நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா?

பத்ரியின் பதிவுக்கான பின்னூட்டமாக எழுதியது நீண்டுவிட்டதால், இங்கே தனி இடுகையாக….

இதழியல், எப்படி, பெரு ஊடகம், சிற்றிதழ்கள் என்று இரு கூராகப் பிரிந்து நிற்கின்றதோ, அதே போலத் தான் திரைப்படங்களும்.

பதிவிலே நீங்க (பத்ரி) சொன்னது போன்ற, வரலாற்று நிகழ்வுகளை, குறும்படங்களாக அல்லது விவரணப்படங்களாகத் தயாரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர, பெருவாரியான மக்கள் பார்க்கும் மக்கள் சினிமாவாகத் தயாரிக்கப்பட வாய்ப்பே இல்லை. அப்படியே தயாரிக்கப்பட்டாலும், அரசியல் குறுக்கீடுகள், தணிக்கை போன்ற அதிகாரக் குறிக்கீடுகள் தாண்டி அரங்குக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே அரங்குக்கு வந்தாலும், அதைப் பார்ப்பதற்கான மக்கள் குறைவு.

சினிமா என்கிற ஊடகத்தை, வரலாற்று நிகழ்வுகள், ஒடுக்குமுறைகள், அரச பயங்கரவாதம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான ஊடகமாக மாற்ற நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, நாராயண் எழுதிய பதிவு ஒன்றிலே என்னுடைய பின்னூட்டத்தின் ஒரு பகுதி

குறும்படம் ( short film), விவரணப் படம் ( documentary ), மாற்று சினிமா ( parallel cinema) வகை திரைப்படங்கள், வெகுசன சினிமா ( mainstream) அளவுக்கு அறியப்படவில்லை/ விரும்பப்படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை. அதற்கு நம் தமிழ் கலாசாச் சூழ்நிலையைத் தான் குறை சொல்ல வேண்டும்.

மாற்றான் மனைவி மீது காதல் கொள்ளுவது தவறு , அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று போன்ற எளிய நல்லொழுக்கம் கூட நமக்கு காப்பிய , கதை வடிவத்தில் தான் சொல்லப்பட்டது. நம் ஊரில் திரைப்படங்கள் எடுக்கத் துவங்கிய 1900 களில் , காப்பியங்களும் புராணங்களும் தான், திரைப்படங்களை பெருமளவில் ஆக்கிரமித்தன. அந்தக் காலத்திலேயே குறும்படங்களும், விவரணப்படங்களும் இருந்தன என்றாலும், இவை ‘கதை சொல்லும் படங்களுக்கு’ ஈடாக பரவலாகவில்லை. மௌனப்படங்களுக்குப் பிறகு வந்த டாக்கீ யுகத்திலும், காப்பியங்களில் இருந்து கிளைத்த உபகதைகள் தான் சினிமாவாகத் தயாரிக்கப்பட்டன. மேடை நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு இறக்குமதியான பல கலைஞர்கள், மேடைநாடகத்தையே, சினிமாவாக எடுத்தனர். இரண்டிற்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரியவில்லை. புகைப்படக் கருவி தரும் சாத்தியக்கூறுகளை முயற்சி செய்து பார்க்காமல், காமிராவை, ஒரே கோணத்தில் வைத்து படமாக்கினார்கள். திராவிட இயக்கம், சினிமாவுக்குள் நுழைந்த போது, சினிமா இளங்கோவன், டி.வி.சாரி, மு.கருணாநிதி போன்ற வசனகர்த்தாக்கள் கைக்கு வந்தது. ( மு.கருணாநிதி வசனம் எழுதிய மந்திரிகுமாரி, மனோன்மணீயம் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்). திரைப்படம் என்ற கலை வடிவத்தில், ஒரு கோர்வையான கதையை எதிர்பார்ப்பது , நம்முடைய நூற்றாண்டு கால மரபு.

காட்சிப்படமங்களையும் குறியீடுகள் மூலமாக உணர்த்தும் மாற்று சினிமாவும், மற்ற வகைத் திரைப்படங்களும் பரவலாக ரசிக்கப்படாமல் போனதற்கு இவையும் ஒரு காரணம்.

மாற்று சினிமா/விவரணப்படங்கள் பார்க்க ஆளில்லை. ஆனால், எடுக்கவாவது ஆளிருக்கிறார்கள என்றால், இருக்கிறார்கள். வெகு குறைச்சலான அளவில். மௌனப்பட யுகத்திலேயே, குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

அவரே, “1937இல் துவங்கி, இரண்டரை ஆண்டுகள் உழைத்து, பல நாடுகள் பயணம் செய்து காந்தி பற்றிய திரைக்காட்சிகளை தொகுத்தும், பல காட்சிகளைப் படமாக்கியும், ( ஏ.கே) செட்டியார் தயாரித்த ” மகாத்மா காந்தி ‘ என்ற ஆவணப்படம் 1940 இல் வெளியிடப்பட்டது, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வு” என்றும் வேறு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தியாவின் அதிசயங்கள் பலவற்ற்றை காமிராவால் சுட்டு, அயல்நாட்டு international newsreel corp போன்ற திரைப்படக் கம்பெனிகளுக்கு விற்று, ஒரு அடிக்கு ஒரு டாலர் என்று சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள்.

நம் விவரணப் படங்களுக்கு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மாற்று சினிமாவும் அதைப்ப் போலத்தான். லே மிசரபிள் என்ற ருஷ்ய நாலைத் தமிழ்ப்படுத்தி எடுத்த கே.ராம்நாத்தின் ஏழைபடும் பாடு, அவன் அமரன், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், என்று மாற்று சினிமா இயக்கம் வெகுகாலம் முன்பே துவங்கி விட்டது, அதிலே பணக்கவ்ர்ச்சி இல்லாததால், அந்த மாற்று சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, திரை முக்கியஸ்தர்கள் தவறிவிட்டனர்.

பெரு ஊடகத்தின் பக்கமே வராமல், நல்ல ஆவணப்படங்கள் , விவரணப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் அப்படி வந்து, குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் மட்டும் திரையிடப்பட்டு, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த பல படங்க்ள் உண்டு. ஆனால், அவற்றை நாம் தான் தேடிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது. காரணம், நிதர்சனம். அவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில், இன்னும் நான்கைந்து படங்களை அவர்கள் தயாரிக்கலாம் 🙂

யமுனா ராஜேந்திரன் எழுதி, ஒரு இணையக்குழுவில் பிரசுரமான மடல் ஒன்றை, என்னுடைய சேமிப்பில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அது 2001 இலே நடந்த முதல் உலகத் தமிழ்த் திரைப்பட விழாவிலே திரையிடப்பட்ட படங்களின் பட்டியல். பாருங்கள். நல்ல படங்கள் வருவதில்லையா அல்லது அவை வரும்போது நாம் கவனிப்பதில்லையா என்று சொல்லுங்கள்.

1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால் இலங்கைத் தமிழ் அகதி மக்கள் அடையும் துயர் பற்றிய விவரணப்படம். கோரமும் துயரும் நிறைந்த பிம்பங்கள் கொண்ட நிஜவாழ்வைத் திரையில் சொல்லும் விவரணப் படம். இயக்கம் : நாவலாசிரியர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்.

2. ஊருக்கு நு¡று பேர் : பு¢ரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இயக்குனர் : படத்தொகுப்பாளர் பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

3. நதியின் மரணம். தமிழகத்தில் பரபரப்பேற்படுத்திய தாமிரபரணி தலித்படுகொலைகள் பற்றிய விவரணப்படம். பயங்கரமும் கோரமும் துயரும் நிறைந்த அதிரச்சிதரும் காட்சிகள் கொண்ட சித்திரம். இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

4. நாக் அவுட் : ந்தியாவில் விளையாட்டு வீரர்களின் சோகம் மற்றும் கவனிக்கப்படாத மரணம் குறித்த படம். டென்மார்க் நாட்டுப் படவிழாவில் திரையிடப்பட்டகுறும்படம். இயக்கம் : பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

5. நிழல் யுத்தம் : ஸ்விட்சர்லாந்துக்குப் புலம் பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளந்தம்பதியர் இடையில் தோன்றும் பிணக்கும் காதலும் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

6. எச்சில் போர்வை : அகதி வாழ்வின் நிலையாமை பற்றிய குறும்படம்.ஏஜென்ட் ஒரு புறம். தஞ்சம் நிராகரிப்பு இன்னொருபுறம். தாய்நாட்டில் சொந்தங்களின் தேவைகள் இன்னொறுபுறம். தனிடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞனின்சோக வாழ்வு இக்குறும்படம்.. பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்படப்போட்டியில் விருது பெற்ற படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

7. ஆயிஷா : தொலைக் காட்சிப்படத் தயாரிப்பாளரான செல்வி புவனேஸ் வழங்கும் குழந்தைகள் திரைப்படம் 3 ஊர்வசி விருதுபெற்ற அர்ச்சனா மற்றும் சந்தோஸ் சிவனின் `மல்லி’ படப்புகழ் சிறுமி சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கம் : பி. சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

8. தங்கம் : பல சர்வதேசப் படவிழாப் பரிசுகளை வென்ற குழந்தைத் தொழிலாளர் பற்றிய சோக காவியம். தங்கம் படத்தின் தொகுப்பாளர் Life is beautifulபடத்திற்காக ஆஸகார் விருதுபெற்ற கிழக்கு ஐரோப்பியரான ஸைடன் பெக்கி ஆவார். இத்தாலித் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் : சொர்ணவேல். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

9. கால்களின் ஆல்பம். : தமிழின் முக்கிய கவியான மனுஸ்ய புத்திரனின் கவிதையொன்றை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . இயக்குனர்: பி.லெனின். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

10. Untouchable Country : தமிழக அறிஞர்களின் நேர்முகங்கள் அடங்கிய விவரணப்படம். வுரலாறு முழுக்க தலித் மக்கள் இந்திய வாழ்வில் அனுபவித்து வரும்துயர்களைச் சொல்லும் விவரணப்படம். இயக்கம் : ஆர்ஆர்.சீனிவாசன. ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

11. மதி எனும் மனிதனின் மரணம் : ரா.நடராசனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . பெங்களுர் உலகப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் :பி.லெனின் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்டபடம்.

12. சினிமாவுக்குப் போன சித்தாளு . நாவலாசிரியர் ஜெயகாந்தனின்நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா மற்றும்தலைவாசல் விஜய் போன்றோர் நடித்த படம். கெளதமன் அடுத்து நாவலாசிரியர் நீல..பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் : கெளதமன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

13. Power : ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஒரு சை ஆலபத்தின் பகுதிகள் படம். ஸ்விஸ் இளம் பெண்களும் ஆணும் தோன்றும் நடனத் தெறிப்பு க்குறும்படம். இயக்கம் : ஜீவன்.

14. வில்லு : தமிழக கிராமப்புற இசைக்கருவியான வில்லு பற்றியதொரு விவரணப்படம். 1998 பிரெஞ்சு மானுடவரைவியல் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டபடம். இயக்குனர் : சொர்ணவேல். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

15. சுப்பிரமணிய பாரதி : இறவா மானுடன் மகாகவி பாரதி பற்றிய விவரணப்படம். இயக்குனர் : அம்ஷன்குமார். தமிழகப் பத்திரிக்கைகளால் பரவலானபாராட்டுப் பெற்றதும் மிகுந்த ஆய்வின் பின் எடுக்கப்பட்டதுமான பாரதி பற்றிய முதல் விவரணப்படம். இந்தியத் ¦¡லைக்காட்சியான து¡ரதர்ஷனில் ஒளிபரப்பட்டு 1999 ஆம்ஆண்டுக்கான சிறந்த விவரணப்படம் எனும் மைலாப்பூர் அகாதமி விருது பெற்ற விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்..

16. Knowledge Centres : தகவல் தொழில்நுட்பம் தமிழக கிராமங்களில் ஏற்பத்தியிருக்கும் விளைவுகளும் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும் பற்றி விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

17. விட்டு விடுதலையாகி : சமஸ்கிருத ஆண்டுக்குச் சமர்ப்பணமான ஜாதியம் குறித்த குறும்படம் இயக்குனர் : அருண்மொழி. குணச்சித்திர நடிகர் சாருஹாஸன் பாலுமகேந்திராவின் கதை நேரம் புகழ் மெளனிகா நாடக நடிகை அ.மங்கை.மற்றும்பி.ஆர். அர்ச்சனா போன்றோர் நடித்த குறும்படம். எமது திரைப்படவிழாவில்தான் ப்படம் இத்திரைப்படவிழாவில் முதன் முதலாகத் திரையிடப்படுகிறது. இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

18. Indian National Army : சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பற்றிய குறும்படம். 1998 ஆம் ஆண்டு தொடங்கி ரோம் மிலான் பம்பாய்போன்ற இடங்களில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிக முக்கியமானவரலாற்று விவரணப்படம். யக்கம் : சொர்ணவேல் ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.

19. நிலப்பறி : தமிழக விவசாயிகளின் போராட்டமாக எழுந்த நிலமீட்சி இயக்கம் பற்றிய விவரணப்படம். இயக்குனர் அருண்மொழி; ஏர்முனை, காணிநிலம் போன்ற படங்களை இயக்கியதோடு பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்ற தமிழக இயக்குனராவார்.டெல்லி திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்குனர் : அருண்மொழி. திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

20. யாத்திரை : ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் இலங்கை அகதி மகனின் துயர்சொல்லும் குறும்படம். இயக்குனர் : ஜீவன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

21. கவிக்குயில் : புகலிட வாழ்வில் தமிழ்க் கலாச்சார வேர்களைத் தேடும் தமிழ்ப்பெண்ணொருத்தியின் ஆசையும் தமிழ் இசையும் பற்றிதொரு குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

22. கூலி : சிங்கப்பூருக்கு கூலியாகவரும் ஒரு தமிழக இளம்பெண்ணின் துயரும்சந்தோஷமும் நிறைந்த வாழ்வு. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சிக்காக எடுத்த குறும்படம். இயக்குனர் : கனடா மூர்த்தி . ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.

23. Teasing : ஸ்விஸ் இளம் பெண்களின் தனித்ததொரு இளைஞனிடமானகுறும்பு பற்றியதொரு நிமிடத் தெறிப்பான குறம்படம். இயக்கம் : ஜீவன்.

24. கடைசி யுத்தம் : தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் டையில் வாழநேர்ந்து தற்கொலைக்கு முயலும் இளைஞன் பற்றிய குறும்படம். இறுதியில் காலம் கடந்து விடமரணம் தவிர்க்கவிலாமல் நிகழ்கிறது.. இயக்குனர் : விஜய் சேகர் திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

25. கூண்டு : ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழப் பெண்ணின்வாழ்வு பற்றிய குறும்படம்.. அண்ணன் அண்ணியோடு வாழத் தலைப்பட்ட அவர்மேற்கொள்ளும் பாலியல் சார் உளவியல் போராட்டம் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜெகாதரன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

26. Labyrinth : நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு வாழ்வுச்சம்பங்களில் இடம் பெறும் திரும்பத் திரும்ப நிகழல் மற்றும் வட்டவடிவமான வாழ்வுபோன்றவற்றைப் பற்றிச் சித்தரிக்கும் சோதனைப்படம். இயக்கம். ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

27. ஜட்ஜ்மென்ட்.: கொலைகாரன் எனத் தன் கணவனைக் குற்றம் சுமத்திய ஒருபெண்ணின் கதை. அதே வேளை தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கணவனின் கதை பிரகாஸ்ராக நடித்த குறும்படம். . இயக்கம் : தமிழ்த் திரைப்பட நடிகை சுகன்யா திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

28. Ruins. : கோயில் ஒன்றின் சிதைவையும் ஆண் பெண் உறவின் சிதைவையும் ஒப்பு நோக்கி கவித்துவத்தோடு சிதிலத்தின் சோகத்தைச் சொல்ல முயலும்சோதனைப்படம் . கவிதைச் சினிமா என இதனைக் குறிப்பிடலாம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

29. சந்தன மொட்டுக்கள் : சந்தனக் கடத்தில் வீரப்பனின் சாகசங்களினிடையில் வாழ நேர்ந்த குழந்தைகள் பற்றிய சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம். மேற்பார்வை: பேராசிரியர் :ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

30. மதவாதம் : தமிழகத்தில் பரவி வரும் மதவெறியும் அதனைத் தொடர்ந்த மானுட அழிவும் பற்றிச் சொல்லும் படம். சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை:பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

31. Feel the Pain : புலம்பெயர்ந்த ஆசிய மக்களின் மீதான ஐரோப்பியர்களின் நிறவாத்தையும் வெறுப்பையும் விலக்கக் கோரும் அன்பு குறித்த இசைத் தெறிப்பு. இப்படம். யக்கம் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

32. வேர்களாகி. : தமிழகம் எங்கும் பயணம் செய்து ஊழல் எனும் எரியும் பிரச்சினை பற்றி வெகுஜனங்களிடம் கேட்டறிந்த அபிப்பிராயங்கள் பற்றிய சென்னை லயோலாகல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை: பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

33. Now and Forever : இலங்கைப் பாடகரொருவரின் காதலிக்கான உருக்கமானபாடல். இயக்கம் : ஜீவன்.

34. தப்புக் கட்டை : தப்பட்டை அடிக்கும்போது கேவலப்படுத்தப்படும் தலித்மக்கள் சிலர் தப்படிப்பதை நிறத்தி விடுகின்றனர். அம்மாவின் மரணத்தின் பின் அவளது இறுதி ஆசையான தப்பாட்டம் இல்லாது தவிக்கும் ஒரு தலித் ளைஞன் ஆவேசத்தோடு தானேதப்பட்டை அடிக்கத் தொடங்குகிறான். உக்கிரமும் உணரச்சியும் நிறைந்த ஆவேசமானகுறும்படம்.. இயக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

35. அன்னமயில்.. : ஆண் பெண் உறவு பற்றியதோடு அறம் ஒழுக்கம்போன்றவற்றின் சார்பு நிலைகளை விசாரணை செய்யும் குறும் படம். யக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

36. Close your eyes : விழியிழந்தோர் பள்ளியில் எடுக்கப்பட்ட அந்தகக்குழந்தைகளின் அழகும் வாழ்வும் துயரும் பற்றியதொரு விவரணச்சித்திரம். கண்ணீரைவரவழைக்கும் காட்சிகள் கொண்ட படம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

37. உயிரே என்னை அழைத்ததேன் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவனின் காதலும் தற்கொலையும் பற்றிய கதைப்படம். இங்கிலாந்தில் வாழும்ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

38. ஜெயகாந்தன் : நாவலாசிரியர் ஜெயகாந்தன் பற்றிய இரண்டு விவரணப்படங்கள்.. இயக்கம் : நாவலாசிரியர் சா.கந்தசாமி மற்றும் எழுத்தாளர் கனடாமூர்த்தி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

39. அடிமைகளின் தேசம் : தலித் பெண்ணொருத்தி தேர்தலில்போட்டிய§ட்டதற்காக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார் தலித் மக்களின்பாலான நீதித்துறையின் இரட்டை நிலைபாட்டை ஆவேசமாக விமர்சிக்கும் குறும்படம்.. இயக்குனர் தீஸ்மாஸ். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

40. குற்றவாளியைத் தேடி.: பெற்றோர்களின் கட்டுபாடுகளை மீறி நடந்த திருமணத்தின் பின் மணந்து கொண்டவள் துரோகம் செய்கிறாள். அவளைக் கொலைசெய்யத் தேடித்திரிபவன் இறுதியில் மரணமுற்ற அவளையும் நிர்க்கதியான அவளதுகுழந்தையையும் காண்கிறான். கொல்லப் போனவன் குழந்தைக்கு பெறுப்பேற்றுத் திரும்புகிறான்.. இயக்குனர் ஜோ திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்

41. வசந்த காலப் பூக்கள் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து மனம் பேதலித்துவாழும் ஒரு புகலிட இலங்கைத் தமிழ் இளைஞரொருவரின் வாழ்வு பற்றிய சோகநாடகம்.. இங்கிலாந்தில் வாழும் ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

42. The Pesticide Trap : பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகளில் விளைவிக்கும் சேதம் பற்றிய விவரணச்சித்தரம். இதில் இடம் பெறும் வீதிநாடகம் வ்விவரணப்படத்தின் சிறப்பான பகுதியாகும். இயக்கம் : எம்.சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

43. வேர்கள் கடந்தும் : தமிழகத்தில் வாடும் லங்கைத் தமிழ் அகதிகள்படும் அல்லல்கள் மற்றும் துயர்கள் பற்றிய படம். அதிகார வர்க்கத்தவர் அம்மக்கள் மேல்மேற்கொள்ளும் அத்துமீறல்கள் பற்றிய விவரணப்படம். இயக்கம் : ரகுராம3 திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

44. சேமிப்புக்கு அப்பால்: தமிழகப் பெண்களிடம் உருவாகிவரும்கூட்டுணர்வையும் கிராமப்புறப் பெண்களின் சேமிப்புப் பழக்கத்தையும் அவர்களின்மீது அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் விவரணப்படம். இயக்கம்: எம்.சிவக்குமார் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

45. அதிசயம் அற்புதம் : மனிதர்களின் மூடப்பழக்கங்களைப் பயன்படுத்தி அவர்களின் அறியாமையைச் சுரண்டும் தமிழகத்தின் திடீர் கடவுள்களின் சாகசங்களின் பின்னிருக்கும் பொய்மையை விஞ்ஞான பூர்வமாக விமர்சனத்துக்கு உட்படுத்தும் படம். பிரபல தமிழ் நடிகர் நாஸர் நடித்த படம். இயக்கம் : எம்.சிவக்குமார். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

46. சி.சு.செல்லப்பா : முது பெரும் இலக்கியவாதி சி. சு. செல்லப்பாவின் வாழ்வு அவரது உதாரணமான இலக்கியப்பணி பற்றிய விவரணப்படம். பாலசுப்ரமணியம் அருண்மொழி கூட்டாகத் தயாரித்த விவரணப்படம். காணற்கரிய ஆவணங்கள் கொண்டது இப்படம். இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்

47. Getting Lost : சர்வதேச அளவில் உருவாகி வரும் இனவரைவியல் திரைப்பட வகையினம் சார்ந்த படம். தமிழர் கலாச்சாரத்தில் பண்டிகைகள் சடங்குகள்போன்றவை பெறும் இடம் குறித்ததொரு விவரணச்சித்திரம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

48. பச்சை மண் : தமிழகத்தைக் குலுக்கிய பெண் சிசுக்கொலைபற்றிய படம்.ஒரு நாடகத்தை கிராமமொன்றில் நிகழ்த்துவதன் வழி பார்வையாளர்களின் உரையாடலைத் தூண்டி விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் குறும்படம் இது. இயக்கம் : மினி ஹரி ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

49. Three Songs : குழந்தைகளை விளையாட விடாது அவர்கள் மீது சுமத்தப்படும் காலனியக் கல்வி முறை பற்றிய விமர்சனம். பாடல்களின் வழி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் விவரணப்படம். இயக்கம் ஏ.எஸ். பத்மாவதி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

50. Message that Move : வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய படம். சகல விதங்களிலும் ஆண்கள் பொறுப்பெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கோரும் விவரணப்படம். இயக்கம் :ஏ.எஸ்.பத்மாவதி மற்றும் ஜனனி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

51. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு : மரபான தமிழ் நாடகத்தை அடிப்டையாகக் கொண்ட படம். அல்லி அர்ஜூனா நாடகத்தின் இடையில் பிரதான நடிகையின் கணவன் அவளது தமக்கையை மணம் முடித்துக் கொடுக்குமாறு கலாட்டா செய்கிறான். சமகால பலதார மணம் குறித்த நையாண்டியாகவும் இந்நாடகம் திகழ்கிறது. ஒளிப்பதிவு மற்றும் குறும்பட உருவாக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

52. The Ball: நோர்வேயில் வாழும் இருபது மாதக் குழந்தை ஒன்றுக்கும் பந்து ஒன்றுக்கும் இடையிலான ஒப்புமைகளைக் கொண்டிருக்கும் குறும்படம். தகப்பனால் வன்முறைக்குள்ளாகும் குழந்தையொன்று வீட் டைவிட்டு வெளியேறி விளயாட்டுப் போக்கில் ஏரியில் மூழ்கி மரணமுறுகிறது. பெற்றோருக்குச் செய்தி சொல்லும் படம். இயக்கம் :தமயந்தி. திரையிடலின்போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

வேர்ல்டு மூவிசுக்கு இடையில் இந்தப் படங்களையும், தேடிப் பிடித்துப் பார்த்து இன்புறலாம் (?) தானே?

Update : New Jersey Short Film & Documentary Film Festival . – a post from Boston Bala’s blog archives

7 thoughts on “நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா?

 1. அருமையான லிஸ்ட் தந்த நீவிர் வாழ்க பல்லாண்டு 🙂 முன் வைத்த கருத்துகளும் ஏற்புடையவையே !
  எ.அ.பாலா

 2. ஊருக்கு நூறு பேர் பார்த்திருக்கிறேன். திரைப்படம் என்று பார்த்தால் திராபை.

  அம்ஷன்குமார் குறும்படங்கள் ஒரு formatஇல் இயங்குபவை. ஒன்று பார்த்தால் போதும். மற்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருந்தால் புதிதாக எதுவும் இருக்காது.

  பட்டியல் அற்புதம்!

 3. நல்ல பட்டியல். வில்லு-என்பதைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் குழம்பிவிட்டேன்.
  அம்ஷன்குமார் அசோகமித்திரனைப்பற்றிய ஆவணப் படம் ஒன்றை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s