அசோகமித்திரனின் இசை அனுபவங்கள்.

அசோகமித்திரனின் இந்தக் கட்டுரை, அசோகமித்திரன் கட்டுரை மாதிரியே இல்லையே என்று யாருக்கும் தோன்றலாம். இருக்காதுதான். அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை, நானாகப்படவன் as it is தமிழ்ப்’படுத்தினால்’ அப்படி இருக்காதுதான்.

பொறுத்தருள்க.:-)

***********

அசோகமித்திரனின் இசை அனுபவங்கள்.

இசையுடனான என் முதல் பரிச்சயமே ஆழ்வார் என்பவரோடுதான். செகந்திரபாத்தில் இருந்த போது என் சகோதரிகளுக்கு இசைப் பயிற்சி அளித்தவர் ஆழ்வார். ஆனால் அவருக்கு காது கேட்காது. எனக்கு அப்போது ஆறுவயது இருக்கும். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். பஞ்சகச்சம் , உச்சிக் குடுமி சகிதம், ஒரு பையுடன் சர்வஜாக்கிரதையாக ரோட்டில் நடந்து வருவார். ஹார்மோனியத்தை கையில் எடுத்ததுமே, அவர் வேறு ஆள் மாதிரி மாறிவிடுவார். எப்படி, காது கேட்காத போதும் , இது போல சுருதி பிசகாமல் பாடி, சொல்லிக் கொடுக்க முடிகிறது என்று எனக்கு வியப்பாக இருக்கும். பின்னாளில், பீதோவன் என்கிற மகா இசைக்கலைஞரும், காது கேளாதவர் என்று அறிந்த போது, என்னால் ஆழ்வாரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பாடம் படிக்கும் போது, யாராவது சுருதி விலகிப் பாடினால் பின்னி எடுத்துவிடுவார். என் சகோதரி, அவரிடம் இது போல அடிவாங்கினால் கூட, என் அம்மா, என் சகோதரியைத்தான் குற்றம் சொல்லுவார். ஆழ்வாரை கோபிக்க மாட்டாள். நான் தூரத்தில் இருந்து கொண்டு அவர் பாடியதைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவரது பயிற்சி முறைகள் அவசரம் ஏதும் இல்லாமல் ரொம்ப நிதானமாக இருக்கும்.

நான் ஹைதராபாத்தில் நிறையக் கச்சேரிகளுக்கு சென்றிருக்கிறேன். ஒரு சமயம், செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரிக்கு சென்று, அந்தக் கச்சேரி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை நீடிக்க, நானும் என் அப்பாவும், பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வேண்டியதாய்ப் போயிற்று.என்னுடைய ஆறு முதல் முப்பது வயது வரை, நான் சில வகையான இசை வடிவங்கள் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்தன. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் என்.சி.வசந்தகோகிலம் அவர்களின் சில கிராமபோன் தட்டுக்களும், சில நாடகங்களும் எங்களிடம் இருந்தன. சில ஹிந்துஸ்தானி ராகங்களை கண்டு பிடிப்பதற்கென்று ஒரு கையேடு கூட தயாரித்து வைத்திருந்தோம்.

சென்னைக்கு மாற்றலாகி வந்த பின், எனக்கு எஸ்.எஸ்.வாசன் நடத்தி வந்த ஜெமினி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே இருந்த அறையில் இசை சம்மந்தமான ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இசை அமைப்பாளர்கள், புதுப்புது மெட்டுக்கள் அமைத்துக் கொண்டிருப்பார்கள். மறைந்த நடிகர் ரஞ்சன் அவர்களின் சகோதரர் வைத்தியநாதன் எனக்கு நண்பரானார். வைத்தியநாதன் அடிப்படையில் ஒரு அணு அறிவியல் மாணவர். பின்னர் இங்கிலாந்தில் மேற்கத்திய இசை பயின்றுவிட்டு, சந்திரலேகா படத்துக்கு பின்னணி இசைக் கோர்ப்பு செய்தார்.

இன்னொருவர், மாங்குடி துரைராஜ ஐயர். பிரமாதமான மிருதங்க வித்துவான். வீணை சிட்டிபாபு, தி.நகரில் நாங்கள் வசித்த தெருவிற்கு அடுத்த தெருவில் குடியிருந்தார். அவர் அவ்வப்போது ஜெமினி அரங்கத்துக்கு வந்து என்னுடன் சதுரங்கம் ஆடுவார். வாசன் அவர்கள் இல்லாத போதுதான். கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினியின் ஒரு முக்கிய அங்கம், ஒவ்வொரு மாதமும் தன் இல்லத்தில் இசைக் கச்சேரிகள் நடத்துவார். அவர் வீடு எப்போதும் ஒரு தர்மசத்திரம் மாதிரியே இருக்கும். எப்போது பார்த்தாலும் யாராவது ஒரு பத்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் சம்பாதித்தார், அதை மற்றவர்களுக்காக செலவழித்தார்.

ஒப்பனைத்துறையில் ஹனுமந்தராவ் என்ற ஒரு ஒப்பனைக்கலைஞர் வேலை செய்து வந்தார். அபாரமான இசைப் பிரியர். இசை நிகழ்ச்சிகளுக்கு என்று டிக்கெட்டுகள் வாங்கி வருவார். அப்போது சென்னையில் மூன்றே முன்று சபாக்கள் – இந்தியன் ·பைன் ஆர்ட்ஸ் சொஸைடி, சங்கீத வித்வத் சபை, மற்றும் தமிழ் இசைச் சங்கம் – தான் இருந்தன. வருடாவருடம் நடக்கும் இசை விழாவின் ஒரு முக்கிய அம்சம், வருடத்தின் கடைசி நாள் அன்று நடக்கும் பண்டிட் ரவிசங்கரின் கச்சேரிதான். சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு கச்சேரியை நிறுத்தி வைத்து, அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லுவார். எஸ்.எஸ் வாசன் அவர்கள், தன் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த காருகுருச்சி அருணாசலத்தின் கச்சேரியும் நினைவிலிருக்கிறது. சரியாக இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை வரை நீடித்தது.

என் இசைத்தாகம் 1970கள் வரை நீடித்தது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. என் சகோதரிக்கு திருமணமானதும், என் இசைப் பயிற்சியும் அத்துடன் நின்றது. பெருத்த நட்டம் தான். பிறகு முழு நேர எழுத்தாளன் ஆனதும், மற்ற ஆர்வங்களுக்கு என்னால் இடம் தர முடியவில்லை. மேலும் ஒரு ஆசாமி, ஒரே நேரத்தில் பல விஷயங்களில் ஈடுபாடு காட்டினால், எதிலுமே ஒரு முழுமை அடைய முடியாது. சபாக்களின் பெருக்கம் காரணமாக, இசை பொதுமக்களிடம் அதிக அளவில் சென்றடைந்தது. இதுவே வேறு ஒருவகையில் பலவீனமாகவும் இருக்கிறது. செவ்வியல் இசை என்பது ஆன்மீகத்தையும், சமயத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பது. இவ்விரு விஷயங்களும், நீர்த்துப் போகும் போது, இசையின் தரமும் கீழே இறங்குவதைத் தவிர்க்கவே முடியாது.

மூலம் : இந்தியன் எக்ஸ்பிரஸ், 20-டிசம்பர்-2003.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s