ரா.கி.ரங்கராஜன் – நாலு மூலை

கிழக்குப் பதிப்பகம் வயசுக்கு வந்து விட்டது என்பதற்கான நிரூபணம் தான், அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நாலு மூலை என்ற ராகி.ரங்கராஜனின் கட்டுரைத் தொகுதி. வழக்கமான வாழ்க்கை வரலாற்று நூல்கள், சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுதி, வி.ஐ.பி எழுத்தாளர்களின் முழுமையான படைப்புத் தொகுப்புகள், சென்சேஷனல் விவகாரங்கள் போன்ற வழக்கமான நூல்களினூடே , அனேகமான, மக்கள் மறக்கத் துவங்கி இருக்கும், ரா.கி ரங்கராஜன் அவர்களின் நூலை முதல் பதிப்பாகக் கொண்டு வந்ததைத்தான், வயசுக்கு வருவது என்ற பிரயோகத்துடன் ஒப்புமைப் படுத்தினேன் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி.

எனக்கு ஏகப்பட்ட ரங்கராஜன்கள் மீது ப்ரீதி உண்டு. அந்த ரங்கராஜப் பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர் ரா.கி.ரங்கராஜன்.

ரா.கி.ரங்கராஜன், ஒரு பத்திரிக்கையாளராக இல்லாமல், மற்றவர்களைப் போல, உத்தியோகஸ்தராகவும் பகுதி நேர எழுத்தாளராகவும் இருந்திருந்தால், அவருடைய எழுத்தின் வீச்சு, பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றும், பதினைந்து வயது முதலே, பத்திரிக்கையில் பணியாற்றவேண்டும் என்று எண்ணம் கொண்டு சுற்றியலைந்த அவருக்கு அப்படித் தோன்றாமல் போகலாம்.

ரா.கி.ரங்கராஜனை, குமுதம் வாசிக்கத்துவங்கிய நாட்களில் இருந்து பரிச்சய்ம் உண்டு. அந்தச் சமயங்களில், அவர் எழுதிய பாப்பிலோனின் தமிழ் வடிவமான பட்டாம்பூச்சி, க்ரைம் என்ற உண்மைக் குற்றங்களை வைத்து எழுதிய வினோதமான தொடர் ( இந்த தொடர் வடிவத்தைத்தான், பின்னாளில், அதே குமுதத்தில் சுஜாதா, தூண்டில் கதைகள் என்று எழுதிய போது பின்பற்றினார்), கிருஷ்ணகுமார் என்ற புனைப்பெயரில் எழுதிய அமானுடக் கதைகள், வினோத் என்ற புனைப்பெயரில் எழுதிய சினிமா ரிப்போட்டிங் கட்டுரைகள், மிகவும் கவர்ந்திருக்கின்றன. குமுதத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விகடனில் தொடர்ச்சியாக எழுதினார். நான், கிருஷ்ணதேவராயன் என்ற தொடர்கதையையும் எழுதினர். இப்போது துக்ளக்கில் தொலைக்காட்சி விமர்சனங்களையும், அண்ணா நகர் டைம்ஸ் என்ற பேட்டை பத்திரிக்கையில், பத்தியும் எழுதி வருகிறார்.

அண்ணா நகர் டைம்ஸில் வந்த பத்திகளின் தேர்ந்தெடுத்த தொகுப்புத்தான் இந்த ‘நாலுமூலை’ என்ற நூல்.

ரா.கி.ரங்கராஜனின் கட்டுரைகளில் மிகவும் ஈர்த்த அம்சமே, பூமியில் இருந்து நாலடி உயரத்தில் இருந்து கொண்டு உபதேசம் செய்யாமல், வறட்டுச் சித்தாந்தகள் ஏதும் இல்லாமல், வாசிப்பவரை தன்னுடனே அணைத்துச் செல்லும் பாங்குதான். சாமியார்கள் பற்றி உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அபிப்ராயம் போலத்தான் அவருடையதும் இருக்கின்றது. அரசு அலுவலகங்களில் உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகின்ற அனுபவத்தைத்தான் அவரும் எழுதுகின்றார். மார்கழி உற்சவம், நித்யஸ்ரீ மகாதேவனின் சாரீரம், எக்ஸ்நோரா, அண்ணாநகர் வீட்டின் சுற்றுபுறம், அந்தக் காலப் புரசைவாக்கம், என்று பெரும்பாலும் சென்னை சார்ந்த தன் அனுபவங்களையும், கேள்விகளையும் நகைச்சுவை முலாம் பூசிய கட்டுரைகளாக நம்முன் வைக்கிறார். ஆயினும், தன்னுடைய சந்தேகங்களுக்கான முகாந்திரங்களை அவர் ஆராய்ச்சி செய்வதில்லை. அது தனக்குத் தெரியாது என்றும் ஒப்புக் கொண்டு விடுகிறார். இந்த நேர்மையும், சில சமயங்களில் வெளிப்படும் சுய கேலியும் நம்மை அவருடைய கட்டுரைகளுடன் ஒன்றச் செய்து விடுகின்றது. கட்டுரைகள், personalised ஆக இருப்பது வாசிக்கச் சுகமாக இருக்கிறது.

நாற்பதாண்டுக் கால பத்திரிக்கை அனுபவம், சொல்லவருவதை லகுவாகச் சொல்ல வைக்கிறது. சின்னச் சின்ன வாக்கியங்களில், சட்டென்று உள்ளே இழுத்துக் கொள்கிற சாமர்த்தியம். உதாரணமாக,

” சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மை.

சந்தோஷமாகக் கல்யாணம் செய்துகொண்டு, விதவிதமான ஆனந்தக் கனவுகளுடன் புகுந்த வீட்டுக்குப் போய், அங்கே புருஷனிடம் அடியும் உதையும் வாங்கிக் கொண்டு, எதிர்த்துப் போராடுவதற்கான தைரியமும் குடும்ப சப்போர்ட்டும் இல்லாமல், அவதிப்பட்டு நிற்கும் அபலைப் பெண்களின் கண்ணீர்க்கதையைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்து விட்டது “

என்பது ஒரு சட்டென்று உள்ளே இழுத்துக் கொள்ளும் ஒரு கட்டுரையின் துவக்கம்.

நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை அசைத்துப் பார்க்கும் விஷயங்களைத் தவிர்த்து விட்டு, சும்மா சலனம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மட்டுமே , தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது. புனிதன் மறைவை ஒட்டி ராகி எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரைக்கே, எண்பது ரூபாய் சரியாகி விட்டது. மீதியெல்லாம் ஓசி.

[நாலு மூலை, கட்டுரைத் தொகுதி, ரா.கி.ரங்கராஜன், கிழக்குப் பதிப்பகம், ரூபாய் 80/-]

12 thoughts on “ரா.கி.ரங்கராஜன் – நாலு மூலை

 1. பாலாஜி-பாரி : நன்றி.

  இன்னொரு விஷயம், நீங்கள் சென்னையில் வசிப்பவரா? [ உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாது என்பதால் பொதுவிலே கேட்கிறேன்]

 2. ‘வாளின் முத்தம்’, ‘நான், கிருஷ்ணதேவராயன்’ ஆகிய சரித்திரக் கதை வீச்சையும், லைட்ஸ் ஆன் விநோத் பற்றியும் குறிப்பிட மறந்து விட்டீர்கள் 🙂

 3. பிரகாஷ், “சிறுகதை எழுதுவது எப்படி” என்று ஒரு அருமையான வழிகாட்டுதற் கட்டுரையையும் ராகி எழுதியிருந்ததைப் படித்ததாக எனக்கு ஒரு நினைவு.
  அவரின் மொழிபெயர்ப்புக் கதைகளின் நடை அருமையாக இருக்கும். நேரடியாக முதலிலேயே தமிழில் எழுதியது போன்று.

 4. ஆஹா… அருமையான விமர்சனம். ஒரு மார்க்கமாக தான் படிக்கிறிங்கன்னு நினைக்கிறேன். அ.மி முழு புத்தகம் (700 பக்கம் இருக்குமா?) இப்ப இது. நிறைய நேரமிருக்கோ, இருந்தா கொஞ்சம் கடன் கொடுங்க பிரகாஷ், இங்க வேலை மண்டை காயுது.

  தலைவரே, அடுத்த முறை பார்க்கும்போது இந்த புத்தகமும் ரிசர்வுடு. உங்களுக்கான, இன்று ஒரு தகவல், பாலாஜி-பாரி சென்னையில் வசிப்பவர் இல்லை. அவர் கனடாவில் ஒரு குக்கிராமத்திலிருக்கிறார் (சரியா பாலாஜி) மின்னஞ்சலை அவர்தான் தரவேண்டும் 😉

 5. குறுகிய எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்ளாத versatile எழுத்தாளர் என்ற வகையில் ரா.கி மீது எனக்கும் மயக்கம் உண்டு. இன்னும் 50 ஆண்டுகளுக்கு அப்புறம் வரும் தலைமுறைக்கு ஏற்ற மாதிரியும் அவரால் எழுத முடியும் என்பது எனது மதிப்பீடு .

 6. ஆகா! நண்பர் அன்புவிடம் அந்த புத்தகத்தை வாங்கி ஓரிரு கட்டுரை மட்டுமே படிச்சேன். அப்புறம் கமலஹாசனின் மீது மதிப்பு மரியாதையுடன் உள்ள கட்டுரையை வாசிச்சேன். நேரம் கிடைக்கும் போது ஊன்றி வாசிக்க வேண்டும். நல்ல அறிமுகம் கொடுத்தீர்கள் பிரகாஷ் நன்றி.

  அப்புறம் அந்த புத்தகம் பேரு ‘நாலு திசையில் சந்தோசம்’ தானே?

 7. SATHYARAJKUMAR : குறிப்பிட்டுருக்கிறேனே… இது வேறு நூலைப் பற்றியது என்பதால், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொண்டேன். வாளின் முத்தம் படித்ததில்லை. கிருஷ்ணதேவராயன் படித்திருக்கிறேன். அது கிருஷ்ணதேவராயனின் ஆட்டோபயாக்ர·பி. ரா.கி. கலக்கலாக எழுதியிருப்பார்.

 8. செல்வராஜ் : எ.க.எ ( எப்படிக் கதை எழுதுவது? ) என்ற தொடரை குமுதத்தில் எழுதினார். பெரும் பரபரப்புக் கிளப்பிய தொடர் அது. படித்திருக்கிறேன். சிறுகதை எழுதுவது அத்தனை லேசானதில்லை என்று புரிந்தது.

  பாலுமணிமாறன், நாராயண், விஜய் : நன்றி.

 9. அதே தான் பிரகாஷ்! சரியான தலைப்பு மறந்துபோய் விட்டது. எகஎ பள்ளிக்கூடச் சிறு வயதிலும் என்னைக் கவரும் வண்ணம் எளிமையாகவும் இருந்தது.

 10. இளமைக் காலத்தில் ஆர்வமாக படித்திருக்கிறேன்.அவரின் கதைகளில் இளமை துள்ளும்.

  பிரகாஷ், “பாப்பிலோன்” பப்பியொன் என்று உச்சரிக்க வேண்டும். 🙂

  பி.கு : அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம். “தாக சாந்தி” மீட்டிங்க்காக !

 11. ரா.கி.ர நாலு … என்ற ஆரம்பித்தவுடன் ஆஹா நான் ஒரே நாளில் படித்த புத்தகம்தான் என்று முதலில் நினைத்தேன். இருந்தாலும் தலைப்பில் சந்தேகம். இடையில் அண்ணா நகர் டைம்ஸில் வந்த தொகுப்பு என்ற போது, திரும்பவும் அப்போ நான் படிச்ச புத்தகம்தானே, ஆனால் தலைப்பு வேறாக இருக்கிறதே என்று திரும்பவும் மண்டை காஞ்சுச்சு.

  ஒருவழியா நான் படிச்ச புத்தகத்தை ‘நாலு திசையில் சந்தோசம்’, ஆபத்பாந்தவனாய் அல்வாசிட்டி வந்து சொல்லி விட்டார். நன்றி.

  எனக்கு ரொம்பப் பிடித்த புத்தகமாய் இருந்தது. எஸ்.ராவின் துணையெழுத்து எவ்வளவு மெதுவாக, ஆழமாக சென்றதோ அதற்கு தலை கீழாக கிட்டத்தட்ட் ஒரே நாளில் முடித்தென். சுஜாதா-வின் எழுத்தைப் படிப்பது போன்றே ஒரு உணர்வு. அதே தகவல் திரட்டு, லொள்ளூ இன்னும் பல.

  விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s