Prakash’s Chronicle 2.0

‘Film Reviews’ பகுப்பில் உள்ள வரவுகள்

உன்னைப் போல் ஒருவன்.

செப்டம்பர் 18, 2009 · 15 மறுமொழிகள்

unnaipoloruvan

முதலில், வெள்ளித்திரையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் அண்ணன் இரா,முருகன் அவர்களுக்கு பழைய ராகாகி தோஸ்துகள் சார்பாக ஒரு பெரிய ‘ஓ’

சும்மா சொல்லக்கூடாது, மனுஷர், வசனங்களிலே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.

கதை? இந்தியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. தீவிரவாதத்தின் மேல் கோபம் கொண்டு ‘பொதுஜனங்களிலே ஒருவன்’ கோபம் கொண்டு எழுந்தால் என்னாகும் என்பதுதான் கதை.

இந்த மாதிரி ஒரு நடிகன், தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் மோகன்லால், நல்லவேளை ஆலிவுட்டில் பிறக்காமல், ஆழ்வார்ப்பேட்டையில் ஜனித்தாரே என்று பெருமிதம் கொள்ள வைக்கும் கமல்ஹாசன், இந்தக் சீஃப் செகரட்டரி கேரக்டருக்கு , இவங்களை விட்டா வேற யார் இவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்க வைக்கும் ‘மேக்கப் தூக்கலான’ லக்ஷ்மி, ஒரு டிவி ஜர்னலிஸ்ட் கேரக்டரை கண்முன்னே இயல்பாகக் கொண்டு வந்து நிறுத்தும் அனுஜா ஐயர், சீனியர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான உடல்மொழியை திரையில் பிரதிபலிக்கும் பரத்ரெட்டி (சேது), ethical hacker ஆக ஒரே சீனிலே வந்து கலக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( மணிரத்னத்தின் அந்த நாள் படங்களின் செட் பிராபர்ர்டியான குட்டி ஆனந்த்) என்று அத்தனை பேரும் கலக்கி இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமன் ( இந்தியில் ஜிம்மி ஷெர்கில் செய்த பாத்திரம்) இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்.

காவல்துறை, ஆட்சித்துறை ஆகிய அதிகார மையங்களுக்கு இடையே இருக்கும் நுண் அரசியல், அழகாக வெளிப்படுகிறது, முக்கியமான காட்சிகளின் மூலமும், வசனங்களின் மூலமும்.

தமிழ்நாட்டு மக்கள், எளிதிலே connect செய்ய இயலாத வெடிகுண்டு கலாசாரத்தை, இவர் எப்படி ‘ அமைதிப்பூங்கா’ என்று அறியப்படும் நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றித் தரப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இனிய ஆச்சர்யம் காத்திருக்கிறது, க்ளைமாக்ஸில், மோகன்லாலுக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் நீண்ட உரையாடலின் மூலம்.

கமலஹாசனை, ஏன் எல்லோரும் கமலஹாசன் என்று சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், அக்காட்சியும் உரையாடலும்.

மற்றபடி, இப்படத்தில் லாஜிக் இருக்கிறதா, இப்படத்தின் மையக்கரு, எம்மதத்திற்கு ஆதரவானது / எதிரானது, எந்த எந்த காட்சிகள், எந்த எந்த மதங்களை தூக்கிப் பிடிக்கிறது / குப்பையில் வீசுகிறது போன்ற விமர்சனங்களை எழுதித் தள்ள ஸ்கோப் அதிகம் கொடுத்ததற்காக, சம்மந்தப்பட்டவர்கள், கமலஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு முறை தலைவரிடம், தூர்தர்ஷன் பேட்டியிலே, ‘ உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டார் ஒரு ரசிகர். அதற்கு தலைவர் சொன்ன பதில், ‘ கமல்ஹாசன்’

தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.

பகுப்புகள்: Film Reviews

kanthaswamy – kodumai da saami

ஆகஸ்ட் 21, 2009 · 19 மறுமொழிகள்

கந்தசாமி

ஷங்கர் மாதிரி படங்காட்ட வேண்டும் என்று சுசிகணேசனும், புரடியூசர் தாணுவும் நினைத்ததிலே தப்பில்லை. ஆனால், கோடிகளை கொட்டி இறைத்தால் சூப்பர் ஹிட் படம் கொடுத்துவிடலாம் என்று நினைத்ததுதான் தப்பு.

அத்தனையும் வோட்கா என்று நினைத்து வெறுந்தண்ணியில் கலந்த சோடா.

கதை?

மூன்றரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தும், சத்தியமாகப் புரியவில்லை. உண்மைத்தமிழன் அண்ணாச்சி, படம் பார்த்து, ப்ரேம் பை ப்ரேம், ஷாட் பை ஷாட் விவரித்து அனுபவித்து எழுதும் பொழுது, படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு குண்ஸாகச் சொல்லணும் என்றால், இருப்பவர்களிடம் இருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் டைப் கதை.

சிபிஐயில் எஸ்பி ஆக இருக்கும் விக்ரம், இரவில் சேவல் மாதிரி முகமூடி , மேனரிசங்களுடன், சூப்பர் ஹீரோவாக, தாவுகிறார், ஓடுகிறார், சண்டை போடுகிறார். திருப்போரூரில் இருக்கும் கந்தசாமி கோயிலில் வேண்டுதலுக்காக மக்கள் பேப்பெரில் எழுதி வைக்கும் கோரிக்கைகளை, இவர் சுட்டுக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார். அதற்குப் பணம்? சிபிஐயில் ரெய்டிலே கிடைக்கும் பணத்தை தான தர்மம் செய்கிறார். ஆனால், இந்த வேலைக்கு எதற்கு சூப்பர் ஹீரோ வேஷம் என்று புரியவில்லை. அவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் வழக்கமாக விஜய் அஜீத் படங்களில் உதை வாங்குபவர்களே. இந்த வழக்கமான ஹீரோ வேலைக்கு எதற்கு பறக்கிறார், சேவல் மாதிரி கொக்கரிக்கிறார் என்று புரியவில்லை. ( அப்ப மத்ததெல்லாம் புரிஞ்சிருச்சாமா? – மனஸ் )

இந்த ராபின்ஹூட் வேலை செய்வதற்குத் தோதான ஃபிளாஷ்பேக், அவரைப் பிடிக்க ஒரு ஒரு டிஐஜி ( பிரபு) , உரித்த (சீக்கு வந்த) கோழி போல ஹீரோயின், நாலைந்து சீனுக்கு ஒருமுறை ஜிகுஜிகா பெயிண்ட் அடித்துப் வரிகள் புரிந்து தொலைக்காத பாட்டு, கொஞ்சம் ஹைடெக் திருட்டு, இறுதியிலே நீதி போதனை என்று அதே ஷங்கர் ஃபார்முலா. ஆனால் எடுத்த விதத்தில் அத்தனையும் சொதப்பல். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தொங்குகின்றன. தேவிஸ்ரீபிரசாத், பின்னணி இசை என்கிற பேரில் கொல்கிறார். நடுவே திடீரென்று வடிவேலுவின் படுமொக்கையான தனி காமெடி டிராக். திடுதிப்பென்று படத்தைப் பாதியில் நிறுத்தி, இருக்கிற ஃபுட்டேஜை எடிடிங்கில் ஒப்பேத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. கடைசிக் காட்சியில், விக்ரம் தோன்றுவது, மணிரத்னத்தின் ராவணா பட கெட்டப்பில்.

தாணு காசில், சுசிகணேசன் மஞ்சள் குளித்திருக்கிறார். இதிலே விக்ரம் நிலைமைதான் பரிதாபம். ஏழைகளையும் ஏழ்மையையும் மையப்படுத்தி காசு பண்ணும் வர்த்தகங்கள் உண்டு. கந்தசாமியும் கிட்டதட்ட அதே மாடல் பிசினஸ் தான். ஆனால், நல்லவேளையாக, படம் ஓடாது.

மசாலாப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லை. ஆனால் internal logic என்ற ஒன்று தேவை. ரெய்டு செய்து கிடைக்கிற பணத்தை எல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்ய சாத்தியமே இல்லை என்கிற ( படத்தில் இருக்கும் பல ஒட்டைகளுள் ஒரே ஒரு ) ஓட்டையை, சுசிகணேசனின் கடைசி உதவி இயக்குனர் சுட்டிக் காட்டியிருந்தால் கூடப் போதும், படம் பிழைத்திருக்கும்.

படத்தில் பிடித்த ஒரே ஒரு விஷயம், ஷ்ரேயாவின் கிறங்கடிக்கும் பின்னணிக்குரல். யார் குரல் அது?

பகுப்புகள்: Film Reviews
குறிச்சொற்கள்: , , , ,

அக்கிரஹாரத்தில் கழுதையும், ஒரு எருமை மாடும்.

ஆகஸ்ட் 13, 2009 · 8 மறுமொழிகள்

ak1பல வருடங்களாக சல்லடை போட்டு சலித்துத் தேடிய படம். கிடைத்ததும் உடனே பார்த்து விட்டேன்.

கடந்த முப்பது வருடங்களாக, இப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய வெங்கட் சுவாமிநாதன் துவங்கி, ரெண்டாவது இஷ்யூவிலேயே இழுத்து மூடிய சிற்றிதழ் எழுத்தாளர் வரை கழுதை குறித்து, அவரவர் கோணத்தை எழுதியாகிவிட்டார்கள். புதுமைச்சிற்பி ரா.பார்த்திபனுக்கு வாரிசாக விரும்பும் ‘யுவர்ஸ் ட்ரூலி’ க்கு இந்த ஏரியாவிலே ஸ்கோப் குறைச்சல் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு, படத்தின் கதையை, பார்த்த போது கண்களுக்கு அகப்பட்டதை பற்றி – உள்ளுறை உவமம் அல்ல – மட்டும் எழுதுகிறேன். [ படத்தைப் பார்க்கும் பொழுது, கண்கள் எதையோ பார்க்க, மனதுக்குள் விரியும் படிமங்களை, வார்த்தைக்குள் சிறைப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை என்பதால், இந்த எஸ்கேப் ரூட்]

தொடர்பில்லாத இடைச்செருகல் ஒன்று : பாராளுமன்றத்துக்குள் ஒரு முறை, எருமை மாடு ஒன்று நுழைந்து விட்டது. உடனே எதிர்கட்சி அன்பர் எழுந்து சபாநாயகரிடம் முறையிட்டார்.

ak2லயோலா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் நாராயணசுவாமி ( எம்.பி.ஸ்ரீனிவாசன்) , வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது, அனாதையாக நிற்கும் ஒரு கழுதைக் குட்டியைப் பார்த்து, அன்பு மேலீட்டில், தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கிறார். ஒரு ஆசாரமான பிராமணர், கழுதை வளர்ப்பதாவது, என்று அக்கம் பக்கத்தில் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல், அதற்கு சின்னா என்று பெயரிட்டு, நாய், பூனை, கிளி போன்ற அழகான ஐந்தறிவு சீவன்களைப்போலவே வளர்க்கிறார். இந்த செய்தி, அவரது கல்லூரி வரை பரவி, மாணவர்கள், எக்கச்சக்கமாகக் கிண்டல்
செய்கிறார்கள். நாராயணின் கண்களில் படுமாறு கேலிச்சித்திரம் வரைந்து, கழுதை போலக் கனைத்து அவமானப்படுத்துகிறார்கள். கல்லூரியில் ஒரு விதமான unrest சூழல் உருவாவதை உணார்ந்து, கழுதையுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லி, கல்லூரி முதல்வர் வற்புறுத்துகிறார்.

” Professor Narayanaswami, I want to talk to you something. About your donkey.”

” You know about my donkey, father?”

” Why only me? The whole college is talking about it. Have you not seen the posters put up by the students all over the college? You are becoming a joke for the students”

“Well, father. let the young boys have some fun. What if at my expense?”

” Please, Mr.Narayanaswami, you are the senior most professor here. and this is demoralising our instituition. Please do something”

” Father, this is a very personal matter, as far as i am concerned. But if it is demoralising to our institution, please give me two days leave. I shall take the donkey to my village, to my home, and leave it there.

” thank you Mr.Professor.”

ak3இப்படியான ஒரு சிறு வாக்குவாதத்துக்குப் பிறகு, புரபசர், சின்னாவை ஒரு கூடையில் அழகாகப் பேக் செய்து, தன்னுடைய சொந்த ஊருக்கு பஸ்ஸில் வைத்து அழைத்துச் செல்கிறார். அது ஒரு குக்கிகிராமத்து அக்கிரகாரம். 60 களின் கதைகளில் வருவதைப் போன்ற உதாரண பிராமணக் கதாபாத்திரங்கள். புரபசர், தன்னுடைய அப்பா அம்மாவிடம், சின்னா, வீட்டிலேயே இருக்கட்டும், தான் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி, சின்னாவைப் பார்த்துக் கொள்ள, அந்த ஊரில் இருக்கும் ஒரு வாய்பேச முடியாத பெண்ணை ஏற்பாடு செய்கிறார். புரபசரின் அம்மாவுக்கு, இப்படி, வீட்டில், ஒரு கழுதையை வைத்து வளர்ப்பது பிடிக்கவில்லை. என்றாலும், புரபசரின் அப்பா, ‘ அவன் செய்யறதுல ஒரு அர்த்தம் இருக்கும் ‘ என்று சொல்லி மனைவியை அடக்குகிறார்.

தொ.இ – இரண்டு : உள்ளே நுழைந்த எருமை மாட்டை வெளியேற்ற வேண்டும் என்று முறையிட்டார். உடனே அதற்கு ஆளுங்கட்சி அன்பர் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தார்.

சில மாதங்கள் கழித்து, ஊருக்கு வரும் பொழுது, புரபசரின் அப்பா, சின்னான், அந்த அக்கிரகாரம் முழுக்க, சின்னா செய்த கலாட்டாக்களை வருத்ததுடன் சொல்கிறார். ஒருவர் வீட்டு பெண்பார்க்கும் படலத்தில் நுழைந்து கலைத்துப் போடுகிறது. இன்னொருவரின் வயசான அம்மாவை முட்டி மோதி
விடுகிறது. ஆனால், இந்த கலாட்டாக்களுக்கு சின்னா காரணமல்ல, அனைத்தும், ak6சின்னாவை வைத்து, அந்த அக்கிரகாரத்து விடலைகள் செய்யும் குறும்பு என்பது காட்சிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொள்கிறார் புரபசர். அக்கிரகாரத்து வாசிகள், சின்னாவின் கலாட்டாக்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வண்ணாந்துறையில் இருக்கும் துணி தோய்க்கும் தொழிலாளிகளிடம், அழைத்துக் கொண்டு போகச் செய்துவிடுகிறார்கள். புரபசர், அவர்களிடம் சென்று பணம் கொடுத்து சின்னாவை மீட்டு, அந்தப் பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு ஊருக்குக் கிளம்புகிறார்.

அந்த ஊமைப் பெண்ணுக்கு, ஊரின் ஒதுக்குப் புறத்த்தில் இருக்கும் ஆடவன் ஒருவனுடன் உறவு ஏற்படுகிறது. அவன் கூலி வேலை செய்கிற தலித் இளைஞன். அவர்களுக்குள் நிகழ்வது காதல் அல்ல. அவர்களிருவருக்கும் உறவு ஏற்படும் விதம் வினோதமானது.ak7 முதலில் அவன், அந்தப் பெண்ணைத் பின் தொடர்ந்து , அவள் கையைப் பிடிக்கிறான். கடும் கோபத்துடன் அவள், கையைத் தட்டிவிட்டுச் செல்கிறாள். அடுத்த காட்சியில், அவன் அதையே
செய்யும் பொழுது, அவள் எதிர்ப்பு சற்றே தளர்ந்திருக்கிறது என்பதை, அவளுடைய மிட் க்ளோசப் கண்கள் காட்டுகின்றன. மூன்றாவது காட்சியில், அவள் எதிர்ப்பு மனோபாவத்தை முற்றிலுமாகக் கைவிட்டு அவன் பின்னால் செல்கிறாள். ஒரு ஆளரவமற்ற பாழடைந்த கோயிலில் சல்லாபிக்கிறார்கள்.

தொ.இ – மூன்று : எதிர்ப்பு தெரிவித்தவர், எதிர்க்கட்சி அன்பர் சொல்வதிலே பிழை இருப்பதாகவும், நுழைந்தது எருமை மாடல்ல, பசு என்று ஆணித்தரமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.

இந்த உறவின் மூலமாகக் அவள் கர்ப்பம் அடைகிறாள். ஆனால் அந்த ஆடவன் இதற்குப் பிறகு எங்கும் தென்படுவதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவளுக்குக் குழந்தை பிறந்து , உடனே மரிக்கிறது. அந்தப் பெண்ணின் தாய், மரித்த சிசுவை, துணியில் சுற்றி எங்கோ கொண்டு போய் போட்டுவிடுகிறாள். அடுத்த நாள் காலையில், அந்தச் சிசு, கோயில் வாசலில் துணி சுற்றிக் கிடப்பதைப் பார்த்து, கோயில் குருக்கள், அக்கிரகாரத்துவாசிகளிடம் முறையிடுகிறார். எல்லோரும் கூடிப் பேசி, இந்தக் குழந்தை, அந்த ஊமைப் பெண்ணுக்குப் பிறந்ததாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து, அந்தப் பெண்ணின் தாயைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். ak9அவள், தனக்கு எதுவும் தெரியாது, அந்தக் கழுதைதான் இப்படிச் செய்திருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறாள். இனி, அந்தக் கழுதையை உயிரோடு விட்டுவைத்தால் பிரச்சனைதான் அதிகமாகும் என்று முடிவு செய்து, கூலி வேலைசெய்யும் தலித் இளைஞர்களை அழைத்து, அந்தக் கழுதையைக் கொன்றுவிடும் படிக் உத்தரவிடுகின்றனர். சின்னாவும் கொல்லப்படுகிறது.

சின்னான் இறந்த சில நாட்களிலேயே, அக்கிரகாரத்துக்கு வெளியே, சிலர், சின்னானைப் பார்த்தாகச் சொல்ல, அது ஒரு தெய்வாம்சம் பொருந்திய கழுதையாக இருக்கலாம் என்று அக்கிரகாரத்தில் பேச்சு கிளம்புகிறது. அதற்கு ஏற்றார் போல, சில நல்ல விஷயங்களும் – ஓடிப்போன ஒரு மகன் திரும்ப வருகிறான், நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த புரபசரின் தம்பி மனைவி தாய்மை அடைகிறாள் – நடந்து, அக்கிரகாரத்துக்கு வந்த கழுதை நிச்சயம் ஒரு தெய்வாம்சம் பொருந்தியது என்று முடிவு செய்கிறார்கள்.

அடுத்த முறை, அக்கிரகாரத்துக்கு வரும் புரபசரிடம், ஊர் விடலைகள், நடந்த கதை அனைத்தையும் சொல்கின்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறார். குழந்தையையும், சின்னாவையும் ஒரே நேரத்தில் இழந்த அந்த ஊமைப் பெண் எங்கே என்று விசாரிக்கிறார். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, கண்களில், வெறுப்பா, கோபமா, வருத்தமா, சோகமா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் தனியாக அமர்ந்திருக்கும் அந்த்ப் பெண்ணின் தோளை ஆறுதலாகத் தொடுகிறார்.

ஒரு சில நொடிகள் தான்.

திரும்பி நடந்து அக்கிரகாரத் தெருவில் நடக்கும் பொழுது, சின்னாவின் தெய்வச் செயல்கள் குறித்து, பேசிக் கொண்டிருக்கிறார்கள். சின்னாவுக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஊமைப் பெண்ணும், புரபசரும் சின்னாவின் மண்டையோட்டைத் தேடியெடுக்கும் பொழுது, அதை, அந்த இளைஞர்கள் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

அந்த மண்டையோட்டை நடுவில் வைத்து, ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள். பின்னணியில் பாரதியின் வரிகள், எம்பி ஸ்ரீனிவாசனின் குரலில் ஒலிக்க, படம் நிறைகிறது.

தொ.இ – நான்கு : நுழைந்தது எருமையா, பசுவா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர், சபைக்குள்ளே வந்தது, எருமை மாடல்ல , பசு மாடே என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தார்.

பகுப்புகள்: Film Reviews · feelingsu
குறிச்சொற்கள்: ,

achamuNdu achamuNdu – review

ஆகஸ்ட் 12, 2009 · 11 மறுமொழிகள்

அச்சமுண்டு அச்சமுண்டு

விமர்சனங்கள் எல்லாம், இது pedophilia பற்றிய படம் என்று வதந்தியைக் கிளப்பிவிட, வழக்கம் போல இல்லாமல், கொஞ்சம் சீரியஸாகவே பார்த்தேன்.

வழக்கமாக வில்லன், வளர்ந்த பெண்ணை வளைத்துப் போட முயற்சி செய்வான், இந்தப் படத்தில், வில்லன் குறிவைக்கும் பெண்ணுக்கு வயது பத்துக்கும் கீழே. அதைத் தவிர்த்து, இது ஒரு சாதாரண திரில்லர். அமைதியான குடும்பத்தில், முன்பின் தெரியாத ஒருவனால், புயல் வீசுகிறது. இறுதியில் ஹீரோ வெற்றி பெறுகிறார் என்கிற மாதிரியான வருடக்கணக்கில் அரைத்த அதே அடை மாவு.

குழந்தைகள் மீதான செக்ஷுவல் அப்யூஸ், மிகப் பெரும்பான்மையாக, அந்தக் குழந்தையின் குடும்பம, மற்றும் extended குடும்பத்தில் இருப்பவர்களால் தான் ஏற்படுகிறது என்கிற உண்மை, திரைக்கதையின் வசதிக்காக மறைக்கப்படுகிறது. வில்லனாக வரும் ஜான் ஷே, ஆசியப் பெண்கள் மீது மோகம் கொண்டவனாக இருந்து சினேகாவைக் குறிவைத்திருக்கலாம், தற்பால் நாட்டம் கொண்டவனாக இருந்து, மொழு மொழுவென்று இருக்கும் பிரசன்னாவைக் குறிவைத்திருக்கலாம். அல்லது ஒரு சாதாரணத் திருடனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அவன், குழந்தைகள் மேல் மோகம் கொண்டவனாக இருக்கும் தற்செயல்தன்மை, திரைக்கதையை வீக் ஆக்குகிறது.

குழந்தையின் அப்பாவை pedophile ஆகவும், சினேகாவும், ஜான்ஷேவும் குழந்தையைக் காப்பாற்றுபவர்களாகவும் திரைக்கதை அமைத்திருந்தால், இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. ( என்ன, கொஞ்சம் கேபியின் ‘47 நாட்கள் வாடை’ அடிக்கும்) அமெரிக்காவில் வசித்தாலும், தமிழர்களுக்கு அந்த அளவு தைரியம் வராது போலும்.

கதைத் தேர்வுதான் சொதப்புகிறதே தவிர்த்து மேக்கிங் பிரமாதம். ஃப்ரேமுக்கு ஃப்ரேம், டெக்னிகலாக மிரட்டுகிறது. அலுவலக, வீட்டுச் சூழல் புதிதாக இருப்பதால், authentic ஆக இருக்கிறதா என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் ரசிக்க முடிகிறது. பின்னணி இசைக்காக கார்த்திக்ராஜாவை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிடிங், போஸ்டர் ஒட்டுதல், பாப்கார்ன் விநியோகம் என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, டைட்டில் கார்டில் தம்பட்டம் அடித்துக் கொள்வது கோடம்பாக்கத்து வியாதி. அது போல அல்லாமல், அடுத்த முறையாவது, ஹாலிவுட் பின்னணியில் இருந்து வந்த இயக்குனர், வெளியில் இருந்து நல்ல சுவாரசியமான கதையைத் தேர்வு செய்து, திரைக்கதை எழுதி இயக்கினால், வெற்றி நிச்சயம்.

verdict : wish arun had chosen a different script.

பகுப்புகள்: Film Reviews
குறிச்சொற்கள்: ,

Saroja – கலாய்த்தலும், கலாய்த்தல் நிமித்தமும்

செப்டம்பர் 5, 2008 · 7 மறுமொழிகள்

ஆடியன்சின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல, அவர்களுக்குப் பிடித்த மாதிரி படம் எடுத்து வெற்றி பெறுவது ஒரு வகை. ட்ரெண்டு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன்னிஷ்டம் போலப் படம் எடுத்து, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பது மற்றொரு வகை.

வெங்கட் பிரபுவின் படங்கள் இதிலே இரண்டாவது ரகம்.

சரோஜா.

வெங்கட் பிரபுவின் முதல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை இப்படம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது.

ஒரிசாவில் இருந்து சரக்கேற்றிக் கொண்டு கிளம்பும் மித்தல் கெமிக்கல்ஸ்ஸின் டேங்கர் லாரி, ஹைவே யில் விபத்துக்குள்ளாக, அதனால், அந்த வழியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் பார்க்க, ஹைதராபாத் செல்லும் நாலு பேர் கொண்ட நண்பர் குழு, மாற்று பாதை மூலமாக ஹைதராபாத் செல்ல முயலும் போது, கோடீசுவரர் பிரகாஷ்ராஜின் மகளைக் கடத்தி வைத்துப் பணம் பறிக்க முயலும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

தமிழ்ச் சினிமா பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள், இறுதியிலே என்ன நடந்தது என்பதை ஊகித்துக் கொள்வார்கள்.

வினோதமான சைன்ஸ் பிராஜெக்ட்டுகளை மகளுக்குச் செய்து தரும் ஜெகபதிபாபு ( எஸ்.பி.சரண்) தான் குழுவிலேயே சீனியர். அவரது தம்பி காதல் தியாகி ராம்பாபு (வைபவ்), சீரியல் ஆர்ட்டிஸ்ட் அஜய்ராஜ் ( மிர்ச்சி ஷிவா), சமயசந்தர்ப்பமில்லாமல் சதா ஜோக்கடிக்கும் கணேஷ் ( பிரேம்ஜி)ஆகிய நால்வர் கூட்டணி படம் முழுக்க செய்யும் செய்யும் அட்டகாசங்கள், அரங்கை அதிர வைக்கின்றன.

இந்த நண்பர்கள், பாலியகாலத்தில் கமர்க்கட்டை காக்காகடி கடித்து, செபியா டோனில், ‘அறியாத வயசு… புரியாத மனசு’ என்று தொண்டை அடைக்கப் பாடிய நண்பர்கள் அல்ல. பிற்காலத்தில், தொழில் நிமித்தம் சந்தித்து , ஒன்றாக டென்னிஸ் விளையாடி, பியர் குடித்த நண்பர்களாக இருக்ககூடும். ஒருத்தரை ஒருத்தர் சார் என்று (தான்) விளிக்கும் நட்பு. எக்கச்சக்கமான சந்தர்ப்பங்களில் மட்டும் ‘டேய்’.

பிற படங்களில் சொதப்பும் பிரேம்ஜி, தமையன் கைகளில் ஜொலிக்கிறார். ‘ இக்கட்டான சூழ்நிலையில், மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து செண்டிமெண்டாக புலம்பும் சரணிடம், ‘ யாரு சார் இந்த ஃபிகர்?” என்று கேட்கும் இடம் 10000 வாலா சரம். படத்தில், எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுபவர், எஸ்.பி.சரண். சும்மா சொல்லக்கூடாது. பின்னுகிறார். நாலுபேரும் மானாவாரியாகக் கலாய்க்கிறார்கள், தங்களையும், பாரதிராஜாவையும் :-) அரங்கில் சதா சிரிப்பலை.

சாதா கதை, சாமர்த்தியமான திரைக்கதை. விறுவிறுப்பான எடிட்டிங். பத்திக்கிற மாதிரி ஒளிப்பதிவு. இந்தப்பக்கம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அந்தப்பக்கம் நிதிதாவில் கலக்கலான டான்ஸ். எந்தவிதமான இண்டலெக்சுவல் பாவனையும் கிடையாது. இதுதான் சரோஜாவின் ஃபார்முலா.

நிச்சயமா பார்க்கலாம்.

பகுப்புகள்: Film Reviews