Shocking

சரியாக இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு, அமீரகத்திலிருந்து ஃபோன் வந்தது. ஆசாத், சீரணிக்கவே இயலாத செய்தியைச் சொன்னார்… ‘ தேன்கூடு கல்யாண், சில மணி நேரங்களுக்கு முன்பாக உடல்நலம் குன்றி ( கார்டியாக் அரஸ்ட்) , மறைந்து விட்டார்..என்று

இந்தச் செய்தியை எப்படி உடைப்பது என்று புரியாமல் இரண்டு மணிநேரமாக கடுமையான உளைச்சலில் இருந்தேன்.

கல்யாண், சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு என் வீட்டீற்கு வந்திருந்தார், இரவு ஒன்பது மணிக்கு மேலாக..வந்திருந்து அதிகாலை இரண்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். முப்பதுகளில் இருக்கும் ( இருந்த) இளைஞர்.. சாகக் கூடிய வயதல்ல..

இது குறித்து வேறு எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை. அமீரகத்தில் ( குறிப்பாக ரியாதில் ) உள்ள நண்பர்கள் மேற்கொண்டு விவரங்களைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

இந்த உலகம் வாழ லாயக்கற்றது என்று தோன்றும் சில தருணங்களில், இது முதன்மையானது.

7 thoughts on “Shocking

 1. Shocking news prakash. I wish his wife and family members all strength to go through this. Tamil bloggers world will sure to miss a great person.

 2. இன்னும் ஜீரணிக்கமுடியல பிரகாஷ். மரத்தடி நாட்களில் தொடங்கி, வலைப்பூவில் ஆசிரியராக இருந்தபோது பகிர்ந்து கொண்ட மடல்கள். வேறு சில சந்தர்ப்பங்களில் பரிமாறிக்கொண்ட மடல்கள். தேன்கூடு தொடங்கியபோது அனுப்பிய மடல்கள். கடைசியாக TMI-இல் அங்கம் வகிப்பதற்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிய மடல் என்று எல்லாவற்றையும் படித்து ஓய்ந்தேன். ‘தோழி மதி’ என்று தொடங்கும் மடல்களைப் படிக்கப்படிக்க ‘சாகுற வயசா’ன்னுதான் மனசு அரற்றுது. 😦 ப்ச்.

  -மதி

 3. தேன்கூடு சாகரன் என்கிற கல்யாண்

  வலைப்பூ ஆசிரியராக இருந்த ஒருவாரத்தில் சாகரனையும் (அவர் விரும்பிய பெயரிலேயே அழைக்கிறேன்) அவரின் தமிழ்மேலான காதலையும் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்மணம் தொடங்கியபோது பாராட்டியதோடு மட்டுமில்லாமல் உடனுடக்குடன் சில ஆலோசனைகளையும் சொல்லி என் அன்புக்குரியவரானவர் சாகரன். இணைய நுட்பம் சார்ந்த பணியில் இருந்தார் என்று நினைவு. எனவே அவரின் ஆலோசனைகள் மற்ற நண்பர்களின் ஆலோசனைகளைவிடவும் வேறுபட்டு இருந்தன. அப்போது தொடங்கிய நட்பு இன்றுவரை வளர்ந்து செழித்ததற்கு எங்களுக்குள் இருந்த மிகுதியான புரிந்துணர்வும் சாகரனின் மென்மையான ஆரவாரமற்ற சுபாவமும் காரணமாக இருக்கலாம்.
  சென்னையில் ஜுன் 2005-ல் நடந்த சந்திப்பில் அவரை நேரில் பார்த்தபோது நட்பு மேலும் பலப்பட்டது. பிறகு சாகரன் சென்னை வரும்போதெல்லாம் தொலைபேசியில் நீண்ட உரையாடல்களில் பேசியிருக்கிறோம். மின்னஞ்சல் தொடர்பிலும் இருந்தோம். எங்கள் உரையாடல்கள் பொதுவில் வலைப்பதிவு நுட்பம், சேவை மேம்பாடுகள் பற்றியே இருந்தன. சில விஷமப்பிரச்சாரங்கள் வேறுவிதமாக செய்யப்பட்டாலும், தமிழ்மணத்தின் சிரமங்களை அறிந்து உளமாற எனக்கு ஆறுதல் சொன்ன அன்பு நண்பர் சாகரன்.

  எழுத்து என்று வரும்போது புனைவு ஆக்கங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். தேன்கூடு தளத்தில் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியதும் இந்த ஆர்வத்தினால் விளந்ததே.

  டிசம்பர் 2005 வாக்கில் தமிழ்மணம் மறுசீரமைப்பில் முனைந்தபோது வாசகர்களுக்கு இடைக்காலத் தீர்வாக சோதனையில் இருந்த தேன்கூட்டை சுட்டிக்காட்ட எண்ணியபோது, ‘அதை ஒரு நண்பர் செய்கிறார், அவரே அறிவிப்பார்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் அறிவிப்பென்றுகூட சத்தம் எதையும் செய்யாமல் சேவையைத் தொடங்கினார். விளைவுகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இன்றுவரை தேன்கூட்டினை நுட்பரீதியாக தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருந்தார். தமிழ்வலைப்பதிவு வட்டத்தில் பல முன்னோடி நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். தமிழ்வலைப்பதிவுகள் தீவாகத் தேங்கிவிடாமல் டெக்னொரட்டி, டெலிசியஸ், போன்ற நுட்பங்களோடு ஒத்தியங்கும் விதமாக இருந்தன அவரின் அணுகுமுறை. ‘தமிழ்மணத்தில் பட்டியலிப்படாத பதிவுகள் தேன்கூட்டில் இருப்பதும், தமிழ்மணத்தில் இல்லாத வசதிகள் தேன்கூட்டில் இருப்பதுமே தேன்கூட்டினை தனித்துவத்துடன் இயங்கச்செய்யும்’ என்ற என் ஆலோசனையை தாரக மந்திரமாகவே கொண்டதாக இரு மாதங்கள் முன் சென்னை வந்தபோது பேசிய உரையாடலில் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

  சாகரன் தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக்கொண்டதே இல்லை. அவர் விருப்பம் அறிந்ததால் தேன்கூட்டை யார் நடத்துகிறார்கள் எத்தனையோ பேர் கேட்டும் நானாக அவர் பெயரை வெளியில் சொன்னதில்லை. தமிழ்மணம் விற்பனைக்கு என்று அறிவித்தபோதும் வருந்தி, அந்த நிலைக்கு அவர் பார்வையில் மாற்றுத்தீர்வுகளை பரிசீலனைக்கு வைத்தார். அதே போல தமிழ்மணத்தின் நிர்வாகம் டி.எம்.ஐ. நிறுவனத்துக்கு மாறியபோது அவர்கள் யார் என்றும் என்னிடத்தில் அழுத்திக்கேட்காத பண்பாளர். ‘எங்களைப் போலவே அவர்களும் பின்புலத்தில் இருக்கவே ஆசைப்படுகிறார்கள் போலும், அதுவும் நல்லதுதான்’ என்றே சொன்னார்.

  சாகரனின் மறைவு எனக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இந்தனை இளம் வயதில் தலைவனை இழந்துவாடும் அவர் துணைவிக்கும் குழந்தைக்கும் தாங்க இயலாத சோகம். இது தமிழ் வலைப்பதிவு உலகிற்கு ஒரு பேரிழப்பு. வலைப்பதிவு நுட்பங்களில் என் அறிவுக்கு எட்டியவரையில் சாகரன் அளவுக்கு ஆழமான அறிவுடையவர் தமிழ் வலையில் இருக்கிறார்களா என்பது ஐயமே.

  சாகரனின் மறைவால் வாடும் அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தேன்கூடு தளத்தில் சாகரனோடு தோள்கொடுக்கும் பங்களிப்பாளர்களுக்கும், சக வலைப்பதிவரையும், சிறந்த ஒரு நுட்பவியலாளரையும், சேவையளிப்பவரையும் இழந்து நிற்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து நிற்கிறேன்.

  -காசி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s