ஷேர் ஆட்டோவில் ஒரு அக்கா

ஷேர் ஆட்டோவில் , டரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வந்த போது, பின் சீட்டில் ஒரு அக்காவுக்கும், அவளது தம்பிக்கும் ஒரு வாக்குவாதம். அக்கா, கல்லூரி. தம்பி அனேகமாக ப்ளஸ் ஒன் அல்லது டூ. அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிருக்கிறார்கள். ஏதோ விசேஷத்துக்கு பிள்ளைகளை அனுப்பியிருக்கிறார்கள். பிள்ளைகள் அதை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

“முடியாது… நீ எக்ஸாமுக்குப் படிக்கணும்…”

“அக்கா.. ப்ளீஸ்க்கா… நீ மட்டும் அன்னிக்குக் காலேஜ் கட்டடிச்சுட்டு படத்துக்குப் போனியே…..”

“போய்ட்டு வந்து நா உடனேயே அப்பாட்ட சொல்லிட்டேன்…..”

“நானும் போய்ட்டு வந்து சொல்லிக்கறேன்… ப்ளீஸ்க்கா..”

“சின்னப் பசங்கள்ளாம், தனியால்லாம் சினிமா போகக்கூடாது…

பய்யன் கிடைத்த ஒரு நாள் லீவில், சினிமா போகவேண்டும் என்று துடிக்கிறான். அவளோ, திடீரென்று கிடைத்த ஒரு நாள் முதல்வர் பதவியை முழுக்க எஞ்சாய் செய்கிறாள். என்ன கெஞ்சினாலும், கொஞ்சினாலும் மிரட்டினாலும் மசியவே மாட்டேன் என்கிறாள்.

அவளிடம் இருந்த ஒரே ப்ரம்மாஸ்திரம்,

“எனக்குத் தெரியாது…அப்பாக்கு ஃபோன் பண்றேன்… அவர்கிட்ட பர்மிஷன் கேட்டுகிட்டு எங்க வேணா போ…”

இப்போது பையன், ஆஃப்.

இந்த காலத்தில், இத்தனை வளர்ந்த பிள்ளைகள், ஒரு லீவு நாளில், அப்பா அம்மாவிடம் பர்மிஷன் இல்லாமல் சினிமா போவதில்லை என்பதே வியப்பாக இருந்தது. இது ஷேர் ஆட்டோதானா அல்லது ரிவர்ஸ் கியர் போட்ட டைம்மெஷினா என்று கொஞ்சம் சந்தேகம் வந்து சுற்றிப் பார்த்தில் ஏவிம் ராஜேசுவரியில் அட்டகத்தி பட போஸ்டர். அப்பாடா இது சமகாலம் தான் என்று கொஞ்சம் ரிலீஃப்.

பதின்பருவத்து அக்காக்கள் தம்பிகளுக்கு உரித்தேயான அந்தக் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் மிரட்டல்களும் அக்கறைகளுமாகத் தொடர்ந்த அந்த மினி குழாயடிச் சண்டையின் முடிவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, அதற்குள்ளாகவே நான் இறங்கும் இடம் வந்து விட்டதால்.

திரும்பிப் பார்ப்பது அநாகரீகம் என்பதால், இறங்கும் பொழுது, அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

அச்சு அசலாக, என் அக்காவின் முகம்.

ஏன் எல்லா அக்காக்களும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி இருக்கிறார்கள்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s