மேய்ச்சல் தொடர்கிறது

16. மெய்யப்பன் : மெய்யப்பனின் பார்வையை சமீபகாலமாத்தான் படித்து வருகிறேன். இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், இவரது சார்புநிலைகளை எளிதில் கண்டுகொள்ளலாம். என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிக்கடி எழுதுவார். என்றைக்காவது உபயோகப்படும் என்று வாசித்து வைத்துக் கொள்வேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியை விமர்சித்து ஆரம்பத்தில் வந்த பதிவு மிகவும் பிடித்தது. ” i provide an easy target” என்பார் சுஜாதா அடிக்கடி. அது மெய்யப்பனின் வலைப்பதிவு வரையிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. கோவர்த்தனன், ரமணீதரனுக்குப் பிறகு, நான் படித்த, சுஜாதா மீதான பொட்டில் அடித்தமாதிரியான விமர்சனக்குறிப்பு அது. ஆவணத்தில் தேடி எடுத்துப் போட பொறுமை இல்லை. அடிக்கடி எழுதினால் தேவலாம் என்று தோன்றும். புதிதாகப் பிறந்த குழந்தை அவரது மொத்த கவனத்தையும் இன்னேரம் ஈர்த்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வருவார். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

17. முத்துராமன் : இவரை நான் முன்னமேயே அறிவேன், உளவியல் மாணவர். கல்லூரி பாடப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று அடிக்கடி சந்தேகம் வரும். வாரம் ஒருமுறை வந்து அஞ்சல் செய்து விட்டு காணாமல் போய்விடுவார். தமிழோவியத்தில் எழுதுகிற தொடர்களின் கிட்டங்கியாகவே வலைப்பதிவினை நடத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. ரொம்ப ரொம்ப நீளமாக இருக்கும் கட்டுரைகள், மூச்சு முட்ட வைக்கும். அவர் எடுத்தாள்கிற சப்ஜெக்ட்டும் வறட்சியானது என்பதால், இன்னும் எளிமையாக, அவ்வப்போது வழங்கு தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. அதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். பார்க்கலாம்.

18. பரிமேலழகர் : ஒரு happy-go-lucky-guy, தன்னுடைய குணாதிசயத்தைக் அடிப்படையாக வைத்து வலைப்பதிவு படைத்தால் எப்படி இருக்கும்? பரியின் கிறுக்கல்கள் மாதிரிதான் இருக்கும். உள்ளே போனால், இது வெறும் கிறுக்கல் உருப்படியாக ஒன்றும் இருக்காது, என்று ஆரம்பத்திலேயே விரட்டி விடப் பார்ப்பார். விடப்டாது. நல்ல சங்கதிகள் நிறைய இருக்கும். பார்த்த சினிமா. சின்ன வயசு அனுபவங்கள் என்று கலந்து கட்டி கதம்பமாக இருக்கும்.ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி, சத்யராஜைப் பார்த்து ” அது எப்பிடிரா, மொகத்தை பச்சப் புள்ள மாதிரி வெச்சிக்கிறே ?” என்று ரவுசு விடுவார். அப்போது சத்யராஜின் முகபாவனையைப் பார்த்திருக்கிறீர்களா? பரியின் சில பதிவுகளைப் படிக்கும் போது, அந்த சத்யராஜின் முகம் தான் நினைவுக்கு வரும்.

19. பவித்ரா : ரெண்டு மூணு வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்றாலும் நான் விரும்பிப் படிப்பது shangrila தான். அதையும் சமீபத்தில் தான் வாசிக்கத் துவங்கி, தொடர்ந்து வாசித்து வருகிறேன். எதைச் சொன்னாலும், அதை சுவாரஸ்யம் தரும் வகையில் சொல்கிறார் என்பதுதான், இந்த வலைப்பதிவை நான் தொடர்ந்து வாசிக்கக் காரணம்.. sustaining reader’s interest என்பது, எழுதுபவர்கள் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பவித்ராவுக்கு அது நன்றாகக் கைவருகிறது. சென்னையின் தண்ணீர் பிரச்சினை, முந்தைய நாள் உறக்கத்தில் வந்த கனவு, அசோகச் சக்ரவர்த்தியின் வரலாறு, இருவர் சினிமா என்று தன்னை ஈர்க்கும் எல்லாவற்றிலும், ஒரு தனித்த பார்வையுடன், அறிவு ஜீவித்தனம் வெளிப்படையாகத் தெரியாத வகையில் எழுதுவதால், இவர் எனக்கு முக்கியமாகப் படுகிறார். அவ்வப்போது குறுக்கிடும் ஆங்கிலத்தை மட்டும் கட்டுப்படுத்தினார் என்றால், இன்னும் ரசமாக இருக்கும்.

20. பெயரிலி : ஒரு காலத்தில், அதாவது நான்கைந்து மாதங்கள் முன்பு வரை சக்கை போடு போட்டவர். கண்ணில் பட்டவரை எல்லாம் கிழிகிழி என்று கிழித்து, அதன் காரணமாகவே கிட்டதட்ட, ரஜினிகாந்துக்கு இணையான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். நானும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். தோன்றியதை எல்லாம் அவரது பின்னூட்டப் பகுதிகளில் எழுதி வந்திருக்கிறேன். சமீப காலமாக, சொந்த வேலை காரணமாக இணையத்தில் தென்படுவதில்லை என்பதால் சட்டென்று ஒரு தனித்த பார்வையை எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. சரி பின்னால் தனியாகப் பார்த்துக் கொள்வோம்.

21. பிரகாஷ் : வாழைப்பழச் சோம்பேறி. எழுத வேண்டும் என்று நினைத்து, மனசுக்குள்ளேயே எழுதிப்பார்த்து , போஸ்ட் செய்ததாகவும் நினைத்துக் கொண்டு தூங்கப் போய்விடுவான். மறுநாள் வலைப்பதிவில் வந்து தேடிப்பார்த்து இல்லை என்றதும், குய்யோ முறையோ என்று அலறிக்கொண்டு, தமிழ்வலைப்பதிவாளர் குழுமத்துக்கு என்று எஸ்.ஓ.எஸ். அனுப்புவான். அதற்கே ஒருவாரம் ஆகும். பிறகுதான், இன்னும் எழுதவேயில்லை என்பது உறைக்கும். அதன் பின்னர், உட்கார்ந்து எழுதி, சாவகாசமாகப் போடுவான். ரேட்டிங் போடுபவர்கள், மதிப்பீடு செய்பவர்கள் யாரும் இவனைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தெம்பில், சென்னையில் குழாயில் குடிநீர் வருகிற ரெகுலாரிட்டியில், வலைப்பதிவு செய்கிறவன் இவன். லேயவுட், உள்ளடக்கம், வெளியடக்கம்… இவை எல்லாம்…. ம்ம்ம்ம் மூச்…

22. பா.ராகவன் : இவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே வாசித்து வருகிறேன். வலைப்பதிவு தரும் தொழில்நுட்ப சாத்தியங்கள் அனைத்தையும், தன் வலைப்பதிவில் செய்து பார்த்து, அந்த ஆரம்ப கட்ட பிரமிப்பு விலகி, தற்போது, உள்ளடக்கத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார். பத்திரிக்கை ஆசிரியராக இருந்ததாலோ என்னமோ, எக்கச்சக்கமான ஐடியாக்களை வைத்திருப்பார். அவற்றை அவ்வப்போது வலைப்பதிவுகளில் பரிசோதித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, பல கண்டனக் குரல்களை எழுப்பிய ‘ஒன்பது கட்டளைகள் அதற்கு ஒரு உதாரணம். அதனை வாசித்தவர்களில் முக்கால்வாசிப் பேர், தன்னைத்தான் சொல்கிறாரோ என்று நினைத்துக் கொண்டு, சரமாரியாக பின்னூட்டம் கொடுத்தது நல்ல வேடிக்கை. இந்த கலாட்டக்களைத் தவிர, அவர் எழுதுகிற நூல் அறிமுகங்களை கவனமாக வாசிப்பதுண்டு.

23. ராஜா.கே.வி. : சென்னைத்தமிழில் போட்டுப் பின்னுகின்ற மழையாப் பொழிகிற அயல் மாவட்டத்துக்காரர். சென்னைத் தமிழில் சொல்ல முடிகிற விஷயங்களை மட்டும் தான் எழுத முடியும் என்பதால், அவ்வபோதுதான் வலைப்பதிகிறவர். நிறைய இணையநண்பர்களைக் கொண்டவர் என்பதால், காண்டிரவர்ஸியலான விஷயங்களை எல்லாம் அவ்வளவாகத் தொடமாட்டார். சென்னைத் தமிழில் வெண்பா, குறும்பா வகையறாக்களை எழுதினால் ஜோராக இருக்கும் என்று நினைத்ததுண்டு. ஆனால் சொன்னதில்லை.

24. ஷங்கர் :நான் முதன் முதலாக இவர் பதிவினைப் படித்துவிட்டு, இவர் புதிதாக எழுதவந்திருக்கும் சின்னப் பையன் என்றே நினைக்கவில்லை. கொஞ்சம் பாலீஷ் போட்டால், நல்ல நல்ல ஆக்கங்கள் கிடைக்கும் என்று, அவரது சில பதிவுகளைப் படிக்கும் போது தோன்றியிருக்கிறது. கற்றை இயற்பியலுக்காக தனியாக ஒரு பதிவு நடத்தி வருகிறார். ரொம்ப பிரபலமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் வாசிப்பதில்லை. இஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே, பிசிக்ஸ் என்றால் ஒரு ‘இது’. இங்கே வந்தும் பிசிக்ஸா? அதுவும் குவாண்டம் பிசிக்ஸா? நெவர்…

25. பி.கே.சிவக்குமார் : நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று. கவிதைகளும் உரைநடையுமாக கலந்து இருக்கும் இவருடைய பதிவுகளில், எப்போதும் போல கவிதைகளைத் தவிர்த்து உரைநடையை மட்டும் வாசிப்பேன். சிவக்குமார் கணிப்பொறித்துறையில் ஈடுபட்டிருப்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அல்லது அதனால், ஸ்ட்ராடஜி மற்றும் அனாலிஸிஸ்களில் சிறந்தவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆழப் படித்து, பற்பல கோணங்களையும் சிந்தித்து, மிக நேர்த்தியாக எழுதுவதில் வல்லவர். அக்கட்டுரைகள் ஏற்படுத்தக் கூடிய சந்தேகங்களுக்கும், கிளைச்சிந்தனைகளுக்கும் , அவரது மூலக்கட்டுரையிலேயே பதில் இருக்குமளவுக்கு சிந்தித்து எழுத வல்லவர். வலைப்பதிவுக்கட்டுரைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களில் கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கிறது. அதை சண்டை என்று கூட சிலர் சொல்வார்கள். ஆயினும் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளும், என் வாசிப்பு ரசனையும் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவதில்லை. வலைப்பதிவில் அவர் எழுதிய பல கட்டுரைகளுக்கு பின்னூட்டு ஏதும் அளித்ததில்லை என்ற போதும் , விரும்பி வாசித்திருக்கிறேன். வலைப்பதிவுக் கட்டுரைகளைத் தாண்டி, என்னை அதிகமாக ஈர்த்தது, திண்ணையில் அவர் சொ.சங்கரபாண்டியுடன் நிகழ்த்திய விவாதங்கள்.

26. சுந்தராஜன் பசுபதி : நான் இணையத்துக்கு வந்த முதல் நாளில் இருந்தே நண்பரானவர். நான் இன்றைக்கு எழுதிக் கொண்டிருப்பதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சுந்தரராஜனும் ஒரு முக்கியக் காரணம். இணையக்குழுக்களின் இயக்கமுறை தெரியாமல், முதல் முதலாக இரா.முருகனுக்கு தனிமடல் அனுப்புவதாக எண்ணிக் கொண்டு, பொதுவிலே போட்ட என் முதல் மடலை, சக ராயன் ஒருவன் எழுதுவதாக நினைத்துக் கொண்டு நீளமாகப் பின்னூட்டம் அளித்ததுதான், எனக்குக் கிடைத்த முதல் போதை . நான் எழுதியதை படித்து நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை என்று சொல்லும் போது கிடைக்கும் போதைதான் என்னை இன்னமும் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதை உணர்வினை ஜாக்கிரதையாக மறைத்துக் கொள்ளும் சிலரைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சுந்தரராஜனின் வலைப்பதிவினையும், துவக்கந்தொட்டே வாசித்து வருகிறேன். ஆழமான விருப்பு வெறுப்புகள் கொண்டவர். அவரது பதிவுகளில் இது அப்பட்டமாகத் தெரியும். மற்ற பலரைப் போலவே, அவரது வாழக்கையை ஒட்டிய பல சம்பவங்கள், பொதுவான விஷயங்கள் என்று கலந்து கட்டி இருக்கும். எப்போது அணுகுண்டு போடப் போகிறார் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பேன்.

27. வலைப்பூ : மிக நல்ல கான்சப்ட் இது. உருவம், வடிவமைப்பைப் பொறுத்த வரை, பல வலைப்பதிவுகளுக்கு இது ஒரு முன்னோடி. இந்த வலைப்பதிவினையும் தொடர்ந்து வாசிக்கிறேன் என்றாலும், இதன் உள்ளடக்கத்தின் மீதான அபிப்ராயம் வாரா வாரம் மாறும், பொறுப்பு ஏற்கும் வலைப்பதிவாசிரியர்களுக்கு ஏற்றமாதிரி. நிலையான அபிப்ராயம் என்று எதுவும் இல்லை.

28. வெங்கட்ரமணன் : இலக்கியமும் அறிவியலும் கலந்து சமைக்கப்பட்ட வலைப்பதிவு. என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிறைய இந்தப் பதிவுகளில் இருக்கும். இருந்தும், எனக்கு ஈடுபாடு இருக்கிற ஏதாவது சங்கதியை பற்றி எழுதினால், ஆர்வமாக பின்னூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. மிகக் கடுமையான அறிவியல் பதங்களைக் கூட, நல்ல தமிழில் சிரத்தையாக மொழிபெயர்த்து எழுதுவார். அறிவியலில் இருக்கும் ஆர்வத்துக்கு ஈடாக, தமிழ் இலக்கியத்திலும், குறிப்பாக பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். one of my favourite weblog.

இவைதவிரவும், சுந்தரவடிவேல், டுபுக்கு, தங்கமணி, செல்வராஜ், எம்.கே.குமார், சந்திரவதனா, ( மனஓசை), சிலந்தி வலை, சித்ரன், ரஜினிராம்கி, கார்த்திக்ராமாஸ் என்று பலபதிவுகளையும் வாசிக்கத் துவங்கி, பழைய ஆவணங்களையெல்லாம் நோண்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அபிப்ராயம் உருவாக்கிக் கொள்ளவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s