டிஸ்கவரி புத்தகப் பேலசிலே ரெண்டு மணிநேரம்……

தினமும் அலுவலகத்துக்குப் போய் வருகிற வழிதான் என்றாலும், இன்றைக்குத் தான் Discovery Book Palace பக்கம் ஒதுங்கினேன். ஒரு விடுமுறை அல்லாத வார நாளின் பிற்பகல் பொழுதில், ஒரு தமிழ்ப் புத்தகக் கடை என்ன மாதிரி மோன நிலையில் இருக்குமோ அப்படியே இருந்தது.

பலான புத்தகம் அளவுக்கு ரகசியமாக அச்சடித்து , ரகசியமான விநியோகம் செய்யப்படும் காட்சிப் பிழை இதழின் கரண்ட் மற்றும் பழைய இதழ்கள் கிடைத்தன. அப்படியே நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்த ஆர்.ஆர்.சீனிவாசன் தொகுத்த , ‘ஜான் ஆபிரகாம் – ஒரு கலகக்காரனின் திரைக்கதை’. ஜெயமோகன், ஜான் குறித்து எழுதியவற்றையும் சேர்த்து, இரண்டாம் பதிப்பை ‘பால்ன்ஸ்’ செய்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. தனி செக்ஷனாகவே போடுமளவுக்கு சினிமா இலக்கியம் வளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் பேர் பாதி, நக்கீரன் க்ரூப்பில் இருந்து வெளியாகும் நடிகையின் கதை, நடிக நடிகையரின் பேட்டிகள் போன்ற, சஞ்சிகைகளில் இருந்து உருவி ஆக்கப் பட்ட நூல்களே. சராசரி விலை நூறு.

நக்கீரன் ( என்று நினைக்கிறேன்) இதழில் வெளிவந்த கிசுகிசுக்களை மட்டும் தொகுத்து புத்தகம் ஆக்கியிருந்தனர். புத்தகத்தின் பெயரும் கிசுகிசு. நாளை பின்னே, யாராவது கிசுகிசு இலக்கியம் என்று மதுரை காமராசரிலோ அல்லது எஸாரெம் பல்கலையிலோ, பிஎச்சுடி செய்தால், ஆராய்ச்சியாளர் தொடர்பு கொள்ள சிரமமாக இருக்குமோ என்னமோ என்று மறக்காமல் தன் ஈமெயில் முகவரியையும் ஆசிரியர் கொடுத்திருந்தார். ஆனால், ‘ முதல் படத்திலேயே அரைக்கோடி சம்பளம் பெற்ற நான்கெழுத்து நடிகையுடன் நாலு நாட்கள் ஒயாமல் ‘டிஸ்கஷன்’ செய்த மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த , தாடி வைத்த வெற்றிப்பட இயக்குனர்’ உண்மையிலே யார் என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களின் ஈமெய்ல் விசாரிப்புகளை எப்படி ஹாண்டில் செய்கிறார் என்று தகவல் இல்லை.

சினிமா செக்ஷனின் ஒரு ‘ரோ’ முழுக்க, Cable Sankar எழுதிய நூல்கள். சினிமா கதை வசனம், சினிமா, சாப்பாடு விமர்சனம் எழுதுவார் என்று தெரியும். சிறுகதை நாவல் படைக்கும் அளவுக்கு முழுநீள இலக்கியவாதி என்று இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன்.

பாலா இயக்கும் பரதேசி படம் கேள்விப்பட்டதில் இருந்து / ட்ரெயிலரைப் பார்த்தில் இருந்து, அப்படத்துக்கு மூலமாக அமைந்த ( அல்லது அமைந்தது என்று சொல்லப் படுகிற) எரியும் பனிக்காடு நாவலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்நாவல் பற்றி, வாசிக்கிற கேள்விப்படுகிற சங்கதிகள் எல்லாம், தேடிக் கண்டுபிடித்து, வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாகவே இருக்கின்றன. இங்கும் கிடைக்கவில்லை.

Value for Money என்கிற பொருளாதாரத் தத்துவத்துக்கு ( ஜல்லி, ஜல்லி….) உதாரண புருஷியாக விளங்கும் சம்சாரம், வழக்கம் போல, “இந்த புஸ்தகத்துக்காங்க இவ்வளவு விலை?” என்று வியந்து, பின் அலமாரியில் அடுக்கி வைக்க முயன்ற பொழுது, மேல் அடுக்கில் இருந்த( டைம் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்திருந்த புத்தகங்களில் இருந்து ) ஒரு குண்டு புக் கவனத்தை ஈர்த்தது.

‘எரியும் பனிக்காடு’

ஆச்சர்யம். இதை எப்ப நான் வாங்கினேன் என்று திகைப்புடன் புரட்டினேன். முதல் பக்கத்திலேயே தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்தது. அளித்தவர், பின்னால் யுவகிருஷ்ணா என்று நாமகரணம் செய்து கொண்ட லக்கிலுக்.

திருமணத்தை, சந்தோஷமாக நினைவு கூர்வதற்கான காரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி Yuva Krishna 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s