வரும் ஆகஸ்ட் 17 முதல், மெட்ராஸ் தின நிகழ்ச்சிகள் துவங்க இருக்கின்றன. வழக்கம் போல இந்த ஆண்டும் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. மெட்ராஸ் தின நிகழ்வுகளில் பொதுவாக, வடசென்னையின் பங்கு இருக்காது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள், ராயபுரத்தில் நடைபெறுகின்றன. கலந்து கொள்ளலாம் என்று எண்ணியிருக்கும் நிகழ்வுகள்,
– ஆகஸ்ட் 18. மாலை 6.30 மணி . ‘அந்நாளைய சென்னைக் கொலைகள்’. ராண்டார்கை இந்தத் தலைப்பில் பேச இருக்கிறார்.
– ஆகஸ்ட் 20. மாலை 6.30 மணி. ‘ ‘எம்.ஆர்.ராதா – நூறாவது ஆண்டு அஞ்சலி. படத்துணுக்குகள் மற்றும் உரை வழங்குபவர் மோகன் ராமன்.
– ஆகஸ்ட் 22. மாலை 6.30 மணி . சென்னைத் தமிழ் (மெட்ராஸ் பாஷை) பற்றிய ஒரு ஆடியோ விஷுவல் பிரசண்டேஷன், வழங்குபவர். அதிர்ச்சி அடையவேணாம்…பத்ரி சேஷாத்ரி
மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் அவ்வைக் கலைக்கழகம், 15/9, சோமு செட்டி நாலாவது சந்து, ராயபுரம் என்ற முகவரியில் நடைபெற உள்ளன.
*********
ஆனந்த விகடனின் புதிய வடிவம் எனக்கு மட்டும் தான் பிடிக்கவில்லையா அல்லது எல்லாருக்குமே அப்படித்தான் இருக்கிறதா ? இளைய தலைமுறையை குறி வைக்கிறோம் என்று பேர் பண்ணிக் கொண்டு, இருக்கிற வாசகர்களை இழந்து வருகிறார்கள் என்று படுகிறது. வெறுமனே, வண்ண வண்ணப் படங்கள் கலந்த துணுக்குத் தோரணம். பழைய கல்கண்டு இதழை சினிமாஸ்கோப்பில் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. இவர்கள் குறிவைப்பதாகச் சொல்கிற மல்ட்டிப்ளக்ஸ் இளையர்களிடம், இந்தப் புதிய விகடனைக் காட்டினால், ‘lousy’, என்று ஒற்றை வார்த்தையில் ஒதுக்கிவிடுவார்கள்.
நாஞ்சில் நாடனின் தொடர் தவிர, வேறு ஏதும் உருப்படியாக அதிலே இருப்பதாகத் தோன்றவில்லை. யாராவது, நாஞ்சில் நாடனை வலைப்பதிவு ஆரம்பிக்கச் சொல்லுங்கள். வாரம் பதினைந்து ரூபாய் மிச்சமாகும்.
********
மனுஷ்யபுத்திரன் , சாருநிவேதிதாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘பொதுவாக புத்த்கங்கள் தொடர்பாக இணைய வாசகர்கள் காட்டும் பதட்டம் அதன் விற்பனையில் பிரதிபலிப்பதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில், சீரோ டிகிரி நாவல், இது வரை மூன்றே பிரதிகள் தான் ( உயிர்மையின் மின்கடை மூலமாக) விற்கப்பட்டிருப்பதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் வாசகர்களிடையே நட்சத்திர அந்தஸ்து பெற்ற சாருநிவேதிதாவுக்கே இந்த கதியா? அல்லது இப்படியும் இருக்கலாம். ‘எழுத்தைக் காசு கொடுத்துப் படிக்க, பெரும்பான்மையான இணைய வாசகர்கள் விரும்புவதில்லை.
*************
சில நாட்களுக்கு முன்பு, முன்பு எழுதிக் கொண்டிருந்து, தற்பொழுது எழுதுவதை நிறுத்திவிட்ட ஸ்ரீகாந்தை, நானும் நாராயணும் சந்தித்துப் நீண்ண்ண்ண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சுவாரசியமான மனிதர். எவ்வளவு நேரம் மொக்கை போட்டாலும், அதைத் தாங்கும் அளவுக்கு நல்லவர்.
‘ஹௌ டு நேம் இட்’ ஆல்பத்தில் ஒரு பாட்டையும், அதன் ‘மூலமான’ Bach இன் ஒரு இசைத் துணுக்கையும் ஒருங்கே போட்டுக் காட்டினார். கேட்டு முடித்த பிறகு அங்கே நடந்த சுவாரசியமான விவாதத்தை ரெக்கார்ட் செய்திருக்க வேண்டும் என்று வீட்டுக்குச் சென்ற உடன் தோன்றியது.
********
சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன் வரிசையிலே, ஞாநியும் புதிதாகத் தளம் தொடங்கி இருக்கிறார். ஆனால், உறுப்பினராகப் பதிவு செய்த பின்னர்தான் அவர் எழுதுவதை வாசிக்க முடியும். இந்த ஏற்பாட்டின் பின் உள்ள தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் தளத்தை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்று ஒரு எழுத்தாளர் தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை. அதே சமயம், அதை யார் யார் வாசிக்கிறார்கள், அவர் பெயர், பால், வயது, விலாசம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் ஒரு எழுத்தாளருக்கு எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை, customer profiling செய்து, தன் புஸ்தகங்களை விற்பதற்காக இருக்குமோ? 🙂
**********
//எழுத்தைக் காசு கொடுத்துப் படிக்க, பெரும்பான்மையான இணைய வாசகர்கள் விரும்புவதில்லை.//
இவ்வளவு எளிமைப்படுத்த முடியாதுன்னு நினைக்கிறேன். அப்புறம் எப்படி amazon தளம் வெற்றிகரமா இருக்கு?
இணையத்தில் அறிந்து, நேரடியாக கடையில் வாங்கி இருக்கலாம். இணையம், மின் வணிகப் போக்கு பெருகாமல் இருக்கலாம். அல்லது, குறிப்பிட்ட நூலைப் பொருத்தும் இருக்கலாம்.
காமதேனு, anyindian போன்ற தளங்களின் ஒட்டு மொத்த விற்பனையை வைத்து தமிழ் இணைய புத்தக வாசகர்களின் தன்மையை மதிப்பிடுவதே சரியாக இருக்கும்.
அடுத்த வலைப்பதிவர் பட்டறையில், வலைப்பதிய விரும்பும் எழுத்தாளர்களுக்கு ஒரு தனி வகுப்பு வைக்கணும் 🙂 கடன் அட்டை வாங்குறப்ப கூட இவ்வளவு விவரம் நிரப்பல !!
//‘எழுத்தைக் காசு கொடுத்துப் படிக்க, பெரும்பான்மையான இணைய வாசகர்கள் விரும்புவதில்லை.// – நூத்துல ஒரு வார்த்தை!
//அதை யார் யார் வாசிக்கிறார்கள், அவர் பெயர், பால், வயது, விலாசம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் // மற்றவை பற்றித் தெரியலை- வயது எல்லாரும் கேட்பதுதானே(ஆர்குட் உட்பட) – இந்த 13 வயதுக்கு மேலேதான் இணையதளத்தை மேயனும்னு (கூகுளில் kids games online என்று தேடி தானாகவே விளையாடிக்கொள்ளும் என் ஐந்து வயது சித்திப் பெண்ணிடம் இதை யாராவது சொன்னால் தேவலை!) ஒரு வேடிக்கையான விதி இருக்கில்ல, அதனால இருக்கலாம்!
சாரு காசு தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டாலே
பைசா அனுப்பாத வாசகர்கள் புத்தகத்தை மட்டும்
இணையம் மூலம் நூற்றுக்கணக்கில் வாங்குவார்களா
என்ன்?எழுத்தாளர்களின் இணைய தளங்களை curiosity value இருப்பதால் படிக்கிறார்கள். அதன் மூலம் வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, விற்பனையை அதிகரிக்க நீண்ட காலப் போக்கில் உதவும் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஞாநிக்கு இணையம் இன்னும் புரியவில்லை,
இணைய வாசகர்கள் யார் என்பதை அவர் அறியவில்லை.பத்திரிகையாளர்கள்,
பேராசிரியர்கள், இயக்குனர்கள்,நடிகர்கள்,
அரசியல்வாதிகள் உடபட பல துறைகளில் இருப்பவர்கள் வாசகர் படிக்க, கருத்து சொல்ல வலைப்பதிவு அல்லது இணையதளம் அல்லது இரண்டும் வைத்திருக்கிறார்கள்.அதில் எத்தனை
பேர் இது போன்ற நிபந்தனையை வைத்துள்ளார்கள்
என்பதை அவர் ஆராய்ந்தால் அவர் செய்துள்ளது
முட்டாள்த்தனம் என்பது தெரியும். ஒ பக்கங்களை ஒரு வலைப்பதிவில் தொடர்ந்து பதிவேற்றுகிறார்கள்.அப்புறம் நாம் எதற்கு அவர்
தளத்திற்கு போய் அதைப் படிக்கவேண்டும்.தீம்தரிகிட
பழைய இதழ்கள் கீற்றில் உள்ளன.பின் அவரது தளத்தில் போய் ஏன் அதைப் படிக்க வேண்டும்.
இரா முருகன் அவர்களுடைய வலை தளம் முகவரி சொல்ல முடியுமா ?
Krishnan
Twitter – http://twitter.com/eramurukan (Or Message him – http://twitter.com/direct_messages/create/15202851)
Regards
Venkatramanan
“‘ஹௌ டு நேம் இட்’ ஆல்பத்தில் ஒரு பாட்டையும், அதன் ‘மூலமான’ Bach இன் ஒரு இசைத் துணுக்கையும் ஒருங்கே போட்டுக் காட்டினார். கேட்டு முடித்த பிறகு அங்கே நடந்த சுவாரசியமான விவாதத்தை ரெக்கார்ட் செய்திருக்க வேண்டும் என்று வீட்டுக்குச் சென்ற உடன் தோன்றியது.”
http://raagadevan.blogspot.com/2008/06/and-we-had-talk.html
http://eramurukan.in
பிரகாஸ்,
பார்த்து பேசி ரொம்ப நாளாச்சு.
எப்படியிருக்கீங்க?
அடிக்கடி எழுதுங்க.
அன்புடன்
ராஜ்குமார்
இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன் பிரகாஷ். ராயபுரத்தில் நான் பேசுவதாக இருந்தது நடக்கவில்லை. அந்த இடம் வேறு சில காரணங்களுக்காகத் தேவைப்பட்டதால் என்னுடைய பேச்சு ரத்தாகிவிட்டது.
சென்னைத் தமிழ் என்று நான் பேச விரும்பியது பற்றி சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளேன். முடிந்தால் அடுத்த ஆண்டு எங்காவது இதைப் பற்றிப் பேசுவேன்.
ஆனால் மெட்ராஸ் டே தொடர்பாக, சென்னை தரமணி ரோஜா முத்தையா நூலகத்தில் “சுதந்தரத்துக்கு முந்தைய சென்னையில் இருந்த அச்சு ஊடகங்கள், பதிப்பகங்கள்” என்று ஆங்கிலத்தில் (Publishing in pre-independent Chennai) பேசினேன். 40-50 பேர் வந்திருந்தனர்.
பிரகாஷ், அவரோட வலைப்பக்கத்துல புது பயனாளர் பதிவு செஞ்சுக்கற வசதி எங்க இருக்கு? தேடி பாத்து அலுத்துப் போயிட்டேன். Help pls…