வாழ்வை திசை திருப்பிய கணங்கள்.

தங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்வது இன்ஷ¥ரன்ஸ் ஏஜெண்ட்டுகள் மட்டும்தான் என்று ‘ஒருத்தர்’ சொல்வார்.

கல்லூரியில் படித்து விட்டு, வேலை என்ற ஒன்றை பார்த்தாகவேண்டும் என்ற நினைப்பு வந்த பின், சென்றது ஒன்றிரண்டு நேர்முகத்தேர்வுகள்.

ஒன்று சத்யம் தியேட்டர் பக்கத்தில் இருந்த ‘ தமிழ் கம்ப்யூட்டர் ‘ என்ற பத்திரிக்கை அலுவலகம். எனக்கு எழுதத் தெரியாது . ஆனால் படித்தது கணிணி என்பதால், சும்மா கல்லை விட்டுப் பார்க்கலாம் என்று சென்றேன். அப்போது, குமுதத்தில் கணிப்பொறி பற்றிய தொடர் வந்து கொண்டு இருந்தது. டிஷ்நெட் அதை ஸ்பான்ஸர் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். கன்கார்டியா பல்கலைக்கழகமோ அல்லது வேற ஏதோவைச் சேர்ந்த பேராசிரியர், ராதாகிருஷ்ணன் ( என்று நினைக்கிறேன்). அவர் காஞ்சியை சேர்ந்தவர் என்றும் நினைவு.

நேர்முகத்திலே, நமக்கு தோதான விஷயத்துக்கு, அவர்களை இழுத்து வருவது முக்கியம் என்பது எனக்கு ஏற்கனவே சொல்லப் பட்ட பாடம். குமுதம் கட்டுரையைப் பற்றி லேசாக போகிற போக்கில் குறிப்பிடவும், அவர் ஆர்வமுற்று, அது தொடர்பாக சில கேள்விகள் கேட்க, கிட்ட தட்ட பத்திரிக்கையுலகில் புகுந்து விட்டேன் என்றே நினைத்தேன். பேட்டி முடிந்த போது, எலெக்ட்ரானிக்ஸ் ·பார் யூ ‘ என்ற ஆங்கில சஞ்சிகையில் இருந்து ஒரு வியாசத்தை மொழி பெயர்த்துக் கொண்டு வரச் சொன்னார். இரண்டு நாள் அவகாசமும் கொடுத்தார்.
அவர்தான் அந்த பத்திரிக்கையின் எடிட்டர் என்றும் தெரிந்தது. எனக்கு அப்போதே, தொரந்தோ வெங்கட்,இராம.கி. ஐயா போன்றவர்களின் நட்பு இருந்திருந்தால், அவர்கள் உதவியுடன் ஒழுங்காக மொழிபெயர்த்துக் கொடுத்து, எனக்கு வேலையும் கிட்டி இருக்கும். அவர்கள் இருவரும் எனக்கு ஏன் முன்னமே அறிமுகமாகவில்லை என்று மிகத் தாழ்மையுடன் அவர்களை பார்த்துக் கேட்கிறேன்.

பிறகு, இன்னொரு கணிப்பொறி இதழ் ( ஆங்கிலம் ) dataquest ஆ அல்லது pcworld ஆ என்று
நினைவில்லை. மவுண்ட் ரோடு குணா பில்டிங், சுவாமிஸ் கேப் பக்கத்தில் ( இந்த ஓட்டலில் மதியம் பன்னிரண்டு, ஒரு மணிக்கு தயிர்சாதம் கிடைக்கும். சாப்பிட்டு இருக்கிறீர்களா? காரட்டெல்லாம் போட்டு அபாரமாக இருக்கும். லேட்டாய் போனால் கிடைக்காது) இருக்கும் கட்டிடத்தில், மூணாவது மாடியில் , ஒரு டை கட்டின அன்பர் பேட்டி எடுத்தார். நான் இதற்கு முன் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதியிருக்கிறேனா? என்று கேட்டார். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எனக்கு தெரியும். இரண்டு பேப்பர் கட்டிங்குகளை காட்டினேன். சபரிமலையில் மகரவிளக்கை , பித்தலாட்டம் என்று ஒருத்தர் week இல் எழுதியிருந்ததைக் கண்டித்து நான் எழுதி, மறுவாரம் பிரசுரமான ஒரு கடிதம் ( தலைப்பு, it is not hoax), மந்தைவெளி பஸ்ஸ்டாண்டில், மழைநாளில் தண்ணீர் தேங்குவதைப் பற்றியும் ,அதன் தீமைகளைப் பற்றியும் நான்
அரைப்பக்கத்துக்கு எழுதி, அதில் இருந்த ஒன்பது வரிகளை மட்டும் பிரசுரித்த ‘தி ஹிந்துவின்’ கட்டிங்கையும் ( தலைப்பு நினைவில்லை) எடுத்து நீட்டினேன். இரண்டு விரல்களால் ( ·போர்செப்ஸ் மாதிரி ) எடுத்து, தன் பேட் மேல் வைத்துக் கொண்டார். டெல் மீ அபவுட் யுர்செல்·ப் என்றார். அந்த கேள்விக்கு நான் அளித்த பதில் தான் எனக்கு அந்த வேலையை கிடைக்காமல் செய்து விட்டது.

ஒரு மாதத்துக்குள்ளாகவே, மூன்றாவதும் கடைசியுமான நேர்முகம். அது அத்தனை சுவாரஸ்யமில்லாதது. போனேன். கேட்டார்கள். பதில் சொன்னேன். வேலை கிடைத்து விட்டது. அதுவும் ஒரு பத்திரிக்கை வேலைதான். ஆனால்,அந்த பத்திரிக்கை, வாழைப்பழம் நிரோத் இன்னபிறவற்றுடன், கடைகளில் கிடைக்காது. அதிலே தொடர்கதைகள் வராது. கூட ஷாம்பூவும், பொடிமட்டையும் இலவச இணைப்பாகக் கிடைக்காது. பொருளாதாரம் தொடர்பான, ஒரு ஆங்கில ·பார்ட்நைட்லி. பல ஊர்களுக்கும் சேர்த்து நான் தான், நிருபன், ரிப்போர்ட்டன். காஷ்மீரமும்,, வடகிழக்கும் தவிர்த்து அத்தனை மாநிலங்களிலும் பயணம் . பல சுவாரஸ்யமான , நினைவுகள்
சம்பவங்கள்.

கையைக் கட்டி ( கூடவே டையை கட்டியும் ) வேலை பாத்தது போதுண்டா சாமி என்று, ஒரு சின்ன, சொந்த கல்லாப் பெட்டி முன், உட்காரும் அந்த விருப்பம் என் மனதிலே எந்த கணத்தில் தோன்றியிருக்கும் என்று நினைத்துப் பார்க்க எப்போதும் முயற்சி செய்வேன்.

எப்போதும் தோல்விதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s