பழைய சரக்கு – part II

முதல் பகுதியை வாசித்து விட்டு, இந்தப் பகுதியை வாசிக்கவும்.

Pen-ultimate part

கண்ணாடியை ஒருதரம் எடுத்து, அதன் ‘ஹா’ பண்ணிவிட்டு, துடைத்துப் போட்டுக் கொண்டு, கல்கியில் இருந்து வந்த அந்தக் கடிதத்தை படித்தார். அவரும் அது போல பல கடிதங்களை எழுதியிருக்கிறார் (அவர் கல்கியில் இருந்த போது) என்று தெரியும்.

நான் லேசாக முன்கதை சுருக்கத்தைச் சொன்னேன். ஊருக்கு போயிருந்தது, சுமதி ஒரு கல்யாணத்துக்காக சென்னை வந்தது, நான் இந்த மாதிரி பத்திரிகைகளுக்கு எல்லாம் கதை எழுதி அனுப்பி, கஜினி முகம்மது வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்ற ரகசியம் என் வீட்டினர் தவிர யாருக்கும் தெரியாத வண்ணம் கட்டிக் காப்பத்துவது, இத்தனை நாளாக, கட்டிக் காப்பாத்தி வந்ததை ஒரே நாளில் கல்கி போட்டு உடைத்தது, அதன் பின் எழுந்த கிண்டல்கள் (ஹெஹ்ஹே… ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம்?), நக்கல்கள் (ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி சொல்றேன் அதை எழுதறியா.. இது அவள் வீட்டுகாரன்), இம்சைகளில் இருந்து தப்பித்து வந்ததை லேசாகச் சொன்னேன்.

அந்தக் கதையையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் சற்றே மிரண்டு போய், (எட்டு பக்கக் கதை), “டிரெயின்லே போகும் போது படிக்கிறேன்” என்று தப்பிக்கப் பார்க்க, நான் விடாமல், “நோ வே, இப்பவே படிங்க” என்று கிட்டத்தட்ட மிரட்டினேன்.

நாங்கள் நண்பர்கள் இருவர் செஸ் ஆடிக்கொண்டிருக்க, எங்கள் தெருமுனை மளிகை கடையில் (குரங்கணி அம்மன் ஸ்டோர்ஸ்) டோர் டெலிவரி செய்யும், முருகேச உடையார் என்கிற ஒரு ஐம்பது வயது ஆசாமி, எங்கள் வீட்டில் பணம் கலக்ஷனுக்காகக் காத்திருக்கும் போது, எங்கள் கேமை பார்த்து விட்டு, எதிர்பாராதவிதமாக, ஒரு மூவ் சொல்லி ஜெயிக்க வைக்கிறார். செஸ் என்ற ஆட்டத்துடன் பொருத்திப் பார்க்க முடியாத ஒரு தோற்றத்தில் இருக்கும் அவர், இப்போது உப்பு மிளகாய் மடிப்பதற்குக் காரணம் சதுரங்கம் தான் காரணம் என்பது கதையின் ஒரு எக்ஸ்டிரா சரடு. ஓ ஹென்றி பாணியில் கடைசியில் ஒரு திருப்பம் வைத்து கதை முடியும்.

காவியமல்லவா இது? என் உள்ளம் குமுறிக் கொண்டு இருந்தது. ரத்தம் கொதித்தது. நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.

உதட்டைப் பிதுக்கினார்.

“அப்படின்னா என்ன அர்த்தம்னேன்?”

“தேறாதுன்னு அர்த்தம். இது நல்லா எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”

அப்புறம் வேற என்ன என்கிற மாதிரி என்னைப் பார்த்தார்.

“என்ன இப்படி ஒரே வார்த்தைலே முடிச்சிட்டீங்க?, இந்தக் கடிதம் யார் கைலேந்து என் கைக்கு கிடைச்சுது தெரியுமா? ரொம்ப அவமானமாப் போச்சு. பொத்தி பொத்தி நான் பாதுகாத்துட்டு வந்த ரகசியத்தை, இந்த கல்கி ஒரே நாள்ளே சிதைச்சிட்டுது. அவங்க கதை பிடிக்கலேன்னு அனுப்பினது எனக்கு ரெண்டாம் பட்சம். அதை, என்னோட arch rival, ஜாம்ஷெட்பூர்லேந்து, வந்திருக்கிற சமயம் பாத்து தான் லெட்டர் போடணுமா? ஒரு நேரம் காலம் கிடையாதா? அவங்களுக்கு ஈவு இரக்கம் எல்லாம் கிடையாதா? அவங்க எல்லாம், அத்தை பொண்ணு, மாமா பொண்ணோட பொறக்கலையா?”

உருக்கமாக, சோகமாக, துக்கமாக பல வித மாடுலேஷன்களில் எடுத்துரைத்தேன்.

கொஞ்சம் பேதாஸ் எஃபக்ட்டுக்காக, கண்ணில் நீரை வரவழைக்க முயற்சி செய்து பார்த்தேன். கிளம்புவதற்கு முன், ஒரு டோஸ் மெகா சீரியல் பார்த்து விட்டு வந்திருந்தால் உடனடியாகப் பலன் கிடைத்திருக்கும். டூ லேட்.

அந்த இடமே என் புலம்பலால் கசமுசா வென்று ஆகியிருக்க, என்னமோ ஏதோ என்று பக்கத்து அறையில் இருந்த நண்பர் எழுத்தாளர் நாகராஜகுமார் (இவர், மறைந்த எழுத்தாளர் ‘ஙே’ ராஜேந்திரகுமார் அவர்களின் மகன்), “என்ன பிரகாஷ் என்ன ஆச்சு?” என்று பதட்டமாக ஓடி வந்து கேட்க, நான் மீண்டும் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட துக்கத்துடன், “என் கதை கல்கிலேந்து ரிஜக்ட் ஆயிப்போச்சுங்க” என்றேன் தொண்டைக் கமறலுடன். “அப்படிங்களா? சரி, சரி….” என்று அவர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார். நடக்கின்ற கூத்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பா.ராகவன், “என்னத்துக்காக, இப்படி ஒரு சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்கே?” என்றார் அமைதியாக.

“என்னங்க இப்படி இப்படி சொல்றீங்க? ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்து போய் இருக்கு. என்னை எப்படி அமைதியா இருக்க சொல்றீங்க”

“சரி என்ன பண்ணலாம்?”

“என் கதை, ஒண்ணு கல்கிலே வந்தாவணும். அதுவும் டிசம்பர் ரெண்டாவது வாரத்துக்குள்?” என்றேன்.

“அது என்ன கணக்கு? டிசம்பர் ரெண்டாவது வாரம்?”

“அப்ப மறுபடியும் அந்த ராட்சசி மெட்ராஸ் வர்ரா.. அவ வீட்டுக்காரனோட, சகலபாடியோட, தம்பிக்கு கல்யாணம். ரெட்ஹில்ஸ்லே கல்யாணம். அப்ப என் கதை, ஒண்ணு கண்டிப்பாக வந்தாகணும். கவர் பேஜ்லே என் ஃபோட்டோ போடறதுன்னாலும் நோ அப்ஜிஷன்”

அவர் இன்னும் நிதானம் இழக்காமலே பேசினார். “அதில்லே பிரகாசா, பத்திரிகைலே கதை எழுதறதுங்கறது ஒரு கலை. டக்குன்னு வந்துடாது.. ரொம்ப உழைப்பு வேணும்..” என்று துவங்கவும்.. நான் மீண்டும் முருங்கை மரம் ஏறினேன்.

“Mr. Raghavan, why don’t you understand the predicaments am in? ” என்றேன் ஆத்திரத்துடன்.

பேஜாரக இருக்கும் சமயங்களில்தான் எனக்கு இங்கிலீஸ் வரும்.

அவர் சிரித்தார்.

“ஹூம்… சிரிக்கிறீங்க? உங்களால ஆவுமா ஆகாதான்னு இப்பவே சொல்லுங்க. இல்லாட்டி, நேரா, வெங்கட்நாரயணா ரோட் போறேன். அங்க போய் அவர் கிட்ட ஒரு பாட்டம் அழுதுட்டு வரேன்”

என் அவஸ்தைகள் அவருக்கு இன்னும் சிரிப்பை மூட்டி இருக்க வேண்டும்.

“அவர் இன்னும் ஆபீஸ்லேந்து வந்திருக்க மாட்டார். வீடு பூட்டி இருக்கும்” என்றார், சிரிப்பை அடக்கிக் கொண்டு.

பிறகு கொஞ்சம் சீரியஸ் ஆனார்.

“ஏன் டென்ஷனாவுறே? நேத்திக்கு எழுத ஆரம்பிச்சிட்டு, இன்னிக்கு கதா பிரைஸ் வேணும்னால் முடியுமா? மொதல்ல பத்திரிகைகளுக்கு கதை எழுதறதுன்னால் என்னன்னு தெரிஞ்சுக்கோ..

“சொல்லுங்க”

அவர் துவங்கினார்.

o o o

நண்பர்களே!

பாதியில் தொங்குகிறது அல்லவா? அப்படியேதான் தொங்கும்.

இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட நடைசித்திரம் என்றாலும், அதன் உள்ளின் உள்ளுக்குள்ளே சில விழுக்காடு உண்மை இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவல்கள், உபதேசங்களை சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருந்து கொண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனாலும், அந்த முக்கியமான இறுதிப் பகுதியை, நான் எழுதுவதை விடவும், அதை எனக்குச் சொன்ன நண்பரே எழுதினால்தான், பலருக்கும் உபயோகமாக இருக்கும். (நான் எழுதினால் முக்கியமான மேட்டரை விட்டுட்டு ஒன் சைட் லவ் பக்கம் திரும்பி விடும் ஆபத்து இருக்கிறது). இல்லாவிட்டால் இது மற்றொரு நகைச்சுவைக் கட்டுரை என்ற அந்தஸ்தை மட்டுமே பெறும். “பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவது எப்படி?” என்கிற அந்த முடிவுப் பகுதியை, இரண்டொரு நாளில், பா.ராவிடம் இருந்து, எப்படியாவது எழுதிக் கேட்டுப் பெற்று, இங்கே இட்டு, நான் துவக்கிய விளையாட்டை நானே முடித்து வைக்கிறேன்.

o o o

இறுதிப் பகுதி

நான் கேட்டற்கு இணங்க, அவரும் எழுதினார். அதை இங்கே வாசிக்கலாம்.

8 thoughts on “பழைய சரக்கு – part II

 1. ராகவன் சார் சொல்வது சுவையாக இருந்தது. அதற்கான உங்கள் பீடிகைக் கதை அதை விட சுவையாக இருந்தது. 🙂

  நன்றி!

 2. பகுதி 1 ல் ஜாம்நகர் என்று சொல்லிவிட்டு, பகுதி 2ல் ஜாம்ஷெட்பூர் என்று சொன்னால் எப்படி?

  உங்கள் அத்தை பெண்ணின் கணவர் எப்பொழுது இடம் மாறினார்?

  அன்புடன்,
  இராம.கி.

 3. ஸ்ரீகாந்த், நன்றி.

  இராம.கி அய்யா : கவனக்குறைவு. அம்பானிக்கும், டாடாவுக்கும் இடையே ஒரு சின்ன குழப்பம் ஆகிவிட்டது :-). எழுதி நாளாச்சு, ஆனால்,யாருமே சுட்டிக் காட்டியதில்லை. நன்றி

 4. இது ஜோக்குன்னா, அந்த ஜோக் எனக்குப் புரியலை (:

 5. ஐய்யயோ இது ஜோக்குத்தான். சிரியஸா எடுத்துடாதீங்க.

 6. ஒன்றுமில்லை; புதுப்பேட்டை விமர்சனம் எழுதியிருந்தீர்கள். அங்கே இணைக்கப்போகாமல் சோம்பலிலே இங்கே இங்கே இணைத்தேனா, குழப்பமாகிவிட்டது 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s