தமிழ்மணம் – உரையாடல்

இந்த வார தமிழ்மண நட்சத்திரம் காசி யின்கேள்விகளும், அதற்கான என் பதில்களும்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்றுஎண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்செய்யவேண்டும்?

தேவையான அளவு என்பது ஒவ்வொருவரின் தேடுதல் விருப்பத்தைப் பொறுத்தது. காட்டாக, உள்ளடக்க அளவிலே, தமிழ் இணையத்தில், சினிமா கணிசமான அளவு பங்களிப்பு செய்து வருகிறது. தமிழ் திரையுலகம் குறித்து பல ஆயிரம் மெகாபைட் அளவுத் தகவல்களை விரல் சொடுக்கில் திரட்டி விடலாம். அதனால், சினிமா தகவல்களுக்கு இணையம் தான் முழுமையான களஞ்சியம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இன்றைக்கு வெளியான திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள், தேவைக்கு அதிகமாகவே கொட்டிக் கிடக்கிற அதே நேரத்தில், முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு க்ளாசிக் திரைப்படத்தைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லாமல் போகலாம்.

பெரும்பான்மை மக்கள் ஈடுபாடு காட்டும் சினிமாவுக்கே இந்த நிலை என்றால், வரலாறு, தத்துவம், பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, பிற நிகழ்த்துகலைகள், நூல் விமர்சனங்கள், அறிவியல் போன்றவை பற்றிக் கேட்கவே வேண்டாம். இதற்கு பொருளாதார ரீதியான காரணங்கள் உண்டு.

என்ன என்ன துறைகள் பற்றிய அறிவு மக்களுக்கு ஏற்பட்டால் பொருளாதார ரீதியிலே பலன் இருக்குமோ, அத்துறைகளே, தமிழ் இணையத்தில் ஆர்வமாக ஈடுபடுகின்றன. அரசியல் கட்சிகள், பதிப்பகங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், பத்திரிகைகள் ஆகியவை உதாரணம்.

இவற்றுக்கு முக்கிய காரணம், ஒரு வகையான அறியாமையே. சென்னையில் , தமிழ் மக்களுக்காக இயங்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனம், தன்னுடைய இணையத்தளத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது அபத்தம். முழுக்க முழுக்க தமிழிலேயே இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம், ஒரு தமிழ்லும் ஒரு version ஐ வைக்கலாம். ஆனால், இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை, அவர்கள் அறியாமல் இருக்கலாம். நுட்பத்தின் சாத்தியங்களை விளக்கி, அந்த அறியாமையைப் போக்குவது அவசியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

ஓரளவுக்கு அனுபவிக்கிறது என்றே நினைக்கிறேன். ஒருங்குறியின் அறிமுகத்துக்குப் பிறகு, பெரும்பான்மையான இடங்களில் தமிழ் செல்லுபடியாகிறது.கூகிள், யாஹூ, ஆர்க்குட், பேஸ்புக் போன்ற இணையத்தின் பெருநிறுவனங்கள், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிடத்தில் அனுசரணையுடன் நடந்து கொள்கின்றன. ஆனால், அரசு விவகாரங்கள் தான் குளறுபடி. அரசின் ஒவ்வொரு துறையும் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுகின்றன. இன்னமும் சில அரசுதளங்களில், எழுத்துருவுக்குப் பதிலாக, தட்டச்சு செய்த காகிதத்தை ஒளிவருடி. அதைப் படங்களாக வலையில் ஏற்றும் கோராமையைக் காணலாம். மின் வணிகத்தைப் பொறுத்தவரை, தமிழ்ப் புழக்கம் கிட்டதட்ட பூஜ்யம் தான். இன்றைய நிலைமையில், தமிழ் அதிகம் புழங்குவது, தமிழ் வலைப்பதிவுகளில் தான்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

something is better than nothing என்ற அளவில் தான் இருக்கின்றன. தன்னார்வத்தைத் தூண்டுவது கடினம். மேலும், உலக அளவில் ஆங்கிலம் பேசுபவர்களை விட, தமிழைப் புழங்குபவர்கள், பல மடங்கு அளவில் குறைவு என்பதால், அந்த விகிதத்துக்கு ஏற்றது போல, தமிழில் தன்னார்வலர்கள் குறைச்சலாகத்தான் இருப்பார்கள். மேலும் தன்னார்வத் தொண்டு செய்யும் விருப்பமுள்ளவர்களுக்கு, அதற்கான கணிணி, இணையத் தொடர்பு போன்ற வசதிகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது இந்த வசதிகள் இருந்தும், விகிபிடீயா போன்ற முயற்சிகள் குறித்து அறியாமல் இருக்கலாம். இது போன்ற தடைகளைக் களைந்தால், கணிணித் தமிழ் இன்னும் பரவலாகும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கானசெயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

 • தமிழகம் முழுக்க, யூனிகோட் என்கிற ஒருங்குறியை standadize செய்வது முதல் வேலையாக இருக்கும்.
 • அரசு வசமுள்ள அனைத்துக் கணிணி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான தமிழ்ச் செயலிகள்.
 • உருப்படியான தமிழ் OCR உருவாக்க, ஒரு நல்ல டீம் உருவாக்குவது.
 • சைபர் கேஃப் கணிணிகள் அனைத்திலும், கட்டாயமாக ஏதாவது ஒரு தமிழ்ச் செயலி.
 • தமிழிலும் பெயர்ப்பலகை போல,தமிழ் நாட்டு மக்களைக் குறிவைத்து இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் இணையத்தளத்துக்கு ஒரு தமிழ் version வைக்க வேண்டும் என்று – முடிந்தால் வேண்டுகோள், படியாமல் போனால் உத்தரவு.
 • 5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாகவலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

  மொத்தமாகவே 20 அல்லது 25 பதிவுகள் இருந்த காலத்திலிருந்தே வலைப்பதிவுகளை எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். அப்போதில் இருந்து, நாளது வரையிலான மாற்றங்கள், கவனிக்கச் சுவாரசியமாக இருக்கின்றன. அந்த சூழலில், வலைப்பதிவு உலகம் ஒரு கற்றறிந்தோரின் சபை போலத்தான் இருந்தது. சிக்கலான வழிமுறைகள் காரணமாக, நுட்பத்தை நன்றாக அறிந்தோர் மட்டுமே எழுதும் சூழல், சிறிது சிறிதாக மாற, அதற்கேற்றார் போல, அனைத்துத் தரப்பினரும், வலைப்பதிவு துவங்கி எழுத, இயல்பாக ஜனநாயகம் மலரத் துவங்கியது. முழுமையான explosion நடக்கவில்லை எனினும், அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

  தமிழ் வலையுலகம் என்பது, பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, ஒரு மேட்டுக்குடிச்சர்வகலாசாலையின் நூலகம் போல இருக்கக் கூடாது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

  புதிய வலைப்பதிவருக்கான யோசனைகள் :

 • நிச உலகுக்கும் வலையுலகுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நிசத்தில், முன்பின் தெரியாதவர்களிடம், என்ன முன் ஜாக்கிரதை உணர்வுடன் நடந்துகொள்வீர்களோ, அதே அளவு ஜாக்கிரதை உணர்வு, வலையில் உலவும் பொழுதும் தேவை.
 • ‘இது என் சொந்த இடம். இங்கே நான் எழுதுவது – நானாக வேறு யாருக்கும் சொல்லாத போது – வேறு யாருக்கும் தெரியாது’ என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம். நுட்பத்தின் உதவி கொண்டு எளிதிலே கண்டுபிடித்து விடலாம். உங்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று நினைக்கிற சங்கதிகளை, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிப் போட்டு, நீங்களே அதை வாசித்து மகிழுங்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டும் என்றால், வலைப்பதிவை, ப்ரைவேட் இடமாக்கி, நீங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும் அனுமதி தாருங்கள்
 • புனைப்பெயரில் எழுதலாம். ஆனாலும், உங்கள் எழுத்தின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. அதான் சொந்தப் பெயர் விவரம் யாருக்கும் தெரியாதே என்று நினைக்காதீர்கள். எழுதும் ஆசாமி யார் என்று கண்டுபிடித்துவிடலாம். சட்டத்துக்கு உட்படாமல் எதையாவது, பொய்ப்பெயரில் எழுதி, ஆப்பு மேலே ஆசைப்பட்டுப் போய் உட்கார்ந்து ‘பின்னை’ புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்.
 • உங்கள் சொந்த அனுபவங்களைத் தாராளமாக எழுதலாம். பிரச்சனை வந்தால் சமாளிக்க முடியும் என்று தோன்றினால் மட்டுமே உங்கள் குற்றச்சாட்டு , ஆதங்கங்களை, நிஜமான பெயர் தகவல்களுடன், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக ‘எங்க பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஜொள்ளுபார்ட்டி’ என்று, அவர் பெயர், கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிட்டு எழுதாதீர்கள். கருத்துச் சுதந்திரத்தையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். எங்கேயாவது அந்த பிராஜக்ட் மேனெஜர் கண்ணில் பட்டு பிரச்சனை ஏற்பட்டால், அதைச் சமாளிக்கத் தைரியம் இருந்தால் மட்டுமே எழுதுங்கள்.
 • தமிழிலும் எரிதங்கள் வரும். பின்னூட்டங்களை மாடரேட் செய்யுங்கள்.
 • எழுத்தினால், புரட்சி எல்லாம் செய்ய முடியாது. அதற்கு நேராக களத்தில் இறங்க வேண்டும். நிசத்தில் தொடைநடுங்கியாக இருந்து கொண்டு, வலையில், அதிகாரத்தின் அடக்குமுறை பற்றி போர்க்கொடி பிடிக்கமுடியாது. உதாரணமாக, கோய்ந்தசாமி என்கிற ஒரு ஆசாமியின் வலைப்பதிவு, கோய்ந்தசாமி என்கிற நிஜ பர்சனாலிட்டியின் நீட்சிதானே தவிர, வலைப்பதிவில் கோய்ந்தசாமி திடும் என்று ராபின்ஹூட்டாக எல்லாம் மாறிவிட முடியாது.
 • தட்டுப்பிழை இல்லாமல் தமிழ் எழுதப் பழகுங்கள்.
 • 6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

  முதலில் தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள்.

  தமிழ் வலைப்பதிவுகளின் தலைவாசலாக விளங்கும் தமிழ்மணம், ஒரு engineering masterpiece என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்மணத்தின் வடிவமைப்பு, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இணையத்தளத்தை, தொடர்ந்து ஐந்து வருடங்களாக, தினமும் நாலைந்து முறை வந்து பார்க்கவேண்டிய சில தேவைகள் இருக்கின்றன. அத்தேவைகளைத் தமிழ்மணம் பரிபூரணமாகப் பூர்த்தி செய்வதே, தமிழ்மணத்தின் வெற்றிக்குக் காரணம்.

  முதலில், வலைப்பதிவுகளைப் பட்டியலிடத் துவங்கி, பின்பு பின்னூட்டங்களையும் திரட்டி, அப்படியே படிப்படியாகப் பல்விதமான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் நுட்பத்துக்கு ஏற்றாற்போல, தமிழ்மணம் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. பல புதிய திரட்டிகளின் வருகைக்குப் பிறகும், தமிழ்மணம் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு இதுவும் காரணம். இந்நிலை தொடரவேண்டும்.

  மேலும், தமிழ்மணம், சில பரிசோதனை முயற்சிகளைச் செய்யலாம்.

 • தமிழ்மணம், அனைத்து வலைப்பதிவுகளைத் தன் குடையின் கீழ் வைத்துத் திரட்டுவதற்குப் பதிலாக, விருப்பமுள்ளவர்கள், தங்களுக்கு என்று ஒரு personalized தமிழ்மணத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யலாம்.
 • தமிழ்மணம் நிரலியின் code ஐ விருப்பமுள்ள developer களுக்கு வழங்கி, வலைப்பதிவு சார்ந்த செயலிகள், தமிழ் இணையத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யலாம்.
 • தமிழ்மணத்தின் code ஐ வைத்து business applications உருவாக்க நினைப்பவர்களிடம் பணம் பெற்று, தமிழ்மணத்துக்கு என்று
  ஒரு ‘வருவாய்-மாதிரி’ யை உருவாக்கலாம்.
 • தமிழ் இணையத்தில், ‘ தமிழ்மணம்’ ஒரு வலுவான, நிலையான பிராண்ட் ஆக உருப்பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  One thought on “தமிழ்மணம் – உரையாடல்

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  Connecting to %s