காணாமல் போனவர்களில் எட்டு பேர் கொண்ட ஒரு பட்டியல்

மணிரத்னம் : ஒரு காலத்திலே ஜீவனுள்ள படங்கள் எடுத்தவர். கலைப்படங்களில் தென்படுகின்ற யதார்த்தத்தையும், வணிகரீதியான படங்களில் இருக்கும் சுவாரசியத் தன்மையையும் இணைத்து அற்புதமான பல படங்கள் தந்தவர். புத்திசாலிகளுக்கான படம் எடுக்க முனைந்து உணர்வு ரீதியான விஷயங்களில் கோட்டை விட்டவர். ஐம்பது வயதுக்கு மேலாகியும், இன்றைய இளைஞர்களின் சொல்லாடல்களையும் சங்கேதங்களையும், மானரிசங்களையும் அச்சாக அப்படியே திரைக்குக் கொண்டு வந்த அர்ஜுன் – மீரா கதாபாத்திரங்கள் ( ஆய்த எழுத்து ), இவரின் கவனிப்புத் திறனுக்கு ஒரு ஹால்மார்க். ஆயினும், முன்னொரு காலத்தில் செல்வா – சாருமதி ( நாயகன் ஜனகராஜ், கார்த்திகா) என்ற கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கிற அன்னியோன்னியத்தைக் கூட வெகு இயல்பாக சொல்ல முடிந்த இவருக்கு, இவரது சமீபத்திய ஸ்கீரின் கணவன் – மனைவி ( மாதவன் – மீரா ஜாஸ்மின்) பாத்திரங்களை ஒழுங்காக சித்திரிக்க முடியாமல் போய்விட்டது. எங்காவது கான்ஸ் படவிழா , ஐரோப்பிய ·பிலிம் பெஸ்டிவல் பக்கம் தென்படலாம். கட்டம் போட்ட காட்டன் சட்டை, ஜீன்ஸ் பக்கம் அணிந்திருப்பார்.

யூகி சேது : அங்குஷ் என்ற படத்தை தமிழில் பெயர்த்த போது, ( கவிதை பாட நேரமில்லை) கொஞ்ச நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. பிறகு காணாமல் போன போது விஜய் டீவி பக்கம் வந்து, talk show வில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார். வித்தியாசமான வடிவமும், அவரது கேள்விகளில் இருந்த freshness உம், எல்லோரையும் இவர் பக்கம் திருப்பியது. நையாண்டி தர்பார் என்ற நிகழ்ச்சி, அமிதாப்புக்கு கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சி என்ன செய்ததோ, அதை இவருக்கு செய்தது. நல்லா இருந்தால், அவர்களைக் கூப்பிட்டு சான்ஸ் குடுத்து கெடுப்பது என்ற கொள்கையில் இருக்கும் கமல்ஹாசன் வலையில் இவரும் விழுந்தார். அதில் இருந்து இவரைக் காணவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, கென்டகி சட்னி என்ற ஒரு ரெண்டுங்கட்டான் ( cross-over என்பதன் தமிழ் வடிவம்) படம் எடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டு, அமெரிக்காவில் வெஞ்ச்சர் முதலீட்டார்களை தேடிக் கொண்டிருந்தார். சிலிகான் வேலி விசிக்கள், சினிமாவுக்கெல்லாம் ·பண்டிங் தரமாட்டார்கள் என்று யாராவது அவரிடம் இன்னேரம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அடையாளம், ரஜினிகாந்த் போல வேகமாகப் பேசுவார். கையில் ஒரு லாப்டாப் வைத்திருப்பார். கானா பாட்டுப் போட்டால், இன்ஸ்டண்டாக, கைகளை அப்படியும் இப்படியுமாக விநோதமாக வளைத்து நடனம் ஆடுவார். கண்டு கொள்ளலாம்.

சுதாங்கன் : ஆனந்த விகடன் பட்டறையில் உருவானவர். மிகச் சிறந்த பத்திரிக்கையாளர். பேட்டி எடுக்கும் போது, நான் கேட்க நினைக்கிற கேள்விகளைக் கேட்பார். நல்ல எழுத்தாளர் கூட. ‘அந்தக் கனல் வீசும் நேரம் ‘ என்ற உணர்வு பூர்வமான தொடர்கதை எழுதி, பரவலான கவனிப்பைப் பெற்றவர். ஆனால், தற்போது, ஆளுங்கட்சியில் பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டார். தன் அனுபவத்தையும் அறிவையும் , அரசியல் சார்பு நிலைகளுக்காகப் பயன் படுத்தி வருகிறார். இவர் ஆசிரியராக இருந்து ஒரு அரசியல் பத்திரிக்கை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டிருக்கிறேன். ( துணை ஆசிரியராக பிரகாஷ்.எம்.சுவாமி ). போயஸ் தோட்டம் பக்கம் போனால் தென்படலாம். வழுக்கை, குறுந்தாடியுடன், நல்ல முகத்தை உல்டா செய்தது போல இருப்பார். சட்டை பாக்கட்டில், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால், அவர்தான் சுதாங்கன்.

சுப்பிரமணியம் சுவாமி : ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்து, டீப்பரமோட் ஆகி, இந்திய அரசியலில் குதித்தவர். செழியன் போன்ற மிகச் சிறந்த பார்லிமெண்டேரியன்கள் கட்டிக் வளர்த்த ஜனதா கட்சியும், ஏர் உழவன் சின்னமும், இன்று இவர் கையில். அறிவாளிகளால் எல்லா நேரத்திலும், அறிவாளிகளாக இருக்க முடியாது என்பதற்கு இவரும்,இவருடைய அடிப்பொடியும், எக்ஸ்.பூரோக்ராட்டுமான சந்திரலேகாவும் நடத்தும் அரசியல் சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலேயும், ஒரு நான் – கான்டிரவர்ஸியல் பிரதமர். எந்த பரபரப்புமில்லாமல் வெத்தாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், சு.சுவாமி இருந்து , ஏதாவது குண்டு போட்டால் எத்தனை நன்றாக இருக்கும்? . ” சு.சுவாமி, அங்க என்ன பண்ணிண்டு இருக்கேள்? சீக்ரம் வாங்கோ, போரடிக்கறது…”

பாக்யராஜ் : ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை, திருமணம் ஆனவர்களே இத்தனை அழகாகச் சொல்ல முடியாது என்று பாராட்டுப் பெற்ற , சுகுணா ( மெளனகீதங்கள்) என்ற காரக்டரை வடிவமைத்தவர். எந்த வித நெருடலும் இல்லாமல், மிகக் கோர்வையாக, ஊங்கொட்டும் படியான கதையை, என் பாட்டியால் கூட வாயால் சொல்ல முடியும். ஆனால் அதை திரையில் சொன்னவர் பாக்யராஜ். விடியும் வரை காத்திரு, சின்னவீடு , பொய்சாட்சி, கைதியின் டைரி, போன்ற போன்ற திரைப்படங்கள், திரைக்கதைக்கான இலக்கணமாக அமைந்தவை. தனக்குப் பொருத்தமான, சுய கேலி செய்து அமைத்த பாத்திரங்கள், இல்லத்தரசிகளின் ஆணாதிக்க வேதனைகளுக்கு வடிகாலாக அமைந்தது. கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, கிருஷ்ணவேனி, கிரவுன், புவனேஸ்வரியில், காலைக்காட்சி பார்க்கும் தாய்க்குலங்களின் ஆதர்சமாக விளங்கினார். மிக ஆடம்பரமாக சட்டை பாண்ட் போட்டிருப்பார். பேசும் போது மூச்சிரைக்கும். ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்து திருட்டு முழி முழித்து, ‘த பாரு புள்ளே’ என்று கொங்குத் தமிழில் பேசினால், அது பாக்யராஜ் தான்.

சோ : மனுஷருக்கு செலினிட்டி வந்தால் என்ன எல்லாம் ஆகும் என்பதற்கு உதாரணம் சோவும், அவரது அரசியல் விமர்சனங்களும். அரசியல் விஷயங்களில், அவருக்கும் எனக்கும் வெகுதூரம் என்றாலும், அவருடைய நகைச்சுவை நையாண்டிக் கட்டுரைகள் ரொம்பப் பிடிக்கும். பொம்மலாட்டம், காசியாத்திரை, ஆயிரம் பொய், நினைவில் நின்றவள், மிஸ்டர் சம்பத் திரைப்படங்கள் மற்றும் மெட்ராஸ் பை நைட்/ சாத்திரம் சொன்னதில்லை, போன்ற நாடகங்கள் பார்க்கிற போது, ஏற்படுகின்ற பரவசம், அவரது கட்டுரைகள் படிக்கும் போது ஏற்படும் . இப்போது அந்த வேலையை சத்யாவிடம் கொடுத்து விட்டு, திமுக வை திட்டுவதை மட்டுமே முழுநேர வேலையாகச் செய்கிறார். கிரீன் வேஸ் ரோட் பக்கம் பாக்கலாம். தலையில் முடி இருக்காது. மிலிட்டரி பச்சையில் சபாரி சூட்டும், பைப்பில் புகையுமாக இருப்பார்.

குமுதம் : ஹ¥ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆபிச்சுவரி எழுதியாகிவிட்டது. இனிமேல் கண்டுபிடித்தும் ஒன்றும் பயனில்லை.

எழுத்தாளர் பா.ராகவன் : நல்ல சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தவர், திடீரென்று உலக அரசியல் பக்கம் ஒதுங்கி விட்டார். பத்திரிக்கைகளில் கதைகள் எழுதுவதை அறவே நிறுத்தி விட்டு, ஒரு பப்ளிஷிங் டைக்கூனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வெற்றிகளும் பெற்று வருகிறார். ‘ ஆப்பிரிக்க மாடலை , விளம்பரத்துக்காக வரவழைத்துக் கொடுக்க, அவளை ‘ஓட்டிக் கொண்டு ‘ போய்விடும் விளம்பரக் கம்பெனி நிர்வாகியின் கதையும், மெலிய கோழி இறகால் வருடுவது போன்றதொரு உணர்வினைத் தந்து, ஒரு நாள் ராத்திரி தூக்கத்தைம் கெடுத்த ‘ கனாக்கண்டேன் தோழி’ என்ற குறுநாவலும் எழுதிய உணர்வு பூர்வமான எழுத்தாளர் பா.ராகவனை கடந்த மூன்றாண்டுகளாகக் காணவில்லை. கண்ணாடி போட்டுக் கொண்டு, பான் பராக் மென்று கொண்டிருப்பார். மைலாப்பூர் பக்கங்களில் தென்படலாம்.

இவர்களைக் கண்டு பிடித்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி : icarus1972us@vsnl.net

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s