கல்யாண் நினைவாக…..

ஆசாத், தொலைபேசியில் அழைத்து, ‘ கல்யாண் இறந்துட்டாருங்க’ என்று சொன்ன அந்த நாளை இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

” என்னன்னு சரியாத் தெரியலைங்க பிரகாஷ், ஹார்ட் அட்டாக்க்காக இருக்குமோன்னு நினைக்கறாங்க”, கே.வி.ராஜா கூடவே இருக்கார்” என்று சொல்லி விட்டு ‘ திரும்ப கூப்பிடறேன்’ என்று வைத்துவிட்டார்…

அதைத் தொடர்ந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், விசாரிப்புகள், கல்யாண் பற்றி எழுதப் பட்ட குறிப்புகள் ஆகியவற்றை நினைவு படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

*********
அந்த கறுப்புதினத்துக்கு சரியாக நாற்பது நாட்கள் முன்பாக, கல்யாண் என் வீட்டுக்கு வந்திருந்தார். சாதாரணமாக விசிட்டர்கள் வரும் நேரமில்லை, அது.

” இந்தியா வந்து ஒரு மாசமாச்சு… இப்பதான் நேரம் கிடைச்சது. நாளைக்கு ஊருக்குப் போகிறேன், உங்களைப் பார்க்கணும்..இரவு கொஞ்ச நேரம் கழிச்சு வந்தா ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே? ” என்று கேட்டார். ‘ வாங்க’ என்று சொல்லி விட்டு, வழி சொன்னேன். இரவு நெடு நேரம் ஆகியும் வரவுமில்லை, அழைக்கவுமில்லை என்றதும், படுக்கப் போனேன். பத்து மணிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

‘ அந்த பிரிட்ஜ் கிட்ட நிக்கறேன்… எக்சாக்டா வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க’ என்றார். போய் அழைத்துக் கொண்டு வந்து, சேமலாபம் விசாரித்து, அம்மாவை எழுப்பி, அறிமுகம் செய்து, காபி போடச் சொல்லி சற்று நேரம் கழித்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஒரு சிகரட்டை நீட்டினேன்.

” ஸாரி… பழக்கமில்லை பிரகாஷ்” என்றார் சிரித்துக் கொண்டே.

*********

அதிகாலை மூன்று மணிக்குக் கிளம்பிப் போனது வரையிலும், தேன்கூடு, தமிழ்மணம், தேன்கூடு போட்டிகள், தமிழ் வலைப்பதிவுச் சூழல், சொந்த வாழ்க்கை, அம்மா ஆப்பரேஷன், குழந்தைகள், பாலகுமாரன், முத்தமிழ் மன்றம், கில்லி, அமீரக வாழ்க்கை, வலைப்பதிவு முகமூடிகள், இலக்குகள், அமெரிக்க முயற்சிகள் என்று இன்னெதன்று வகைப்படுத்த முடியாமல், என்ன என்னவோ வார்த்தைகளாக அரைபட்டது, கொசுக்களுடன் சேர்ந்து.

*********

கில்லி துவங்குவதற்கு முன்பாக, கல்யாணை, அவ்வளவாகப் பழக்கம் இல்லை. மரத்தடியில், அவ்வப்போது எழுதிய மடல்கள் மூலம், சாகரன் என்கிற கல்யாண் என்று ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியும். ஒரு மெகா வலைப்பதிவர் மாநாடு போல நடந்த கே.வி.ராஜாவின் திருமண வரவேற்பில் சந்தித்துப் பேசியது கூட நினைவில்லை. சந்தித்த போது நினைவு படுத்தினார்.

கில்லி துவங்கிய போது, பாலாஜியுடன் ‘டச்சில்’ இருந்தார் என்று நினைக்கிறேன். [ மின்னஞ்சல் மூலமாகத் ‘நட்புககளை’ மெய்ண்டெய்ன் செய்வது எனக்குக் கொஞ்சம் சிரமமான காரியம் 🙂 ]. அவ்வப்போது கில்லி குறித்த கல்யாணின் அபிப்ராயங்கள் பாலாஜி மூலம் வரும். நாங்கள் கேட்காமலேயே, தேன்கூட்டின் முகப்பிலேயே, கில்லிக்கு
இடம் கொடுத்து, போக்குவரத்தை எங்களுக்கும் திருப்பி விட்டார். பிறகு, wordpress.com இலே இயங்கிக் கொண்டிருந்த கில்லியை, சொந்தத் தளத்துக்கு மாற்றலாம் என்று முடிவு செய்ததும், தன்னுடைய வழங்கியிலேயே இடம் தந்தார். இன்றைக்கும் கில்லி, தேன்கூடு வழங்கியில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்க் கணிமையில், அனேகம் பேர், தங்களுக்குத் தெரிந்த வகையில், இயன்ற வகையில், தன்னார்வச் சேவை புரிந்து, தமிழ்க் கணிமை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்வதில் துணையாக இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் கல்யாணும் ஒருவர். கில்லிக்குச் செய்யும் உதவிகள் குறித்து, ஒரு முறை பொதுவிலே acknowledge செய்த போது, அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. நேரில் சந்தித்த போதும் சொன்னார்.

” இதெல்லாம் நமக்குள்ளே… ஏன் பப்ளிக்கா சொல்றீங்க? “

*************

புத்தகக் காட்சியில், அருள் செல்வனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, வலையுலகம், திரட்டிகள் பற்றிய பேச்சு வந்தது. தமிழ்மணம், தேன்கூடு பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையே, இந்த automatic aggregators பற்றி எனக்கு அத்தனை நல்ல அபிப்ராயமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, அருள், தமிழ்மணம், தேன்கூடு ஆகிய இரண்டு திரட்டிகளும், எந்த விதத்தில் ஒரு உண்மையான technical innovation என்றும், அவை சீராக இயங்கினால், இன்னும் சில வருடங்களில் அவை போகக் கூடிய தூரம் என்ன என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்.

நுங்கம்பாக்கம் முனையில், நல்ல மத்தியான வெயில் வேளையில் அபூர்வா சங்கீதாவிலே மெட்ராஸ் மீல்ஸ் சாப்பிட்டுக் கொண்டும், பிறகு ஓட்டல் வாசலிலும் நடந்த அந்த இரண்டு மணிநேர உரையாடல் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய சில புதிய இன்சைட்டுகளை மட்டும் கொடுக்கவில்லை, தமிழைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட பிற இந்திய மொழி வலைப்பதிவுத் திரட்டிகள் என்று இலக்குகள் வைத்திருந்த ஒரு உண்மையான தமிழ் அறிந்த நுட்பயிலாளார் கல்யாணின் அகால மறைவு, தமிழ் வலைப்பதிவுகளின் எத்தனை பெரிய இழப்பு என்றும் புரிய வைத்தது.

அன்றைக்கு இரவு தூங்க சற்று அதிக நேரம் பிடித்தது.

************

கல்யாண் மறைவுக்குப் ஒரு மாதம் கழித்து, வலைப்பதிவு நண்பர்கள் சிலருடன் வீட்டுக்குப் போய் , அவரது அம்மா, மனைவி, குழந்தை ஆகியோரைப் பார்த்து விசாரித்து விட்டு வந்தோம். அதற்குப் பிறகு, அவ்வப்போது, நண்பர் பாலராஜன் கீதா மூலமாக, நல விசாரிப்புகள் செய்வதோடு சரி. அவரது மகள் சென்னைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதாகவும், மனைவி, ஒரு ஐடி நிறுவனத்திலே வேலைக்குச் சேர்ந்து பணியாற்றுவதாகவும் அறிய முடிந்தது.

‘கல்யாண் ஞாபகமா ஏதாச்சும் செய்யணும் பிரகாஷ்…’ என்று பாலாஜி அவ்வப்போது சொல்வார். ( நான்கு நாட்கள் முன்பு கூட )

செய்யணும்.. என்ன? எப்படி? எப்போது? ஒன்றும் புரியவில்லை.

*********

என்னோட விசேஷத்துக்காக யாஹூ, ஜிமெயல் அட்ரஸ் புஸ்தகங்களில் இருந்து, பழைய, புதிய, நீண்ட நாள் தொடர்பில் இல்லாத நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலமாக அழைப்பிதழ் அனுப்ப லிஸ்ட் போட்டேன். அனுப்பினேன்,[ எத்தனை பேருக்கு ஸ்பாமில் போய் உட்கார்ந்து கொண்டதோ 🙂 ].

கவனித்துப் பார்த்ததில், அனுப்பியிருக்க வேண்டிய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைவாக இருந்தது. அதே போல… ‘ வாவ்…கன்கிராசுலேஷன்ஸ்’ என்று கொட்டை எழுத்துக்களில் வந்திருக்க வேண்டிய வாழ்த்து மின்னஞ்சல்களிலும் ஒன்று குறைவுதான்.

2 thoughts on “கல்யாண் நினைவாக…..

  1. ஹ்ம்ம்ம்… அவர் கடலுக்கடியில் நிகழும் பூமி அதிர்வு போல் வெளியில் எதுவும் தெரியாமால், மாறுதல்களை நிறைய செய்து கொண்டிருந்தவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s