Prakash’s Chronicle 2.0

‘fiction’ பகுப்பில் உள்ள வரவுகள்

bye bye adolesence – for thenkoodu contest

ஜூன் 11, 2006 · 22 மறுமொழிகள்

ஒரு மொட்டு எப்போது மலராகிறது என்று யாராவது சொல்லமுடியுமோ? ஒரு பையன் எந்தக் கணத்தில் வயசுக்கு வருகிறான் என்றாவது சொல்லமுடியுமோ? அறிவியல் பூர்வமான விடைகள் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே, இது போல கோக்கு மாக்காகக் கேள்விகள் கேட்க, கவிஞர்களுக்கு உரிமை உண்டு. அதற்கு poetic license என்று பெயர். இதை இன்னமும் விரிவாகச் சொன்னால், கவிப்பேரரசரை வம்புக்கு இழுக்கிறாற் போல ஆகிவிடும். ஆக, அதைத் தவிர்த்து விட்டு, தற்சமயத்துக்கு, அந்த உரிமத்தை மட்டும், கவிதை வாசனையே தெரியாத நான் எடுத்துக் கொள்கிறேன்.

எதுக்கா?

தேவைப்படுதுங்க..

சுஜாதா எழுதின புதினங்களிலேயே அதிகம் பிடிச்சதுன்னு தலை பத்து பட்டியல் ஒண்ணு போட்டால், நிலாநிழல்ங்கற கதை என்னுடைய பட்டியலிலே நிச்சயம் இருக்கும். கல்லூரி முதலாண்டு படிக்கிற மாணவன் ஒருவன், கிரிக்கெட்டே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, (சித்தரஞ்சன் போவதாகப் பொய் சொல்லி விட்டு), மும்பைக்குச் சென்று கிரிக்கெட் ஆடி வெற்றி பெற்று, பின்னர், தன் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்புகிற அந்தக் கதையை சிலர் வாசிச்சிருக்கலாம். ஒரு முறை ( பல மாதங்களுக்கு முன்னால் ) கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடும், தகவலறிவும் உள்ள திருமயிலைவாழ் சக வலைப்பதிவு நண்பர் ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருந்த போது, நிலாநிழல் பற்றி பேச்சு வந்தது. அவர் இந்த நாவலை மொத்தமாக நிராகரிக்கவில்லை என்றாலும், அதிலே, கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி இடம் பெற்றிருக்கிற தகவல்ரீதியான குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தார். அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால், இது வாத்தியார் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் நான் வழக்கம் போல டிஃபென்ஸ் ஆடினேன்.

என்னுடைய கோணத்தில், அது ஒரு கிரிக்கெட் பற்றிய நாவல் அன்று. வாழ்க்கையில் அடைய வேண்டிய வெற்றி தோல்விகள் மீதானஒரு பத்தொன்பது வயதுப் பையனின் பார்வையும், அந்த இலக்கை அடைந்த பின்னர், வெற்றி தோல்விகள் குறித்த அவனது மதிப்பீடுகள் என்னவிதமாக மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் நிலாநிழல்.பதின்ம வயதைக் கடக்கும் போது, நிலா நிழல் முகுந்துக்கு ஏற்பட்டது போன்ற பாரடைம் ஷிஃப்ட், பெரும்பான்மையானவருக்கு ஏற்படத்தான் செய்கின்றன. நானும் விதிவிலக்கில்லை.

பிறந்ததில் இருந்து, ஒரு குறிப்பிட்ட வயதுவரை நமக்கு, நம்மைப் பற்றியும், பிறரைப் பற்றியும், விவரங்கள் தெரிவதில்லை. அதற்குப் பிறகு நாளாக நாளாக, பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். சில தகவல்கள் புகட்டப் படுகிறது. நாமாக சில முடிவுக்கு வருகிறோம்.

உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, ரோசலின் டீச்சர் மாதிரி ஒரு அழகான பெண் உலகத்திலேயே இல்லை என்று நினைக்கிறோம்.ஆனால், அடுத்த வருஷமே, கணக்கு சொல்லித்தர, சில்வியா மிஸ் வந்ததும், முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. கால்குலேட்டர் என்கிற மாஜிக் கருவியை, அனாயசமாக இயக்கும் போது, அப்பாவை மிஞ்சிய புத்திசாலி இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அவருக்கு செட் தியரி சொல்லித் தரத் தெரியவில்லை என்கிற போது, அவரது புத்திசாலித்தனத்தை, நெற்றியில் ஆச்சர்யக் கோடுகளுடன், மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது. ஒரு காலத்திலே, எந்நேரமும், இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சி கொஞ்சி பேசிய அம்மா, ரிப்போர்ட் கார்டில் சிவப்புக் கோடுகளைப் பார்த்து விட்டு, நெஞ்சில் ஈரமில்லாமல், முதுகிலே சுளீர் சுளீரென்று நாலு வைக்கும் போது, அதிலும் – சுமதி, அரையாண்டு பரீட்சைக்குக் பின்னான லீவில் வீட்டுக்கு வந்திருக்கிற நேரம் பார்த்து – நிசமாகவே இவள் அம்மாதானா என்று சந்தேகம் வருகிறது. சுமதியின் நக்கல் பார்வை தாங்க முடியாமல் கிணற்றில் குதித்துவிடலாமா என்று தோன்றுகிறது.

பதின்ம வயது வரையிலும், இது போன்ற தீர்மானங்களும், முடிவுகளும், நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பின் விளைவுகள், அதிகம் சிக்கலில்லாதவை.

இந்தச் சிக்கலில்லாத பருவம் தான், ஒருவனுக்கு, அல்லது ஒருத்திக்கு, வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய வசந்தகாலம் என்பது என் தனிஅபிப்ராயம். இந்த அபிப்ராயத்துடன் இணங்குபவர்கள் அனைவரும், bye bye adolosence என்கிற சொற்றொடர் மனசுக்குள்ளே ஏற்படுத்தும் வலிகளையும் சந்தோஷங்களையும் புரிந்துகொள்ளுவார்கள்.

டீனேஜைக் கடக்கிற பருவம், ரொம்ப சிக்கலானது, சில சமயங்களில் கொடூரமானது. இந்த transition, உடலளவில் இல்லாமல், மனதளவில் ஏற்படுத்துகிற பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பருவத்தில், படிப்பின் மீது காட்டப்படுகிற அக்கறையும் அக்கறையின்மையும் தான் சில வருடங்கள் கழித்து, நம்முடைய pay scale என்ன என்பதை நிர்ணயிக்கப் போகிறது. அந்த பருவத்தில், ஏற்படுத்திக் கொள்கிற பழக்கங்கள் தான், சில வருடங்கள் கழித்து நம் நுரையீரல் கல்லீரலின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கப் போகிறது. இதிலே வேடிக்கை என்ன என்றால், இந்த மாற்றம் நம்மிடம் ஏற்படுத்தும் விளைவுகளின் பின் விளைவுகளை, அந்த transition phase இலே தெரிந்து கொள்ளமுடியாது. சில காலம் கழித்துத்தான் தெரிந்து கொள்ள இயலும்.

அந்த பருவத்திலே, எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு பிரதானமான சிக்கல், எதிர்பாலர் மீதான கவர்ச்சி. இந்த விஷயத்தை, என் அனுபவங்களினூடாக மட்டுமே பார்ப்பதால்,சொல்லும் விஷயம், வேறு வழியில்லாமல்,ஆண்தன்மை கொண்டதாக -ஆண்மைத்தன்மை அல்ல – அமைகிறது.பதின்ம வயதில் தோன்றும் எதிர்பாலர் மீதான இனம்புரியா கவர்ச்சியை, கவிஞர்கள், தேனில் குளிப்பாட்டிய, மலர்கள் தூவிய வார்த்தைகளால், காதல் என்றும், அறிவியல் படித்தவர்கள், ஹார்மோன்களின் சிலுமிஷம் என்றும், அறிவியல் படித்திருந்தாலும், பெற்றோராக வாய்க்கப்பட்டவர்கள், ‘தொடப்பக்கட்டை’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த ஹார்மோன்கள் செய்யும் அராஜகத்தைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்பதுதான் ஆகப் பெரிய சிக்கல்.

இன்னொரு கோணமும் இதிலே இருக்கிறார்போலப் படுகிறது. இன்றைக்கு, நகமும் சதையுமாக உயிருடன் இருப்பவர்கள் அனைவரும், டபிள் அல்லது ட்ரிபிள் ப்ரமோஷன் பெற்று, இந்த வயதுக்கு வந்துவிடவில்லை. அந்த அந்த பருவங்களை, அதற்கு உண்டான, குணாதிசயங்களை, ஏற்று , மறுத்து அல்லது கலகம் செய்து தான் வந்திருக்கிறார்கள். என்கிற போது, நான் ஒன்றுமில்லாத, இயல்பாக நடக்கிற விஷயத்துக்கு கை கால் மூக்கு வைத்து பெரிதாக்குகிறேனோ? தெரியவில்லை.

தட்டுத் தடுமாறிப் படித்ததை வைத்து, இன்றைக்கு , ஆர்மோன் அது இது என்று அறிவியல்தனமான விளக்கம் கொடுத்தாலும், மனசுக்குள்ளே முதன் முதலாய் பூப்பூத்த தருணங்களில் கிடைத்த ‘ஜில்’ என்ற உணர்வு, அப்பழுக்கில்லாத உண்மை. பொய்யான, நீடிக்கச் சாத்தியக்கூறு துளியும் இல்லாத ஒரு சங்கதி, அத்தனை சந்தோஷத்தை எப்படி தந்தது என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

“கடைக்கண் பார்வையைக் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று பாரதிதாசன் சொன்னது, மூன்று கழுதை வயசு கடந்த பின்னர், தற்பொழுது, நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும், முதலில் வாசித்த காலத்தில், அவ்வரிகள் ஏற்படுத்திய கிளர்ச்சியின் மிச்சங்கள், இன்றும், அடி மனசில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கொலுசு, சைக்கிளின் ஹாண்டில் பார், தாவணியை மீறி கொஞ்சமே தெரிந்த ஃப்ரில், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸின் S-6 கோச், மௌனராகம், எழும்பூர் ரயில்வே நிலையம், பழைய வீட்டின் முற்றம் என்று சட்டென்று மனசுக்குள் தோன்றுகிற குழப்பமான படிமங்களை, கலைத்துப் போட்டுச் சீராக்கினால், நல்ல கவிதை ஒன்று கிடைக்குமோ என்னமோ தெரியாது, நிச்சயமாக இரண்டு போத்தல் பியர் தேவைப்படும் :-)

பகுப்புகள்: fiction

பழைய சரக்கு – part II

ஜூன் 4, 2006 · 8 மறுமொழிகள்

முதல் பகுதியை வாசித்து விட்டு, இந்தப் பகுதியை வாசிக்கவும்.

Pen-ultimate part

கண்ணாடியை ஒருதரம் எடுத்து, அதன் ‘ஹா’ பண்ணிவிட்டு, துடைத்துப் போட்டுக் கொண்டு, கல்கியில் இருந்து வந்த அந்தக் கடிதத்தை படித்தார். அவரும் அது போல பல கடிதங்களை எழுதியிருக்கிறார் (அவர் கல்கியில் இருந்த போது) என்று தெரியும்.

நான் லேசாக முன்கதை சுருக்கத்தைச் சொன்னேன். ஊருக்கு போயிருந்தது, சுமதி ஒரு கல்யாணத்துக்காக சென்னை வந்தது, நான் இந்த மாதிரி பத்திரிகைகளுக்கு எல்லாம் கதை எழுதி அனுப்பி, கஜினி முகம்மது வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்ற ரகசியம் என் வீட்டினர் தவிர யாருக்கும் தெரியாத வண்ணம் கட்டிக் காப்பத்துவது, இத்தனை நாளாக, கட்டிக் காப்பாத்தி வந்ததை ஒரே நாளில் கல்கி போட்டு உடைத்தது, அதன் பின் எழுந்த கிண்டல்கள் (ஹெஹ்ஹே… ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம்?), நக்கல்கள் (ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி சொல்றேன் அதை எழுதறியா.. இது அவள் வீட்டுகாரன்), இம்சைகளில் இருந்து தப்பித்து வந்ததை லேசாகச் சொன்னேன்.

அந்தக் கதையையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் சற்றே மிரண்டு போய், (எட்டு பக்கக் கதை), “டிரெயின்லே போகும் போது படிக்கிறேன்” என்று தப்பிக்கப் பார்க்க, நான் விடாமல், “நோ வே, இப்பவே படிங்க” என்று கிட்டத்தட்ட மிரட்டினேன்.

நாங்கள் நண்பர்கள் இருவர் செஸ் ஆடிக்கொண்டிருக்க, எங்கள் தெருமுனை மளிகை கடையில் (குரங்கணி அம்மன் ஸ்டோர்ஸ்) டோர் டெலிவரி செய்யும், முருகேச உடையார் என்கிற ஒரு ஐம்பது வயது ஆசாமி, எங்கள் வீட்டில் பணம் கலக்ஷனுக்காகக் காத்திருக்கும் போது, எங்கள் கேமை பார்த்து விட்டு, எதிர்பாராதவிதமாக, ஒரு மூவ் சொல்லி ஜெயிக்க வைக்கிறார். செஸ் என்ற ஆட்டத்துடன் பொருத்திப் பார்க்க முடியாத ஒரு தோற்றத்தில் இருக்கும் அவர், இப்போது உப்பு மிளகாய் மடிப்பதற்குக் காரணம் சதுரங்கம் தான் காரணம் என்பது கதையின் ஒரு எக்ஸ்டிரா சரடு. ஓ ஹென்றி பாணியில் கடைசியில் ஒரு திருப்பம் வைத்து கதை முடியும்.

காவியமல்லவா இது? என் உள்ளம் குமுறிக் கொண்டு இருந்தது. ரத்தம் கொதித்தது. நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.

உதட்டைப் பிதுக்கினார்.

“அப்படின்னா என்ன அர்த்தம்னேன்?”

“தேறாதுன்னு அர்த்தம். இது நல்லா எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”

அப்புறம் வேற என்ன என்கிற மாதிரி என்னைப் பார்த்தார்.

“என்ன இப்படி ஒரே வார்த்தைலே முடிச்சிட்டீங்க?, இந்தக் கடிதம் யார் கைலேந்து என் கைக்கு கிடைச்சுது தெரியுமா? ரொம்ப அவமானமாப் போச்சு. பொத்தி பொத்தி நான் பாதுகாத்துட்டு வந்த ரகசியத்தை, இந்த கல்கி ஒரே நாள்ளே சிதைச்சிட்டுது. அவங்க கதை பிடிக்கலேன்னு அனுப்பினது எனக்கு ரெண்டாம் பட்சம். அதை, என்னோட arch rival, ஜாம்ஷெட்பூர்லேந்து, வந்திருக்கிற சமயம் பாத்து தான் லெட்டர் போடணுமா? ஒரு நேரம் காலம் கிடையாதா? அவங்களுக்கு ஈவு இரக்கம் எல்லாம் கிடையாதா? அவங்க எல்லாம், அத்தை பொண்ணு, மாமா பொண்ணோட பொறக்கலையா?”

உருக்கமாக, சோகமாக, துக்கமாக பல வித மாடுலேஷன்களில் எடுத்துரைத்தேன்.

கொஞ்சம் பேதாஸ் எஃபக்ட்டுக்காக, கண்ணில் நீரை வரவழைக்க முயற்சி செய்து பார்த்தேன். கிளம்புவதற்கு முன், ஒரு டோஸ் மெகா சீரியல் பார்த்து விட்டு வந்திருந்தால் உடனடியாகப் பலன் கிடைத்திருக்கும். டூ லேட்.

அந்த இடமே என் புலம்பலால் கசமுசா வென்று ஆகியிருக்க, என்னமோ ஏதோ என்று பக்கத்து அறையில் இருந்த நண்பர் எழுத்தாளர் நாகராஜகுமார் (இவர், மறைந்த எழுத்தாளர் ‘ஙே’ ராஜேந்திரகுமார் அவர்களின் மகன்), “என்ன பிரகாஷ் என்ன ஆச்சு?” என்று பதட்டமாக ஓடி வந்து கேட்க, நான் மீண்டும் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட துக்கத்துடன், “என் கதை கல்கிலேந்து ரிஜக்ட் ஆயிப்போச்சுங்க” என்றேன் தொண்டைக் கமறலுடன். “அப்படிங்களா? சரி, சரி….” என்று அவர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார். நடக்கின்ற கூத்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பா.ராகவன், “என்னத்துக்காக, இப்படி ஒரு சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்கே?” என்றார் அமைதியாக.

“என்னங்க இப்படி இப்படி சொல்றீங்க? ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்து போய் இருக்கு. என்னை எப்படி அமைதியா இருக்க சொல்றீங்க”

“சரி என்ன பண்ணலாம்?”

“என் கதை, ஒண்ணு கல்கிலே வந்தாவணும். அதுவும் டிசம்பர் ரெண்டாவது வாரத்துக்குள்?” என்றேன்.

“அது என்ன கணக்கு? டிசம்பர் ரெண்டாவது வாரம்?”

“அப்ப மறுபடியும் அந்த ராட்சசி மெட்ராஸ் வர்ரா.. அவ வீட்டுக்காரனோட, சகலபாடியோட, தம்பிக்கு கல்யாணம். ரெட்ஹில்ஸ்லே கல்யாணம். அப்ப என் கதை, ஒண்ணு கண்டிப்பாக வந்தாகணும். கவர் பேஜ்லே என் ஃபோட்டோ போடறதுன்னாலும் நோ அப்ஜிஷன்”

அவர் இன்னும் நிதானம் இழக்காமலே பேசினார். “அதில்லே பிரகாசா, பத்திரிகைலே கதை எழுதறதுங்கறது ஒரு கலை. டக்குன்னு வந்துடாது.. ரொம்ப உழைப்பு வேணும்..” என்று துவங்கவும்.. நான் மீண்டும் முருங்கை மரம் ஏறினேன்.

“Mr. Raghavan, why don’t you understand the predicaments am in? ” என்றேன் ஆத்திரத்துடன்.

பேஜாரக இருக்கும் சமயங்களில்தான் எனக்கு இங்கிலீஸ் வரும்.

அவர் சிரித்தார்.

“ஹூம்… சிரிக்கிறீங்க? உங்களால ஆவுமா ஆகாதான்னு இப்பவே சொல்லுங்க. இல்லாட்டி, நேரா, வெங்கட்நாரயணா ரோட் போறேன். அங்க போய் அவர் கிட்ட ஒரு பாட்டம் அழுதுட்டு வரேன்”

என் அவஸ்தைகள் அவருக்கு இன்னும் சிரிப்பை மூட்டி இருக்க வேண்டும்.

“அவர் இன்னும் ஆபீஸ்லேந்து வந்திருக்க மாட்டார். வீடு பூட்டி இருக்கும்” என்றார், சிரிப்பை அடக்கிக் கொண்டு.

பிறகு கொஞ்சம் சீரியஸ் ஆனார்.

“ஏன் டென்ஷனாவுறே? நேத்திக்கு எழுத ஆரம்பிச்சிட்டு, இன்னிக்கு கதா பிரைஸ் வேணும்னால் முடியுமா? மொதல்ல பத்திரிகைகளுக்கு கதை எழுதறதுன்னால் என்னன்னு தெரிஞ்சுக்கோ..

“சொல்லுங்க”

அவர் துவங்கினார்.

o o o

நண்பர்களே!

பாதியில் தொங்குகிறது அல்லவா? அப்படியேதான் தொங்கும்.

இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட நடைசித்திரம் என்றாலும், அதன் உள்ளின் உள்ளுக்குள்ளே சில விழுக்காடு உண்மை இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவல்கள், உபதேசங்களை சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருந்து கொண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனாலும், அந்த முக்கியமான இறுதிப் பகுதியை, நான் எழுதுவதை விடவும், அதை எனக்குச் சொன்ன நண்பரே எழுதினால்தான், பலருக்கும் உபயோகமாக இருக்கும். (நான் எழுதினால் முக்கியமான மேட்டரை விட்டுட்டு ஒன் சைட் லவ் பக்கம் திரும்பி விடும் ஆபத்து இருக்கிறது). இல்லாவிட்டால் இது மற்றொரு நகைச்சுவைக் கட்டுரை என்ற அந்தஸ்தை மட்டுமே பெறும். “பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவது எப்படி?” என்கிற அந்த முடிவுப் பகுதியை, இரண்டொரு நாளில், பா.ராவிடம் இருந்து, எப்படியாவது எழுதிக் கேட்டுப் பெற்று, இங்கே இட்டு, நான் துவக்கிய விளையாட்டை நானே முடித்து வைக்கிறேன்.

o o o

இறுதிப் பகுதி

நான் கேட்டற்கு இணங்க, அவரும் எழுதினார். அதை இங்கே வாசிக்கலாம்.

பகுப்புகள்: fiction

பழைய சரக்கு – part I

ஜூன் 4, 2006 · கருத்துத் தெரிவிக்கவும்

எழுதறதுக்கு விஷயம் இல்லேன்னா,இப்படி, பழைய சரக்கை போட்டு ஒப்பேத்துவது என் வழக்கம். ஏற்கனவே படிச்சவங்க விட்டுத்தள்ளுங்க. மரத்தடியில் இருந்து இதை உருவியிருக்கிறேன். அவங்களுக்கு என் நன்றி.

நானும் சுமதியும், ஒரு குட்டிச் சாத்தானும்

‘It all started when i saw sumathi again..’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து எழுதலாம்தான். ஆனால் வேண்டாம்.

சுமதி என் அத்தை பெண். அத்தை பெண் என்ற உடனே, கனவுகளைப் பறக்க விடாமல், சற்று பொறுமையாக வாசித்தால், அவளுக்குத் திருமணமாகி, ஐந்து வயதிலே வைஜெயந்தி என்ற பெயரில் ஒரு குட்டிச்சாத்தானையும் பெற்றெடுத்து இருக்கிறாள் என்பதை அடுத்த வரியில் சொல்லி இருப்பேன். பாதகமில்லை. கவனிக்கவும்.

இந்த சுமதியாகப் பட்டவள், ஒருவிதத்திலே எனக்கு குரு போன்றவள். அவளிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இரண்டு. முதலாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கம். இரண்டாவது, அந்த பழக்கத்தைக் கொண்டு, என்ன மாதிரியான புத்தகங்கள் வாசிக்கக் கூடாது என்பது.

நிறைய படிப்பாள். ஆனால், அவை சொல்லிக் கொள்கிற மாதிரியாக இருக்காது.. அதுவும், நவீன இலக்கியம் பயில்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அவற்றை எல்லாம் பட்டியலிடுதல் எனக்கு ஆபத்தாகவே முடியும். என்றாலும், வாசிக்கும் பழக்கம் அவளிடம் இருந்துதான் வந்தது என்பதால், அவள் மேலே சற்று மதிப்பு உண்டு. ஆனால், அந்த மதிப்பு அம்மட்டில் தான்.

சிகரெட்டு புடித்து, அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு, என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது.. கட்டடித்து விட்டு கமல் படம் போய், அவளிடம் வசமாக மாட்டியது.. அவளிடம் தீர்க்க வேண்டிய கணக்குகள் பல உண்டு என்ற போதிலும், கல்யாணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டதால் அதை மறந்து விட்டேன்.

அந்தக் கணக்கில் புதுசாக ஒன்று வந்து சேர்ந்தது. சென்ற செப்டம்பர் ஆறாம் தேதி.

அலுவலக வேலையாக, கோவை சென்றிருந்த போது, தொலைபேசி வழியாக சேதி வந்தது. சேதியின் சாராம்சம், சுமதி, அவளது வீட்டுக்காரர், மற்றும், குழந்தை மூவரும், ஒரு கல்யாணத்துக்காக, இன்று ஜாம்நகரில் இருந்து வந்திருக்கின்றனர். (அவள் கணவனுக்கு ஜாம்நகர் ரிஃபைனரியில் வேலை). அதனால் உடனடியாக வந்து பார்க்கவும். அவர்கள் நாளை இரவு புறப்படுகின்றனர். இது தான் அம்மாவிடம் இருந்து வந்த சேதி.

சுமதியைப் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதனால், நானும் என் வேலையை ஒத்திப் போட்டு விட்டு அன்றிரவே புறப்பட்டு, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்.

முன் பார்த்ததுக்கு கொஞ்சம் பெருத்திருந்தாள். நலம் விசாரிப்புகள் முடிந்து, ஹிந்துவின் குறுக்கெழுத்தில் மூழ்கியிருந்த அவள் கணவனுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு, அம்மா கொண்டு வந்த காஃபியைக் கையில் வைத்துக் கொண்டு, மெட்ராஸ் பிளஸ்சில் ( எகனாமிக் டைம்ஸின் துணை பதிப்பு) ஆழ்ந்த போது, அந்தக் கிராதகி கிட்டே வந்து ஒரு கடிதத்தை என் முன் ஆட்டினாள். கல்கியில் இருந்து வந்த கடிதம் அது.

அவள் முகத்தில் இருந்த எகத்தாளத்தை அளந்து பார்க்க என்னிடம் கருவி ஏதும் அப்போது இல்லை. மற்றவரைக் கூனிக் குறுகிப் போகச் செய்யும் ஏளனம் அது. இப்படிச் சொன்ன உடனேயே அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று விடாமல் பத்திரிகைகளைத் துரத்தும் உட்-பீ எழுத்தாளர்கள் எளிதில் ஊகித்து விடலாம்.

அக்கடிதத்தினை முன் வைத்து எழுந்த கேலி, கிண்டல் நையாண்டி முதலானவற்றை எனக்கு எழுத மனமில்லை. தேவைப்பட்டால் பின்னால் சொல்கிறேன்.

இதற்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும்.

o o o

ரிலையன்ஸ் தொலைபேசியும், பா.ராகவனும்...

ரிலையன்ஸ் தொலைபேசிகளில் பேசுவதற்கென்று ஒரு knack இருக்கிறது. ரொம்ப அனுபவஸ்தர்களுக்குத்தான் அது தெரியும். முதல் இலக்கமான மூன்றைத் தொட்டதுமே IVRS உபயத்தில் ஒரு பெண் இயந்திரக்குரல், ‘ஆல் தி லைன்ஸ் இன் திஸ் ரூட் ஆர் பிசி’ என்று துவங்கும். மனம் தளரக்கூடாது. டையல்பேடின் ஈசானிய மூலையில் இருக்கும் ரீடையலை அழுத்தவேண்டும். இப்போதும் பிடி கொடுக்காது. குறைந்தது ஒரு ஒன்பதரை தரம் முயற்சி செய்த பின்னால், ரிங் போகும். பிடித்துக் கொண்டு வேலையை முடிப்பது உங்கள் சமத்து.

சில வேளைகளில், சொர்க்கத்திலோ, அல்லது வேறெங்காவதோ இருக்கும் தீரஜ்லால் அம்பானியின் தயவு இருந்தால், முதல் இரண்டு முயற்சிகளிலேயே லைன் கிடைத்து விடும்,

நான் ஓடிச் சென்று தொலைபேசியில் பாய்ந்து எட்டு இலக்க எண்களை அழுத்திய போது, அம்பானியின் தயவு இருந்திருக்கவேண்டும். முதல் முயற்சியிலேயே வெற்றி. ஆபரேஷன் வெற்றி பெற்றாலும், சிலவேளைகளில் நோயாளி பிழைப்பதில்லை அல்லவா? அது போல, எனக்கு கேட்டது, வெறும் ரிங் ரிங், ரிங் ரிங், ரிங் ரிங் மட்டும் தான். மகானுபாவர் எடுத்தால் தானே ஹலோ என்று குரல் கேட்கும்?

ஃபோனை தூர எறிந்து விட்டு, ஓடிச் சென்று பாய்ஸ் படத்தை இன்னொருதரம் பார்க்கலாமா என்ற அளவுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டு பொறுமை காத்தேன்.

Patience is virtue. உடனடியாகப் பலன் கிட்டியது.

“வணக்கம். பா.ராகவன் ஹியர்…”

o o o

கண்ணில் தெரியுது வானம் & நகுலேஸ்வரதாஸ்.

“என்னங்க, எவ்வ்ளோ நேரமா ரிங் போயிட்டிருக்கு? எடுக்க மாட்டீங்களா?, எங்கியாச்சும் மாட்டிட்டு இருக்கீங்களா என்ன?”

“ஆமாம், கம்பனி சேர்மன் கூட ஒரு மீட்டிங்லே இருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். என்னை இப்போ கூப்பிடுவார். அதுக்குள்ளே என்ன மேட்டர் சீக்கிரம் சொல்லு. அவர் போனப்பறம், நானே உன்னை ஃபோன்ல கூப்பிடறேன்.”

“அதல்லாம் முடியாது. சேர்மன் தானே? அவரை கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லுங்க. எனக்கு உங்களை ரொம்ப அர்ஜண்ட்டா இப்ப பாத்தாக வேண்டியிருக்கு”

“என்ன மேட்டர் சொல்லு!”

“தலை போற மேட்டர், என் கௌரவப் பிரச்சினை, இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பாத்துடறது…” என்று நான் முண்டா தட்டினேன்.

இந்த வினோதங்கள் எல்லாம் அவருக்குப் புதிதல்ல. என்னைப் போல எத்தனை பிரகிருதிகளை அவர் பார்த்திருப்பாரோ? சந்தர்ப்பம் வாய்க்கும் போது நிச்சயம் கேட்கவேண்டும்.

அவர் அவசரமாக, “சரி ஒண்ணு பண்ணு. இன்னும் பத்து நிமிஷத்திலே மீட்டிங் முடிஞ்சுரும். ஒரு முக்கா மணிநேரத்துலே இங்க வந்திரு. I’ll make myself available..”

“முக்கா மணிநேரமெல்லாம் முடியாது. இப்பமே, இப்பமே பாத்தாவணும்”

“யோவ், நீ இங்க கிளம்பி வரதுக்கே முக்கா மணி நேரம் ஆவாதா? அப்புற என்ன?”

அட, ஆமாம். கோபம் என் கண்ணை மறைத்திருக்கிறது. இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று எண்ணி, ஆட்டோவில் பாய்ந்தேன்.

உள்ளே போன போது, சற்று உற்சாகமாக இருந்தார். உற்சாக பானம் இல்லாமலேயே, எப்போதும் உற்சாகமாக இருக்கக் கொடுப்பினை உள்ள அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருத்தர் என்று தெரியும். இருந்தாலும், இன்றைக்கு அது கொஞ்சம் அதிகமாக இருந்தது போலத் தோன்றியது. அது என் ஆத்திரத்தை இன்னும் கிளப்பியது.

“வாய்யா… ” என்றார் வழக்கம் போலவே வாய் நிறைய சிரிப்புடன்.

நான் உட்ககார்ந்து, “மன்சாள் துக்கம் புரியாம, நீங்க எல்லாரும் சந்தோசமா இருக்கிறீங்க, நாந்தா கெடந்து கண்டவங்க கிட்டையும் பேச்சு வாங்கிகினு அல்லாடினு இருக்கேன். நல்லா இருங்க.”

“இரு, இரு, என்ன மேட்டர்? விஷயத்தை சொல்லாமலே எண்ணைலே போட்ட சமோசா மாதிரி குதிச்சா என்ன புரியும்?”

நான் சற்று நேரம் மௌனமாக இருந்தேன். எப்படித் துவங்குவது? சுமதியுடனான அந்த காலத்து ஒன்ஸைட் காதலில் இருந்து ஆரம்பிக்கலாமா? வேண்டாம். மன்ஷர் அதை வைத்து கதை எழுதி கல்கிக்குக் கொடுத்து விட்டால், சுமதி வேற கல்கி ரெகுலராக படிப்பாள். வேணாம், இன்னிக்கு நடந்த மேட்டரை மட்டும் சொல்லுவோம் என்று நினைத்து குதிரை மாதிரி ஒரு guffaw பண்ணி விட்டு, ஆரம்பித்தேன்.

ஆரம்பித்த என்னை இடை மறித்து, “சரி யோசிச்சு வை. இதோ வந்துடறேன்…” என்று கிளம்பியதும், மீண்டும் வெறுப்பானேன்.

“பாத்தீங்களா? நீங்க கூட இப்படி எஸ்கேப் ஆவறீங்களே, எல்லாம் என் ராசி,..” என்று புலம்பலைத் துவங்க..

“யோவ், போய் வாய் கொப்புளிச்சிட்டு வந்துடறேன்யா.. இன்னிக்கு என்னமோ ஆயிடுச்சு உனக்கு…, அந்த ஷெல்புலே கண்ணில் தெரியுது வானம் இருக்கு பார், அதுல நகுலேஸ்வரதாஸ்ஸை இன்னொரு தரம் உக்காந்து பாராயணம் பண்ணு, அதுக்குள்ளே வந்துடறேன்”.

நகுலேஸ்வரதாஸ் பல முறை படித்த கதை. கூழங்கைத் தம்பிரானையும்,அவனுக்கு லெச்ச ரூபாய் கொடுத்த சுகுணணையும், பாகிஸ்தான்காரனே சாப்பிடாத பாகிஸ்தானி ஊறுகாய் விரும்பி உண்ணும் ஹொங்கோங்காரியையும் எத்தனை முறை தான் படிப்பது. இருந்தாலும் இன்னும் ஒரு முறை படித்து முடித்தேன்,

லாகிரி சமாசாரங்களையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு எதிரிலே வந்து அமர்ந்து, “சொல்லு…” என்றார் பா.ராகவன்.

( தொடரும் )

பகுப்புகள்: fiction

pazhaiya sarakku – nalabhagam

பெப்ரவரி 4, 2006 · 13 மறுமொழிகள்

எழுத்தாளருக்கு அவ்வப்போது வருவது writer’s block என்றால் வலைப்பதிவாளருக்கு வருவது bloggers block. வார இறுதி. சாவகாசமாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தாலும், என்ன எழுத என்று தெரியவில்லை. அதுக்காக கையையும், விசைப்பலகையையும் வெச்சிகிட்டு சும்மா இருக்க முடியாதில்லையா? அதனால், பழைய சரக்கு ஒண்ணு…

நளபாகம்.

மங்களா கபே ஓனரின் அம்மா செத்துபோனதுக்கும் , என் மனைவி என் முதுகிலும், என் மச்சினன் முதுகிலும் டின்கட்டினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கக்கூடுமா என்றால்,

இருக்கும். சர்வ நிச்சயமாய் இருக்கும்.

ரம்யாவின், சித்தி பெண்ணுக்கு வளைகாப்பு என்று அவள் திருவாரூருக்கு புறப்பட்டபோது, அவள் சொன்னதில், முக்கியமானது, சமையல் அறைக்குள் நான் நுழையவே கூடாது என்பதுதான். எனக்கு தெரிந்த சமையல் வென்னீர் வைப்பதும் தயிர் தோய்ப்பதும் தான் என்று நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் போது ரகசியமாக தலையில் அடித்துக்கொள்வாள். காபி வைக்க கொஞ்ச நேரம் சமையல் அறைக்குள் புகுந்தால், அதை சரி செய்ய அவளுக்கு அரை நாள் ஆகும். என் கைவண்ணத்தில் அவ்வளவு களேபரம் உறுதி .

” ஒழுங்கு மரியாதையா, ஆபீஸ் விட்டவுடன், வீட்டுக்கு வந்து சேருங்க, பாச்சாவும் வீட்ல தான் இருப்பான், ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுங்க, ரெண்டே நாள்லே வந்துடுவேன்” என்று சொல்லி விட்டு ரம்யா, ஊருக்கு பஸ் ஏறியதில் ஆரம்பித்தது வினை.

” கேஸை தொடாதீங்க, அப்படியே, பால் கீல் காச்சினாலும், சிலிண்டரை ஆ·ப் பண்ண மறந்துடாதீங்க, பால் காச்சும் போது சிம்லே வைச்சு காச்சுங்க, என்றெல்லாம் அவள் தந்த அறிவுரைகளை, பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ,

அவளை பஸ் ஏற்றிவிட்டு நானும் பாச்சாவும் வந்த அன்று ப்ரச்சனை ஏதும் இல்லை.

அடுத்த நாள் தான் விவகாரமே

இவனை சிம்ரன் படம் ஏதாவதுக்கு துரத்தி விட்டு, தீர்த்தம் சாப்பிட எங்காவது ஒதுங்கிவிடலாமா என்ற யோசனையின் குறுக்கே, ரம்யாவின் நினைவு வந்து பயமுறுத்தியது. ராட்சசி. எப்படியாவது கண்டுபிடித்து விடுவாள். சன்னல் ஓரத்தில் அமர்ந்து, கை கட்டைவிரலை, வாய்க்கருகே கொண்டு சென்று, ஒற்றை விரல் காட்டி எச்சரித்து நினைவுக்கு வந்தது.

நாளை மறுநாள் வரை அவள் சென்னையில் இருக்க மாட்டாள் என்றாலும், அவளுக்கென்று யாராவது அகப்படுவார்கள்.

” ஏண்டி, பஸ்ஸ¤ல போறச்ச, ஒன் ஆம்படையானை, அந்த ஒயின் ஷாப்புலே பாத்தேனே, ” ஏதாவது ஒரு மாமி சொல்லிவைக்கும். சில்லரை வாங்கத்தான் போனேன் என்றாலும் நம்ப மாட்டாள்.

கூட்டி கழித்து பார்த்து, தீர்த்தம் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

” என்ன, அத்திம், சைலண்டா, வண்டி ஓட்டறேள்?”

இவன் ஒரு வினை. வரதட்சணையாக பணம் கொடுப்பார்கள். எனக்கு இவனை சீர்வரிசையில் வைத்து கொடுத்துவிட்டார்கள். சோடா புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, இந்த சேட்டுக்கடைகளீல் எல்லாம், உருளையாக ஒரு சமாசாரம் இருக்குமே,சாய்ந்து கொள்வதற்கு, அது மாதிரி மொத்தமாக இருப்பான்.

“எனக்கு ஹாஸ்டலில் இவனை விடறது அவ்வளவா சரியாப் படலே. நீங்க பாத்துக்குங்க மாப்பிள்ளை, ” என்று சொல்லிவிட்டு, என்னிடம் தள்ளி விட்டார்.

முடியாது என்று சொல்லிருக்கலாம். புதுப்பொண்டாட்டி, குழல் கேசம் , காதருகில் பறக்க, சற்றே அருகாமையில் வந்து சைட் ப்ரொ·பைலில் சொன்ன போது, மறுக்க முடியாது, ஒருகணம் மயங்கி, சரி யென்று தலையாட்டினேன்.முடிவில்லாத தொல்லைகள் எல்லாம், அரை வினாடி மயக்கத்தினால் வருபவை என்ற தத்துவத்துக்கு சரியான உதாரணம் பாச்சா.

பாலசுப்ரமணியம் என்ற பெயரை பாலு என்று கூப்பிடலாம். பாச்சா என்பார்களோ ? கேட்டால். அது எங்க தாத்தா பேர். கிண்டல் பண்ணாதேங்கோ” என்று இவள் முறைப்பாள்.

மொபசலில் இருக்கும் ஒரு இஞ்சினியரிங் காலேஜில் படித்தான். சமர்த்து போதாது. சிம்ரன் பட போஸ்டரை எல்லாம் ஆவென்று பார்த்துக் கொண்டே , வீட்டுக்கு வருவான். இவெனல்லாம், இஞ்சினியரிங் படிச்சி, என்னத்த கிழிச்சி என்று வியப்பாக இருக்கும்.

பெட்டி நிறைய பணம் எடுத்துக்கொண்டு, கரை வேட்டி போட்ட காலேஜ் சேர்மனிடம் மொத்தத்தையும் கொடுத்து, ஒரே நாளில் அட்மிஷன் முடிந்து விட்டது. துணைக்கு நானும் போயிருந்தேன்.

” ங்கொப்பன் கிட்ட, இவ்வளவு பணம் இருக்கா, கல்யாணத்தன்னிக்கு, சொத்தை கார், சூட்டு பணத்துலே ரெண்டாயிரம் பாக்கின்னு, பரதேசிக் கோலம் போட்டுட்டு, இன்னிக்கு, லட்சக்கணக்கில, ரூவா குடுத்து,புள்ளயை, இஞ்சினியரிங் சேத்தாறது” என்று கிண்டலாக சொல்ல, மூன்று நாள் என்னுடன் பேசவில்லை.” ஆமா, படிக்க வெச்சா, கடேசி காலத்துலே, வெச்சி சோறு போடுவான், பாத்து பாத்து கல்யாணம் பண்ணிவெச்சாளேன்னு நீங்க ஏதானும் துரும்பை தூக்கிப்போடப்போறேளா என்ன? என்று ஒரு குதி குதித்து, கணக்கை நேர் செய்து விட்டுத்தான், திரும்பவும் என்னுடன் பேசினாள்.

உபரியாக, கல்யாணத்தன்னிக்கு, என் அக்கா, செய்த அடாவடிகள் பற்றியும் ஒரு பாட்டு கிடைத்தது.

” என்ன அத்திம், கேட்டுக்கிட்டே இருக்கேன், பேசாம வரேளே? “

” டேய் பாச்சா, அத்திம் கித்திம்னு கூப்பிட்டே, வண்டியிலேந்து புடிச்சி தள்ளி விட்டுடுவேண். அங்கிள்னு கூப்பிடுன்னு எத்தன தரம் சொல்றது? , “

” சரி, அங்கிள். ஏதாவது படத்துக்கு போலாமா? ” அக்காதான் வீட்ல இல்லியே”

” கொன்னுடுவேன், ஸ்டடி ஹாலிடேஸ்னா, அது படிக்கறதுக்கு. சிம்ரன் எங்கயும் ஓடிப்போயிடமாட்டா, லீவ்ல மெதுவா பாத்துக்கலாம். மணி ஏழுதான் ஆகுது. இங்கியே ஏதானும் ஓட்டல்ல சாப்பிட்டு போயிடலாமாடா?

” வேணாம் பசிக்கலே , பார்சல் வாங்கிகிட்டு, வீட்டுக்கு போயிடலாம். ” கண்ணில் பட்ட ஒரு சரவண பவனில், வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்ற போது, சன் ந்யூஸ் மணி சரியாக எட்டு என்றது.

இவனை புத்தகங்களுடன் அறைக்குள் தள்ளி விட்டு, ஸ்டார் மூவிஸில் படம் பார்த்துக்கொண்டே தூங்கி விட்டிருக்கிறேன். டைமர் செட் பண்ணாததால், எழுந்த போதும், வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

0

எழுந்து, லீவ் போட்ட்டு விடலாம என்ற யோசனைய தள்ளி விட்டு, குளித்து அலுவலகத்துக்கு கிளம்பும் போது, பாச்சா அவன் அறையில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

குவிந்து கிடந்த புத்தகங்கள் நடுவே தூங்கிக்கொண்டிருந்தான்.எழுப்புவதற்காக, அவனை தட்டியபோது அவன் மார்மேல் இருந்த , டிஸ்க்ரீட்மேதமேடிக்ஸ் என்ற புத்தகம் சரிந்து விழ, அதில் இருந்தது, சிம்ரனின் போட்டோ.

வந்த ஆவேசத்தில், அந்த புத்தகத்தாலேயே, அவனை ஒரு நெத்து நெத்தலாமா என்று யோசித்து, நேரமின்மையால், அதை கைவிட்டேன். சாயந்திரம் வந்து பார்த்து கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.

மத்தியான டப்பவுக்காக காத்திருந்த போதுதான், ரம்யா ஊருக்கு போனது, நினைவுக்கு வந்தது. இன்று ஓட்டல்தான். ¨பயனை அனுப்பி, வாங்கி வரச் சொல்லி சாப்பிடும் போது தான் , பாச்சாவின் நினைவு வந்தது.

அவனை போனில் அழைத்தேன்.

” பாச்சா, நாந்தான்டா, சாப்பிட்டியா?”

” என்ன அத்திம்பேர், காலையிலே எழுப்பாமலேயே, போய்ட்டிங்க? நைட்டு பூரா படிச்சதிலே, அசந்து தூங்கிட்டேன். எழுந்து இப்பத்தான் குளிச்சேன். “

” நீ என்ன படிச்சி கிழிச்சேன்னு எனக்கு தெரியும், நா, சாயங்காலம் வந்து பேசிக்கிறேன், ஹாங்கர்ல.என்னோட க்ரீம் கலர் சட்டை பாக்கெட்டுலே, நூறு ரூபா இருக்கு, எடுத்துட்டு போய், மங்களாவுலே சாப்பிட்டு வந்துரு. நைட் நா வரதுக்கு எட்டு மணிக்கு மேலெ ஆவும். வரப்ப, ராத்திரிக்கு சாப்பிட வாங்கிகிட்டு வந்துடறேன். “

இந்த தொல்லையெல்லாம் நாளையோடு சரி. ரம்யா வந்து விடுவாள்.

நான் வரைவு செய்திருந்த, டெண்டர் ஒரு ரிஜக்ட் ஆகிவிடவே, எம்டி கூப்பிட்டு அனுப்பி, பேசி, காரணத்தை கண்டுபிடி என்று சொல்ல, நேரம் 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அடுத்த நாள் வேலைக்கு ஒழுங்கு படுத்தி விட்டு, கிளம்பினேன். இந்த பயல் வீட்டில் இருக்கிறானோ அல்லது எங்காவது ஊர்மேய போயிருக்கிறானோ என்று தெரியவில்லை.
நான் இருக்கும் புதூரில், ஊர்மேய அவ்வளவாக இடம் இல்லை என்றாலும், சில தோஸ்துகள் வீட்டுக்கு செல்வான்.

பாடிக்கு அருகே, பிரிட்டானியாவை கடக்கும் போதுதான், இரவு சாப்பாடு வாங்க மறந்து போனது நினைவுக்கு வந்தது. அம்பத்தூரில் ஓடியில் ஓட்டல்கள் இருக்கும்.

உடல் அசதியாக இருந்தது. பேசாமல் மங்களாவிலேயே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம் என்று வழியில் நிறுத்தாமல் வீட்டுக்கு வண்டியை விரட்டினேன். இரவு பத்து மணிவரை திறந்திருக்கும் என்று தெரியும்.

பாச்சா, ஸ்டீரியோவில் பாட்டை வைத்து விட்டு, படித்துக் கொண்டிருந்தான்.

என்ன, அத்திம், இவ்வளோ லேட் என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் டேப்பை நிறுத்தினேன்.

” படிக்கறச்சே, என்ன பாட்டு? சரி, என் வண்டியை எடுத்துட்டு போய், மங்களாவுலே, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வந்துரு, நான் மறந்துட்டேன்.”

“அச்சச்சோ. மங்களா கே·ப் இன்னிக்கு லீவாச்சே!, ஓனரோட அம்மா, செத்துப் போய்ட்டாங்களாம்” என்றான்

என்னடா இது தலைவலி, மறுபடியும் ஓடணுமா.

” அப்ப, மத்யானம் எங்க சாப்பிட்டெ? “

” நான், ·ப்ரெண்டை பாக்க அம்பத்தூர் போனேன், அவன் வீட்டிலேயே சாப்பிட்டுட்டேன். “

இந்த இரண்டும் கெட்டான் பிரதேசத்தில் வேறு ஓட்டல் வேறு இருக்காதே.

” காந்தி சிலை கிட்ட ஒரு ஓட்டல் இருக்கில்லே? அது தொறந்துருக்குமா? “

” அது, முனியாண்டி விலாஸ் அத்திம்பேர். “

“ப்ரிஜ்ஜிலே, தோசை மா ஏதாச்சும் இருக்கான்னு பாரு”

” காலையிலேயே பாத்துட்டேன். இல்ல. சமையல் அறையும் சுத்தம், நேத்திக்கு அரைச்சிட்டு வந்த கோதுமை மாவுதான்

இருக்கு” என்றவன் கண்ணில் திடீர் பல்ப் ஒளிர்ந்தது.

” அத்திம், ஒரு ஐடியா , பேசாம நாமே சப்பாத்தி பண்ணிடலாம். ஜாம் கூட இருக்கு. சீப் அண்ட் பெஸ்ட்,என்ன சொல்றேள்”

” டேய் எனக்கு அதெல்லாம் தெரியாதேடா? “

” சப்பாத்தி செய்யறது என்ன, பெரிய வித்தையா? ரெண்டு தம்ளர் கோதுமை மாவு கூட கொஞ்சம் உப்பு சேத்து, தண்ணி விட்டு பெசைஞ்சு, கல்லுல போட்டா, சப்பாத்தி,”

சப்பாத்தி என்பது அவ்வளவு ஈசியானதா? இந்த பயலுக்கு இதெல்லாம் தெரியுமா என்று ஆச்சரியமாய் இருந்தது. செய்து பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த இரவு நேரத்தில், உடம்பு அசதியுடன் மறுபடி ஓட்டலை தேடியலைய முடியாது என்பது உறைக்க, சரி என்று சொன்னேன்.இவன், வாய் கிழிய பேசினாலும், ஏதாச்சும் சொதப்பி விட்டால் என்ன செய்வது என்றும் தோன்றியது.

” பாச்சா, ரம்யாவோட , நெறைய மங்கையர் மலர் இருக்கும். எதுலயாச்சும், சப்பாத்தி க்கு ரெசிபி ஏதாவது இருக்கா, கொஞ்சம் தேடேன் “

” கொஞ்சம் சும்மா இருங்க அத்திம், நான் இதுக்கு முன்னாடியே சப்பாத்தி செஞ்சிருக்கேன். இன்னும் அரை மணியிலே, சப்பாத்தி ரெடியாயிடும். பாத்துட்டே இருங்க. “

அவன், மும்முரமாக, கொஞ்சம் மாவை தம்ளரில் அளந்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டிருந்தான். ஒரு தேர்ந்த குக் போல அவன் செயல் பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் போல பாலையும் விட்டான்.

” டேய், எதுக்குடா பால்? “

” பால் விட்டு பிசைஞ்சா, சா·ப்டா இருக்கும் அத்திம்பேர் “

நான் எதற்கும் இருக்கட்டும் என்று , மங்கையர் மலர் புத்தகத்தை தேடினேன். ஒவ்வொரு இதழிலும், ஏதோ புது புது பலகாரங்கள் பெயரெல்லாம் இருந்தது. சப்பாத்தி செய்வது எப்படி என்று ஒருத்தரும் எழுதவில்லை. எல்லாருக்கும் சப்பாத்தி செய்வது எப்படி என்று தெரிந்திருக்கும் என்பது ம.மலரின் எண்ணமாக இருக்கலாம். விடாமல் தேடிய போது, , விடாமல்

தேடிய போது ஒரு முத்து, கிடைத்தது.

” சப்பாத்தி செய்யும் போது, அதில் வாழைப்பழம் போட்டு பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்” என்று திருத்துறைப்பூண்டி சாந்தி என்கிற ஒரு அம்மணி எழுதியிருந்தார்.

செயல் படுத்தி விட வேண்டியதுதான்.

” டேய், பாச்சா, இங்க பாரேன் ” என்று அதை காட்டினேன்.

” வேணாம், அத்திம்பேர், ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா, அப்பறம் ஒண்ணும் பண்ண முடியாது”

” போடா, புக்குலேயே போட்டிருக்கான், அப்பறம் என்ன” சொல்லிவிட்டு, ·ப்ரிட்ஜில் இருந்து இரண்டு பச்சை வாழைப்பழங்களை எடுத்து வந்தேன். “

நன்றாக ஊறியிருந்த மாவு, மெதுவாக, சப்பாத்தி இடும் பதத்தில் இருந்தது.

“இதை போட்டு பிசை சொல்றேன்” என்று வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தேன்.

அவன் போட்டி பிசைந்ததும், கெட்டியாக இருந்த சப்பாத்தி மாவு தளர்ச்சியானது.

” சொன்னேன் இல்ல, மாவு லூசாயிருச்சு, இனிமே, எப்படி, தெரைக்கிறது? “

” இருடா, திருவாழத்தான், வாழைப்பழத்துலே, தண்ணி இருக்கில்லியா, அதான்,மாவு இளகிடுச்சி. கொஞ்சம் மாவு போட்டு பெசைஞ்சா, மறுமடியும் கெட்டியாயிட்டுபோறது, மாவுதான் வேண்டிய மட்டும் இருக்கே”

” அவன் மாவு போட்டு பிசைய, கெட்டியாகவே இல்லை. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று வைத்திருந்த மாவில், முக்கால் வாசி குறைந்த பின் தான், செய்த காரியத்தின் விபரீதமே புரிந்தது”

முக்கால் வாசி மாவை சேர்த்த பின்தான், மாவு, சப்பாத்தி இடும் பக்குவத்துக்கு வந்தது.

” என்ன அத்திம், இப்படி ஆயிடுச்சி, இவ்வளவு சப்பாத்தியையும் , எப்படி இட்டுமுடிக்கிறது? அப்படிய்யே இட்டாலும், யாரு சாப்பிடுறது? ” என்று அவன் கேட்ட போது மௌனமாக இருந்தேன்.

நாளைக்கு அக்கா வந்தா, டின்னு கட்டப் போறா”

0

வந்து கட்டினாள். செமத்தியாக. பாச்சாவுக்கு, முதுகில் நாலு வைத்தவள், எனக்கு மட்டும் சலுகையாக அதை செய்யவில்லை. என்ன இருந்தாலும் கட்டின புருஷன் இல்லியோ?

” அதெல்லாம், ஒண்ணும் இல்லே, ஒங்க முதுகிலே அடிச்சா, எனக்குத்தான் கை வலி க்கும்.” பழிகாரி.கர்ம சிரத்தையாக அதை எண்ணினாள். மொத்தம், நாங்கள் சாப்பிட்டது போக, எண்பத்து ரெண்டு சப்பத்திகள் இருந்தன.

” ஒரு நாள், உங்களை விட்டுட்டு வெளிய போ முடியறதா? இந்த மாசத்துக்குன்னு வாங்கி வெச்சிருந்த மாவு மொத்த¨தயுமா இப்படி சப்பாத்தியா செஞ்சி அடுக்குவா? “இது காலியார வரை, நோ டிபன். “

மங்கையர் மலர்லதான், வாழைப்பழம் போடுன்னு போட்டிருந்தான், அதான்… என்று முணுமுணுத்தேன். “

நல்லவேளையாக அவள் காதில் விழவில்லை.

நாலு நாளைக்கு அதே சப்பாத்தியை சூடு பண்ணி சூடு பண்ணி நானும், பாச்சாவும் சாப்பிட்டோம்.

திருத்துறைப்பூண்டி சாந்தி என்கிற அம்மையாரின், முழுவிலாசத்தை கேட்டு, மங்கையர் மலருக்கு கடிதம் எழுதுயிருக்கி§றன். அட்ரஸ் கிடைத்தால், எனக்கு 12 ஆண்டு செயிலும், உங்களுக்கு ஒரு கொலை கதையும் நிச்சயம் கிடைக்கும்.

-07.03.2003

பகுப்புகள்: Humour · fiction