Prakash’s Chronicle 2.0

‘mood : amaithi’ பகுப்பில் உள்ள வரவுகள்

Thank you sir, for everything

பெப்ரவரி 27, 2008 · 16 மறுமொழிகள்

செய்தியைக் கேட்டு, ஜீரணித்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டு யோசிச்சதிலே, ஒரு உண்மை பளிச்சுன்னு புலப்பட்டுச்சு.

எனக்கும், சுஜாதாவுக்கும் நடுவிலே இருந்தது, பரிபூரணமான எழுத்தாள – வாசக உறவு மட்டும் தான். அவர் பொதுவிலே விலே சொன்ன விஷயங்களைத் தாண்டி, அவரைப் பத்தி , வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இது போல ஒரு எழுத்தாளரின், முதுமை காரணமான மறைவுக்கு, இது வரைக்கும், இத்தனை தூரம் கலங்கியதில்லே. அதுவே சுஜாதா , எனக்கு ‘வெறும்’ எழுத்தாளராக மட்டுமே இருக்கலைங்கறதைச் சொல்லுது.

ஒரு தரம், நேர்ல பாத்து பேசியிருக்கேன். மூணு தரம் மின்னஞ்சல் மூலமாத் தொடர்பு கொண்டு பேசியிருக்கேன். மத்த தொடர்பெல்லாம் அவரோட படைப்புகள் மூலமாத்தான். அவரை நேர்ல பாத்து பேசறதை விடவும், அவரோட படைப்புகள் மூலமா, நிறையத் தெரிஞ்சுக்கலாங்கறது என் எண்ணம்.

சில சமயம், என்னை நானே கேட்டுக்கறதுண்டு, இன்டெரெஸ்டிங்கா எழுதறாரே அதனாலேதான், அவரைத் தொடர்ந்து வாசிக்கறனோ, தலைல தூக்கி வெச்சிகிட்டு ஆடறனோன்னு, ஆனா, அது உண்மை இல்லை.

பின்ன என்ன காரணமா இருக்கும்?

சீரியஸ் எழுத்து போரடிக்கற மாதிரியாத்தான் இருக்கணுங்கற மரபை உடைச்சு, என்ன மாதிரி, குமுதம் கல்கண்டு ஆசாமிங்களுக்கும் இலக்கிய வாசனை ஏற்படுத்தி, அவரையே ‘விமர்சனம்’ செய்யற லெவலுக்கு ஏத்தி விட்டதுனால இருக்குமோ?

அறிவுஜீவிகள் எல்லாம், தாங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கிறோம், என்ன மாதிரி இசையை ரசிக்கிறோம், எந்த படங்களைப் பார்க்கிறோம், என்கிற ட்ரேட் சீக்ரட்டை எல்லாம் ஒளிச்சு வெச்சு, தங்கள் லெவலை மெய்ண்ட்ய்ன் செய்த காலத்துல, எல்லாத்தையும் பளிச்சுன்னு, கணையாழிக் கடைசிப்பக்கம், நீர்க்குமிழின்னு போட்டு உடைச்சு, பல புதிய வாசல்களைத் திறந்து விட்டதுக்கா இருக்குமோ?

இந்த இளைஞர் கவனிக்கப்பட வேண்டியவர், பின்னாளில், பெரிய ஆளாக வருவார் ன்னு, சரியா முப்பத்து அஞ்சு ஆண்டுகளுக்கு முன்னாலே, கமலஹாசன் பத்தி சொன்னதுக்கா இருக்குமோ?

தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், சுப்ரமணியராஜு, சுந்தர.ராமசாமி, வண்ணநிலவன் தொடங்கி, பல எழுத்தாளர்களை நெஞ்சுல தைக்கிற மாதிரி அறிமுகம் குடுத்து, ‘ என்னத் தவிர, இன்னும் பல பேரும் நல்லா எழுதறாங்க், போய்ப் படிங்க’ ன்னு சொன்னதாலே இருக்குமோ?

பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் உட்லண்ட்ஸிலே, போண்டா வடையுடன் சந்தித்திருந்தாலும், என்னை மட்டும் குறிப்பாக நினைவில் வைத்து எழுதுனதாலே இருக்குமோ?

ஆர்.எஸ்.மனோகரின் சரித்திர நாடகங்களுக்கும், மைலாப்பூர் தயிர்வடைகளுக்கு இடையில் தமிழ்நாடகங்கள் சிக்கிக் கொண்டு இருந்த காலகட்டத்துலே,’ டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ போன்ற off-beat நாடகங்களை கொடுத்ததற்காக இருக்குமோ?

தெரியலை…. எல்லாம் ஒரே ப்ளாங்க் ஆ இருக்கு…

எது எப்படியோ, வாழ்க்கையிலே உங்களை மறக்கவே முடியாதுங்க சார்…

உங்க ஸ்டைலிலேயே சொல்றதுன்னா,

நன்றி! யாவற்றுக்கும்,.

********

சுஜாதா குறித்து முன்பு எழுதியவை :

சுஜாதா இனி இல்லை (:-

‘Duplicate’ sujatha

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

கடிதங்கள்

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் – சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்

Happy Birthday Sir….

பகுப்புகள்: Sujatha · mood : amaithi