Mangalambika Vilas

பயணம் செய்து பழக்கம் உள்ளவர்களில், பெரும்பாலானோர், பஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள உணவகங்களில் தான் ஒதுங்குவார்கள். Returning customer க்கான நிகழ்தகவு குறைச்சல் என்பதால் அங்கே, சுவை கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும். ஆகையால், என்னை மாதிரி சாப்பாட்டுப் பிரியர்கள், எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரில் ‘பாத்தி கட்டி’ அடிக்கத் தோதான இடம் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு பசியாறுவார்கள்.

திருநாகேஸ்வரத்தில் வண்டியை எடுத்த பொழுது மதியம் மணி ஒண்ணே முக்கால். கும்பகோணம் போய் சாப்பாடு முடிப்பதாக ஏற்கனவே திட்டம் போட்டாயிற்று.

ஐஃபோனில் சார்ஜ் குறைச்சலாக இருந்ததால், ‘Facebook சாப்பாட்டுக் கடை‘ யில் தேட முடியவில்லை. எந்த ஊரில் எந்த சாப்பாடு ஃபேமஸ் என்று அந்த ஊர்க்காரர்களை விடவும் அதிகம் தெரிந்த கேபிள் சங்கருக்குப் ஃபோன் போட்டேன்.

” தலைவரே… கவலையே வேணாம்..நேரா வண்டியை கும்பேசுவரன் கோயிலுக்கு விடுங்க.. நுழைவாயில்ல, கடைங்களுக்கு நடுவிலே மங்களாம்பிகா விலாஸ்னு ஒரு ஓட்டல். அட்டகாசமா இருக்கும். சாயங்காலம் வரை க்கும் இருந்தா அவசியம் டிஃபனும் சாப்பிட்டுட்டு கெளம்புங்க” என்றார்.

சரி பார்த்துவிடுவோம் என்று தேடிக் கண்டடைந்தோம்.

மங்களாம்பிகா விலாஸ்.

1960 ஆண்டு விகடன் சிறுகதைகளில் வரும் அக்கிரகாரத்து வீடு போன்ற தோற்றத்தில் இருந்த அந்த ஓட்டலில், நல்ல கூட்டம். டோக்கன் சிஸ்டத்தில் சாப்பாடு. ஏழு பேர் கொண்ட க்ரூப் என்று தெரிந்ததும், அட்ஜஸ்ட் செய்து ஒரே இடத்தில் உட்காரவைத்தார் பரிசாரகர். வாழையிலையில் சாப்பாடு. வீட்டு சாப்பாடு போன்றே, சாதம் , சாம்பார் ரசம், கூட்டு பொரியல் கொண்ட வெகு எளிமையான சாப்பாடு. அபாரமான ருசி என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் வயிற்றைக் கெடுக்காத உணவு என்று முதல் கவளத்திலேயே தெரிந்து போனது. சாப்பிடச் சாப்பிட சீரான சுவை. மிகவும் திருப்தி. பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள். எங்களுக்கு மட்டுமல்ல. அங்கிருந்த அனைவருக்கும்.

வழக்கம் போல மகளுக்கு மட்டும் சாப்பாடு வாங்கவில்லை. ( அப்படியே வாங்க்கீட்டாலும்….. – மனைவி). எல்லா சிறுநகரத்து ஓட்டல்கள் போலவே, சாப்பாட்டு நேரத்தில் பலகாரங்கள் இங்கும் கிடைக்கவில்லை. வேற எங்காவது தோசை வாங்கிக் கொள்ளலாம் என்று ஐடியா. மகள் அப்பளத்தைக் கொரித்துக் கொண்டிருந்தாள்.

பரிமாறிக் கொண்டிருந்தவர், மகளைப் பார்த்து, ‘குழந்தைக்கு வேணா தக்காளி சாதம் கொண்டு வரட்டுமா’ என்றார்.

‘அய்… தக்காளி சாதம் தக்காளி சாதம்..’ என்று குதித்தாள். அது தக்காளியின் குற்றம் கிடையாது. செகப்பு கலரில் உள்ள எல்லா ஐட்டமும் அவளுக்குப் பிடிக்கும். புவனேஸ்வரி மிஸ் உள்பட.ஆனால், ஒழுங்காகச் சாப்பிடுவதற்கான வாரண்ட்டி, கேரண்ட்டி எல்லாம் கிடைக்காது. சுவை பார்த்தாள். பின்னர், அதிசயமாக நாலைந்து வாய்க்கு மேலேயே உள்ளே போனது. நல்ல டேஸ்ட்டில் இருந்தது போலும். ஆனாலும் அவளால் முழுக்கச் சாப்பிட முடியவில்லை. எங்கள் வேலை முடிந்து, கை கழுவ எழுந்தோம்.

மகளின் இலையில் பாதி அளவுக்கு மீதம் இருந்ததைப் பார்த்த அந்த முதிய பரிசாரகர், ‘ அடடா…குழந்த முழுசா சாப்பிடலையே, வேணா இதை பார்சல் பண்ணிக் குடுத்துடட்டுமா? என்றார்.

இத்தனைக் கரிசனத்துக்குப் பழக்கப்படாத என் இல்லத்தரசி, சற்றுத் திகைத்து, பின் நமுட்டுச் சிரிப்புச் சிரித்து, .” சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன், குடுங்க” என்று கேட்டு வாங்கிக் கொண்டாள்.

முடித்துக் கொண்டு கிளம்பிய பொழுது அந்தத் தாத்தா, “சார், ஒரு நிமிஷம்.. என்று அழைத்துகொண்டே, சற்று தயக்கத்துடன் பின்னால் வந்தார். சாப்பாடு டோக்கன் சிஸ்டம் என்பதால், கவுண்டரிலேயே காசு கட்டி டோக்கன் வாங்கியாகிவிட்டது. பில் கிடையாது. எனவே டிப்ஸும் கொடுக்கவில்லை. ஒரு வேளை டிப்ஸுக்காக வருகிறாரோ என்று
நினைத்து,

“சொல்லுங்க..” என்றேன்.

கிட்டதட்ட ஒரு தர்மசங்கடமான தொனியில், “மன்னிச்சுக்கங்க, குழந்தை சாப்பிட்ட தக்காளி சாதத்துக்கு காசு தரலை.. அதான்”.. என்றார், .

பிறகுதான் எனக்குச் சட்டென்று உறைத்து, அசடு வழிந்து, “கவனிக்கலை, சாரி” என்று சொல்லி, பின் பில்லைச் செட்டில் செய்து விட்டு வந்தேன். இதுவே சென்னையாக இருந்திருந்தால், கேள்வி வேறு தொனியில் இருந்திருக்கும். பதிலுக்கு நானும், “நீ ஏண்டா பில்லு குடுக்கலை” ( மெட்ராஸில் இது ஒரு வசதி. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடா புடா என்று மரியாதை இல்லாமல் பேசலாம்) என்று சண்டை போட்டிருப்பேன். ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

Hospitality Industry இலே, நுகர்வோரை விருந்தினராகக் கருதவேண்டும் என்பது ஒரு மரபு. அந்த மரபின் படி அனேகமாக அனைத்து , சின்ன , பெரிய, மகா பெரிய ஓட்டல்காரர்களும், வாடிக்கையாளர்களை, ‘கெஸ்ட்’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.

ஆனால்,

ஃபுல் மீல்ஸுக்கு நாப்பத்தைந்து ரூபாய் சார்ஜ் வாங்கும் இந்த லொடக்காசி ஓட்டலில், Hotel Industry Standards / Best Practices போன்ற எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அந்தக் பரிசாரகக் கிழவர், யாரும் சொல்லாமல், வாய் வார்த்தையாக இல்லாமல், எங்களை நிஜமாகவே விருந்தினராக நடத்தினார் என்ற காரணத்தினால் தான் சண்டை போடவில்லை.

“A customer is the most important visitor on our premises. He is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so” – Mohandas Karamchand Gandhi

Happy 2013

பி.கு 1 : மேலே உள்ளதைச் சொன்னவர் காந்தி அல்லர். வேறு யாரோ, ஆனால், அவர் அருளியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பி.கு 2 : மங்களாம்பிகா விலாஸுக்கு வயது 98.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s