John Abraham – Nagarjunan – Jeyamohan

ஜான் ஆபிரகாம் பற்றி, நாகார்ஜுன னுடைய மூன்று ( ஒன்று, இரண்டு, மூன்று ) பகுதிகள் தொடர், ஒரு முக்கியமான ஆவணம். ஜெயமோகன், இதே ஜான் பற்றி எழுதி இள மனங்களில் ஏற்படுத்த முயன்ற பிம்பத்தை, நாகார்ஜுனன் எழுத்து முற்றிலுமாகக் கலைத்துப் போடுகிறது. ஜானின் முதல் படமான, ‘ வித்யார்த்திகள் இதிலே இதிலே’ என்ற படத்தைப் பற்றி நாகார்ஜுனன் இவ்வாறு எழுதுகிறார்.

வித்யார்த்திகளே இதிலே இதிலே (1971).

கதை என்றால், பள்ளியில் கால்பந்தாட்டம். ராஜு என்ற மாணவன் பந்தடித்து, பள்ளி நிறுவனரின் சிலை உடைந்துவிடுகிறது. சிலை ரிப்பேர் செய்யப் பணம் தர வேண்டும் இல்லையேல் பள்ளியிலிருந்து விலக்கப்படுவான் ராஜு என்ற நிலை. மாணவர்கள் ஒன்றிணைந்து ஷூ பாலிஷ் செய்து, லாட்டரி டிக்கெட் விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். தலைமையாசிரியருக்கு இது பிடித்துப்போகிறது. நிர்வாகமே சிலையை ரிப்பேர் செய்கிறது. மாணவர்கள் சேர்த்த பணத்தில் சுற்றுலா போக அவர் ஏற்பாடு செய்கிறார். மீண்டும் கால்பந்தாட்டத்தில் சிலை உடைகிறது.

இந்தப்படத்தில் அடூர் பாஸி, ஜெயபாரதி, எஸ். பி. பிள்ளா தவிர மனோரமா, எஸ். வி. ரங்காராவ் போன்ற தமிழர்கள் கொண்டாடும் நடிகர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழர்கள் இந்தப்படத்தைப் பேசுவதில்லை.

சமகாலச்சூழல் கண்டுணரத் தவறிய ஜி.நாகராஜன், கோபிகிருஷ்ணன் போன்ற பெரும் படைப்பாளிகள் போலவே, நாசூக்கற்ற சில பழக்க வழக்கங்களைக் கொண்டு இருந்த ஜான் ஆபிரகாமை, அதன் காரணமாகவே, அவரது படைப்புகளை நிராகரிக்கும் ஜெயமோகனுக்கும்,

‘அவரை நண்பர் என்று கூறமுடிகிற சமயம், அதை அறுத்துக்கொள்ளும் வகையில் எதையாவது செய்துவிடுவார். இதையெல்லாம் கண்ட உடனிருந்த சில தமிழ் நண்பர்கள் “இவர் படமெல்லாம் எடுப்பவரா என்ன, அறையைக் காலிசெய், அல்லது நாங்கள் காலிசெய்வோம்” என்று பயமுறுத்தினார்கள். மலையாள நண்பர்கள் பரவாயில்லை, உதவினார்கள்’

என்று இரண்டே வாக்கியங்களில் ஜானின் இயல்பு பற்றிச் சொல்லிக் கடந்து விடுகிற நாகார்ஜூனனுக்கும் தான், அணுகுமுறை அளவில் எத்தனை வேறுபாடு? எத்தனை நேர்மை?

நிசத்தில், இந்தத் தொடரை வாசித்து முடிந்ததும், நாகார்ஜுனனை கட்டிப் பிடித்துக் கைகுலுக்க வேண்டும் போல இருந்தது. விசாரித்தால், அவர் இலண்டனில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே, எனக்கு விசா கிடைத்து பாங்க் பாலன்ஸு உயரும் வரை நாகார்ஜுனன் பொறுமை காக்க வேண்டும்.

ஜான் ஆபிரகாமின் திரைப்படப் பிரதிகள் பற்றி, நிழல் திருநாவுக்கரசுவிடம் விசாரித்தால் தெரியும் என்கிறார்.திருநாவுக்கரசை, செல்ஃபோனில் முயற்சி செய்தால், ஒரு அக்கா இங்கிலீஸில் என்னமோ சொல்கிறது. என்ன அர்த்தமோ எவன் கண்டான்?

*********

ஸ்டாலின் ராஜாங்கம் என்ற சிற்றிதழ் எழுத்தாளர், ஒரு கட்டுரையில்

‘ இந்திய தத்துவ வரலாற்றில், நாத்திகம் என்பது தனித்த சிந்தனைப் போக்காக எப்போதும் இருந்து வந்துள்ளது. என்றாலும், நாத்திகம் வெகுஜன அரசியல் தளத்தை எட்டியது பெரியார் ஈ.வெ.ரா.காலத்தில் தாம். ‘

என்று எழுதியிருந்தார்.

இந்த பெரியாருக்கு முன்பான நாத்திக மரபிலே, முக்கியஸ்தர்கள் யாவர்? யாருக்காவது தெரியுமா?

********

சுகுணா திவாகர், ‘ மறக்கப்பட்ட கலைஞர்கள்’ என்ற வரிசையிலே, கவுண்டமணி பற்றி எழுதும் தொடர், முக்கியமான பதிவு. முதல் பகுதியை வாசித்த பொழுது, எங்கே கவுண்டமணியை, ஒரு எதிர்கலாச்சாரவாதி பிம்பத்துக்குள் அடைக்க முயல்கிறாரோ சுகுணா என்று கொஞ்சம் அச்சமாக இருந்தது. இரண்டாம் பகுதியில் அச்சத்ததைப் போக்கினார்.

திரையில் இருந்து கொண்டே, திரையுலகம் கட்டமைத்த தோற்ற வழிபாடுகளையும், ‘பக்தி’ கலாசாரத்தை, கவுண்டர் போல எதிர்த்தவர் இன்னொருவரில்லை என்கிறார் சுகுணா. முழுமையாக உடன்படுகிறேன்.

பாபாவில் ரஜினிகாந்தும், சிங்காரவேலன், இந்தியனில் கமல்ஹாசனும் கவுண்டமணியின் சொல்வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியது நினைவுக்கு வருகிறது.

********

நீண்ட நாட்களுக்குப் பிறகு நியூபுக்லாண்ட்ஸ் விஜயம்.

புத்தகம் வாங்கி நீண்ட நாளாகிறது. முருகனின் ரெட்டைத் தெரு வந்துருச்சா என்று, சமீபத்திய சாருநிவேதிதா மொட்டை மாடிச் சந்திப்புக்காக கிழக்குக்கிருக்கப் போன பொழுது கேட்டால், வந்துருச்சு, ஆனா வரலை, என்றார்கள் வைகைப்புயல் பாணியில்.

அரிப்பு தீர்வதற்குள் வாங்கிவிட வேண்டும் என்பதால், இன்று புக்லாண்ட்ஸுக்கு ஒரு அவசர விஜயம். தி.நகர் என்ற நிலப்பரப்பு நம் கையை விட்டுப்போய் , வணிகர்கள் கையில் சிக்கிச் சீரழிவது நிதர்சனமாகத் தெரிகிறது. மேம்பாலம் கட்டி முடிந்து போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின்புதான், புக்லாண்ட்ஸ் பக்கமெல்லாம் போக முடிகிறது. சில புத்தகங்களும், நிழல், தமிழினி பிரதிகளும் வாங்கி வந்தேன். மாதந்திரச் சிற்றிதழ் ஒன்று டிவிடி வடிவத்தில் வருகிறது. 70 ரூபாய். வாங்கவில்லை.

*********

7 thoughts on “John Abraham – Nagarjunan – Jeyamohan

 1. //மேம்பாலம் கட்டி முடிந்து போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின்புதான்//

  மேம்பாலம் கட்டின அப்புறம் தான் டிராஃபிக் அதிகம் ஆயிடுச்சு :(. முன்னாடியே கூட எவ்வள்வு பரவாயில்லை.

  டெய்லி டி.நகரை தாண்ட்ர நரக அனுபவம் பேசுது 😉

 2. பிரகாஷ் – இருபதாம் நூற்றாண்டில் நாத்திகத்தை வெகுஜன தளத்தில் எடுத்துச் சென்றவர் பெரியார் என்பது உண்மை.

  ஆனால், நம்முடைய மரபில் சார்வாகம், லோகாயதம் போன்ற நாத்திகக் கோட்பாடுகள் வெகுஜன தளத்திலேயே இருந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஜைனர்களும் உள்ளடக்கம். சமணம், சார்வாகம் போன்றவை முக்கிய மதங்களாகப் பல நூற்றாண்டுகளுக்கு இருந்திருக்கின்றன. பக்தி இயக்கத்திற்குப் பிறகான இந்துமதம் பௌத்தம், சமணம், தந்திரம், லோகாயதம் எல்லாவற்றையும் உள்வாங்கி நீர்த்துவிட்டது.

 3. ஜான் ஆப்ரஹெம் என்ற உடனே பாலிவுட் நடிகரோ என்று நினைத்தேன் 🙂

 4. //மாதந்திரச் சிற்றிதழ் ஒன்று டிவிடி வடிவத்தில் வருகிறது.//

  Pirated copy எங்கேயாவது இருக்குமோ? பத்திரிகை பெயர் என்ன?

 5. ஜெயமோகனும், நாகார்ஜுனனும் தங்கள் அனுபவங்களில்
  வாயிலாகவே ஜான் ஆப்ராகமை மதிப்பிட முயல்கிறார்கள்
  என்று தோன்றுகிறது. இலக்கியத்தில் ஒரு சில புனித பிம்பங்களை கட்டமைக்க வேண்டிய தேவை முன்னவருக்கு இருப்பது போல், வேறு துறைகளிலும் அவற்றை கட்டமைக்க வேண்டிய தேவை பின்னவருக்கு இருக்கிறது என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.அவரவர் தேவை அவரவருக்கு :).

  வாசகர்கள், திரைப்பட ரசிகர்கள் இந்த இரண்டிற்கும்
  அப்பாற்பட்டு தமக்கான கருத்துக்களை உருவாக்கிக்
  கொள்ள வேண்டும். அதற்காக ஜான் குறித்து பிறர்
  எழுதியதை படிக்க வேண்டும்.ஜான் இயக்கிய படங்களைப்
  பார்க்க வேண்டும்.

  ‘மாதந்திரச் சிற்றிதழ் ஒன்று டிவிடி வடிவத்தில் வருகிறது. 70 ரூபாய். ‘

  DVD+/- RW ஆக இருந்தாலுமே ரூ 70 என்பது அதிகம் என்றுதான் தோன்றுகிறது.

  ‘Pirated copy எங்கேயாவது இருக்குமோ?’

  இதையுமா pirate செய்வார்கள் :). பாஸ்டன் பாலாஜி original DVD எதிலும் தமிழ்ப் படம் பார்த்திதில்லையா :).

 6. பிரகாஷ்,

  உங்கள் பதிவை இப்போதுதான் வாசித்தேன்!

  1. நண்பர் திருநாவுக்கரசின் தொலைபேசி எண் மாறியிருக்கக்கூடும். nizhal_2001@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்-அஞ்சல் செய்து பாருங்கள்.

  2. பெயர் என்பவர் கூறியிருப்பது போல அன்றி, ஜெயமோகனும் சரி, நானும் சரி, ஜானைச் சொந்த அனுபவங்கள் தாண்டித்தான் பார்க்கிறோம்.

  ஜானின் கரட்டு-அழகியலை ஏற்கவில்லை, எனவே அவர் மீதான myth-உம் தேவையில்லை என்கிறார் ஜெயமோகன், என் பார்வை வேறு – சினிமாவில் ஜானின் கரட்டு-அழகியலுக்கென தனி வரலாறு உண்டு. ரித்விக் கட்டக்கின் மூன்று முக்கிய சிஷ்யர்களான மணி கௌல், குமார் ஷஹானி, ஜான் ஆகிய மூவரின் பாதையை ஆராய்ந்தால் தெரியவரும். இதுபற்றி விரிவாக எழுதுகிறேன் – நேரம் கிட்டும்போது.

  3. ஜானின் வாழ்க்கையைக் கடந்து அவர் படங்களின் கரட்டு அழகியல் பற்றிய குறிப்புகள் என் பதிவில் உண்டு. என் பதிவுக்கான பதில்களில் சன்னாசி எழுதியிருப்பதிலும் அது உண்டு – இப்படிக் கழுதையின் மூக்கிலிருந்து தொடங்கி பெயர் என்பவர் திரும்ப வாசிக்கலாம்.

  5. ஜானை சமுதாயம் அங்கீகரிக்கவில்லை என்பது முழு உண்மையல்ல. அந்த அங்கீகாரத்தால் பல முறை அவர் துயரடைந்தார், கோபமடைந்தார் என்பதும் அந்தக்கோபம் அவருடைய செயல்களில் வெளிப்பட்டது என்பதும் உண்மையாக இருக்கலாம். மற்றவர்களுக்கும் இது பொருந்தலாம்.

  நன்றி.
  நாகார்ஜுனன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s