Prakash’s Chronicle 2.0

‘Mis-adventure’ பகுப்பில் உள்ள வரவுகள்

கிசுகிசு அல்ல உண்மை :-)

டிசம்பர் 5, 2007 · 31 மறுமொழிகள்

ஆமாம்.

திடுதிப்பென்று ஏற்பாடு நடந்து உடனடியாக நிச்சயமும் நடந்து முடிந்துவிட்டது. பிப்ரவரி பதினெட்டாம் தேதி வரையிலும், இஷ்டப்படி இருந்துக்கோ அதுக்குப் பிறகு கஷ்டப்படு என்று தீர்ப்பும் எழுதிவிட்டார்கள் :-) .

திருமணத்தை பப்ளிக்கா சொல்லிக்கலாம், இதை ப்ரைவேட்டாகப் பண்ணுவோம் என்று அட்ரஸ் புஸ்தகத்திலும், சிம் கார்டிலும் சேமித்து வைத்த நண்பர்கள் மின்னஞ்சல்/ தொலைபேசி எண்களுக்கு மட்டும் தகவல் சொல்ல முடிந்ததில், எல்லோரும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். கிடைத்த வாழ்த்துக்களில் என்னைக் கவர்ந்தது, நீண்டநாள் வலைநண்பர் ஒருவர் அருளிய திருவாசகம்…

‘ஒரு வருஷம் கொஞ்சம் பேஸ்த் அட்ச்சா மாதிரிதான் இருக்கும். அப்பறம் பழகிரும்… :)

நெட்டுப் பக்கமே வராம இருந்த இந்த ஒருவாரத்திலேயே இது பளிச்சுன்னு தெரிஞ்சு போச்சு :-)

எப்படின்னல்லாம் கேக்கப்படாது :-)

பகுப்புகள்: Mis-adventure · Personal · Summa · strictly personal

மவனே… ஒனக்கு இதெல்லாம் தேவையா?

பெப்ரவரி 12, 2006 · 9 மறுமொழிகள்

கோவை குறும்பட பயிற்சிப் பட்டறையில் எடுத்த பயிற்சிப் படம் இங்கே.. ( டைட்டில் கார்டை நல்லா உத்து பாருங்க )

யூ ட்யூபிலே நூறு மெகா பைட்டுக்கு மேலே ஏத்த முடியாது. அதனாலே, ஏதோ ஜிகிடி வேலை செஞ்சு, கோப்பு அளவை குறைச்சு ஏத்தியிருக்கிறேன். ஒளி/ஒலிபரப்பு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்..

படம் கையிலே கிடைச்சு மூணு நாலு மாசத்துக்கு மேலே இருந்தாலும், யார் கிட்டவும் போட்டுக் காட்ட தெகிரியம் வரலை… யாராச்சும் பார்த்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியலை.. ஆனால், என் மனசாட்சி என்ன சொல்லுச்சு தெரியுமா?

இந்த இடுகையின் தலைப்பை இன்னுமொரு முறை படிங்க…

பகுப்புகள்: Mis-adventure · Video

கோ.கு.ப.பட்டறை – இறுதிப்பகுதி

அக்டோபர் 5, 2005 · 11 மறுமொழிகள்

இரண்டாம் நாள், இயக்குனர் அருண்மொழி அவர்கள் காமிரா குறித்த அடிப்படை விஷயங்கள் பற்றி பாடம் நடத்தினார்.அருண்மொழி சென்னைத் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். காணிநிலம், ஏர்முனை என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அருண்மொழியின் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருந்தது. திரையிலே சில காட்சிகளை காண்பித்து நேரடியாக விளக்கம் அளித்தார். புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்த விஷயங்களை, அவரே படம் பிடித்து அப்போதே திரையில் போட்டுக் காட்டி விளக்கினார். மேடையிலே நின்று கொண்டு மட்டுமே உரை நிகழ்த்தாமல், அங்கங்கே மாணவர்களிடம் வந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். காமிரா கோணங்கள் பற்றி நன்றாகப் புரிந்த மாதிரி இருந்தது. பிறகு கேள்வி நேரம்.

மதிய உணவுக்குப் பின், குழுவுக்கு ஒரு காமிராவைக் கொடுத்து அனுப்பி வைக்க, நாங்கள் எங்கள் குழுவினர் என்ன எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கினோம். முதலிலே குறும்படம் எடுக்கலாமா அல்லது ஏதாவது ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று சிந்தித்து, குறும்படம் எடுப்பதுதான் எளிது என்று முடிவு செய்தோம். சிவகங்கையில் இருந்து வந்திருந்த பாரிராஜா ( இவர் சிற்றிதழ்களில் கவிதை எழுதுபவர், ஒரு ரசாயன ஏஜென்சியிலே விற்பனைப் பிரதிநிதியாக இருக்கிறார்) ஒரு கதை சொன்னார். அது உடனடியாக நிராரிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வந்திருந்த சேக்கிழார் ( இவர், சென்னை சட்டக்கல்லூரி மாணவ நண்பர்களுடன் இணைந்து சிறுபத்திரிக்கை நடத்தி கையைச் சுட்டுக் கொண்டவர், தற்காலிகமாக அடையாறு வசந்த பவனிலே சூப்பர்வைசர் வேலை பார்க்கிறார்) சொன்ன கதையை, முழுநீளத் திரைப்படமாகத்தான் எடுக்க முடியும். ஒளிப்பதிவாளர் கோவில்பட்டி சரவணக்குமார், தனக்கு சுத்தமாக story sense கிடையாது என்று நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டார். நானும் ஒரு கதை சொன்னேன். கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர் பற்றிய ஒன்லைன். அங்கிருந்த வசதிகள் கொண்டே அதை எடுக்க முடியும் என்றாலும், வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த எங்கள் குழுவினர் யாரும் ( நான் உள்பட) அந்த பிச்சைக்காரர் பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆக அதுவும் நிராகரிக்கப்பட, பின்னர், அறிவுமதி அவர்களின் கவிதை ஒன்றை, அப்படியே காட்சிகளாகப் படம் பிடித்துக் காட்டலாம் என்று முடிவு செய்தோம். எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குத் தேவைப்பட்ட பொருட்கள், சூழ்நிலை, எதுவும், அந்த குறைந்த நேரத்தில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us

ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று காமிராவுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த போது, ஊர்க் கோடியிலே ஒரு தச்சுக்கூடம் மாதிரி ஒன்றைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். அங்கே எழுபத்த்து இரண்டு வயதுக் கிழவர் ஒருவர் தனியாக உட்கார்ந்து தேர் ஒன்றை ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். பாதி முடிந்த தேர், அருகிலே ஒற்றை ஆளாக அமர்ந்து சின்ன சின்னதாக யாளிகளைச் செதுக்கிக் கொண்டு இருந்த காட்சி, எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அவரிடம் பேசி, அதை அப்படியே ஒரு ஆவணப்படமாக எடுக்கலாம் என்று உடனடியாக முடிவு செய்ய, நான் உடனடியாக , அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை எழுதினேன். அவரிடம் பேச்சுக் கொடுத்து , கேள்வி கேட்க, சுற்றி சுற்றி வந்து நுணுக்கமாகப் படம் பிடித்தார் ஒளிப்பதிவாளர். தனித்தனியான பல காட்சிகளையும் படம் பிடித்தோம். சுமார் முப்பத்து ஐந்து நிமிடம் படம் பிடித்துவிட்டு, கிழவருக்கு நூறு ரூபாய் கொடுத்து விட்டு, வந்தோம்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள், ஆளாளுக்கு காமிராவைக் கையில் வைத்துக் கொண்டு ஊரையே கலங்க அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பேருந்தில் ஏறி நடத்துனரிடம் அனுமதி வாங்கி, பஸ்ஸில் ஏறுகிற காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசன் அவர்களின் மகன் ( ஏழு வயதுச் சிறுவன்), கந்தல் சட்டை போட்டுக் கொண்டு ரோட்டிலே குப்பை பொறுக்குவதை இன்னொருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நாகர்கோவிலில் இருக்கும் ஒரு திரைப்பட இயக்கத்தில் இருந்து வந்து செல்வலட்சுமி ஒரு மூலையில் உட்கார்ந்து கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தார் ( pre-marital sex பற்றிய ஒரு குறும்படம் தயாராகிக் கொண்டிருந்தது ). தஞ்சையில் இருந்து வந்திருந்த தமிழ்ப்பேராசிரியர்கள் அம்சவேணியும், திலீப்குமாரும், ஒரு திடீர் நடிகருக்கு வசனத்தைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கணுவாய் கிராமம், ஒரு சின்ன திரைப்பட நகரம் போலத் தோற்றமளித்தது.

நாங்கள் எடுத்த திரைப்படத்தை அன்று இரவுதான் எடிடிங் செய்ய முடிந்தது. கேம்கார்டர் மைக் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் தெளிவாகக் கேட்க முடியாததால், அந்த ஒலிப்பதிவை வெட்டி எறிந்து விட்டோம். பிறகு அதே காம்கார்டர் மைக் மூலமாகவே, தனியான ஒரு அறையில், குழுவில் நல்ல குரல் வளம் கொண்ட பாரிராஜா பின்னணிக் குரல் பேச, அதை பதிவு செய்து, பின் படத்துடன் சேர்த்துவிட்டோம். தொகுக்கப்பட்ட பின்னர், அந்தப் படம் , நான்குநிமிடங்களுக்கு மட்டுமே ஓடும் ஒரு படமாக வந்தது.

அன்றிரவுவும், குறும்படங்கள், ராஷமான் போன்றவை இரவு முழுதும் திரையிடப்பட்டன. வழக்கம் போலவே நான் கோவைக்குத் திரும்பிவிட்டேன். கோவையில் காசி இல்லத்தில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு.

நிறைவு நாள் அன்று காலையிலே மாணவர்கள் எடுத்த திரைப்படங்கள் போட்டுக் காட்டப்பட்டன. படம் எடுத்த குழுவினர் ஒவ்வொருவரும், மேடையிலே ஏற்றப்பட்டு, அவர்களது அனுபவங்களை இயக்குனர் அருண்மொழி கேட்டார். படத்தின் நிறை குறைகளை அலசினார். தேர்ந்தெடுத்த விஷயங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளைச் சொன்னார். இந்த நிகழ்ச்சி மதிய உணவு வரை நீடித்தது.

அதன் பின்னர் நிறைவு விழா. விழா ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி உரை தெரிவித்ததும், நிகழ்ச்சி முடிவடைந்தது.

****அப்பாடா… ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு… இனி ஒரு வாரத்துக்கு நோ பதிவு*************

பகுப்புகள்: Mis-adventure

கோவை குறும்படப் பயிற்சிப் பட்டறை – முதல் நாள்

அக்டோபர் 4, 2005 · 14 மறுமொழிகள்

சேரன் எக்ஸ்பிரஸில் அடுத்த இருக்கையில் இருந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, குறும்படம் என்றால் என்ன என்று விளக்க முயற்சித்து தோற்றமையும், கோவையில் இறங்கியதுமே, எதிர்ப்படுகிறவர்களின் முகத்திலேயே தெரியும் hospitality உம், பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி, பேருந்தில் ஏற்றிவிட்டு, சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பேசி எண்ணைக் கொடுத்த Gangotri Textiles என்ற நிறுவனத்திலே பணிபுரியும் அன்பர் ஒருவரின் இன்ஸ்டண்ட் நட்பும், இன்னபிற விஷயங்களும் இந்தக் வியாசத்துக்கு அநாவசியம். ஆகவே நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

தமிழ்நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும், குறும்பட ஆர்வலரும் இயக்குனருமான திருநாவுக்கரசு அவர்களின் நிழல் பத்திரிக்கையும் இணைந்து, ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறையை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில், கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது. குறும்படங்களில், ஆர்வமிருந்து, ஆனால், அனுபவமில்லாதவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியை, குறைந்த கட்டணத்திலே ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் எடுப்பது பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் தருதல், பயிற்சி வகுப்புக்கள் நடத்துதல், அடிப்படையான தொழில்நுட்ப விவரங்கள் பற்றி விளக்கங்கள் தருதல், பிற புகழ் பெற்ற இந்திய , வெளிநாட்டு குறும்படங்களையும், முழுநீளத்திரைப்படங்களைத் திரையிடுதல், பயிற்சிப் படங்களை எடுக்க வைத்தல் போன்றவை.

தமிழ்நாட்டில் இருந்து அனேகமாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும், சுமார் நூற்று நாப்பது பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, நான் எதிர்பார்த்தைவிடவும் அருமையாக நிகழ்ந்தது. ராஜபாளையம், குமரி மாவட்டம், தஞ்சை மாவட்டம் போன்றவற்றில் இருந்து அதிகமானோர் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து Chennai Film School என்ற பயிற்சிப் பள்ளியில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. வந்திருந்தவர்களில், பெரும்பான்மையானோர், ஏதேனும் ஒரு திரைப்பர சங்கங்களில் தொடர்புடையவராகவே இருந்தனர். காட்சி ஊடகம் பயிலும் மாணவர்களும் ஒரு கணிசமான அளவில் வந்திருந்தனர். சும்மா வேடிக்கை பார்க்கப் போன என்னைப் போன்ற சிலரும் இருந்தனர். தங்கும் வசதி பற்றாக்குறை காரணமாக, பெண்கள் விண்ணப்பங்களை, இம்முறை ஏற்க இயலவில்லை என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசன் அவர்கள் தெரிவித்திருந்த போதிலும், தங்கள் பொறுப்பிலேயே, சுமார் பத்துப் பெண்கள் வந்திருந்தனர்.


முதல் நாள் நிகழ்ச்சியில், வாழ்த்துரை, வரவேற்புரை ஆகியவை முடிந்த பின்னர் முதல் அமர்வு துவங்கியது. இந்த அமர்விலே, நிழல் திருநாவுக்கரசு அவர்கள் குறும்படங்கள் வரலாறு பற்றிய ஒரு உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் கேள்வி நேரம். பங்கு பெற்றவர்கள், குறும்படங்கள் , ஆவணப்படங்கள் எடுப்பது பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர். குறிப்பாக, ஒரு ஏழெட்டுப் பேர் மட்டுமே அதிகமாகக் கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்கு குறும்படங்கள் எடுப்பதிலே முன் அனுபவம் இருந்தது என்று தெரியவந்தது.


உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது. இந்த அமர்விலே, சின்னத்திரை இயக்குனர் கவிதாபாரதி, திரைக்கதை அமைப்பு பற்றிய பாடம் நிகழ்த்தினார். இந்த வகுப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவர், பிரபல திரைப்படக்காட்சிகளை உதாரணமாக வைத்து, திரைக்கதை கட்டமைப்பின் அடிப்படைகளை விளக்கியது நன்றாக இருந்தது. எளிதிலே புரியவும் செய்தது. ஒரு கதையை முடிவு செய்த பின்னர், அந்தக் கதையை திரைக்கதையாகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று படிப்படியாக விளக்கினார். ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, அதன் திரைக்கதை எப்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று அழகாக விளக்கினார். அதன் பின்னர் கேள்வி நேரம். இந்தக் கேள்வி நேரம் மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது. பொதுவாக முழுநீளத் திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பைப் பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டன. நானும் ஒரு சில கேள்விகள் கேட்டேன்.

இது முடிந்த உடன், வந்திருந்த அனைவரும் மொத்தம் பதிமூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும், காமராவை கையாளத் தெரிந்த ஒருவர், குறும்பட இயக்கத்தில் ஓரளவாவது பரிச்சயம் உடைய ஒருவர், இருக்குமாறு பார்த்து குழு பிரிக்கப்பட்டது. இதன் நோக்கம், பிரிக்கப்பட்ட குழு ஒவ்வொன்றும், அடுத்த நாள் மதிய உணவுக்குப் பின், ஒரு குறும்படம் அல்லது ஆவணப்படத்தை எடுத்து, தொகுத்துக் காண்பிக்கவேண்டும் என்பதே. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளார்கள், சுமார் ஏழு காமராவையும் , இரண்டு எடிடிங் கருவிகளையும் time share அடிப்படையிலே அனைத்துக் குழுக்களுக்கும் பகிர்ந்து அளித்தார்கள். பிரிக்கப்பட்ட குழுக்கள், அனைத்தும், கும்பலாகக் கூடி, அடுத்த நாள் எடுக்க வேண்டிய திரைப்படம் பற்றி விவாதிக்கத் துவங்கினார்கள். என்னையும் தூக்கி ஒரு குழுவிலே போட்டார்கள். இரவு முழுதும், இந்தியாவிலே எடுக்கப்பட்டு, விழாக்களில் விருதுவாங்கிக திரைப்படங்களையும், பின், அயல்நாட்டுத் திரைப்படங்களான பைசிக்கிள் தீவ்ஸ் , a man with a movie camera போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்கள்.


என் குழுவில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். அதிலே, கோவில்பட்டி சரவணகுமார் என்பவருக்கு, வீடியோ கருவியை இயக்குவதில் அனுபவம் இருந்தது. அவர் திருமண விழாக்கள், கோவில் உற்சவங்கள் ஆகியவற்றைப் படம் பிடிக்கும் தொழில்முறை படப்பதிவாளர். பெங்களூரில் இருந்து வந்த கணேஷ் என்பவர், சென்ற வருடம் பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடிக் கொண்டிருப்பவர். அவருக்கு, adobe premier என்ற எடிடிங் மென்பொருளில் , வேலை செய்த அனுபவம் இருந்தது. மற்ற யாருக்கும் குறும்படம் எடுப்பதில் எந்த விதமான முன் அனுபவமும் இல்லை.

அப்போதுதான் camcorder என்கிற வஸ்துவையே, பலரும் நேரில் பார்க்கிறோம். இதை வைத்துப் படம் எடுத்துப் போட்டுக்காட்டுவதாவது என்று ஒரே கிலியாக இருந்தது. இரவோடிரவாக சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ஓடிவிடலாமா என்று கூட யோசனை இருந்தது. சரவண குமாரும் கணேஷ¤ம் தைரியம் சொன்னார்கள். நான் இரவு தங்குவதற்காகக் கோவைக்குக் கிளம்பினேன். மறுநாள் வரும் போது ஐந்து நிமிடத்திலே சொல்கிற மாதிரி ஏதாவது, கதையை யோசித்து வைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்.

அன்றிரவு கோவையிலே ‘நம்ம நண்பருடன்’ முன்னிரவு வரை ‘ தாக சாந்தி’…. இதிலே எங்கே யோசிப்ப்பது?

( தொடரும்…)

பகுப்புகள்: Mis-adventure

மூன்று நாட்கள்.

அக்டோபர் 3, 2005 · 5 மறுமொழிகள்

மூன்று நாட்களாக பயிற்சிக்குப் போயிருந்த கதை

WLL இல் இருந்த பயணச்சீட்டு, RAC க்காவது நகரும் என்று நம்பிக்கையில் செய்த முன்பதிவு ஏமாற்றி விட, ‘எப்படியாவது’ நீலகிரி எக்ஸ்பிரஸின் TTE இடம், berth வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட, ஞாயிறு இரவு முழுதும், கோவையில் இருந்து சென்னை வரை கழிவறைக்குப் பக்கத்தில் , suitcase மீது அமர்ந்து செய்த பிரயாணத்தின் களைப்பு இன்னும் தீரவில்லை.

ஆகவேண்டிய வேலைகளும் இருக்கின்றன. எழுத இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகலாம். முதலில் படங்கள். விவரங்கள் பிறகு.

பகுப்புகள்: Mis-adventure