குழந்தை, ஆண், பெண் & பெருசு

ஆண் என் நண்பன். பெண், அவனது மனைவி. பெருசு, அவனது நைனா. குட்டிப் பிசாசு அவனது குழந்தை. அவன், கிராமத்தில் இருந்து, சென்னைக்கு வருஷத்துக்கு ஒரு முறை வருவான். இந்தோனேசியாவில் இருக்கும் ஏதோ, வாயில் பெயர் நுழையாத ஒரு கிராமம். நைனாவுக்கு, ஈமெயில் அனுப்ப, சாட் செய்ய சொல்லித்தருவது, நான் அவ்வவ்போது போய் வருவது வழக்கம். இந்த முறை வந்த போது, வீட்டுக்குப் போனேன். குழந்தை கால் மேல் கால் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தது. நைனா தரையில் அமர்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த அவனது மனைவிக்கும், குழந்தைக்கும் சின்ன வாக்குவாதம்.

“அது என்னடி மரியாதை இல்லாம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிறே…காலை நீட்டிகிட்டு உக்காரு..”

“ஏன், இப்படி உக்காந்தா என்ன தப்பு?… ” என்று எசப்பாட்டு பாடிய அந்தக் குழந்தைக்கு வயசு ஐந்து.

“வாய் மேலேயே போடுவேன்.எதுத்து எதுத்து பேசிகிட்டு…தாத்தா கீழ உக்காந்திருக்கறப்ப, இப்படி காலை ஆட்டிகிட்டு உக்காறது தப்பு.. இறங்கு கீழே..”

குழந்தை இறங்கவில்லை… தாத்தாவைப் பார்த்தது…

“ஏன் தாத்தா. நான் இப்படி கால் மேலே கால் போட்டு ஆட்டிகிட்டே டீவி பார்த்தா , ஒனக்கு ஏதாச்சும் பிராப்ளமா? நீ சொல்லு..” என்று நேரடி தாக்குதல் தொடுக்க..

தாத்தா கொஞ்சம் அசந்துதான் போனார். தன் காலத்தில், அவர் ஒரு strict parent. எல்லா அர்த்தத்திலும். அந்த கண்டிப்பின் தழும்புகள், என் நண்பனுடைய உடலில், மனசில் இன்னும் உண்டு. பேத்தியின் அழகில் மயங்கி, strict grandfather ஆக இருக்க மறுத்து விட்டார். அவரருகில் தரையில் அமர்ந்திருந்த என்னை பெருமிதத்துடன் பார்த்தார்.அந்தப் பார்வைக்கு அர்த்தம்.. ” குட்டி என்ன போடு போடுதா… பாத்தியாலே..” என்று எனக்குத் தெரியும். பின்னே, பார்க்கிற போதெல்லாம், “பேத்தி எளுதுதா, இங்கிலீஸ்ல பேசுதா…நடக்கா, என்னிய பார்த்து ஸ்டுப்பிடுங்கா, லொட்டு லொட்டுன்னு பக்கெட்டை தட்டுதா…..வாயத் தொறந்த நிப்பாட்ட மாட்டங்கா… ” என்று சதா பேத்தி புராணமாகப் பாடிக் கொண்டிருந்தால், புரியாதா?

தாத்தா-பேத்தி என்கிற உறவு ரொம்ப fascinating ஆனது. ரொம்ப நுட்பமானது. தகப்பனுக்கும், தாய்க்கும் மிக மெலிதான குமைச்சலை உண்டு செய்யக் கூடியது. ( இந்த இடத்தில் நான் சொல்ல நினைப்பது வேறு, ஆனால் எனக்கு இப்படித்தான் சொல்ல வருகிறது) இதை பலரால் புரிந்து கொள்ள முடியும். பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்த உணர்வுகளை, யாராவது படைப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்று எத்தனை யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.

பேத்தியின் வாய்துடுக்குக்கு பரிசாக, தெருமுனையில் இருந்த அருண் ஐஸ்கிரீம் கடைக்கு, அவளை அழைத்து சென்ற போது, அவரது நடையில் இருந்த ராஜஸம்? வருகிற வாரம் அவன் ஊருக்குக் கிளம்பியதும், இன்னும் கொஞ்ச நாள் அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த கூத்து முடியும் வரை, எதிலுமே கலந்து கொள்ளாமல், அன்றைய ஹிந்துவின் கடைசிப் பக்கத்தின் பொடி எழுத்துக்களில் மூழ்கி இருந்த அவன், நிமிர்ந்து, என்னை ஒரு முறை பார்த்து விட்டு, மீண்டும் பேப்பரில் மூழ்கினான்.

நிமிர்ந்த போது, அவனுடைய இதழ்க் கடையோரத்தில் சின்னதாக ஒரு புன்னகை இருந்ததோ?

தெரியவில்லை. கவனிப்பதற்குள் குனிந்து கொண்டான்.

*************

நீண்ட நாள் கழித்து சென்னைக்குள்ளேயே ஒரு சூறாவளி விஜயம். தேர்தல் வாசனை வீசுகிறது. சாலையெல்லாம் அதிவேகமாகப் பழுது பார்க்கப் படுகிறது. மதியம் சாப்பிட ஓட்டலுக்குள் நுழைய நினைத்த போது, எதிரில் இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த தமிழ்.முரசு நாளிதழில். ” சிக்கன் சாப்பிட்டு ஐந்து பேர் பலி” என்று கொட்டை எழுத்தில் போ
ட்டிருந்தார்கள். சிக்கன் ஆசையைத் துறந்து, அகோரப் பசியுடன் சரவண பவனுக்குள் நுழைந்து, ‘ மொதல்ல ரெண்டு போண்டா” என்று சொல்லிவிட்டு, அது எப்படி சிக்கன் சாப்பிட்டு மனுஷன் செத்துப் போவான்? முனியாண்டி விலாசுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பிரச்சனை என்று லூசுத்தனமாக யோசித்துக் கொண்டிருந்த போது,

” சார், போண்டா”

அந்தா பெரிய தட்டிலே நெல்லிக்காய் சைசுக்கு ரெண்டு போண்டா..

தமிழ்முரசும் திருந்தாது . சரவண பவனும் திருந்தாது.

5 thoughts on “குழந்தை, ஆண், பெண் & பெருசு

 1. // முனியாண்டி விலாசுக்கும் தமிழ் முரசுக்கும் என்ன பிரச்சனை என்று லூசுத்தனமாக யோசித்துக் கொண்டிருந்த போது,//

  அதெப்படி இப்படி வில்லங்கத்தனமா யோசிச்சுட்டு அதுக்கு லூசுத்தனம்-னு கூசாம உங்களால சொல்ல முடியுது 🙂
  தமிழ் முரசு கொட்டை எழுத்துல Chicken பத்திப் போட்டாலும் பிரச்சனை, கடைசிப் Chick படம் போட்டாலும் பிரச்சினை. பாவம் அவிங்க என்னதான் பண்ணுவாங்க.

  //அந்தா பெரிய தட்டிலே நெல்லிக்காய் சைசுக்கு ரெண்டு போண்டா..

  தமிழ்முரசும் திருந்தாது . சரவண பவனும் திருந்தாது.//

  :-)))

 2. // அன்றைய ஹிந்துவின் கடைசிப் பக்கத்தின் பொடி எழுத்துக்களில் மூழ்கி இருந்த அவன் //

  இதை ஆண் சேரில் உட்கார்ந்து செய்துகொண்டிருந்தாரா அல்லது தரையிலா? என்பது இந்த சம்பவத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடியது.

 3. முகமூடி : அட, ஆமா இல்லே… அவன் தரையிலே தான் உட்கார்ந்திருந்தான் 🙂

  கல்வெட்டு :-):-)

 4. யோவ் பெரகாசு,

  உண்மையிலேயே நீ அயிரா? திமுக, முரசொலி, கலைஞர், தமிழ்முரசுன்னு எததப்பாத்தாலும் எரிச்சலாவே பாக்குறியே… அதனால கேட்டேன்.

 5. // தாத்தா-பேத்தி என்கிற உறவு ரொம்ப fascinating ஆனது. ரொம்ப நுட்பமானது. தகப்பனுக்கும், தாய்க்கும் மிக மெலிதான குமைச்சலை உண்டு செய்யக் கூடியது. ( இந்த இடத்தில் நான் சொல்ல நினைப்பது வேறு, ஆனால் எனக்கு இப்படித்தான் சொல்ல வருகிறது) இதை பலரால் புரிந்து கொள்ள முடியும். பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்த உணர்வுகளை, யாராவது படைப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்று எத்தனை யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.//

  பிரகாஷ்,

  மாலன் சிறுகதைகள் என்ற தொகுப்பில் தப்புக் கணக்கு என்ற தலைப்பில் ஒரு கதை. கிட்டத்தட்ட நீங்கள் சொல்லியிருக்கும் உணர்வுகளை ஒட்டி வரும். கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டடது.

  நண்பன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s