புரியுதா இல்லையா

[கல்கியில் வந்த என் கட்டுரை ]

புரியுதா இல்லையா – இகாரஸ் பிரகாஷ்

சில தினங்களுக்கு முன்பு, நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி ஒருத்தர் எழுதிய படைப்பைவாங்கிய போது, கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைத்தது. அந்த இலவச இணைப்பு, நீங்கள் நினைக்கிறார் போல ஊதுவத்தியோ, ஊறுகாய் பாக்கெட்டோ, ஜோதிகா ப்ளோ அப்போ அல்ல.ஒரு நாலு பக்க பாம்ப்லட். ஒரிஜினல் பிரதியைப் படித்துப் புரிந்து கொள்ளுவதற்கான விளக்க உரை போல இருந்தது. தேவுடா . இதல்லாம் வேலைக்காகாது என்று ,. வாங்கிய அந்த நூலை ஈசானிய மூலையில் சார்த்திவிட்டு, போகோ சானல் பக்கம் திரும்பிவிட்டேன் தான் என்றாலும், தமிழில் எழுதப் பட்ட ஒரு நவீன இலக்கிய ஆக்கத்தைப் படித்துப் புரிந்து கொள்ள, விளக்க உரை தேவைப்படும் நிலைமை சற்று விசித்திரமாகத்தான் இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளின் விசுவாசமான வாசகர் ஒருவர், தன் இரசனையை இன்னும் விஸ்தரிக்கும் கொள்ளும் பொருட்டு, இது போன்ற நவீன இலக்கியத்தின் புரியாத பக்கத்தைப் புரட்டினால், அவருடைய ரீயாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. புரியாத இந்த வகை இலக்கியங்கள் யாருக்காகப் படைக்கப்படுகின்றன என்பதுமிலியன் டாலர் கேள்வி.

நவீன இலக்கியத்தின் போக்கை இன்று நான்கு வகையாகப் பிரித்து விடலாம். ஒன்று, நவீன இலக்கியங்கள் நேரடியாக புரியாத வண்ணம் சுற்றி வளைத்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும், இரண்டாவதாக , கருத்து என்னவாக இருந்தாலும்அவை வட்டார வழக்கில் சொல்லப்பட்டிருந்தால் அதற்கு தனி மரியாதை உண்டு, மூன்றாவதாக , மேற்கோள்கள்காட்டவேண்டுவதற்கு ·ப்ரெஞ்சு, இத்தாலிய , லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் கிடைத்தால் உத்தமம்,இறுதியாக படைப்பிலக்கியம் சர்ரியலிசம், போஸ்ட்மாடர்னிஸம், என்று ஏதாவது ஒரு இசத்தை வலியுறுத்துவதாகவோ, சார்ந்தோ இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இந்த இலக்கணத்தை ஒட்டி இருந்தால், அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கும் , உபரியாக பரிசுகளும் பாராட்டும் கிடைக்கலாம் என்றும் சொன்னார்.

நவீன இலக்கியவாதிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்ட நூல் ஒன்றை வாசிக்க முற்பட்ட போது, நான்கு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை என்றால், சிக்கல் இரண்டு இடங்களில் இருக்கலாம். அந்த நூலை புரிந்து கொள்ளத் தேவையான அறிவு வாசகரிடம் இல்லை. அல்லது வாசகர் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் எழுத அந்த எழுத்தாளருக்குத் தெரியவில்லை. என்னைக் கேட்டால், வாசகனுக்குப் புரியக் கூடிய மொழியில், நடையில் எழுத வேண்டிய பொறுப்பு எழுத்தாளருக்குத்தான் அதிகமிருக்கிறது என்பேன். ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு, ‘நான் எழுதுவதை நீங்கள் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள்’ என்ற தொனியில் எழுதப்படும் இலக்கியம், அறிவுஜீவி அகந்தையின் (intellectual arrogance) வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

அறிந்த வரையில், இலக்கியப் பரிச்சயம் ஏற்படுகிறவர்களிடம் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. பள்ளிப்பருவங்களில், அம்புலிமாமா, பாலமித்ரா கோகுலம் போன்ற பத்த்ரிக்கைகளில் துவங்கி, அவரவர் வாசிப்பு ரசனைக்கேற்ப, வெகுசனப் பத்திரிக்கைகளிடன் தஞ்சம் அடைகிறார்கள். வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் படைப்புக்களுக்கு மாற்றாகவோ அல்லது அடுத்த படியாகவோ, வாசகன் சென்றடைய நினைப்பது, உயர் ரக இலக்கியங்களைத்தான். எத்தனையோ பல எழுத்தாளர்கள் தேர்ந்த ரசனையாளர்களுக்கான படைப்புக்களை அளித்து வந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். . புதுமைப்பித்தன் கூட, மனித உணர்வுகளை ஒதுக்கிவிட்டு, அறிவுத் தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு எழுதவில்லை. அவர்களுடைய கருத்துக்கள் நவீனமானதாக இருந்தாலும், தங்கள் மொழியிலும் நடையிலும் எளிமை காட்டி, வாசகனைஅரவணைத்துச் சென்றார்கள்.

ஆனால் தற்போதைய நவீன இலக்கியவாதிகள் என்ன செய்கிறார்கள்? வெறுமனே பயமுறுத்துகிறார்கள். மனைவிமார்களின் கடைக்கண் முறைப்பு, நர்சரி ஸ்கூல் அட்மிஷன், ஆபீஸ் முதலாளி என்று பயப்பட நமக்கு வேற வஸ்துக்களா இல்லை? இந்த நவீன இலக்கியவாதிகளிடமும் அதே போல அச்சம் கொள்ள வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

மொழியை எளிதாக கையாளத் தெரிந்தவர்கள், கடினமான நடையில் எழுதினாலும் புரிந்து கொள்ளக் கூடியதாகஇருக்கும். ஆனால் பயிற்சி இல்லாமல் சில ஜல்லியடி வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு நவீன இலக்கியம்படைப்பவர்கள் சோர்வைத்தான் தருகிறார்கள். சொல்லவருகிற கதையைவிடவும், பதிவு செய்ய நினைக்கிறவாழ்க்கையை விடவும் சொல்கின்ற உத்தி தான் பெரிதாக நினைக்கப் படுகின்றது. சோதனை முயற்சிகள்தேவைதான் என்றாலும் , இந்த சோதனை முயற்சிகள் தான் இன்றைக்கு வெகுவாக , நவீன இலக்கியத்தைஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

சோபாவில் காலை ஆட்டிக் கொண்டு படிப்பவர்களுக்காக இலக்கியம் இது அல்ல, மக்களுடைய வாழ்க்கையைப்பிரதிபலிப்பது, அடித்தட்டு மக்களுக்கானது என்று சொல்பவர்களிடம், ” அப்படியானால், நகரத்து நடுத்தரமக்களுக்கான, படித்து இன்புறும் வகையிலான், டிக்ஷனரி தேவைப்படாத இலக்கியம் எங்கே ? ” என்பதாகத்தான்என் கேள்வி இருக்கும்.

2 thoughts on “புரியுதா இல்லையா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s