Digital Divide

On Dayanthi Maran’ Plans & Badri’s comments

பத்ரி, தன் ஆங்கில வலைப்பதிவில், தயாநிதி மாறனின் சில கருத்துக்கள் பற்றிய தன் அபிப்ராயங்களை எழுதி இருந்தார். தொழில்நுட்பக் கருத்துக்களுடன் , எண்ணியப் பிளவு ( digital divide) பற்றியும் சொல்லி இருந்தார். அது பற்றிய என் சில கருத்துக்கள் இங்கே:

கிராமங்களுக்கு கணிணிகளைக் கொண்டு போவது, தன்னுடைய முக்கியான வேலைகளில் ஒன்று என்று தயாநிதி மாறன் அவர்கள் சொல்லி இருக்கிறார்.. கணிணியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படுத்தாதவர்களுக்கும் இருக்கும் இடைவெளிதான் எண்ணியப் பிளவு. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டிலே, மற்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளுடன், இந்த எண்ணிய இடைவெளியைக் குறுக்கிக் கொண்டே போவதும் மிகவும் முக்கியம். ஆனால், இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பது பற்றி ஏதும் தகவல் இல்லை.

இது கொஞ்சம் சிரமமான காரியம் என்று பத்ரி அபிப்ராயப் பட்டிருக்கிறார்.

என்னுடைய அபிப்ராயத்தில், இது சிரமம் போலத் தோன்றினாலும், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் திட்டம் தயாரித்தால், கிராமங்களுக்கு கணிணியைக் கொண்டு செல்லலாம்.

அந்த காலத்தில் சென்னையில் இருந்து 79 கி.மீ தூரத்தில் இருக்கும், உத்திரமேரூர்க்கு தொலைபேசியில் பேச, டிரங்க்கால் பதிவு செய்து விட்டு காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. பின்னர் ராஜீவ் காந்தியின் முனைப்பினால், தொலைத் தொடர்பில் ஒருபெரிய மாற்றம் நிகழ்ந்தது. சாம் பிட்ரோடா தலைமையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று, சி.டாட் (C-DOT) போன்ற நிறுவனங்கள், குறைந்த செலவில் மின்னணு இணைப்பகங்கள் நிறுவுவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கின. அதன் விளைவாகத்தான், இன்று தொலைபேசி இணைப்பு இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கிராமங்களில் கணிணிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு இத்தகைய பெரும் முயற்சி கூட தேவையில்லை என்றுதான் சொல்லுவேன்.

தொலைத்தொடர்பு இலாகாவின் கட்டுப்பாட்டில், சில பதினாயிரம் பிசிஓக்கள் இருக்கின்றன. ( எத்தனை என்று துல்லியமாகத் தெரியவில்லை). சோதனை முயற்சியாக சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே கணிணிகளை நிறுவலாம். அந்த பிசிஓக்களின் உரிமையாளர்களுக்கு ஆரம்ப நிலைப் பயிற்சி கொடுத்து, கணிணிகளை வாங்குவதற்கு உதவி செய்யலாம். ( லோன் வசதி போன்றவை).

ஆனால், ஒரு கிராமத்தில் இருப்பவருக்கு எதற்காக கணிணி என்ற கேள்வி எழுகிறது.

கணிணித் துறையில் நேரடியாக பணிபுரியாத , நகரத்தில் இருக்கிற ஒருத்தருக்கு கணிணியினால் என்ன என்ன பயன்பாடுகள் இருக்கின்றன. அந்த பயன்பாடுகள், கிராமத்தில் இருக்கிறவர்களுக்கும் பொருந்துமா?

உதாரணமாக, கணிணிகளால்.

1. எழுதி, பின் சேமித்து வைத்து, அச்சடித்துக் கொள்வதற்கு,

2. கணக்குகள் போடுவதற்கு, அக்கணக்குகளை சேமித்து வைத்துக் கொள்வதற்கு

3. படம் வரைய, அச்சடிக்க , சேமிக்க

4. பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற கேளிக்கைகளுக்காக

5. மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல்

6. வலைகளில் உலா வருதல்..

போன்ற சில ( மேம்போக்கான) பயன்பாடுகள் இருக்கின்றன.

கிராமத்தில் இருக்கும் ஒருத்தருக்கு, இதில் எதெல்லாம் தேவைப்படும் என்று பார்த்தால், எல்லாமே தேவைப்படும். அதாவது வி.ஏ.ஒவுக்கு லெட்டர் எழுதுவது, வியாபாரக் கணக்கு வழக்குகளுக்காக, ஓய்வு நேரத்தில் படம் பார்ப்பதற்காக, சரியான பூச்சிக் கொல்லி மருந்து பயன் படுத்துவது பற்றி வலையில் தகவல் பெறுவதற்காக , துபாயில் இருக்கும் மகனுக்கு மின்னஞ்சல் அனுப்புதற்காக என்று அவர்களுக்கும் தேவைகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக கணிப்பொறியை வாங்கி, பயன்படுத்த கற்றுக் கொள்ள யார் முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி. அதனால், இந்த தேவைகளை, கணிப்பொறி வைத்திருக்கும் பிசிஓ ஒரு நோட் ( node) மாதிரி செயல்பட்டு, பூர்த்தி செய்யலாம்.

குறைந்த பட்ச காசுக்காக, கணிப்பொறியின் ரிசோர்ஸ்களை, கிராம மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடலாம். ( ஒரு பழைய ஆங்கில நாவலில், ஆதிகாலங்களில், பெரிய கணிப்பொறிகளை தனியாக ஒருத்தர் வாங்க முடியாது என்பதற்காக, பல நிறுவனங்களுக்கு டைம் ஷேரிங் அடிப்படையில் விற்றுவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்) . ஆனாலும், அதிலும் துவக்க நிலை சிக்கல்கள்(teething problems) இருக்கும்.

சென்னை போன்ற நகரங்களில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வர்த்தக நிறுவனங்கள் கூட, கணிப்பொறி மூலம் வேலையைச் செய்ய சுணக்கம் காட்டினர். மாதத்துக்கு சில லட்சங்கள் டர்னோவர் காட்டும் எங்கள் ஏரியாவின் அர்ச்சனா மெடிக்கல்ஸ்காரர்கள், இன்னமும் நோட்டு புத்தகம், லெட்ஜர்தான் உபயோகிக்கிறார்கள். அதன் உரிமையாளரிடம் ஒரு முறை கேட்டதற்கு.. “அது எதுக்குங்க, எனக்கு கம்பியூட்டர் பத்தி ஒண்ணுமே தெரியாதுங்களே” என்றார். இந்த சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடுகள் பற்றியும், அவற்றினால் ஏற்படும் நன்மை பற்றியும் கிராம மக்களிடம் விளக்க, மிகவும் சிரமாக இருக்கும்.

அதற்கு ஒரு எளிய வழி.. இணையம் தான்.

முதலில், கிராம மக்களை கணிணியின் பக்கத்தில் வரச் செய்யவேண்டும். வந்த உடன், அவர்களுக்கு வேண்டும் என்ற தகவலை, அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, இணையத்திலிருந்து எடுத்துத் தந்தாலே, அவர்களுடைய ஆரம்ப பயம் விலகும்.

விவசாயம், கால்நடை மருத்துவம், பருவமழை பற்றிய கணிப்பு, புதிய நோய்கள், கடன் வசதிகள்,.டிராக்டரின் ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்கும் இடங்கள், கண்சிகிச்சை முகாம்கள், கிராமப்புற பொருளாதாரத்தின் மற்ற பல விஷயங்கள் பற்றியும், அவர்களுக்கு நிறைய தகவல் தேவைப் படுகிறது. இவற்றிற்காக, அவர்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது, வானொலியின் ‘ விரிவாக்கப் பணியாளர்களுக்கு’ , ‘வீடும் வயலும்’ போன்ற நிகழ்ச்சிகளையும், கிராமத்துக்கு வரும் கரும்பு இன்ஸ்பெக்டர், உரக்கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதிகள், அதிகாரிகளையும் தான். அவர்களுக்கு தேவைப்படும் தகவல்களை, உடனுக்குடன், எடுத்துத் தந்தாலே, அவர்களுக்கு கணிணிகளின் மீது ஈடுபாடு வரும். பின்னர், இணைய வழிக் கல்வி, தொலை-மருத்துவம் ( tele-medicine), நிபுணர்களுடன் சாட் , வீடியோ கான்·பரன்ஸிங் என்று படிப்படியாக அறிமுகப் படுத்தலாம். இப்படி, எந்த முறையான கணிணி அறிவு இல்லாமலேயே, கணிணியுடன் நட்பு தோன்றிய பின்னால், அவர்களாகவே பலதும் கேட்க முன்வருவார்கள்.

” ஏனுங்க தம்பி… சும்மா படம் காட்டீட்டு இருக்கீயளே? இந்த லெட்டர் ஒண்ணு அனுப்பணும்,. இதுல செய்ய முடியுமா?”

” அதுகென்ன அண்ணாச்சீ…. இங்கிட்டு வாங்க..”. என்று சொல்லி டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதி, பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கலாம். word processing அறிமுகமாகும்.

” கணக்கு வழக்கல்லாம் பாத்து மாளலேப்பா… இந்த நோட்டுலே, வெத நெல்லு, உரம், பூச்சி கொல்லி, கரண்டு சார்ஜ் ஆனவகையிலே ஆன செலவு எல்லாம் தேதி வாரியா இருக்கு. அறுப்பு முடிஞ்சுடுச்சி. இதான் கொள்முதல் வெலை. எனக்கு லாபம் கிடைக்குமான்னு கொஞ்சம் பாத்து சொல்லுப்பா”

” எங்க கொண்டாங்க பாப்பம்” என்று சொல்லி, ஸ்பெரெட்ஷீட்டில் கணக்கு போட்டு சொன்னால், கம்ப்யூட்டரைஸ்ட் அக்கௌண்ட்டிங் அறிமுகமாகும். ” இங்க பாருக்கு அப்பச்சி, இந்த கணக்கு இங்கிட்டு, உங்க பேர் போட்ட ஒரு பொட்டிலே ( folder) பத்திரமா வெச்சிருக்கேன். எல்லாராலையும் பாக்க முடியாது. பூட்டி வெச்சிருக்கேன் ( password protection) . நாளைக்கு எதுனாச்சும் கணக்கு வழக்கு புடிபடலேன்னா சொல்லுங்க.. மறுபடியும் தெறந்து பார்த்து, ஒரு வழி பண்ணிப்புடுவம்” என்று சொன்னால், கணிணியில் முக்கிய தகவல்களை சேமித்து வைப்பதினால் கிடைக்கும் பலன்கள் பற்றிய அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கும்.

” இன்னா தம்பி… எல்லாம் இங்கிலீஸ்லேயே இருக்கு… ஒண்ணும் புரியமாட்டிங்குது…. இது தமிழ்லே கிடையாதா?”

” என்ன அப்படி சொல்லிப்பிட்டிய… தமிழ்லே ஒரு கடுதாசி எழுதணுமா? வாங்க … நம்ம புள்ளைங்க நெறைய பேர், மலேயா , சிங்கப்பூர் அமெரிக்கான்னு வெளிநாட்டுலே இருந்துகிட்டு, இந்த வேலையெல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்க. இதப் பாரு ஆத்தா… இது பேர் கலப்பை. இது இருந்தாக்கா, தமிழ்லே விளையாடலாம்…”

இந்த சமயத்தில் local language computing அறிமுகமாகும்.

ஆனால், இதற்கெல்லாம் அடிப்படை, அனைத்து கிராமங்களையும் இணைக்கும் ஒரு நெட்வொர்க். ப்ல்லாயிரம் நோடுகளைக் கொண்ட அந்த நெட்வொர்க், தொலைத்தொடர்பு வசம் ஏற்கனவே பிசிஓ என்றபெயரில் இருக்கிறது.

தயாநிதி மாறன், அங்கிருந்து தன் சோதனை முயற்சியைத் துவங்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s