சோதனைப் பதிவு

நாலைந்து மாதங்களுக்குப் பிறகு எழுதுவதால், வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் இருக்கிறதா என்பதற்கான சோதனையா அல்லது ‘டச் விட்டுப்
போயிடும்’ என்று பலரும் சொல்வதால், கொஞ்சமேனும் நீளமாக எழுத முடிகிறதா என்று சோதனையா என்பதை அவரவர் விருப்பப்படி, தலைப்புடன் பொருத்திக் கொள்ளலாம்.

வலைப்பதிவுக் கணக்கு உயிருடன் தான் இருக்கிறது.

எழுத்து?

சென்னையில் வெயில் குறைந்து மழை அடிக்கத் துவங்கியிருக்கிறது. நாள் ஒன்றுக்கு இருமுறையாவது ‘கண்கள் இரண்டால்’ பாட்டைக் கேட்டுக் கிறங்குறேன். எதிர்பார்ப்பில் இருக்கும் குழந்தை, பெண்ணாக இருந்தால், ரீதிகௌளை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லி, ஆடீ மாசத்துக்கு சீராட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும் சம்சாரத்திடம் செல்பேசியில் திட்டுவாங்கிவிட்டு, தொந்தரவு இல்லாமல் டீவி பார்க்க
உட்கார்ந்தால், கே டீவியில், காதல் பரிசு.

ஒரு காலத்தில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய அம்பிகா, ராதா சகோதரிகளுடன், ‘ காதல் மகராணி கவிதை பூவிரித்தாள்’ என்று கமலஹாசன் டூயட்டுப் பாடும் அமெச்சூர் படம். வில்லனாக ராஜ்குமார், ‘எம்ஜிஆர்’ லதாவின் தம்பி. ஆரம்பகால ராதிகா போன்றவர்களோடு சில படங்களில் பார்த்த நினைவு. பின்னாளில் ஸ்ரீபிரியாவைக் கட்டிக் கொண்டு பிசினஸ் பக்கம் செட்டில் ஆகிவிட்டார் என்று சினிமா எக்ஸ்பிரசிலோ, வேறு ஏதோ திரைப் பத்திரிக்கையிலோ படித்ததாக நினைவு. சினிமா எக்ஸ்பிரஸ் சந்தைக்கு வந்த பொழுது, பேசும்படம், சந்தமாமா நிறுவனத்தின் பொம்மை, ராம்நாத் ஆசிரியராக இருந்த பேசும்படம் போன்ற பத்திரிக்கைகள் தான் அதிக சர்க்குலேஷனில் இருந்ததாக நினைவு. பேசும் படத்தின் ஒவ்வொரு இதழிலும் கடைசிப் பக்கங்களில், ஒரு புதிய திரைப்படத்தின் கதை வசனம் இடம் பெறும். இப்போது, திரைப்படங்களின் ஸ்கிரிப்ட்டுகளை நூல் வடிவத்தில் வருகிறதே, அது போல அல்லாமல், நிசமாகவே படிக்கத் தோதாக இருக்கும். கிட்டதட்ட படம் பார்த்த திருப்தி அளிக்கும்.

பழனியப்பன் ராமசாமி, ஜெமினி சினிமா என்ற ஒல்லிப் பத்திரிக்கையை நடத்தி பின், இழுத்து மூடினார். ராம் பப்ளிசிடீஸ் என்ற சினிமா மக்கள்
தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த சித்ரா லட்சுமணன் கூட ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு ஒரு சினிமா பத்திரிக்கை நடத்தி வந்தார். அதிலே சினிமா கால்பாகமும், குறுநாவல் ஒன்று முக்கால் பாகத்திலும் இருக்கும். சுஜாதாவின் சில முக்கியமான குறுநாவல்களை வாசித்ததாக நினைவு. பழைய பேப்பர் கடையிலே, நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் பொறுக்கிப் படித்துக் கொண்டிருந்த போதுதான், அசோகமித்திரனும் ( பாவம் டல்பதடோ என்கிற மாலைமதி நாவல்), சுப்ரமண்ய ராஜுவும் ( இரவுகள் தவறுகள் என்ற மாலைமதி நாவல்) அறிமுகம் ஆனார்கள்.

பின்னால், பாலகுமாரன் எழுதிய முன்கதைச் சுருக்கம் ( தாய் இதழில் தொடராக வந்தது ) தொடரில் தான், சுப்ரமண்யராஜு பற்றி மேலதிகமாகத் தகவல்கள் தெரிய வந்தது. இறந்து விட்டார் என்று தெரிந்தது, கஷ்டமாக இருந்தது. நண்பணின் மரணம் பற்றி, அட்டாக் என்ற பெயரில் கதையாக குமுதம் இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது. ‘ சின்னச் சின்ன வட்டங்கள்’ என்ற சிறுகதைக்குப் பிறகு, பாலகுமாரன் மேல் அதிக மதிப்பு
ஏற்படுத்திய சிறுகதை அது.

அப்போது, பிரபல சஞ்சிகைள் அனைத்துமே தங்கள் குழுமத்தில் இருந்து மாத நாவல் பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தது. குமுதத்தில்
இருந்து மாலைமதி, ராணியில் இருந்து ராணிமுத்து, குங்குமத்தில் இருந்து குங்குமச்சிமிழ், சாவியில் இருந்து மோனா. இது தவிர, ஜெயகாந்தன், கல்பனா என்கிற மாத நாவலையும், மறைந்த எழுத்தாளர் ராஜேந்திரகுமார் , ராஜாராணி என்கிற வினோத வடிவிலான மாதநாவலையும் வெளியிட்டு வந்தார்கள். இவற்றின் வெற்றிதான், பாக்கெட் நாவல், க்ரைம் நாவல் என்ற பல்ப் (pulp) நாவல் வகையறாக்களுக்கு முன்னோடியாக இருந்தது. நூல் நிலையங்கள் பிரசுரம் செய்யும் நூல் வடிவிலான கதைப் புத்தகங்கள், விலை அதிகமாகவும், அதே சமயம் எளிதில் கிடைக்காததாகவும் இருந்த காலகட்டத்தில், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், ஏற்பட்ட பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், இந்த மலிவு விலை பல்ப் ஃபிக்ஷன்கள் உதவி செய்தன.

சமீபத்திலே, இந்த மாதநாவல் என்கிற எழுத்து வகையைச் சீரியசாக எடுத்துக் கொண்டு, blaft என்கிற ஆங்கிலப் பதிப்பகம், தேர்ந்தெடுத்த சில
குறுநாவல்களை, மொழிமாற்றம் செய்து பதிப்பித்தது என்பதை, நாளிதழ்களில் படித்துத் தெரிந்து கொண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை புத்தகங்கள் விற்றன, எப்படி வரவேற்பு என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

புதிய தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, பதிப்பு நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம், ‘ உள்ளடக்கம்’ அல்ல எழுத்திலே சுவாரசியம். வேலைக்குத் தயாராகும் இளையருக்கு, நேர்முகத்துக்கான டிப்ஸுகளைக் கூட, எவ்வளவு சுவாரசியமாக, தேவைப்படாதவர்கள் கூட, படிக்கும் வண்ணம் வாத்தியார் எழுதினார் என்பதை நினைத்துக் கொள்கிறேன்.

” நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் மாணவப்பருவம் முடியப் போகிறது ” என்று முடியும் அந்த ஒரு பக்கக் கட்டுரை குமுதத்தின் எந்த இதழில் வந்தது என்று தேசிகனிடன் விசாரிக்க வேண்டும், அல்லது சுப்புடுவிடம்?

15 thoughts on “சோதனைப் பதிவு

 1. Blaftன் முயற்சி வரவேற்கக்தக்கதே! வெளிநாடுகளில் ப்ல்ப் படிப்பவர்களையும் ரசிப்பவர்களையும் யாரும் கிழிறக்கிப்பார்ப்பது கிடையாது! காமிக்ஸ் ரசிகர்களை ‘வளர்ச்சியடையாதவர்கள்’ என்று பகடி செய்வதுவுமில்லை. ஃபிளே பாய் புத்தகத்தில் சில அருமையான கட்டுரைகளைக் காண முடியும், அதை சீராக விமர்சிக்கவும் செய்வார்கள். ஜெ.கே.ரவுலிங் தமிழில் எழுதியிருந்தால் சீண்டியிருக்கமாட்டார்கள், குப்பை என்று விசிறியெறிந்திருப்பார்கள். கார்சியா மார்க்கஸும், டாவின்சி கோடும் ஒரே தட்டில் வைத்து பார்க்கிறார்கள்.

  அப்படிப்பட்ட ஒரு வாசிப்பு கலாச்சாரம் நமக்கு தற்போதையா தேவை!

 2. “சுப்ரமண்யபுரம்” உடன் சேர்ந்து நீங்களும் 80s போய் வந்தது போல் தெரிகிறது 🙂

 3. நினைவுக் கிளறல் நல்லாவே இருக்கு ! இருந்தாலும், கடைசியா என்னதான் சொல்றீங்க ? நீளமா எழுத முடியும்னா ? முடியாதுன்னா ? 😉

 4. //“சுப்ரமண்யபுரம்” உடன் சேர்ந்து நீங்களும் 80s போய் வந்தது போல் தெரிகிறது //

  ஹலோ சாரே!

  ஐகாரஸாரும் யூத்து தான் என்று ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்கேன். யாரும் நம்பமாட்டேங்கறீளே? 😦

 5. பாலாஜி : நன்றி 🙂

  டைனோ : ஆனால், அந்த முயற்சி, வர்த்தக ரீதியிலே வெற்றி பெறுமா என்று சந்தேகம் உள்ளது.

  சுகவாசி : ஆமாம் 🙂

  சேவியர் : எழுத வருதுன்னு எனக்கே நான் குடுத்துக்கிட்ட நம்பிக்கை தான் இது 🙂

  லக்கி : புகைப்படத்தைப் பார்த்துதான், யூத்தா இல்லியான்னு குழம்பிடறாங்க.. மாத்திடணும் 🙂

 6. கில்லி ஸார்..

  உங்கள் வயதென்ன 50-ஆ அல்லது 55-ஆ?

  ‘ரீதிகௌளை’க்கு அர்த்தம்..?

  ராஜ்குமார் ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஓஹோவென்று இருப்பதாகத் தகவல். தமிழில்தான் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஹீரோவாக நடித்தார். ஆனால் மலையாளத்தில் அப்போதைய ஹீரோயின்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார். “தேன் பூவே பூவே வா” பாடல் காட்சியை பார்த்ததுண்டா.. அம்பிகாவுடன் உருகியிருப்பார்.. சேர்த்து நானும்தான்..

  திரைமாலை, திரைச்சுவை என்றும் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. என்ன ஒரு விஷயம்.. பாதி சினிமா.. மீதி ‘மேட்டர்’தான்..

  சுப்பிரமணியராஜு பற்றி பாலகுமாரனின் அறிமுகம்தான் அவரைப் பற்றி பரவலாக அனைவருக்கும் தெரிய வைத்தது என்று சொல்லலாம். நீண்ட வருடத்திற்குப் பின் ராஜூவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயைப் பார்த்ததுப் பேசியது பற்றி பாலகுமாரன் ஒரு முறை எழுதி நெகிழ வைத்தது ஞாபகத்திற்கு வருகிறது.

  //ஆடீ மாசத்துக்கு சீராட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும,் சம்சாரத்திடம் செல்பேசியில் திட்டுவாங்கிவிட்டு//

  )))))))))))))))

 7. Dr.Sintok, உண்மைத் தமிழன் : ரீதிகௌளைங்கறது, அந்தப் பாட்டோட ராகத்தின் பேர்.

  உ.த : சினிமால ரிட்டயர் ஆகிறவங்க ஒதுங்கறது ரியல் எஸ்டேட் தான் போலிருக்கு.

  மத்தபடி, வயசு அம்பதெல்லாம் இல்லீங்க.

  வருகைக்கு நன்றி 🙂

 8. தங்கமணி, அப்பாடி… எவ்ளோ நாளாச்சு…

  நன்றி, வருகைக்கும், வாழ்த்துக்கும்.

 9. //திரைமாலை, திரைச்சுவை என்றும் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. என்ன ஒரு விஷயம்.. பாதி சினிமா.. மீதி ‘மேட்டர்’தான்..//

  ‘உண்மை’ அண்ணே!

  திரைச்சித்ரா பற்றி என்கிட்டே சொன்னதை இங்கே சொல்ல மறந்துட்டீங்களே? திரைச்சித்ராவின் ஆசிரியர் நவமணி கோட்டு, ஷூட்டு போட்டு நிறைய போட்டோவெல்லாம் போடுவாரே? அதையும் சொல்லுங்கண்ணே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s