கருநீலப் புடவை. கழுத்திலே சாஃப்ட்வேர் தாலி

[நவம்பர் 24, 2010 அன்று எழுதியது.]

இன்று பிறந்த நாள். நாற்பதைத் தொட இன்னமும் இரண்டு வருடங்களே உள்ளன என்று எனக்கு நினைவூட்டிய தினம்.

சென்னையில் பேருந்தில் சென்று வருவது ஒரு கலை. அந்தக் கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பதிலாக கொஞ்சம் சில்லறை தேற்றி கார் வாங்கி விடுவது சாலச் சிறந்தது என்று சில சமயங்களில்

தோன்றும். எனினும், இசுகூட்டி போன்ற கியர்லஸ் வண்டிகளில் சீறிப்பாயும் மூன்றரை வயது பெண்குழந்தைகளிடம் இருந்து, என் போன்ற அரைகுறைப் பயிற்சி பெற்றவர்கள், தினப்படி உயிரையும் மானத்தையும் காத்துக் கொள்ளும் சிரமத்தைக் காட்டிலும், பேருந்தில் செல்வது இரத்தக் கொதிப்புக்கு நல்லது என்று இன்னும் சில சமயங்களில் தோன்றும்.

இது ஒரு மாயவலை.

அன்றைக்கும் அப்படித்தான். எதிர்ப்புறப் பேருந்துகள் காலியாகவும், இப்புறப் பேருந்துகள் அளவிலாக் கூட்டத்துடனும் வந்த மர்ஃபி விதி ஒழுங்காக வேலை செய்த ஒரு மாலை. வேறு வழியின்றி இரண்டு மூன்று பேருந்துகளைத் தவிர்த்தது தவறாகிவிட்டது. இனி காத்திருந்தால் ஆகாது என்று எண்ணி ஏறிய ஒரு பஸ்ஸிலும் கூட்டம். அடடா, இங்கே ஒரு ஸ்டால் போட அனுமதிக்க மாட்டார்களா என்று கிழக்குப் பிரசன்னா ஏங்கும் அளவுக்கு மெகாக் கூட்டம். பின்வாசல் பிதுங்கியதால் ஓட்டுனர் பக்கம் இருக்கும் முன்வாசல் ஏறி ஒரு பக்கமாகச் செட்டில் ஆனேன். இந்த

வழியைத் தெரிவு செய்வது எத்தகைய பிழை என்று பஸ் பிரயாணங்களில் கரை கண்டவர்கள் அறிவார்கள்.

பொதுவிலே, டெர்மினஸ் இல் இருந்து புறப்படும் ஆத்மாக்கள், எங்கே வேண்டுமானாலும் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம். மிகுதிப் பிரயாணம் முழுக்க, மூலவராக இருக்கும் நடத்துனர், வண்டி புறப்படும் பொழுது மட்டும் உற்சவராக மாறி, டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு, தன் சன்னிதானத்தில் செட்டில் ஆகிவிடுவார். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறுபவர்கள், தாங்களாக அவரிடம் சென்று, டிக்கெட், முடிந்தால் பாக்கிச் சில்லறை, சரியான சில்லறை இல்லை என்றால் வசை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் நடைமுறை.

இது தெரியாமல் கூட்டமாக இருக்கும் பேருந்தில் முன்வாசல் வழியாக ஏறிவிடும் பாவாத்மாக்கள், டிக்கெட் வாங்குவதற்கு சகல சர்க்கஸ் வித்தைகளும் புரிந்து இடப்புறமும் வலப்புறமும்
இருப்பவர்களை இடித்துக் கொண்டு கருவறையை அடைந்து டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சில அதிர்ஷ்ட தினங்களில் நடத்துனர் அருகில் இருக்கும் மாதரசிகள் சில்லறையைப் ‘பாஸ்’ செய்து டிக்கெட் வாங்கிக் கொடுப்பார்கள். சகபயணிகளின் இந்த பீக் ஹவர் கரிசனம், டீக்கடையின் தினத்தந்தி
போல, ஸ்டெல்லா மாரிஸின் அன்றலர்ந்த மலர்கள் போல, மெரினா சுண்டல் போல சென்னையின் தவிர்க்க இயலா கலாசாரம்.

அன்றைய தினம் என் மகள் முகத்தில் விழித்த தினம். சமயங்களில் காலைவாரி விடுவாள் என்றாலும், அன்றைக்கு என் மகளின் ஆசீர்வாதம் இருந்தது.நெரியும் கூட்டத்திலே உள்ளே போக
முடியாது என்று தோன்ற, முன்வாசலுக்குப் பக்கம் ஊர்ந்து வந்து, இம்முனையில், என் அருகில் இருந்த ஒரு பெண்ணிடம், ஒரு பத்து ரூபா நோட்டைக் கொடுத்து,

‘ஒரு சின்மையாநகர், பாஸ் பண்ணுங்களேன் ப்ளீஸ்…’

இம்மாதிரியான சேவைகள் அவருக்குப் பழக்கம் போலும்.

‘ ஒரு நிமிஷம் இருங்க, ஏற்கனவே நாலு பேருக்குக் காசு குடுத்து விட்டுருக்கேன்.. டிக்கெட் வந்ததும் பாஸ் பண்றேன்.. இல்லைன்னா, யாருக்கு எந்த டிக்கெட்டுன்னு கன்ஃப்யூஷன் வந்துடும்.’

நியாயம் தான்.

பிறகு, ‘ சின்மையாநகர்தானே? குடுங்க.. ‘ என்று வாங்கிக் கொண்டார். என் காசு கை மாறத்துவங்கியது.

ஒரு சின்மையாநகர் , ஒரு சின்மையாநகர் என்று கூவிக்கொண்டே, நடத்துனர் அருகில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணிடம் சென்று அடைந்தது. ஆனால், கண்டக்டர் அந்தக் காசை
வாங்கவில்லை.

‘ ஸ்டேஜ் க்ளோசிங், கொஞ்சம் இருங்க’

அந்தப் பெண் கையில் இருந்த என் பத்துரூபாய்த் தாளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கண்டக்டர் தன் ‘ஹோம் வொர்க்கை’ முடித்துவிட்டு,

‘ ம்.. குடுங்க.. எங்க போகணும்? ‘

அந்தப் பெண், ‘ ஒரு வடபழனி, ஒரு சின்மையாநகர்’ வாங்கினார். ஆனால், மீதிச் சில்லறையை மட்டும் மனிதச் சங்கிலி மூலமாக திரும்ப என்னிடம் அனுப்பிவிட்டு டிக்கெட்டை மட்டும் தானே வைத்துக் கொண்டார்.

‘ஹலோ, என் டிக்கெட், டிக்கெட்..’ என்று பதறினேன்.

‘சாரி, சேர்த்து வாங்கிட்டேன்… வடபழனிலே நான் இறங்கும் போது, கொடுத்து விட்டு இறங்கிடறேன்….’ என்று அந்த முனையில் இருந்து கத்தினார். எனக்குப் புரிந்தது.

இது சென்னைப் பேருந்துகளில் சமீபத்திய இம்சை. வழக்கம் போல துண்டுக் காகிததை எச்சில் தொட்டுக் கிழித்துத் தரும் பழக்கம் இப்போதெல்லாம் பெரும்பாலும் இல்லை. கையடக்கப் பிரிண்டரிலே, தெர்மல் பேப்பரில் அச்சிட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஒருவர் எத்தனை டிக்கெட் வாங்கினாலும், கூட்டி, மொத்தத் தொகைக்கும் ஒரே சீட்டுத் தான்.

இதென்னடா ரோதனை…வடபழனி வர இன்னும் அரை மணி நேரம் ஆகும். இறங்கும் பொழுது, அந்தப் பெண் டிக்கட்டைத் தர மறந்துவிட்டால், அந்த நேரம் பார்த்துச் டிக்கெட் பரிசோதகர்
வந்துவிட்டால்.. பாக்கெட்டில் வேறு நூறு ரூபாய் தான் இருக்கிறது… அபராதத்துக்கு டெபிட் கார்டை எல்லாம் வாங்குவார்களா… என்று ஒரே குழப்பமான சிந்தனைகள்..

இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க எனக்குத் தெரிந்த ஒரே வழி, அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டே வந்து , வடபழனியில் அவர் இறங்கும் பொழுது, பாய்ந்து சென்று என் டிக்கெட்டை பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே. உண்மையில், வடபழனி என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு நிறுத்தங்கள் உள்ளன. அந்தப் பெண் எதில் இறங்கப் போகிறார் என்று தெரியாதது, பதட்டம் ஏற்படுத்தியது.

க.கொ.பாம்பு போல அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன். கூட்டம் அதிகரித்தாலும், சுற்றிலும் இருந்த அகலமான முதுகுகளின் இடைவெளியில் கண்காணிப்பைத் தொடர்ந்தேன்.

கருநீலப் புடவை. கழுத்திலே சாஃப்ட்வேர் தாலி. சொல்ல முடியாது, இப்பொழுதெல்லாம், உடுப்பி ஓட்டல் தவிர, எல்லா நிறுவனங்களும், அடையாள அட்டை தருகின்றன. இயர்ஃபோனிலே யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். சமயங்களில், எங்கள் பார்வைகள் முட்டிக் கொண்ட பொழுது, மெலிதாகப் புன்னகை செய்தார். ( ரொம்ப முக்கியம்!) பஸ்ஸில் ஏறினோமா, டிக்கெட் வாங்கிக் கொண்டு செல்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தோமா என்று இல்லாமல், பிறந்த நாள் அதுவுமாக, இப்படி தேவையில்லாமல், ஒரு பெண்ணை சைட் அடிக்க வேண்டி வந்த எரிச்சல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

வடபழனி பேருந்து நிலைய நிறுத்தம் வந்ததும், கூட்டம் தளரத் துவங்கியது. இறங்குகிறாரா என்று பார்த்தேன். அவர் பாட்டுக்கு செஃல்போனில் பேசிக் கொண்டே இறங்கினார்.அச்சோ… என் டிக்கெட்டு….

‘ஹலோ.. ஹலோ மேடம்…. என் டிக்கெட்….’

ஒரு வினாடி குழம்பி, பின் சட்டென்று…நினைவுக்கு வந்தவராக

‘ ஒஹ்.. சாரி…ஐம் வெரி…சாரி… என்று கொஞ்சலாக என் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கினார். டிக்கெட்டுக்குப் பின்னால், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரம்.

‘யப்பாடி……..’

டயர் பஞ்சர் என்று டிரைவர் பயப்படும் அளவுக்கு ஒரு சவுண்டான நிம்மதிப் பெருமூச்சை ரிலீஸ் செய்துவிட்டு , கிட்டதட்ட காலியான பஸ்ஸில் ஜன்னலோரச் சீட்டில் உட்கார்ந்தேன்.. என் முன் சீட்டில் இரண்டு கல்லூரி மாணவர்கள். கொஞ்சம் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாணவர்களுக்கே உரிய பரிபாஷைகள். பஸ் இன்னும் கிளம்பவில்லை. ஜன்னல் வழியாக ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டிக் குசு குசு வென்று அவர்கள் பேசிக் கொள்ள , என் வயசுக் கோளாறு
தினங்கள் நினைவுக்கு வந்து சிரித்துக் கொண்டேன்.

எனக்கும் கேட்கும்படியாக இருந்த அவர்கள் பேச்சில் நடு நடுவே ப்ளூ ஸாரி என்று அடிபட, இயல்பான ஒரு ஆர்வத்துடன் யார் அந்தப் பெண் என்று நானும் ஜன்னல் வழியாகப் பார்க்க முயன்றேன்.

நடந்து கொண்டிருந்தவளைக் கடந்து சென்றது பஸ். நான் டிக்கெட்டுக்காக மல்லுக்கட்டிய அதே கருநீலப் புடவை.

பஸ் வேகம் எடுக்குமுன் இன்னொரு முறை திரும்பி நிதானமாகப் பார்த்தேன்.

உறைந்தே போனேன்.

அவள் அப்படிப் பட்ட ஒரு பேரழகி.

இந்தக் கட்டுரையின் முதல் வரிகளை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s