதோ, டாக்டரே வந்துட்டாரே” என்று சொல்லும். அது போல, இந்தத் திரைக்கதை எந்த முடிச்சும் இல்லாமல், போரிக் பவுடர் மொழுகிய கேரம்போர்ட் மாதிரி லொடக் லொடக் என்று அத்தனை காய்களும் ஈசியாக பாக்கெட்டில் விழுந்து விடுகிறது.

இதை screenplay of convenience என்பார்கள்.

பெயரை மாத்துவதற்குத் தோதாக அம்மா கேரக்டரை பாதியிலே காலி செய்துவிடுகிறார்கள். பழைய பெயர் தெரிந்துவிட்டதும், ஹீரோயின் குண்ட்ஸாக ஏதோ அட்வைஸ் செய்கிறார். அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு மாரத்தான் வீரனாக முயற்சி எடுக்கும் அடுத்த காட்சியிலேயே, காதலியுடன் காம்ப்ரமைஸ் ஆகிவிடுகிறது, அதற்குப் பிறகும் சிவகார்த்திகேயன் அவ்வளவு மெனக்கெடுகிறார் என்று புரியவில்லை. சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவு determination ஏற்படத் தேவையான காரணம் திரைக்கதையில் இல்லை.

பயிற்சியாளாராக நந்திதா வந்ததும், நாயகியின் பொறாமை கலந்த எரிச்சல், திரைக்கதையில் ஏதெனும் சுவாரசிய முடிச்சு ஏற்படுத்தும் என்று நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நந்திதாவின் ஃப்ளாஷ்பேக்கைக் கேட்டதும் ஈரோயின் உருகி,

” யாருக்காக இல்லைன்னாலும், வள்ளிக்காக இந்தப் போட்டியிலே ஜெயிக்கணும் ”

என்று சேம்சைட் கோல் அடிக்கிறார். கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்தது போல நாயகன், ஜெயிக்கிறார்.

twist & turn எதுவும் இல்லாத இப்படத்தை, பார்க்கும் படியாகச் செய்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. சும்மா சொல்லக்கூடாது, மனிதர் எதைச் செய்தாலும் நம்பும்படியாக இருக்கிறது. நல்ல இயக்குனர்கள் கையில் சிக்கினால், பெரிய ரவுண்டு வரலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s