peN ezuththaaLarkaLil sivasankari- pAlanggaL

சகோதரிகளுக்கு மத்தியில் ஒற்றை பிள்ளையாய் ஆண்பிள்ளையாய் இருப்பதில் பல
சங்கடங்கள் உண்டு என்றாலும், அதிலே முக்கியமானது, பெண் எழுத்தாளர்களை
படித்து ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுதான். சொந்த விருப்பு வெறுப்புகள் தோன்றும் வரையிலும், நம் அருகாமையில் இருப்பவர்கள் தான் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். அந்த சூத்திரத்தின் படி, நானும், என் அருகாமையில் இருந்தவர்கள் போலவே சிவசங்கரி,லக்ஷ்மி,இந்துமதி,அனுராதா ரமணன், உஷா சுப்ரமணியன் ரமணிசந்திரன் போல உத்தமமாக எழுத ஆட்களே இல்லை என்று நினைத்திருந்தேன்.

அபிப்ராயங்கள் என்பது ‘ கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது ‘ என்ற முத்திரையுடன் தான் நம் மனதில் வந்து தங்குகின்றன. ஆனால் அது அப்போது நமக்கு தெரிவதில்லை. அபிப்ராயங்கள் மாறும்போது, முன்பு நினைத்ததை எண்ணி, சில சமயம் சிரிப்பு வரும். சில சமயம் வெட்கம்.

முந்தைய பத்தியில் நான் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எல்லாம் எங்கள் இல்லத்தின் household names. ஒரு தீபாவளி அன்று காலையில் வாசந்தியின் மூங்கில் பூக்கள் என்ற நாவலை வாசித்தது நினைவில் இருக்கிறது. வடகிழக்கில் நடக்கும் கதை. அதே போல ஒரு சமயம், தரையில் இறங்கும் விமானங்கள். கணவன், மனைவி மைத்துனன் மூவருக்குமான உறவினை நுணுக்கமாகச் சொல்லும், இந்துமதியின் கதை. இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய ‘இரண்டு பேர்’ (சிவசங்கரி & இந்துமதி ) உஷா சுப்ரமணியனின் ஒரு குறுநாவல், அனுராதா ரமணனின் தொடர்கதைகள். அமுதசுரபியில் ரெகுலராக வரும்.

இளவயசில் படித்த புத்தகங்களை மீண்டும் பார்க்க நேர்ந்தால், சும்மா எடுத்து ஒரு புரட்டிப் பார்க்கத் தோன்றும். அப்போது, சே இதையெல்லாமா படித்திருக்கிறோம் என்று தோன்றுவதும், அடடா, இதையெல் லாம் அந்த காலத்திலேயே படித்திருக்கிறோமே என்று காலரை உயர்த்தி விட்டுக் கொள்வதும் அந்த அந்த எழுத்தாளரைப் பொறுத்தது.

மற்றெல்லாரையும் விட சிவசங்கரியை சற்று அதிகமாகவே பிடிக்கும். இவரது கதையில் வரும் பல பாத்திரங்கள் தீரா வியாதியஸ்தராக இருப்பார்கள். துயரங்கள், புதுவிதமான நோய்கள் என்று அடிக்கடி வரும். அந்த sympathy aspect , அப்போது ரொம்பவும் பிடித்திருந்தது. லிபரலாக எழுதுகிறார் என்று நினைத்திருந்தேன்.

அந்த காலகட்டத்திலே, அவர் பத்திரிக்கைகளிலே சிறுகதைகளும், தொடர்கதைகளும் எழுதி வந்து,
பிரபலமாக இருந்தார். அவரது சிறுகதைகளில் இன்னும் பசுமையாக நினைவிலிருப்பது ஸ்டெப்னி என்ற சிறுகதை. குமுதத்தில் வந்தது. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளின், பிரிவில் வாடும் ஒரு தாய், தன் மகளின் வயதை ஒத்த அண்டை வீட்டுப் பெண்ணின் மீது அதீதமான அன்பு செலுத்துகிறாள். லீவுக்கு மகள் ஊருக்கு வரும் போது, அந்த தாய், அண்டை வீட்டுப் பெண்ணை அலட்சியம் செய்யும் போது, தான் ஒரு ஸ்டெப்னி மட்டுமே என்று அந்த அண்டை வீட்டுப் பெண் உணர்வதுதான் கதை. இதற்குப் பிறகும் பல கதைகள். பல தொடர்கதைகள். 47 நாட்கள், கப்பல் பறவை, அவன், பாலங்கள் என…

இதிலே பாலங்கள் மிக முக்கியமானது. இது தொடர்கதையாக வந்த போது, மூன்று நான்கு பேர் படிக்கும் வரை , நகம் கடித்துக் காத்திருந்து, பதை பதைப்புடன் படித்திருக்கிறேன். மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகளை தொடராக எழுதியிருப்பார். 1907-1931., 1940-1964, 1965-1985 என்ற மூன்று காலகட்டத்தில் நடக்கும் மூன்று வெவ்வேறு கதைகளின் மைய இழையானது , பாட்டி, பேத்தி என்ற உறவுமுறைக்குள் ஏற்படும் தலைமுறைசிக்கல் தான். ஒரு வாரம் ஒரு கதை. இரண்டாவது வாரம் இரண்டாவது கதை, மூன்றாவது வாரம் மூன்றாவது தலைமுறை என்ற ரீதியில் என்று வந்தாலும், குழப்பம் இல்லாமல் இருக்கும். முதல் தலைமுறைக் கதையில் வரும் ஏகப்பட்ட விவரங்கள் வரும், ஒரு பிராமணக் குடும்பத்தில் நிகழும் பால்யக் கல்யாணம் (பெண்ணுக்கு ஏழு வயது, மாப்பிள்ளைக்கு 11 வயது) , பிள்ளை பெறுதல், சடங்குகள், சம்பிரதாயங்கள்,நுணுக்கமான குறிப்புகள் என்று ஏராளமாக வரும். இவை எத்தனை தூரம் ஆதென்டிக் என்று தெரியவில்லை,.என்றாலும் படிக்க சுவையாயிருந்தது. இம்மாதிரி சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து விலக யத்தனிக்கும் இரண்டாவது தலைமுறையின் கதை, அவற்றை அறவே ஒழித்துக் கட்டும் மூன்றாவது தலைமுறையின் கதை என்று முப்பத்து நான்கு வாரங்கள் வந்த தொடர். வித்தியாசம் காட்ட, முதல் கதைக்கு கோபுலுவின் ஓவியம் ( முதல் தலைமுறைக் கதையில் வரும் குட்டிமாப்பிள்ளையையும், குட்டியூண்டு பட்டமாவையும், விவாகத்துக்காக அப்பாக்கள் தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஓவியம், இன்னமும் மனசிலேயே நிற்கிறது) இரண்டாம் தலைமுறைக் கதைக்கு மணியம் செல்வன், மூன்றாவது தலைமுறைக்கு, ஜெயராஜின் ஓவியம்.

இந்தக் கதையை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சும்மா காலச்சுவடுவையும், உயிர்மையையுமே, அசோகமித்திரனையும் மட்டுமே படித்துக் கொண்டிருந்தால், உடம்புக்கு ஏதாவது தொந்தரவு செய்யப் போகிறதே என்று ஒரு சேஞ்சுக்காக, முதல் அத்தியாயத்தை படித்தால், முழுக்கதையையும் படிக்கும் படி நேர்ந்துவிட்டது. முதலில் படித்த போது இருந்த சுவாரஸ்யத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், தற்போதைக்கும் அதே போல இருந்தது.

பாலங்கள் மட்டும்தான் அப்படியா அல்லது முன்பு விரும்பிப் படித்த அவரது மற்ற கதைகளும் அப்படித்தானா என்று, நேரம் கிடைத்தால் சோதித்துப் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s