மேய்ச்சல் மைதானம் ( நன்றி : பாலகுமாரன்)

எழுதுவதற்கு விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பது நல்லது.

ஆனால், எழுதாமலே இருந்தால், ப்ளாக்ஸ்பாட் காரர்கள் கோபித்துக் கொண்டு, பட்டாவை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இந்த சமயத்தில், கைகொடுப்பது, முன்பு எழுதி, அஞ்சல் செய்யாமல் விட்ட சங்கதிகள். இது போல, அந்தரத்தில் தொங்குகிற ஆக்கங்கள் என்னிடம் ஒரு நாற்பது ஐம்பது இருக்கும். அதில் எதையாச்சும் ரிப்பேர் செய்து போடலாமா என்று நோண்டிக் கொண்டிருந்த போது, ஒரு மடல் மாட்டியது.

நான் வலைப்பதிவு ஆசிரியராக இருந்த போது, மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து எழுதியது அந்தப் பதிவு. நான் அதை எழுதிய காலத்தில், சுமார் ஏழெட்டு வலைப்பதிவுகளை மட்டும் தான் தொடர்ந்து படித்து வந்தேன். மற்ற பதிவுகளில், பின்னூட்டங்களும் அவ்வளவாகக் கொடுத்ததில்லை. ஆனால், ப்ளாக்லைனர் உதவியால், ஆற்றுமை ( activity) அதிகம் இருக்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆகையால் முன்பு எழுதி அஞ்சல் செய்யாமல் விட்ட அப்பதிவினை, கொஞ்சம் revamp செய்து இங்கே இடுகிறேன்.

எச்சரிக்கை 1. : இது நடுநிலைமையான பதிவு அல்ல. நான் வாசிக்கிற வலைப்பதிவாளர்களில் பலருடன் எனக்கு நேரிலோ அல்லது தனிமடல் மூலமாகவோ தொடர்பு உண்டு. என்னுடைய விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், வலைப்பதிவு பற்றிய அபிப்ராயத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். பதிவு பற்றி சொல்லும் போது, சில சமயம், அது தொடர்பான/தொடர்பில்லாத கிளைச் சிந்தனைக்கும் நான் தாவி குதிக்கலாம்.

எச்சரிக்கை 2 : நான் வாசிக்கிற வலைப்பதிவுகள் பற்றிய உண்மையான அபிப்ராயங்கள் இவை. நல்ல உள்ளடக்கத்தைக் கொண்ட வலைப்பதிவுகள், நான் வாசிப்பதில்லை என்ற காரணத்தினால், இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் போகலாம்.

தர வரிசையில் அல்ல. இது அகர வரிசையில் தரப்படுகிறது.

1.ஆப்பு

இவர் கடைக்குப் போய் வந்து நாளாகிவிட்டது. முகமூடிகள் பற்றிய நல்ல அபிப்ராயம் எனக்கு உண்டு. ஆனால், ஆப்பு விடம் அந்த மரியாதை கிடையாது. ஏனென்றால், ஆப்பு என்பது யார் என்று தெரிந்து விட்டதுதான் காரணம். ப்ளாக்லைனில் இருந்து இவரை unsubscribe செய்து விடலாம் என்று இருக்கிறேன்.

ஆப்பு is வேஸ்ட்.

2. அருள் செல்வன்

அருள் அவர்களின் விஷயஞானத்துக்காக அவர் மீது எனக்குப் பெருமதிப்பு உண்டு. சங்கத் தமிழானாலும் சரி, சென்னைத் தமிழானாலும் சரி, நின்னு விளையாடுவார். அடிக்கடி எழுதமாட்டார் என்றாலும் , எழுதினால் நச்சென்று இருக்கும். அக்ஷயதிருதியை நாளன்று சென்னை தி.நகரில் நடந்த டிரா·பிக் ஜாம் கலாட்டா பற்றி எழுதியது ஒரு மிகச் சிறந்த உதாரணம். அவருக்கு மாடர்ன் ஆர்ட்டும் ( லேசர் – மாடர்ன் :-)) வரும் என்று அவரது இன்றைய பதிவினைப் பார்த்தால் தெரியவரும். இது எனக்குப் பிடித்த இடம் என்றாலும் இங்கே நான் அடிக்கடி வருவதில்லை. காரணம், இந்த பதிவுகள், முந்தைய நாளே ரா.காகியில் எனக்குக் கிடைத்துவிடும். யூனிகோடை விட டிஸ்கியில் பதில் போடுவது ஈசியானது அன்றோ? 🙂

3. அருணா ஸ்ரீனிவாசன்

பத்திரிக்கையாளர். எகானமிக் டைம்ஸில் இவரது எழுதும் ரிப்போர்ட்களை வாசிக்கிறேன். செய்திகளை கட்டும் நேர்த்தியிலேயே, இவர் பத்திரிக்கையாளர் என்று தெரியவரும். இவரது பதிவுகள் கொஞ்சம் ஹெவியாக இருக்கும். ( எழுதும் விதத்தில் அல்ல) உருப்படியான பத்து பதிவுகள் வந்தால், அதிலே நிச்சயமாக எனக்கு ஆர்வமிருக்கும் துறை பற்றி ஒன்றிரண்டு பதிவுகளாவது இருக்கும். நல்ல விஷயங்களுக்கு அதிகமாக மறுமொழி வராது என்பதற்கு இவரது சில பதிவுகளை உதாரணமாகக் காட்டலாம்.

4. அருணாச்சலம் வைத்தியநாதன்

இவருடைய ப்ரொ·பைல் ரொம்ப சுவாரசியமானது. ஆளும் ரொம்ப சுவாரசியமானவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு ஆன்லைன் பத்திரிக்கையை தன் வலைப் பதிவில் நடத்த முயற்சி செய்கிறார் என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றின் மீதும் ஒரு அபிப்ராயம் வைத்திருக்கிற இவரது பல கருத்துக்கள் மீது எனக்கு உடன்பாடு இருந்தது கிடையாது என்ற போதிலும், தனக்கு சரி என்று படுகிற தன் கருத்தை தெளிவாக முன்வைக்கிறார் என்பதில் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. தன்னுடைய நகைச்சுவை உணர்வினை பூமராங் போன்ற, பத்திரிக்கைகள் எல்லாம் தூக்கி தூர எறிந்து விட்ட , அவுட்டேட்டட் வடிவத்தில் செய்வது பற்றி எனக்கு மாற்று அபிப்ராயங்கள் உண்டு. இவருடைய வலைப்பதிவாளர் முகத்தைக் காட்டிலும், குறும்பட இயக்குனர், பலகுரல் வித்தகர், தமிழ் சினிமா ஆர்வலர் என்ற மற்ற முகங்களை எனக்கு பிடிக்கும்.

5.பத்ரி

என்ன காரணத்தினாலோ பத்ரியின் பக்கங்கள் மிக மெதுவாகத் தான் என் டயல் அப் மோடம் வழியாக இறங்கும். அதனாலேயே இவரது அஞ்சல்களை சேமித்து வைத்து இரவில் சாவகாசமாகத்தான் படிப்பேன். அவசர அவசரமாக படித்து, தப்பும் தவறுமாக எதையாவது பதில் (தகவல்) கொடுத்தால், நேரில் பார்க்கிற போது மாட்டிக் கொள்வது சர்வநிச்சயம். மிக ஹெவியான சப்ஜெக்ட்களை மட்டும் தான் வலைப்பதில் எழுதுவார். [லைட்டான, கலாசல் மேட்டர்களையெல்லாம் இணையக்குழுக்களுக்கு என்று ஒதுக்கீடு செய்து விடுவார்:-). இலைவடாம் ஒரு எக்ஸெப்ஷன்.]நான் தொடர்ர்ந்து விரும்பிப் படிக்கும் இப்பதிவில் , எனக்கு ஈடுபாடு இருக்கிற விஷயங்களில், பின்னூட்ட விவாதங்களில் பங்கு கொள்வதை விருப்பமுடன் செய்து வருகிறேன். அரசியல் சமூகம், விளையாட்டு, பொருளாதாரம், வர்த்தகம் என்று பல துறைகளை எழுதினாலும், அவர் மேலைநாட்டு இலக்கியங்களை கணிசமான அளவு படித்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. வாரம் ஒரு முறையாவது தமிழ்/ஆங்கில இலக்கியத்துக்கும் இடம் அளிக்கலாம். என் வலைப்பதிவுக்கு வருபவர்களில் நூற்றுக்கு 75 பேர், இவரது வலைப்பதிவு வழியாகத்தான் வருகிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. அதுக்காக சம்மந்தா சம்மந்தமில்லாத இந்த இடத்திலே அவருக்கு ஒரு டாங்ஸ¤.

6. சோடா பாட்டில்

சமீபத்தில் தான் இந்தப் பதிவினைப் பார்த்தேன். ப்ளாக்லைன் சன்னலினூடாகத் தெரிந்த அவரது வலைப்பதிவின் கேப்ஷன் சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டது. இர்ரெகுலராகத் தான் எழுதுகிறார் என்றாலும்,. அப்டேட் ஆகிவிட்டது என்று தெரிந்தால் நிச்சயம் படிக்கிறேன். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்று நான் படித்த அவரது சில பதிவுகள் சொல்கின்றன.

7.பாலாஜி

எங்கள் இருவருக்கும் இரு ஒற்றுமைகள் உண்டு. ரா.காகியில் ‘சேவையை’ துவக்கியவர்கள். ஒரே பேட்டையில் இருந்து வந்தவர்கள் ( திருமயிலை). டிக்ஷ்னரியில் இவருக்குப் பிடித்த வார்த்தை நிச்சயமாய் nostalgia ஆகத்தான் இருக்கும். பழைய சங்கதிகளைக் தேடி எடுத்துப் போடுவதில் வல்லவர். இதை ஒரு குறையாகச் சிலர் சொல்வதைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த பழைய சங்கதிகளை தேர்வு செய்வதின் பின் இருக்கும் அவரது ரசனையின் வீச்சினை யாராவது கண்டுகொண்டிருப்பார்களா என்பது ஐயமே. இது ஒரு முக்கியமான அம்சமான நினைக்கிறேன். ஆனாலும், பழசை எடுத்துப் போடுவதென்பது, பாலாஜி ஒரிஜினலாக சிறப்பாக எழுத வல்லவர் என்ற உண்மையை மெது மெதுவாகப் போக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். கிளப்பில் இருந்த காலங்களிலும், தமிழோவியத்திலும், அவருடைய படைப்புகள் எப்படி இருந்தன என்பதை பார்த்திருக்கிறேன். அவரது ஒரிஜினல் நகைச்சுவை வீச்சினை சமீபத்தில் மறுபடி பார்க்க நேர்ந்தது. அது, அவரது நூறாவது பதிவு.

8. தேசிகன்

லேட்டஸ்டாக வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். நாலைந்து பதிவுகள் மட்டும் தான் வந்திருக்கின்றன. எழுத வராது என்று சொல்லிக் கொண்டே டக்கராக எழுதுபவர். என் பெயர் ஆண்டாள் என்ற நடைச்சித்திரத்தின் மூலம் இது தெரிய வரும். ரெகுலராக எழுதுகிறாரா என்று போகப் போகத் தான் பார்க்கவேண்டும்.

9.ஹரிகிருஷ்ணன்

இவர் இன்னொரு வாத்தியார். எல்லாத்துலையும் புகுந்து புறப்படும் வல்லமை இருக்கிறது என்றாலும், இந்த வலைப்பதிவு சங்க இலக்கியத்துக்கானது மட்டுமே. மொத்த மடல்களும் மரபிலக்கியம் இணையக்குழுவுக்கு முதலில் வந்து விடும் என்பதால், எப்பவாச்சும் ஒரு முறை ரெ·பரன்ஸ¤க்காக மட்டும் இந்த வலைப்பதிவுக்கு வருவது வழக்கம். தொடராக வந்து கொண்டிருக்கும் இராமாயணம் பற்றிய சந்தேகங்களை விரிவாக கேட்கவேண்டும். குழுவில் கேட்கலாம் என்று இருக்கிறேன்.

10. இட்லிவடை

மற்றொரு முகமூடி. ஆனாலும், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு சீரிஸ் எழுதி வந்தார். அதிலிருந்து இப்பதிவு பிடித்துப் போனது. இட்லி வடையே. நீர் யாரோ? யாராக இருந்தாலும், அவ்வபோது தரும் ஜோக்குகளுக்காக, லைட்டர் வெய்ன் மேட்டர்களுக்காக உமக்கு ஒரு ஜே.

11. காசி ஆறுமுகம்

வலைப்பதிவுகளைப் படிக்கத் துவங்கிய காலத்தில் இருந்தே , நான் இவரது ரெகுலர் வாசகன். அறிவியல் விஷயங்களைப் போட்டு பின்னுவார். யூனிகோடு விளக்க உரை, ஒரு சிறந்த உதாரணம். விவாதங்களில் தர்க்க பூர்வமான வாதங்களை எடுத்து வைப்பார் . சில சமயங்களில் அவரது பதிவு, அவருடைய பர்சனல் டைரி போல தோற்றமளிக்கும். இருந்தாலும் சுவாரசியமாய் இருக்கும். லீவில் சென்றிருக்கிறார் போலிருக்கிறது.

12. கிருபா ஷங்கர்

மொத்த வலைப்பதிவினை கருப்பு பின்புலத்தில் வைத்து கண்வலி வரச்செய்தது, சாம்யுவேல் ஜான்ஸன் பொறாமைப்படும் படியான ஆங்கிலத்தில் எழுதுவது என்று ஆரோக்கியமான அராஜகங்கள் செய்வார் 🙂 . சமீபத்தில் தான் வலைப்பதிவு துவக்கி பெரும்பான்மையான ஆதரவினைப் பெற்றிருக்கிறார். கேலியும் கிண்டலுமாக எழுதினாலும், அடிப்படையில் மிகச் சிறந்த தொழில்நுட்பர்,. தொழில்நுட்பத்தை மிக எளிய நடையில் எழுதவும் கைவரப் பெற்றவர். மரத்தடி இணையக்குழுவில் அவர் எழுதிய லாஜிக் என்ற கட்டுரையும், யூனிகோட் பற்றிய கட்டுரையும் இன்னும் நினைவில் இருக்கிறது. வரும் காலத்தில், நகைச்சுவையை தாளிதமாக ( மட்டும்) கொண்டு, உள்ளடக்கத்தை மேம்படுத்துவார் என்று நினைக்கிறேன்

13. குசும்பன்

படிக்கிறேன் என்றாலும் எந்த அபிப்ராயத்துக்கும் வர முடியலை.. கொஞ்ச நாள் போகட்டும்,

14. மதிகந்தசாமி

ஆரம்பத்தில் பல பதிவுகள் வைத்திருந்து சுத்தலில் விட்டுக் கொண்டிருந்தார். இப்போது ” எண்ணங்கள்’ ஐ மட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன். இணையத்துக்கு வந்த சில மாதங்களிலேயே நண்பரானவர். வெவ்வேறு காரணங்களுக்காக சில சமயங்களில் பற்பல முட்டல் மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. தான் சார்ந்திருக்கும் விழுமியங்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருக்கும் எவருக்குமே இத்தகைய மோதல்கள் வருதல் சகஜமென்று நானும் உணர்ந்திருக்கிறேன். அவரும் அவ்விதமே என்று நினைக்கிறேன். . பலர் வலைப்பதிவுகள் துவக்க அவர்தான் காரணம். எனக்கும் முழுமையாக உதவி செய்தவர் அவர்தான். ஆயினும், அவரது வலைப்பதிவினை தொடர்ந்து படிக்க முக்கிய காரணங்கள் இவை அல்ல. அவரது இலங்கைக் தமிழும், அத்தமிழில் எழுதப் பட்ட சில பயண இலக்கியங்களும் தான் காரணம். . இது பிரகாஷ¤க்கு பிடித்திருக்கிறது, அதனால் தொடர்ந்து எழுதாதே என்று யாராவது அவரிடம் சொல்லி இருப்பார்களோ? 🙂 [ அய்யோ… இது ஜோக்குங்க… ]

15 மீனாட்சிஷங்கர்

எளியதமிழில் மார்க்கெட்டிங் என்ற வலைப்பதிவு, என்னுடைய favourite blog. ஒரு சீசனில், துறை சார்ந்த பதிவுகள் வேண்டும் என்று விவாதம் எழுந்தது. அதை கப்பென்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மார்க்கெடிங் பற்றி விடாமல், மிக சின்சியராக எழுதி வருகிறார். சில சமயங்களில் மட்டுமே பின்னூட்டங்கள் அளித்திருக்கிறேன் என்றாலும், தொடர்ந்து படிக்கும் பதிவு இது. நேரில் பார்த்து கைகுலுக்க வேண்டிய சமாசாரம். பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, சோர்வில்லாமல் விடாமல் தொடருங்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும்.

.

…to be continued

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s