சமீபத்தில்……

வாசித்த புத்தகங்கள்

நேற்றைய வானின் நட்சத்திரங்கள் – அறந்தை நாராயணன்

எண்பதுகளின் இறுதியில், தினமணி கதிரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறந்தை நாராயணன், அகடமிக்காக எழுதும் தியோடர் பாஸ்கரனுக்கும், வெறும் தகவல்களாக உதிர்க்கும் ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தனுக்கும் இடைப்பட்டவர், அறந்தை. 1930-50 வரை வந்த திரைப்படங்களின் நடிகர்/நடிகையர் பற்றிய குறிப்புகள். பழைய திரைப்படத் தகவல்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், ஒரு புதிய அர்த்தத்தைத் தரும் நாவல். ஒரு படம், அல்லது ஓவியம், அல்லது நாவல் அளவுக்கதிகமாகப் பிடித்திருந்தால், அதை வெளிப்படுத்த சில சமயம் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் போகும். இம்முறையாவது, கிடைக்கிறதா என்று பார்க்கத்தான் ராமசேஷனைத் துரத்தினேன். அதிருஷ்டம் இல்லை.

India unbound – Gurcharan Das

இந்தியப் பொருளாதாரம் குறித்து எனக்கு இருந்த பல மாயைகளை உடைத்த நூல். ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், ஆரம்ப நிலையில் நுழைந்து அதன் தலைவராக ஓய்வு பெற்ற, தாஸ், தன் அனுபவங்களை, அந்த அந்த சமூக/அரசியல்/பொருளாதாரச் சூழ்நிலைகளின் பின்புலமாக வைத்து எழுதிய ஒரு personal account.

பார்த்த சினிமா

இது சாத்தியா – கன்னடம்

பழைய படம். ஒரு இரவில் நடக்கிற கதை. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில், ஒரு பெரிய நாடகத்துக்கான ரிகர்சல் நடக்கிறது. இடையூறு ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக, உள்ளேயே பூட்டி சாவியை எடுத்து ஒளித்து வைத்து விட்டு ரிகர்சலை நடத்துகிறார் நாடக இயக்குனர் ( சங்கர்நாக்). நாடகத்தில் நடிக்க வந்திருக்கும் ரேவதி, திருட்டுத்தனமாக, தன் டாக்டர் காதலனை ( ரமேஷ் அர்விந்த்), தன் தோழியுடன் (மஹாலக்ஷ்மி) பார்க்கச் சென்று விட்டு வரும் போது, மனநலம் குன்றிய கைதி (பீமன் ரகு) ஒருவன், அந்த மருத்துவமனையில் இருந்து தப்பித்து, ரேவதியின் காரில் ஏறி, அந்த ரிகர்சல் நடக்கும் இடத்துக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் கொலைசெய்கிறான். இறுதியில் ரேவதி மட்டும் தப்பிக்கிறார். பயங்கரமான திரில்லர் வகைப்படம். கன்னடப்பட உலகின் பெருந்தலைகளான சங்கர்நாக், அனந்த் நாக், ஸ்ரீநாத், தேவராஜ், டைகர் பிரபாகர், மகாலக்ஷ்மி, ரமேஷ் அர்விந்த், பவ்யா போன்றவர்கள் தலைகாட்டிய இந்தப் படத்தை இயக்கியவர் தினேஷ்பாபு.

மொத்தம் நாற்பத்துத்து எட்டு மணிநேரத்தில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம் தமிழிலும், “நாற்பத்து எட்டு மணிநேரம் ” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. முதல் பாதியில் ரிகர்சல் நடக்கும் போது, ரைட்டராக நடிக்கும் அனந்தநாக், அடிக்கும் கூத்துக்களும், பிற்பகுதியில், கொலைகாரன் உள்ளே நுழைந்த பிறகு பரபரப்பான காட்சிகளும் தவற விடக்கூடாதவை.

இது ஏதாவது ஆங்கிலப்படத்தின் உல்டா வாக இருக்கலாம். இருக்கட்டுமே, என்ன இப்ப?

கார்ப்பரேட் – இந்தி

பேஜ் 3 இயக்கிய மதுர் பண்டார்க்கரின் படம். பாலிவுட், மரத்தைச் சுற்றிவரும் டூயட்டுகள், ஜிதேந்திரா வகையறா ஏரோபிக் நடனங்கள், காதர்கானின் புளித்துப் போன வசனங்கள், என்ஆர்ஐ காதல் போன்றவற்றில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு கார்ப்பரேட் ஒரு உதாரணம்.

மும்பையின் இரு வணிக சாம்ராஜ்யங்களுக்குள் நடக்கிற சண்டையை கதையாகக் கொண்ட திரைப்படம். பெரும் வர்த்தக நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் விஷயங்கள் நிதர்சனமாக அலசப்படுகிறது. முதல் நிறுவனம் மின்ட் பானம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்த நினைத்திருக்கும் போது, எதிரி நிறுவனம், அந்த ஐடியாவினை திறமையாகச் சுட்டு, சந்தையில் விற்பனைக்கு விடும் போது பிரச்சனை பெரிதாகிறது. ஒரு கட்டத்திலே, அந்த பானத்தை, கருவுற்று இருப்பவர்கள் அருந்தினால் சிக்கல் வரும் என்று தெரிய வரும் போது, திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிஷி தாஸ்குப்தாவுக்கு , அதிகாரிகளை விலைக்கு வாங்கச் சொல்லி முதலாளி உத்தரவு பிறப்பிக்கிறார். போட்டிக் கம்பெனி விழித்துக் கொண்டு, இதை, மீடியா, கோர்ட் கேஸ் என்று பெரிதாக்குகிறது. பிரச்சனை பெரிதானதும், வேறு வழியின்றி ( in the interest of the company and its shareholders), நிஷி பலியாக்கப்படுவதும், அவரது காதலனும், முதலாளியின் மச்சானும், மற்றொரு வைஸ் பிரசிடெண்டுமான ரிதெஷ் (கேகே ) தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது. கையில் குழந்தையுடன் கோர்ட்டில் அலைந்து கொண்டிருக்க, இந்தத் தற்காலிகச் சிக்கல்களில் இருந்து மீண்ட கம்பெனி, போர்ட் மீட்டிங், பிரஸ் கான்பிரன்ஸ், என்று கனஜோராக இயங்கிக் கொண்டிருக்கிறது.

வர்த்தக உலகில் இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், இது ஒரு அமெச்சூர் முயற்சி என்று சொல்வார்கள். வணிகப் பத்திரிக்கைகளில் இருந்து கிடைக்கின்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட காட்சிகள் தான் பெரும்பாலும்..

டூபீஸிலேயே பார்த்த பிபாஷா பாசுவை , இதிலே மூணு பீஸ் சூட்டிலே, ஒரு பிசினஸ் எக்ஸிக்யூட்டிவாக பார்ப்பதில் சிரமம் ஒன்றுமில்லை. நன்றாக நடித்திருக்கிறார்.

பேஜ் 3 அளவுக்கு இல்லை என்றாலும், புதிய முயற்சிக்காக பாராட்டலாம்.

போக்கிரி – தெலுங்கு

சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட அக்மார்க் தெலுகு மசாலா. ரவுடிகளைப் போட்டுத் தள்ள, ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி ( மகேஷ்) , தானும் ஒரு ரவுடியாக, அவதாரம் எடுத்து, நடுநடுவே ஈரோயினியுடன் டூயட் பாடிக்கொண்டே, பிற தாதாக்களை வதம் செய்கிறார். லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஜாலியாக பார்க்க வேண்டிய படம். புதுப்பேட்டையில் ரத்த வாடை என்றால், போக்கிரியில் கந்தக நெடி. நொடிக்கொருதரம் டுப்ப் டுப்பு என்று வெடிக்கிறார்கள், துப்பாக்கியால். fast cutting என்ற எடிடிங் உத்தியில், படம் பட்டாசு மாதிரி பறக்கிறது.

இந்தப்படம் தமிழில் வருகிறதாம். பார்க்கலாம்…

நாளை (தமிழ்)

எம்ஜிஆர் காலத்திலிருந்தே மசாலாப்படங்களுக்கு என்று தனியாக சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது, தனியாககதை என்று ஒன்று இருக்கக் கூடாது. நாயகனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், பஞ்ச் டயலாக்குகள், ஆட்டம், காமெடி என்று கலந்து கட்டி அடித்தால், அது மசாலாப்படம். ஆனால், இந்த வகை மசாலாப்படங்கள் சிலசமயம் தனித்துத் தெரியும். அதற்கு முக்கியமான காரணம், treatment & delivery. அபூர்வசகோதரர்கள், குருசிஷ்யன் என்று சில உதாரணங்களைச் சொல்லலாம். நாளை திரைப்படமும், ஒரு வகையில், இந்த வகையைச்சேரும். ரெண்டு அடியாள் நண்பர்கள், கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் காதல், சோகமான முடிவு, இதுதான் நாளை திரைப்படம். சமீபத்தில் தொடர்ந்து வெளிவந்த தாதாப் படங்களில், நாளை கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்ததற்குக் காரணம், அதன் treatment. டெலிவரியும் கொஞ்சம் ஒழுங்காக இருந்திருந்தால், படம் ஓடியிருக்க்குமோ என்னமோ. நட்டுவாக நடித்த ஓளிப்பதிவாளர் நட்ராஜ், நன்றாக நடித்திருந்தார். பார்த்த போது, மூன்று முடிச்சு ரஜினிகாந்த் நினைவுக்கு வந்தார். ஹேர்ஸ்டைல் காரணமோ?

2 thoughts on “சமீபத்தில்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s