ஜெயமோகனும், பிரகாஷ்ராஜும் பின்னே வடிவேலுவும்…..

ஜெயமோகன் அவர்களின் இணையப் பக்கங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு, நடிகர் பிரகாஷ்ராஜின் நினைவு தவறாமல் வந்து விடும். ஏன் என்று அவ்வளவாகக் கவலைப் பட்டதும் இல்லை, எதற்காக அப்படித் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்ததும் இல்லை. ஜெயமோகன் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையைப் (http://www.jeyamohan.in/?p=30223) படித்ததும், ஆராய்ந்து பார்க்கலாம் என்று தோன்றியது.

பிரகாஷ்ராஜ் நடிப்பு இலக்கணம் தெரிந்த ஒரு நல்ல நடிகர். மிகச் சாதாரணப் பின்னணியில் இருந்து வந்து, குறுகிய காலகட்டதில்( சுமார் 20 ஆண்டுகளுக்குள்) , பல்வேறு மொழிகள் கற்றுத் தேர்ந்து மானாவாரியாகக் பல படங்கள் நடித்து, தேசிய விருது வாங்கி, படங்கள் தயாரித்து, இயக்கி தென்னிந்தியத் திரைப்பட உலகில் பேரும் புகழும் பெற்றவராகத் திகழ்பவர். பிரகாஷ்ராஜ் பல மோசமான படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை, அவரது எதிரிகள் ( உதாரணமாக, அவரது படத் தயாரிப்பாளர்கள்) கூட ஒப்புக் கொள்வார்கள். பிரகாஷ்ராஜ் ஒரு மிகச் சிறந்த நடிகன் என்று பலர் ஆராதித்தாலும், எனக்கு பிரகாஷ்ராஜுடனான உறவு, வியாபாரி -நுகர்வோன் என்ற அளவில் மட்டுமே. நான் நெருக்கமாக உணரும் சில கலைஞர்களுடன் போல ( ரஜினிகாந்த், எஸ்.பாலசந்தர், மௌலி, ஷோபா, இளையராஜா,
மோகன்லால், இன்ன பிறர்) எந்த விதமான emotional connection உம் , பிரகாஷ்ராஜிடன் ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததில்லை. நன்றாக நடித்திருக்கிறார் என்றால், கைதட்டி ரசித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க முடிகிறது.

மேற்சொன்ன விஷயங்களில் எவை , ஜெயமோகன் அவர்களுக்குப் பொருந்துகின்றன என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இருவரும் இணையும் புள்ளி ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

‘உதயனாணு தாரம் என்றொரு திரைப்படம். சீனிவாசன் கதை, திரைக்கதையில், மோகன்லால் நடித்து பெரு வெற்றி பெற்ற திரைப்படம். அருமையான திரைக்கதை. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. கேரள மக்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யம். இதை பிரகாஷ்ராஜ் தமிழில் மொழிமாற்றம் செய்தார். கிட்டதட்ட, scene to scene மொழிமாற்றம், ஆனால் ஒரே ஒரு சின்ன மாற்றம் . அதுவும் புரிதல் பிழையினால் ஏற்பட்ட அடிப்படை மாற்றம்.

சீனிவாசன், பிற சூப்பர்ஸ்டார்களை நக்கலடித்து spoof போலச் செய்த அந்தப் பாத்திரத்தை, மீட்டருக்கு மேல் அதிகம் போட்டு நடிக்கும் பிரகாஷ்ராஜ், ‘literal’ ஆகச் செய்திருப்பார். நக்கலடிக்கிறார் என்பதால் சீனிவாசனைப் பார்த்தால் சிரிப்பு வந்தது. சீரியசாகச் செய்ததால், பிரகாஷ்ராஜ் மீது ஆங்காரம் வந்து மொத்தப் படத்தின் ஆன்மாவும் அவுட்.

இது நாம் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட பிழை. நம்மை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏற்பட்ட சொதப்பல்களும் உண்டு. பிரகாஷ்ராஜ் எப்படி அந்த மலையாளப் படத்தைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ, அது போல, ஜெயமோகனின் தமிழ்த்திரை நகைச்சுவை பற்றிய / அதை ரசிக்கும் மக்கள் பற்றிய புரிதலும் தவறாக இருக்கின்றது.

Circa 1992. பழைய ஹிட் மலையாளப் படங்களை காமெடி என்ற பேரிலே கடித்துத் துப்பி ரீசைக்கிள் செய்து , ஹிந்தியிலே வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் பிரியதர்ஷனின் முதல் தமிழ்த்திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. 3 வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பு நிலையிலேயே இருந்து பின்னர் வெளியாகி உடனே டப்பாவுக்குள் சுருண்ட இந்தப் படத்தை இன்னும் நினைவில் வைத்திருப்பதற்குக் காரணம், இளையராஜா, கார்த்திக் மற்றும் பிசிஸ்ரீராம். தமிழ் கமர்சியல் சினிமா என்ற சட்டகத்துக்குள் ஒரு திரைப்படம் செய்யும் பொழுது, தமிழர்களின் sensibilities ஐ கவனத்தில் கொள்ளாது எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த திரைப்படங்களுக்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம். இருபதாண்டு காலம் கழித்தும், பிரியதர்ஷன் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்பது, சம்மர் இன் பெத்லஹேம் என்ற பெருவெற்றி பெற்ற மலையாளப் படத்தை, தமிழில் லேசா லேசா என்று அரைவேக்காட்டில் செய்து, அதுவும் ஊத்தி முடிக் கொண்ட போது தெரிந்தது.

தமிழுக்கும் மலையாளத்துக்கும், மொழி என்ற அளவிலே நெருக்கமான தொடர்பு இருந்தாலும், தமிழர்களின் சென்சிபிலிடியும் மலையாளிகளின் சென்சிபிலிடியும் வெவ்வேறானவை என்பதை பிரியதர்ஷன் புரிந்து கொள்ளவில்லை.

மித்திர துரோகம் என்ற செயல், தமிழ்ச்சினிமாவின் முக்கியமான , ஆனால் அபூர்வமான plot point . ஒரு உக்கிரமான திரைக்கதை அன்றி, ( சுப்பிரமணியபுரம்) மித்திர துரோகத்தை சினிமாவாக, எளிதிலே கன்வின்சிங்காக சொல்ல முடியாது. கிட்டதட்ட வாழ்க்கையையே நாசம் செய்த, நட்புக்குத் துரோகம் செய்த நால்வரை, க்ளைமாக்ஸில் பயமுறுத்தி, இறுதியில் எந்தத் தண்டனையும் கொடுக்காது, திரும்ப நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொண்ட கோபுரவாசலிலே நாயகனின் கதை, நட்பு என்ற கருத்தாக்கத்தை romanticize செய்தே பார்த்துப் பழக்கப்பட்ட பலருக்கும் புரிந்திருக்காது. ஆனால் மலையாளத் திரைப்படங்களில், நட்பு துரோகம் என்பது, ரொம்ப ட்ரமாட்டிக்காக இல்லாமல், கதையின் போக்கில் மிக இயல்பாக நடக்கிற விஷயம். நமக்கு அப்படி அல்ல. மொழிமாற்றம் செய்யும் பொழுது, இதை கவனத்தில் கொள்ளாமல் போனதால், இளையராஜாவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

சித்திக், இந்தச் சிக்கலை, ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் சாமர்த்தியமாகக் கடந்திருப்பார். நுட்பமாகக் கவனித்தால், மலையாள ஃப்ரண்ட்ஸ் படத்தில், ஜகதியின் கதாபாத்திரம், காமெடியன் போலத் துவங்கி , இடைவேளையில் கிட்டதட்ட சகுனித்தனம் கொண்ட வில்லன் பாத்திரம் போல மாறும். அதாவது, ஹீரோக்கள் அடித்த கொட்டத்துக்கு பழிவாங்குவது போல (அதுதான் யதார்த்தமும் கூட) . ஆனால் இதே பாத்திரத்தைத் தமிழில் செய்த வடிவேலு, ஜகதி கதைக்குள் நுழைந்து ஹீரோவுக்கு எதிராகக் கலகம் செய்தது போல் இல்லாமல், அவரது போர்ஷன் முழுக்கக் காமெடி செய்து முடித்ததோடு சடாரென்று விலகிவிடுவார். திரைக்கதை இடம் கொடுக்கிறது என்றாலும் கூட, நம் கைப்புள்ள, எந்த நாளும் கட்டதுரையுடன் கூட்டணி வைக்கமாட்டான். வேறு எந்த மாற்றமும் இல்லாமல், அச்சடித்தாற் போல, ரீமேக் செய்யப்பட்ட ( பல இடங்களில், வசனங்களில் கூட மாற்றம் இல்லாமல்) இப்படத்தில் செய்யப்பட்ட நுட்பமான மாற்றத்தைக் கூர்ந்து கவனித்தால், சித்திக்கின் புத்திசாலித்தனம் புரியும்.

ஃபாசில், சித்திக் தவிர்த்து, கமர்ஷியல் சினிமாவுக்கான தமிழ் ஆடியன்ஸை சரியாகப் புரிந்து கொண்ட மலையாள இயக்குனர் எவரும் இல்லை. நம் ஆட்கள் எவரேனும் தமிழில் ரீமேக் செய்திருந்தால், அதுவும் ( சில விலக்குகள் தவிர்த்து) உருப்பட்டதில்லை. தமிழ்படங்களின் கதை போலவே இருந்ததால், மனசுக்குள் மத்தாப்பூ, பாலைவன ரோஜாக்கள், வெள்ளைரோஜா வெற்றி பெற்றன. ஆவாரம்பூ போன்ற கலைப்படங்கள் இந்தக் கணக்கில் வராது.

“வ்வேக்க்..ஒல்லியா இருக்கிறான், கறுப்பு வேற. சேரிப்பய்யன் மாதிரி பாஷை.. இவனை எப்படித்தான் தமிழ்நாட்டு மக்கள் ஹீரோவாக ஒத்துக் கொள்கிறார்களோ?” என்று, we-see-only-english-pictures காதலிக்க நேரமில்லை காஞ்சனா டைப்பில் தமிழ்நாட்டுப் பக்கமே வராத ஒரு வடநாட்டுத் தமிழ் நண்பன் ஒருவன் தனுஷ்ஷைக் குறிப்பிட்டு அருவருப்புடன் வியந்த பொழுது, பொல்லாதவன் படத்தில், கிஷோர், டேனியல் பாலாஜியுடனான ஆஸ்பத்திரியில் நடக்கும் அந்த confrontation scene நினைவுக்கு வந்தது. கூடவே, சில வாரங்களுக்கு முன்பு, மணிரத்னத்துக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என்று ஆனந்தவிகடன் குறிப்பிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.

நூறு கோடி வியாபாரம் வேண்டி நம்ம படங்களை உல்டா அடிக்கும் சல்மான்கான், அமீர்கான் பேரைச் சொன்னால் வாயைப் பிளக்கும் இந்த மூதேவியிடம் தனுஷ் எப்படிப் பட்ட நடிகன் என்று எப்படி விளக்குவது?அவர் என்ன சொல்றார்? ஏன் எல்லாரும் சிரிக்க்றீங்க, என்று ஆதித்யா சானலிலே கவுண்டமணி , வடிவேலுவை பார்க்கும் பொழுதெல்லாம் பிடுங்கி எடுக்கும் என் வீட்டின் எல்கேஜி அரைடிக்கெட்டுக்கு விளக்கம் சொல்வதை விட கஷ்டமாச்சே என்று யோசித்தேன்.

புரிந்தது.

என்ன புளி போட்டு விளக்கினாலும், தமிழ்நாட்டுக்கு ‘வெளியே’ இருப்பவர்களுக்கு தனுஷும் புரியாது, வடிவேலும் விளங்காது.

அப்படி “எட்ட நின்னு” வேடிக்கை பார்க்கிற கும்பல்ல நிற்கிற ஒருத்தர் பெயர் ஜெயமோகன் என்றால் நான் ஒண்ணும் செய்ய முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s