Serial Killers

மிழ் சமுதாயத்தில், என்ன என்ன உறவு முறைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலே போதும். அம்மா, அப்பா, அக்கா, தம்பி, சித்தப்பா, சித்தி என்று அத்தனை உறவுமுறைகளின் பெயர்களையும் வைத்து தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. ஆனால், அவை, பெரும்பாலானவர்களின் உபயோகமான நேரத்தை ( quality time ) விழுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாலை ஆறரை மணியில் இருந்து இரவு பதினொன்றரை மணி வரையிலான நேரத்தை தொலைக்காட்சிகளின் அனைத்து அலைவரிசைகளும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் வருவதற்கு முன்பாக நாம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சிந்தித்துப் பார்க்கின்றேன். உறவினர்/நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, அல்லது உறவினர்கள்/ நண்பர்கள் நம் இல்லத்துக்கு வந்தால் அவர்களுடன் நேரம் செலவழிப்பது, குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுடன் மல்லுக்கட்டுவது, புத்தகங்கள் படிப்பது, காலையில் விட்டுப் போன ஆங்கில நாளிதழின் குறுக்கெழுத்தை, பூர்த்தி செய்வது, அக்கம் பக்கத்து வீடுகளுடன் பேசுவது, புத்தகம் படிப்பது என்று பல காரியங்களைச் செய்து வந்திருக்கிறோம். இவற்றை, தொடர்கள் முற்றிலுமாக இடம் பெயர்த்து விட்டன.

பொதுவாக, தொலைக்காட்சித் தொடர்கள், மிகை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும், நாடகத்தனமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தானா என்று சோதித்துப் பார்க்க ஒன்றிரண்டு தொடர்களை, சில நிமிடங்கள் பார்த்து, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும் உணர்ந்திருக்கிறேன். இத்தொடர்கள், நம்முடைய மனங்களிலும், நம் குடும்பச் சூழலிலும் எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது சமூவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விஷயம்.

ஒரு கற்பனா கதாபாத்திரத்தின் உணர்வுகளுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது என்பது நம் கலாசாரத்துடன் ஊறி வந்த விஷயமாகவே எண்ணுகிறேன். புலவர் கீரன், டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள், கிருபானந்த வாரியார் போன்ற சொற்பொழிவாளர்கள் கதை சொல்லும் போது, கேட்கின்ற பொதுமக்கள், அக்கதையுடன் ஒன்றிப்போய், உணர்ச்சிகரமான கட்டங்களில், தங்களையும் அவ்வுணர்ச்சிக்கு ஆட்படுத்திக் கொண்டு, சிரிக்கவும், அழவும்,. செய்வார்கள் அக்காலங்களில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நடைமுறை, எழுத்திலும் தொடர்ந்து வந்திருக்கிறது. 1960, 70 களில், பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகள்,. கதா காலட்சேபங்களின் இடத்தைப் பூர்த்தி செய்தன. பேருந்துகளிலும், அலுவலக இடைவேளை நேரங்களிலும், தொடர்கதைகளைப் பற்றிப் பேசி பேசி மாய்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், நேரிலுமாக பார்த்திருக்கிறேன். சிவசங்கரி, வாஸந்தி, சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், லஷ்மி போன்ற எழுத்தாளர்கள், கதைகளை தவணை முறையில் சொல்வதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்த இடத்தை இன்றைக்கு தொலைக்காட்சித் தொடர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

கதா காலட்சேபம் கேட்பதனாலும், தொடர்கதைகள் பார்ப்பதனாலும், இல்லாத அளவுக்கு, தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பதனால் பின்விளைவுகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். குழந்தைகளுக்கு பரிச்சயமாகி இருக்கும் பல வேண்டாத சொற்பிரயோகங்கள், இன்று தொலைக்காட்சி தொடர்களால் ஏற்பட்டவை. அண்டை வீட்டாருடன் ஒட்ட முடியாமல், அல்லது அதற்கு நேரம் கிடைக்காமல் போவதும் இதனால் தான்.

சென்னையில் இந்தக் காட்சியினை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஒரு மாலை நேரத்தில், வெளியே வந்து பார்த்தீர்களானால்,. ஊரடங்கு உத்தரவு போல தெருவே அமைதியாக இருக்கும். அப்போது திடீரென்று மின் தடை ஏற்பட்டால், சட சடவென்று அனைவர் வீட்டு வாயிலில் இருந்தும், மனிதத் தலைகள் தோன்றும். ஒரு தலை இன்னொரு தலையிடம் சொல்லும்…

” இவனுங்களுக்கு நேரங்காலமே கெடையாது.. கட்டேலே போறவன்…”

” ஆமாமா… இப்பத்தான் அந்தப் பழிகாரி, தாலியைக் கடாசி மூஞ்சி மேலெ வீசினாள்… அதுக்குள்ளே, பவர் போய் போய்டுத்து… ” என்று இன்னொரு ஓய்வு பெற்ற வழுக்கைத் தலை சொல்லும்.

நீங்கள் பதறிப் போவீர்கள். தாலியா, கழற்றி வீசினாளா? என்ன ஆயிற்று ஏது ஆயிற்று.. மாமி ரொம்ப நல்லவளாச்சே என்று பதட்டம் அடைவீர்கள். வேண்டாம். பதட்டம் அடையாதீர்கள். அவர்கள் அந்த தொலைகாட்சித் தொடர் நாயகி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல தலைகள், ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டிருக்கும் போது, மின்சாரம் திரும்ப வந்து விட்டால். மீண்டும் தெருவில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து விடும். சக மனிதர்களுக்கான இணைப்பு என்பதையே இப்போது, வான்வெளி அலைகள் தான் இப்போது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

கலை , இலக்கியம் , பல்லூடகம் ஆகியவை, மக்கள் தொடர்புக்கு, மனமகிழ்வுக்கு, மேம்பாடுக்கு என்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. நல்ல தொலைகாட்சித் தொடர்கள் வந்திருக்கின்றன. பொய்யான, கற்பனை உலகத்துக்கு நம்மைத் தள்ளாமல், பார்க்கின்ற நேரத்தில் மகிழ்ச்சி ஊட்டுவதுடன், எந்த விகாரமான எண்ணங்களைத் தோற்றுவிக்காமல் இருக்கும் தொடர்கள் அவை. அந்த நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை, இப்போது விளம்பரதாரர்கள் செய்வது போலில்லாமல், கலைஞர்கள் செய்தார்கள். திரைப்படங்களின் வணிகக் கட்டுப்பாடுகளுக்கிடையில், தங்கள் கலை உணர்ச்சி காணாமல் போகின்றன என்று நினைத்தவர்கள், எவ்விதத் தடையும் இல்லாமல், நல்ல முறையில் தொலைக்காட்சிக்கு என படைப்புகளை உருவாக்கினார்கள்,

தேசியத் தொலைக்காட்சி மட்டும் இருந்த காலங்களில் வந்த, ‘ யே ஜோ ஹை ஜிந்தகி “, “நுக்கட்”, எஸ்.வி.சேகரின் வண்ணக் கோலங்கள், ” புனியாத் “, தமஸ், சித்திரப்பாவை, நீலா மாலா, காந்தான், பேயிங் கெஸ்ட், யெஸ் ப்ரைமினிஸ்டர், பிரணாய் ராயின் வேர்ல்ட் திஸ் வீக், பாட்டி கதை சொல்லும் பாங்கில் ” விக்ரம் ஔர் பேதாள்”, ரூனா லைலாவின் தொடர் இசை நிகழ்ச்சி, பாரீசுக்குப் போ’ வின் தொலைக்காட்சி வடிவம், மாதமாஜிக் ஷோ, சித்தார்த்த பாஸ¤வின் குவிஸ் டைம் ( கவிதா அகர்வால், வந்தனா மோகன் ஆகியோரை யாருக்காவது நினைவிருக்கிறதா? ), செவ்வாய்க்கிழமைகளின் சிந்திக்க் ஒரு நொடி, ஒரு ஆப்பிரிக்கப் பையன் நடிக்கும் different strokes, ஒய்.ஜி. மகேந்திராவின் சில தொடர்கள், கரம்சந்த், பாடி லைன் சீரிஸ், ஸ்ட்ரீட் ஹாக்கர்…. என்று தினத்துக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பார்த்தால் போதும் என்கிற மாதிரியான தொடர் நிகழ்ச்சிகள்..

அந்தக் காலம் மாதிரி வருமா என்று கேட்டால், வயசாகி விட்டது என்று குற்றம் சொல்கிறார்கள்.

One thought on “Serial Killers

  1. ஜெயன்ட் ரோபாட், ஸ்பைடர்மேன், வர்ல்ட் ஆஃப் ஸ்போர்ட்ஸ், ஹம் பஞ்ச்சி ஏக் டால் கே, தஸ் கதம் , சித்ரஹார், சித்ரமாலா, ஹம்லோக் (வி.எஸ். ராகவன் ஞாபகமிருக்கா?), ரஜினி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s