முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

நூல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த ‘அகி’. அதில் இருந்து நான்கு கவிதைகள்

ஆட்டம் போடும் வீடு

பூட்டிக் கொண்டு கிளம்பினேன்

எதையோ மறந்து போனதால்

உடனே திரும்பினேன்; திறந்தேன்

டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து

விளையாடிக் கொண்டு இருந்தன

அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம்

அணி அணியாகப் பிரிந்து கபடி

ஆடிக் கொண்டிருந்தன.

சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம்.

பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா

சுற்றிக் கொண்டிந்தது

ஒரு நிமிஷத்துக்குள்

எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன

‘என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்’

என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது.

அப்புறம் அமைதியாகிவிட்டது

பிறகு ஒன்றும் நிகழவில்லை.

பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும்

என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்!

மரணத்தைக் கையாளுதல்

செத்துப் போனவர்களுக்குச்

செய்ய வேண்டியவைகளின் பட்டியல்

என்னிடம் இல்லை

கையாண்டதில்லை மரணத்தை

தனியாய் இதுவரையில்

எரிக்கவோ புதைக்கவோ வேண்டும்.

அதற்கு முன் மரணச் சான்றிதழ்

வாங்கி வரவேண்டும்.

உறவினர், நண்பர்களுடைய முகவரிகளை

எதில் எழுதி வைத்திருந்தாரோ.

யார் யார் வருவதற்கு எவ்வளவு நேரம்

பொறுத்திருக்க வேண்டுமோ.

எங்கிருக்கிறான் என்றே தெரியாத

வெட்டியானுக்கும் , பாடை செய்பவனுக்கும்

சடங்கு செய்து வைப்பவனுக்கும்

எப்படியோ தகவல் சொல்ல வேண்டும்.

சங்கு ஊதுபவனையும் , மேளம் அடிப்பவனையும்

பாடைக்காரனே கூட்டிக் கொண்டு வந்துவிடுவான்.

அப்புறம் பூ வாங்க வேண்டும்.

ஊதுபத்தி வாங்க வேண்டும்,

பூஜை மாடத்தில் இருக்கும் கங்கைக் குடங்களில்

ஒன்றை உடைக்க வேண்டும்.

நிறைய சில்லறை மாற்றி வைத்துக்

கொள்ள வேண்டும்.

குழந்தைகளை கீழே வராமல்

பார்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போது எடுக்க வேண்டும் என்று

முடிவு செய்ய வேண்டும்.எடுத்துக்

கொண்டு போய் எரித்துவிட்டுத்

திரும்பி வந்து குளித்து விட்டு,

அடுத்த நாள் போய் பால் ஊற்றி

அஸ்தி பொறுக்கி

அதை எதிலாவது கரைக்க வேண்டும்.

அப்புறம் அடுத்த வாரம்,

அடுத்த அமாவாசை, அடுத்த வருஷம்

செய்ய வேண்டியவைகளின் பட்டியலை

தயார் செய்ய வேண்டும்

எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்

இன்னும் விடுபட்டுப் போயிருக்கலாம்

நிறைய விஷயங்கள்.

அத்தனையும் தெரிந்து கொள்ளும் வரையில்

செத்துப் போகாதீர்கள் என்னை நம்பி யாரும்

தயவு செய்து

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

டிவி-யில் செத்தவர்கள்

அப்போது அந்த நாட்டின் மேல் பறந்து போய்

குண்டு போடுவதைக் காட்டினார்கள்.

அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு அதில் செத்த

அப்பாவிகளைக் காட்டினார்கள்.

நடு நடுவில் அடிபட்ட அப்பாவிகளிடம்

மைக்க நீட்டி விசாரித்தார்கள்.

அதற்குள் இந்த சண்டை வந்துவிட்டது.

இப்போது இந்த நாட்டின் மேல் பறந்து போய்

குண்டு போடுவதைக் காட்டுகிறார்கள்.

அப்போது அடிபட்டவர்களையும் செத்தவர்களயும்

பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை இப்போது.

அடிபட்டவர்கள் எல்லோரும் காயத்தின் வடு

கூடஇல்லாமல் உடல் தேறி இருக்க வேண்டும்.

செத்தவர்களைப் பற்றிய நினைவுகள்

அவரவர் உறவினர்களிடம் இருந்தும்

மாயமாய் மறைந்து போய்

எல்லோரும் சந்தோஷமாக

வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அப்படித்தான் இருக்கும்,

இல்லாவிட்டால் காட்டி இருப்பார்களே.

[ அகி , கவிதைத் தொகுப்பு, ஆசிரியர் : முகுந்த் நாகராஜன், வெளியீடு : ‘வரப்புயர’, குரோம்பேட்டை, சென்னை, விலை : 75/- ]

14 thoughts on “முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

 1. Third and fourth are superb…

  Third is every one’s experience and fourth one reminds me recent american “adventure”..

  aamaam…athu enna pEr..”aki”..??

 2. மூன்றாவது கவிதை நெஞ்சைத் தொடுகிறது .அகி புத்தகம் பற்றிய விமர்சனத்தை கடந்த காலச்சுவடு,உயிர்மை இரண்டிலுமே பார்த்தேன்.கவிதைகளை தந்ததற்கு நன்றி

 3. எனக்கும் பிடித்தது மூன்றாவது கவிதை தான். அந்த ஏமாற்றத்தை நன்கு காட்டுகிறது கவிதை. இது போன்ற நிகழ்வுகளை எனது குழந்தைகளுக்கும் உண்டாக்கும் போது ஒரு ஓரத்தில் உறுத்தல் உண்டாகும்.

  மற்ற மூன்று கவிதைகளைப் (?) பற்றியும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

 4. சுந்தர்ராஜன் : அகி என்பது, கடைசிக் கவிதையின் தலைப்பு. அகி என்பது ஒரு சின்னப் பெண்ணின் பெயர்

  அகம் புறம் என்று இரண்டாய் பிரிக்கப் பட்டிருக்கும் இக்கவிதைகளி,, புறம் என்று தலைப்பிட்ட பகுதி முழுக்கவும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் தான். இதைக் கூடச் சொல்ல முடியுமா என்று நினைப்பதை எல்லாம் கவிதை ஆக்கி இருக்கிறார். இவருடைய மேலும் இரு கவிதைகள் உயிர்மை இதழில் வந்திருந்தது

 5. எனக்கு முதல் மூன்றும் பிடித்திருக்கிறது. நான்காவது என்னைப் பொறுத்தவரை ஒரு கவிதையே இல்லை. அரசியல் நையாண்டியாகத்தான் தெரிகிறது.

  மூன்றாவது, குழந்தையின் ஏக்கத்தை மிக அழகான ஃபார்மேட்டில் சொல்லியிருக்கிறது; இரண்டாவது யதார்த்தை அதைவிட யதார்த்தமாக.. நிச்சயம் நல்லகவிதைதான்.

  ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது முதல் கவிதைதான். *கவிதையில் மட்டுமே தொடமுடியக் கூடிய* சிலபல எல்லைகளை முதல் கவிதை தொட்டிருக்கிறது. வீட்டுத்தலைவி என்ற முறையில் எல்லாப் பொருளுடனும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு அதிகம் உடையவள் என்ற வகையில் என்னால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இனி ஒவ்வொரு முறை வெளியே போய்விட்டு வந்து தனியாகக் கதவைத் திறக்கும்போது மட்டுமாவது நிச்சயம் ஒரு குறுகுறுப்பு இருக்கும். நன்றி பிரகாஷ்.

 6. comment from Era.Murugan

  பிளாக்கில் இதுதான் பிரச்சனை.

  நல்லா இருக்கு என்று ஏதாவது எழுத வந்தால் மெம்பராகச் சொல்லுகிறார்கள்.

  ஒருநாள் கூத்துக்காக மீசையை மழிக்க முடியாததால், இப்படித் தனியஞ்சலில் முகுந்த் நாகரா’ன் கவிதை பற்றி –

  மிக நன்றாக இருக்கிறது. நிறையப் படிக்கிறார் – முக்கியமாக இந்தோ ஆங்கிலக் கவிதைகளை. அப்புறம் நிறைய சிந்திக்கிறார். தான் எழுதுவது தன் படைப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை தெரிகிறது. நல்ல கவிஞனாக,
  எழுத்தாளனாக இதெல்லாம் அவசியம் தேவை.

  அன்புடன்,
  இரா.மு

 7. Thanks Era.Mu.

  However, I don’t read Indo-English poetry (and I don’t think also). My blog site will prove my point. http://veenaapponavan.blogspot.com

  I have read some English poetry, though. Particularly, Shakespeare (‘Me too, Brutus’ in Richard the 42nd) in college. However, I can’t be sure if it is 42 or 43 now. Such is life 😦

  – vp

 8. வலைப்பதிவு நடத்துபவர் முயன்றால் யார் வேண்டுமானாலும் கமெண்ட் அளிக்க வசதி செய்ய முடியும். பத்ரியின் எண்ணங்கள் வலைப்பதிவில் அவர் செய்துள்ளதைப் பார்த்து நாங்கள் மேல்Kind-இல் செய்துள்ளோம். ப்ரகாஷ், நீங்களும் அது போல செய்து விட்டால் இங்கேயே கமெண்ட் அளிக்க முடியும். (தங்களது தற்போதைய மண்டை காய்ச்சல் ஒழிந்த பிறகு செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது வரைக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்.)

 9. மக்கள் புண்ணியத்தில் டிஸ்னியின் டாய்ஸ்டோரி பலமுறை பார்த்தாலோ என்னவோ முதல் கவிதை அதை உல்டா பண்ணினமாதிரி இருக்கு.

  மூணாவதை அடிச்சுக்க முடியாது.

  நாலாவதின் இணையை பல வடிவங்களீல் பார்த்திருக்கிறோம். நாமும் செய்கிறோம். ஹும்.

  நல்ல தேர்வு.

 10. அன்பு பிரகாஷ்,
  மூன்றாவது கவிதை அருமை..
  முதல் கவிதையின் கோணம் என்னை ஆச்சர்யப்படுத்தியது, ஏனெனில் நானும் அந்தக் கோணத்தில்
  பல முறை யோசித்திருக்கிறேன். இது போன்ற விஷயங்களை அடிக்கடி செய்யுங்கள், நன்றி!

  – அருண்

 11. ப்ரகாஷ், மத்தவங்க கவிதையை நாலு எடுத்துப் போட்டுட்டு இவ்ளோ ரெஸ்ட் நீங்க எடுக்கறது கொஞ்சம் ஓவர்; 🙂 போதும். அடுத்து எதையாவது போடுங்க.

 12. நன்றி ஜெயஸ்ரீ. கடந்த ஒரு வாரமாக, இணையத்துக்கு வர முடியவில்லை. அலுவலக, வீட்டுப் பணி அழுத்தம் தான் காரணம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்ப அப்ப வருவேன். கடந்த நாட்களின் வலைப்பதிவுகளை படிக்கலாமா, அப்படியே டீலில் விட்டு விடலாமா என்று நினைத்து டாஸ் போட நாணயத்தை சுண்டிவிட்டு, வந்து பார்த்தால், உங்கள் புகார்
  :-). ஆமா… நெட்டுலே என்னங்க விசேஷம்? ஏதாவது பரபரப்பு? சண்டை? சுவாரசியமான சர்ச்சை? உள்ள பூந்து குட்டையை குழப்ப ஸ்கோப் இருக்கா? 🙂

 13. எனக்கும் மூன்றாவது கவிதையே மிகவும் பிடித்தது.

  இந்தத் தொகுப்பை நியூ புக்லேண்டில் வாங்கப் போனபோது உயரமாக, கண்ணாடி போட்ட தாடிக்காரர் முத்துலிங்கத்தின் ‘இப்போ அங்கே என்ன நேரம்’ புரட்டிக்கொண்டிருந்தார். அப்புறம் அந்த வார ‘கற்றதும் பெற்றதும்’ல் சுஜாதா அந்த வருடத்தில் தமக்குப் பிடித்த புத்தகங்கள் பட்டியல் போட்டிருந்தார். அதிலே முகுந்தின் புகைப்படம் – அந்த கண்ணாடிக்காரர் தான்.

  ஒன்றும் பெரிய இலக்கியச் சர்ச்சை செய்யவோ , ‘ஆட்டொகிராப்’ வாங்கவோ, இன்ன பிற (இ)ரம்பம் போடவோ என்று இல்லை – ” உமது குழந்தைக் கவிதைகளை மிகவும் ரசிக்கிறேனைய்யா ” என்று சொல்லியிருக்கலாம்.

  வீணாப்போனவருக்கு வாழ்த்துக்கள் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s