போடுங்கம்மா ஓட்டு…

தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

என்ன ஆகும்?

சுவர் எங்கும் போஸ்டர் தென்படும் . தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் மட்டும் இந்தியா ஒளிரும். psephologists என்று சொல்லப் படும் தேர்தல் நிபுணர்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். மணிப்பிரவாள ஆங்கிலத்தில் பிரணாய் ராயும் குழுவினரும், அரசியல் வாதிகளைக் ஸ்டுடியோவில் கூட்டிக் கொண்டுவந்து கலாய்ப்பார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு பக்கம் மாலன், ஏ.எஸ்.பன்னீர் செல்வமும், மற்றொரு பக்கம் சுதாங்கன், ரபி பெர்ணாடும். கபில்சிபலும், அருண் ஜேட்லியும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து காச்மூச்சென்று கத்தி விவாதம் செய்வார்கள். நிகழ்ச்சி முடிந்ததும், ஒன்றாக உட்கார்ந்து டீ சாப்பிடுவார்களாயிருக்கும்.

சீட்டு கிடைக்காதவர்கள் கட்சி மாறுவார்கள். ஒலிப்பெருக்கியில் பிரச்சாரக்குரல் வந்து உங்களைத் துயிலெழுப்பும்., அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி யாராவது பிரச்சாரம் செய்கிறார்களா என்று லிங்டோ கையில் பிரம்புடன் சுற்றி வருவார். ‘ படவா தொலைச்சுபுடுவேன்’ என்று மிரட்டுவார். விக்டிம் பிஜேபி ஆளாக இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் குருமூர்த்தி கட்டுரை எழுதுவார். அதனை trackback செய்து,

அடுத்த வாரம் துக்ளக்கில் கட்டுரை எழுதுவார் சோ.ராமஸ்வாமி. ‘ உங்கள் ஓட்டு கொலைகாரனுக்கா, அல்லது கொள்ளைக் காரனுக்கா ? என்று கேள்வியை வைப்பார்.

எதிர்கட்சிக்கு ஜெனரேட்டர் போட்டும், ஆளுங்கட்சிக்கு, மேலே போகும் ஹை டென்ஷன் கம்பியில் இருந்து மின்சாரம் உருவப்பட்டும் பொதுக்கூட்டம் போட்டு மாநாடு நடக்கும். பிரியாணி பொட்டலங்கள் இறைபடும். வண்ணை ஸ்டெல்லாக்களும், தீப்பொறி ஆறுமுகங்களும், வேறு பெயரில், வேறு உருவத்தில் வந்து பே(ஏ)சுவார்கள்.எம்ஜிஆருக்கும், அண்ணாவுக்கும், காமராஜருக்கும் நிறைய பூமாலைகள் கிடைக்கும்.

எலக்ஷன் நெருங்கும். தேர்தல் பூத்கள் நிறைய தென்படும். எவனுக்காகவோ, அவனும் இவனும் அடித்துக் கொள்வார்கள். இவ்விடம் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டை, நாயர், மீண்டும் துடைத்து வைத்து விட்டு சாயா வியாபாரத்தை தொடருவார். அல்லது மம்மூட்டியின் சேதுராமய்யர் CBI படம் பார்க்க, 27-D பிடித்து சத்யம் சினிப்ளெக்ஸ் போவார்.

எலக்ஷன் நடக்கும். நடிகை சினேகா ஓட்டுப் போட்டார் என்று தினத்தந்தியில் நாலுகலரில் படம் போட்டு இளசுகளின் தூக்கத்தைக் கெடுப்பார்கள். கனவான்கள் எல்லாரும், மற்றொரு நாள் விடுமுறை என்று நினைத்து, சன்டீவியில் சப்தஸ்வரங்கள் பார்ப்பார்கள். ” The apathetical condition of Indian Democracy ” என்று ஹிந்துவில் லெட்டர் டு தி எடிட்டர் எழுதுவார்கள். ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, போர்ட்ரூம் டிஸ்கஷனிலும், பொதுவிடங்களிலும் பேசுவார்கள்.

பாராளுமன்றம் தொங்கினால், குதிரை வியாபாரம். ஒற்றை சீட்டு எம்பிக்கு கூட மந்திரிப் பதவி கிடைக்கும். அதிர்ஷடம் இருந்தால் காபினட் அந்தஸ்து. ஆட்சியைப் பிடித்ததும் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம் என்று சூளுரை கிளம்பும். அவ்வப்போது GDP ஐயும் கண்டு கொள்வார்கள்.ஆளுக்காள் செல்போன் வைத்துப் பேசுவதை வளர்ச்சி என்பார்கள். பட்ஜெட்டுக்கு பட்ஜெட் defecit அதிகரிக்கும். ஒரிசாவில் பட்டினியில் மாங்கொட்டைகளை சாப்பிட்டு , ஏழை பாழைகள் உயிர் விட, உணவுக் கழகத்தின் கிட்டங்கிகளில் தானியம் அழுகி வீணாகும்.

கண் மூடித் திறந்தால் அடுத்த எலக்ஷன் வந்து விடும்.

என்ன நடக்கும்?

GO TOP

நம்ம தேசத்தைக் காப்பாற்ற ஒருத்தருமே இல்லியா?

அன்புடன்

பிரகாஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s