Prakash’s Chronicle 2.0

‘arasiyal’ பகுப்பில் உள்ள வரவுகள்

A Stinking Place Called India

செப்டம்பர் 26, 2007 · 20 மறுமொழிகள்

“The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது.

சமீபகாலமாக, பாராளுமனறம், பல்துறை வித்தகர்களைக் கொண்டு இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

பி.சாய்நாத், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்து விட்டு, ப்ளிட்ஸ், தி டெய்லி போன்ற பத்திரிக்கைகளில், தன் இதழியல் பணியைத் துவங்கினார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஃபெலோஷிப் மூலமாக, கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலைமை ஆராய்ச்சி மற்றும் ரிப்போர்ட்டிங் செய்யும் பணியை மேற்கொண்டார். கடந்த இருபது வருடங்களாக, வருடத்தில் 300க்கும் மேற்பட்ட நாட்களை, கிராமப்புறங்களில் செலவழித்து அங்கே ஏழ்மை மிகுந்து காணப்படும் பிரதேசங்களில் பயணம் செய்து அங்குள்ளவர்களின் நிலை பல கட்டுரைகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதி 1996 இலே வெளிவந்த Everybody Loves a Good Drought – Stories form India’s Poorest Districts ( வாசித்துக் கொண்டிருக்கிறேன் ) என்ற நூல், இந்திய மற்றும் உலக அளவில் பதிமூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லக்மே அழகிப் போட்டிகளைக் கவர் செய்ய, ஐநூற்றுக்கும் மேற்பட்ட ‘ஜெர்னெலிஸ்ஸ்ட்டுகள்’ தங்கள் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் எக்ஸ்ளூசிவ் புகைப்படத்துடன் வெளியிடத் துடிக்க, அதே சமயம், அழகிப் போட்டி நடக்கும் நகரங்களிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விவசாயிகள் , வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதன் பொருளாதார / அரசியல் / உளவியல் காரணங்களை, வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுக்கும் நிலைமை பற்றி சாய்நாத்தின் பேச்சில் தென்படும் நாகரீகம் குறையாத நக்கலைக் கண்டு கொள்ள மொழியியலிலே பட்டம் பெற்றிருக்கத் தேவை இல்லை என்கிற நிதர்சனத்தை, இந்தக் கட்டுரையின் அடுத்த சில பகுதிகளிலே பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நேராக மேட்டர்.

கிராமப்புற பொருளாதாரம், பழங்குடி இனங்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள், விவசாயம் போன்ற பல்வேறு காரணிகளைக் கொண்டு இயங்கும் சங்கதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு சிறிதும் இல்லாத எனக்கு, சாய்நாத் அவர்கள் கொடுத்த லெக்சரில் இருந்து விளங்கியவை இதுதான்.

- பின் தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மிகக் கடுமையான வறுமையில் உழலும் தாழ்த்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினரைப் போன்ற இளிச்சவாயர்களை நாம் உலகில் எங்குமே பார்க்க முடியாது.

- கடந்த பத்து வருடங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். இதுவும் துல்லியமான கணக்கு அல்ல. சொந்தமாக நிலம் இருந்து தற்கொலை செய்து கொண்டால் தான், அவர் அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்குள் வருவார். விவசாயிகளின் குடும்பத்தினரோ அல்லது நிலமில்லாத விவசாயக்கூலிகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் கணக்கில் வராது.

- தற்கொலைகளுக்கு முக்கியமான காரணம் கடன் தொல்லை. நான்கு ஆண்டுகளாக , லாபகரமாக விவசாயம் செய்ய , ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் சுமை ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு ஆந்திர விவசாயியை நண்பர்கள் சரியான சமயத்தில், மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்றி விட்டார்கள். நான்காண்டுகளாக சிறுகச் சிறுக அசல் மற்றும் வட்டியுடன் சேர்ந்திருந்த ஒரு லட்ச ரூபாய்க் கடன் சுமை, அவர் காப்பாற்றப்பட்ட நான்கு நாட்களில் , சடாரென்று ஒன்றரை லட்சமாக உயர்ந்தது. Thanks to The Fifth Most Privatised Health Care System in the World, India.

- 2004 இலே India Shining என்ற பெயரில், பொதுத்தேர்தலுக்காக ஊடகங்களில் விளம்பரம் செய்து, முந்தைய அரசு, மக்களிடம் செருப்படி வாங்கிய பிறகுதான், விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனை பற்றி லேசாக ஊடகங்களில் செய்திகளில் வரத்துவங்கியது. ஆந்திரத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் தற்கொலைகள் மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் தான், எகானாமிக் டைம்ஸ் நாளிதழ், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு CEO of the Year என்ற விருது கொடுத்து மகிழ்ந்தது.

- மானியம் இல்லாத விவசாயம் உலகில் எங்குமே கிடையாது. விவசாயத்தைப் பொறுத்தவரை மானியம் என்பது உலக மரபு. மானியம் அளிக்கப்படாத விவசாயத் தொழில் என்பது உலகத்தில் எங்கும் இல்லை. 3.9 பிலியன் டாலர் பருத்தி விவசாயத்துக்கு, அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் மானியம் 4.7 பிலியன் டாலர்கள்.

- விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பது உண்மை. ஆனால், அது நட்டத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சாய்நாத் வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘agriculture in India is not unviable but being made unviable by imposition’

- ஒரே குடும்பத்தில், குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடப்பது சகஜம்.

- ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், ஒரு விவசாயி , தன்னுடைய பெண் திருமணத்தின் போது கடன் கொடுத்தவர்களால் ( எட்டாயிரம் ரூபாய் ) அவமானப்படுத்தப் பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான், ஒரிசா போன்ற இடங்களில் இருந்து வந்திருந்திருத உறவினர்களை மீண்டும் வரவழைத்து திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால், இறந்தவரை அடக்கம் செய்து விட்ட கையோடு பெரியவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது உடன் இருந்த சாய்நாத், வேலை முடிந்து தன்னுடைய இல்லத்துக்குத் திரும்பிய போது, ஒரு மல்டிநேஷனல் வங்கியில் இருந்து ‘ பென்ஸ் கார்’ வாங்கிக் கொள்ள லோன் ஆ·பர் அவருக்கு வந்திருந்தது. ஜஸ்ட் 6 சதவீத வட்டி. No collateral Required. இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு சில நூறு மைல்கள் தூரத்தில், தே நேரத்தில் உலகின் மிகக் காஸ்ட்லி திருமணம் ( லக்ஷ்மி மித்தல் இல்லத்திருமணம் ) நடந்தது.

- ட்சுனாமி தாக்கிய போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் ( இந்தியா , இலங்கை, இந்தோனேசியா ) இருந்த பங்கு சந்தைகளின் பர்ஃபாமன்ஸ் சட சடவென்று உயர்ந்தது. குழப்பமாக இருக்கிறதா? பங்குமார்கெட்டுக்கு, ட்சுனாமியினால் ஏற்பட்ட தேசியத் துயரத்தை விடவும், நிவாரணப்பணிகளை முன்னிட்டு உள்ளே வரவிருக்கும் ‘பணம்’ பற்றித்தானே மகிழ்ச்சி ஏற்படுவதுதானே நியாயம்?

- National Sample Survey அளித்த அறிக்கையின் படி, விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் நாற்பது விழுக்காட்டினர் உண்மையில் விவசாயம் செய்வதை விரும்பவில்லை. வேறு தொழிலுக்கு பெயர முயற்சி செய்கிறார்கள்.

- மகாராஷ்டிரத்தின் விதர்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சென்ற ஆண்டு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்விலே , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது. இது பற்றிய விவாதம் எழுந்த போது, கல்வித்தரம், ஆசிரியர்கள் தரம் பற்றிப் பேசிய அரசாங்கப் பீடாதிபதிகள், ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்து விட்டார்கள். அது, அந்த மாவட்டங்களில், தேர்வு நடப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு வரை, தோராயமாக நாள் ஒன்றுக்கு பதினேழு மணிநேரங்கள் மின்வெட்டு இருந்தது. இது போல ஒரே ஒரு நாள், நரிமன் பாய்ண்ட் வட்டாரத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், மாநில அரசு கவிழ்ந்து விடும். முரண் நகை என்ன என்றால், மகாராஷ்டிரத்தில், மிக அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாவட்டம், விதர்பா.

- வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.

- Indian Express, Telegraph போன்ற – பிசினஸ் பத்திரிக்கை அல்லாத – general interest தேசிய நாளிதழ்களில் வர்த்தகச் செய்திகளைக் கவர் செய்ய 12 அல்லது 13 நிருபர்கள் உண்டு. விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கே விவசாயம்/ கிராமங்களைக் கவர் செய்ய ஒருத்தர் அல்லது இருவர் இருந்தால் அதிகம்.

- ஆந்திராவில் மென்பொருள் ஏற்றுமதித் தொழிலை விட அதிகமாகப் பணம் புழங்கும் துறை விதைகள் வியாபாரம். 1991 இலே கிலோ எட்டு ரூபாய்க்கு விற்ற விதை, இப்போது கிலோ இரண்டாயிரத்துச் சொச்சம். விற்பது வெளிநாட்டு நிறுவனம். சந்திரபாபு நாயுடு, தலையிட்டு அதை ஆயிரத்துச் சொச்சமாகக் குறைக்க வைத்திருக்கிறார்.

***********

பி.கு 1:

சாய்நாத் கொடுத்த லெக்சரில் இருந்த புள்ளிவிவரங்கள் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அவை அனைத்தும், அரசு பொதுவிலே வைக்கும் தகவல்களில் இருந்தும், மக்களை நேரடியாகச் சந்தித்தும் பெறப்பட்டவையே. பல விஷயங்கள் நினைவில் இல்லை. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொட்டதற்கெல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகி அவஸ்தைப் படுபவர்கள் பார்க்க வேண்டாம்.

பி.கு 2:

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல், இழுக்காமல் உடனடியாகப் படித்து முடிக்கிற வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு, சாய்நாத் எழுதிய Everybody Loves a Good Drought – Stories form India’s Poorest Districts’ நூலை ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. சரமாரியாக வந்து விழும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைச் சீரணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில அத்தியாங்களைப் படிக்கையில் விரல்கள் நடுங்குகின்றன. இந்தியாவின் அச்சு அசலான ஏழைகளை அறிமுகப்படுத்தும் அந்த நூலின் தலைப்பைக் குறித்த சந்தேகம், முதல் சில பக்கங்களைப் படித்ததும் நீங்கியது. சாய்நாத் சந்திக்கும் ஒருவர் சொல்கிறார்,

” In this year’ drought, all i did was sub-contract one small dam. I bought a new scooter. If there’s a drought next year, I shall buy a new jeep.”

படித்து முடித்தவுடன், நூல் குறித்த அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.கு 3.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

பி.கு 4 :

இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.

பகுப்புகள்: Rural India · arasiyal

Dayanidhi Maran & North Indian Media

மே 14, 2007 · 7 மறுமொழிகள்

இந்த சப்ஜக்டிலே நானும் ஒரு பதிவு போடாவிட்டால், வேர்ட்பிரஸ் கட்டம் கட்டிவிடப்போகிறது என்று பயமாக இருக்கிறது… ஆகவே…..

இந்த நிகழ்வு அனேகமாக யாரும் எதிர்பாராதது. ஜெயலலிதா கூட, இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்தக் குழப்பம், அவர்கள் செய்தி ஒளிபரப்பிலேயே தெரிகிறது.

தினகரன் அலுவலகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம், அதைத் தொடர்ந்த சன் டீவிச் செய்திகள், கலைஞரின் ரீயாக்ஷன், மாறன் நீக்கம் போன்ற தொடர் சம்பவங்களில், என்னை வெகுவாக வசீகரித்த விஷயம், தயாநிதி மாறனுக்கு, வட இந்திய ஊடகங்களில் கிடைத்திருக்கும் அனுதாபத்தினால் ஏற்பட்ட பாபுலாரிட்டி. திறமையான அமைச்சர் என்று பெருவாரியாகப் புகழப்படுகிறார். இதிலே யதார்த்தம் என்ன?

தயாநிதி மாறனின் சாதனைகளாக ஊடகங்கள் குறிப்பிடுவது, தொலைத்தொடர்புத் துறையில் ஏற்படுத்திய மாற்றங்களும், கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் அன்னிய முதலீடும். அன்னிய முதலீட்டுப் புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துக் கொண்டுதான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இது கலைஞரை இன்னும் நன்றாக வெறுப்பேற்றியிருக்கும்.

அரசாங்கத்தை நடத்துவது அமைச்சர்கள் அல்ல. அதிகாரிகள். அதிகாரிகள் பரிந்துரைப்பதை, ஏற்றுக்கொண்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்ததே, தயாநிதி மாறனின் உருப்படியான வேலை. இது போன்ற மாற்றங்கள் துறை தோறும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. தொலைத் தொடர்புத்துறை ஹைப்ரொஃபைல் என்பதாலும், வணிக நாளிதழ்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள விளம்பரங்களைக் கொடுக்கும் வசதி படைத்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள துறை என்பதாலும், இத்துறைசார்ந்த பாலிசி விஷயங்கள் கவனத்தைப் பெறுகின்றன.

பிற துறைகளில் வரும் அன்னிய முதலீடு, ஐடி மற்றும் தொலைத்தொடர்புக்கு சற்றும் சளைத்ததல்ல.

ஏப்ரல் 2006 – பிப்ரவரி 2007 வரை, நம் நாட்டுக்கு வந்த அன்னிய முதலீடு, துறை வாரியாக.. அடைப்புக்குள் இருப்பது முந்தைய நிதியாண்டில் வந்த முதலீடு*.

  • மென்பொருள் / வன்பொருள் துறை : ரூ.11,983 கோடி ( 6,499 கோடி)
  • தொலைத் தொடர்பு : ரூ.2,338 கோடி ( 3,023 கோடி)
  • சேவை நிறுவனங்கள்- நிதி மற்றும் பிற : ரூ. 20,348 கோடி ( 2,565 கோடி)
  • போக்குவரத்து : ரூ.1,989 கோடி ( ரூ.983 கோடி)
  • மின்சாரம்/எரிபொருள் : ரூ.1,050 கோடி (ரூ. 416 கோடி)
  • உணவு உற்பத்தி : ரூ.222 கோடி ( ரூ.183 கோடி )
  • கட்டுமானம் – சாலை வசதி, ஏர்போர்ட் இன்னபிற : ரூ.4,265 கோடி (ரூ. 667 கோடி)
  • மேலே இருக்கும் புள்ளிவிவரத்தின் படி, வருடா வருடம் அன்னிய முதலீடு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது மாறன் அமைச்சராக இருந்த துறையில் மட்டுமல்ல, ப.சிதம்பரத்தின் நிதித் துறையிலும், டி.ஆர்.பாலு அமைச்சராக இருக்கும் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையிலும் தான். ஆக, மாறனை மட்டும் தனியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடவேண்டியதற்கு அவசியமே இல்லை.

    பார்ப்பதற்கு பளிசென்று , கொஞ்சம் இளமையுடன், ஆங்கிலம் பேசத் தெரிந்த அமைச்சர்கள் மீது ஆங்கில ஊடகங்களுக்கு எப்போதுமே தனிக் காதல் உண்டு. அது போதாதென்று, கலைஞரின் செல்லப் பிள்ளை என்ற ஹோதாவில் வலம் வந்த தயாநிதி மாறன், தன் விரும்பிய படியெல்லாம் நடக்கிறது என்ற நினைப்பில், தாத்தாவுக்குப் பிறகு தான் தான் என்று நினைத்திருக்க வேண்டும். அந்த நினைப்பு எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்ந்திருப்பார்.

    வெளியே செல்லும் அமைச்சர்களுக்கு அந்தத் துறையைச் சார்ந்த அதிகாரபூர்வ அமைப்புகள் வழக்கமாகக் கொடுக்கும் பாராட்டுப் பத்திரத்தை வைத்து ஹிந்து போன்ற நாளிதழ்கள்
    ஜல்லி அடிப்பதன் பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.

    நாஸ்காம் கொடுத்த அறிக்கையில், தயாநிதி மாறனுக்கு பாராட்டு மட்டுமல்லாமல், இந்த மாற்றத்தினால், தொலைத் தொடர்புத் துறையில் பெரிதாக மாற்றம் ஏதும் இருக்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

    அதான் விஷயம். அரசாங்கம், அமைச்சர்கள் கையில் இல்லை. திறமையான செகரடட்டரிகள் கையில் தான்…

    [* தகவல் உதவி : நிதியமைச்சகத்தின் இணையத்தளம்]

    பகுப்புகள்: arasiyal

    நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

    ஏப்ரல் 22, 2007 · 11 மறுமொழிகள்

    திடீரென்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கே கோட் சூட் அணிந்த கனவான்கள் நாலைந்து பேர் வட்டமாக அமர்ந்து, நாராயண மூர்த்தி, அடுத்த குடியரசுத் தலைவராக வரலாமா கூடாதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவுட்லுக்கின் வினோத் மேத்தா தவிர மற்ற யாரையும் அடையாளம் தெரியவில்லை.விவாதத்தின் போக்கு, நாராயணமூர்த்தி அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. ஸ்க்ராலிலே, நாராயணமூர்த்தி, தலைவராக வருவதற்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள், பங்கு பெற்ற நேயர்கள்.

    இந்த அபிப்ராயம் எங்கேயிருந்து துவங்கி இருக்கும் என்று புரியவில்லை. ஒரு வேளை, அவ்வப்போது, அரசாங்கத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார் என்பதால் இருக்குமோ? அல்லது, இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்தை வைத்து நடத்துகிறவருக்கு, இந்தியாவை கட்டிமேய்க்கத் தெரியாதா என்று ஊடகங்கள் நினைத்திருக்கலாம். அல்லது ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்ததும் ( இருந்ததாகச் சொன்னதும்), பின்னாளின் மனம் திருந்தி முதலாளியானதும், இந்து சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதும், காங்கிரஸ், வலது சாரி, இடது சாரி பெருந்தலைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வகையில்லை என்பதாக இருக்குமோ? will you become a president ? என்று பிரணாய் ராய் கேட்ட கேள்வியை, ஊதி ஊதிப் பெருசாக்கி, இன்றைக்கு, அனேகமாக, அடுத்த ஜனாதிபதி நாராயண மூர்த்திதான் என்று நினைக்க வைத்த ஊடகங்களின் பலம், எனக்கு வியப்பு ஏற்படுத்தவில்லை, மாறாக அச்சத்தையே தருகிறது.

    ********

    தனிப்பட்ட நோக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசியல் பதவி மீதும் எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. குறிப்பாக, ஜனாதிபதி என்கிற ரப்பர்ஸ்டாப் பதவியில், யார் வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை என்கிற போது, அப்பதவிக்கு நாராயணமூர்த்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் மட்டும் என்ன பிரச்சனை? ஒன்று மில்லைதான்… ஆனால், அவரை முன்மொழிபவர்களும், வழிமொழிபவர்களும் அக்கருத்துக்கு ஆதரவாகச் சொல்லும் விஷயங்கள், சகிக்க முடியாதவையாகவும், பலநேரங்களில் அபத்தமாகவும் இருக்கின்றன.

    *******

    கற்பிதம் ஒன்று : நாராயண மூர்த்தி, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். அவர் வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது.

    உண்மை : குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் வந்தாலும், ஒன்றும் கழட்டமுடியாது. கையெழுத்துக்காக ஏதாவது காகிதம் வந்தால், அதிலுள்ள விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால், காலம் தாழ்த்தலாம். அவ்வளவே.. மற்றபடி, மத்திய அரசு சொல்வதைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும்.

    கற்பிதம் இரண்டு : அவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி. அவரால் இந்தியாவை ஆள முடியாதா?

    உண்மை : தான் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வருபவர்களை மட்டும், நியமித்து, வேலை வாங்கி, கட்டிமேய்ப்பதற்கும், இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட கும்பலை அவ்விதமாக கட்டி மேய்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தன்னுடைய சட்டதிட்டத்துக்கு ஒத்துவராதவர்களை, தன் அதிகார எல்லையில் இருந்து தூக்கி எறிய முதலாளி நாராயணமூர்த்திக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை நாட்டின் தலைவருக்குக் கொடுக்க முடியுமா?

    கற்பிதம் மூன்று : அவர் ஒரு மிகச் சிறந்த பிசினஸ்மேன். சில ஆயிரங்கள் சொச்சத்தில், நிறுவனத்தைத் துவக்கி, இப்பொது பல பிலியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கியவர். குடியரசுத் தலைவராக வந்தால், நாடு பொருளாதார ரீதியில் முன்னேறும்.

    உண்மை : பொருளாதாரக் கொள்கைகளுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர் மிகச் சிறந்த பிசினஸ்மேனா என்பதிலேயே,எனக்குச் சந்தேகங்கள் உண்டு. அப்படியே இருந்தாலும், அது, குடியரசுத் தலைவர் தெரிவுக்கான காரணியாக இருக்க முடியாது.

    கற்பிதம் நான்கு : அவர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர்.

    உண்மை : இருக்கலாம். எனக்குத் தெரியாது.

    கற்பிதம் ஐந்து : நாரயணமூர்த்திதான், இந்திய ஐடி துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இன்றைக்கு நாடே சுபிட்சமாக இருப்பது ஐடி துறையின் அசுர வளர்ச்சியால் தான். அவரை, நாட்டின் தலைவர் ஆக்கினால் தான் என்ன?

    உண்மை : ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்பது போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு பிரைவேட் என்டர்பிரைஸின் தலைவர். தன் நிறுவனத்துக்கும், பங்குதாரர்களுக்கும் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து, லாபம் ஈட்டினார். தன் நிறுவனத்துக்கு அப்பால், தேசிய அளவில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு என்ன என்பது கேள்விக்குரியது. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு, ஐஐஎம் /ஐஐடி போன்ற உயர்பீட கல்வி நிலையங்களில், இட ஒதுக்கீடு குறித்த அவரது கருத்துக்கள், அபத்தமானவை. எல்லாமே நல்ல விஷயம் தான் என்று நேராக, மேம்போக்காக யோசிக்கும் அப்துல் கலாம் போன்றவர்களை விட, கையில் அதிகாரம் கிடைத்தால், ஜஸ்ட் லைக் தட், சரி செய்துவிடலாம் என்று நினைக்கும் நாராயணமூர்த்தி போன்றவர்கள் ஆபத்தானவர்கள். இந்தியா , இன்ஃபோசிஸ் நிறுவனம் போல ஒற்றைப்படைத் தன்மை கொண்டதல்ல.

    கற்பிதம் ஆறு : நாராயணமூர்த்தி போல ஒருவர் நாட்டின் தலைவராக வந்தால், உலக அரங்கில், நம் நாட்டுக்கு மரியாதை கிடைக்கும்.

    உண்மை : நல்லா வருது வாயிலே…….

    பகுப்புகள்: arasiyal · bijines

    Chennai Sangamam Scandal – Jaya TV

    மார்ச் 5, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

    நேற்று இரவு, சென்னை சங்கமம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஜெயா டிவியில் வெளியானது.

    தமிழ்ப் பண்பாடு, தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றை அரங்கேற்றும் விதமாக கடந்த வாரம் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் பின்புலத்தில், வெளிவராத தகவல்களும் மர்மங்களும் இருக்கின்றன என்று ஜெயா தொலைக்காட்சியின் புலனாய்வுக் குழு(?) , ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பை அளித்தது. அது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்,

    * சென்னை சங்கமம், இளவரசி கனிமொழியை, மன்னர் கருணாநிதி , அரசியலுக்குக் கொண்டு வரும் நிகழ்வு. ( அப்படித்தான் ஜெயாவிலே சொன்னார்கள்)

    * இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்திய தமிழ் மையம் என்கிற அமைப்பின் தலைவரான ஜெகத் கஸ்பாருக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கு, பணம் சேகரிக்கும் ஒரு வெளிநாட்டு அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    * இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆகும் செலவுக்கு, உச்சவரம்பு இல்லை என்று, விழா நடத்துனர்களுக்கு ஆதரவாக அரசாணை பிறப்பித்தது.

    சோ-வும், ஞாநியும் , குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகப் பேசினார்கள். சோ- வழக்கம் போல ஜால்ரா அடித்தார் என்றாலும், ஞாநி, நிகழ்ச்சியை நடத்த, தமிழ்மையம் என்கிற அமைப்பைத் தன்னிச்சயாகத் தேர்வு செய்த முறை பற்றி மட்டுமே பேசினார். தமிழகத்தில், நாட்டுப்புறக் கலைகள் மீது ஈடுபாடு, செயல்பாடு கொண்ட அமைப்புகள் ஏராளமாக இருக்கும் போது, கனிமொழி உறுப்பினராக இருக்கும் தமிழ்மையத்தைத் தேர்வு செய்தது எப்படி என்று கேட்டார்.

    என் பார்வையில்…. ஜெகத் கஸ்பாருக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்று நிறுவ அவர்கள் செய்த முயற்சி ரொம்ப காமெடியாக இருந்தது. எங்கெஙகோ, சுற்றி வளைத்துச் சொன்னது அபத்தமாக இருந்தது. [ அப்படிப் பார்த்தால், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான புகைப்படக் கலைஞர் சுபா.சுந்தரம், சோவுக்கு, ஒரு காலத்தில் நண்பர். துக்ளக்கில் புகைப்படக் கலைஞராக இருந்திருக்கிறார். சோ இயக்கத்தில் வெளி வந்த சில பழைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் 'ஸ்டில்ஸ் : சுபா. சுந்தரம்" என்றும் பார்த்த நினைவு. அதை வைத்து, சோவுக்கு தனி ஈழப் போராளிகளுடன் தொடர்பு உண்டு என்று சொன்னால், சோவின் அரசியலை வெறுப்பவர்கள், ஒரு வேடிக்கைக்காகக் கூட ஓத்துக் கொள்ள மாட்டார்கள்.]

    மாநிலம் தழுவிய, அரசுப் பணம் புழங்கும் விழாவில், செலவினங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது இயல்பு. முறையாகச் செலவு செய்யப்படவில்லை என்ற சந்தேகம் இருந்து, அதற்காக ‘புலனாய்வுக் குழு’ வேலை செய்து, ஆதாரங்களைக் காட்டி இருந்தாலாவது உருப்படியாக இருந்திருக்கும்.

    அத உட்டுட்டு….

    பகுப்புகள்: Television · arasiyal

    karuppu veLLikkizamai

    நவம்பர் 8, 2003 · கருத்துத் தெரிவிக்கவும்

    [ இந்து ஆசிரியர் கைது செய்யப்பட்ட பொழுது, பா.ராகவன் எழுதிய ;கருப்பு வெள்ளிக்கிழமை என்க்ற கட்டுரைக்கான எதிர்வினை இது ]

    ஒரு சின்ன திருத்தம்.

    அது படுதலம் சுகுமாரன் எழுதிய ஜோக்கில்லை. பூங்கோதை எழுதியது.

    அந்த ஜோக்,

    “அங்கே மேடையிலே உட்கார்ந்திருக்கறதுலே, யார் எம்.எல்.ஏ ? யார் மந்திரி?”

    ” பிக்பாக்கெட் மாதிரி இருக்கிறது எம்.எல்.ஏ. கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது
    மந்திரி”

    இப்போது சிரிப்பே வராத இந்த ஜோக்குக்காகத்தான் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பின், அவர் அரசு மேல்வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்று, கிடைத்த சொற்ப பணத்தை அவரது அலுவலகத்தில் ·ப்ரேம் போட்டு மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

    பத்திரிக்கை உலகின் மீது கையை வைத்தால், அவ்வளவுதான் என்று உதார் விடுவதெல்லாம் இப்போதைக்குசும்மாதான். டெஸ்மா நினைவிருக்கிறதா ? ஒண்ணும் பண்ண முடியாது. வழக்கு போட முடியும். போட்டு , பிறகு?வழக்கு வாய்தா, அரஸ்ட்டு வாரண்டு என்றால் நெஞ்சு வலி, ரிக்கார்ட் டான்ஸ், ஆள் வைத்து அடிப்பது…. ஒண்ணும்செய்ய முடியாது.

    சென்னைவாசிதானே நீங்கள்? தினசரி பேப்பர் வாசிப்பவர்தானே? அப்படியானால் தெரிந்திருக்குமே?

    அடிப்படையில் தவறு செய்தது நீங்களும் நானும் .

    திருடனுக்கு ஓட்டுப் போடுவதா, பிக்பாகெட்டுக்கு ஓட்டு போடுவதா என்று மகா கனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீசோ.ராமஸ்வாமியனந்தா சுவாமிகள் கேட்ட போது, பிக்பாக்கெட் என்று நினைத்து &*&*&*& க்கு ஓட்டுபோட்டது நீங்களும் நானும். இப்போது பத்திரிக்கை காரன் மீது கை வைத்தால், கேட்க என்ன உரிமை?

    ஜெயலலிதா பதவி விலக வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு. பால் தக்காரேவே தோற்றுப் போகும் அளவுமிகத் திறமையாக ரிமோட்டை இயக்கி, அரசு என்ற இயந்திரத்தை கேலி செய்த போது, இந்துவோ அல்லது,பா. ராகவனோ என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்த ‘ நான் வெறும் ரிப்போர்ரட் மட்டுமே’ என்றவிட்டேத்தித் தனம் தானே இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது?

    என்ன சகோதர பாசமா?

    ஆட்சி அமைச்சாங்க. கொஞ்ச நாள்ளே ஆட்சி போச்சு. ஆட்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கோவைவேளாண்மை பல்கலைகழக மாணவிகளை பஸ்ஸிலே உயிரோடு வைத்துக் கொளுத்த வேண்டும். பதவி மீண்டும்கிடைத்ததா இல்லையா?ஆளுங்கட்சியின் இந்த தீர்க்க தரிசனம் பற்றி நான்கு நாள் தொடர்ந்த ரிப்போர்ட்டிங்தவிர வேற ஏதாவது? அந்த செயலுக்கு கண்டனம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பற்றிய செய்தி?டிரஸ்ட் அமைத்து அந்த குடும்பத்துக்கு நிதி திரட்டி தந்த ‘ தமிழம்’ ( இதிலே .ஐயா இராம.கிதொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.) என்ற அமைப்பினைப் பற்றி எங்காவது மாஸ் மீடியாவிலே செய்திஒன்றை காட்டிடுங்கள் பார்ப்போம்?

    மணி சங்கர் ஐயரை ஆள் வைத்து அடிப்பார்கள். ஆனால் அதை பற்றி செய்தி சொல்லும் போது, மட்டும், it is alleged மற்றும் reportedly என்ற tag உடன் வரும். ஆனால் இது மட்டும் mis-adventure என்றுஅடித்துச்சொல்கிறார் என்.ராம்.

    அடித்துச் சொல்கிறேன். ஒன்றும் நடக்காது. வழக்குகள் வாபஸ் ஆனாலும், பிச்சை போடுகிறார் போலத்தான்அதைசெய்வார். ஹிந்து டெ·பமேஷன் சூட் போட்டாலும், ஒன்றும் நடக்காது.ஆஜ்தக் நிருபர் ஜெயஸ்ரீ மேட்டர் என்னாச்சு?சன்டிவி நிருபர் தாக்கப்பட்ட வழக்கு என்னாச்சு? ஓட ஓடவிரட்டியடிக்கப் பட்ட கே.பி சுனிலின் தற்போதையபுகுந்த வீடு எங்கே? ( அவர் புத்திசாலி :-) )

    சுரேஷ், என் கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை என்று நீங்கள் கேட்டதற்கு ஹரியண்ணா சொன்ன
    பதிலைபார்த்தீர்கள் இல்லையா? இதை விட பெரிசாக ஒன்று வந்தால் முன்னது அமுங்கி விடும். இதே தத்துவம்தான்பத்திரிக்கைகளுக்கு.

    என்ன, கோபாலுக்கு நடத்திய கூட்டம் போல, இதுக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தலாம். அல்லதுஇன்டெலிஜென்ஸ் டிபார்மெண்ட்டின் இன்·பில்ட்ரேஷன் பற்றிய பயத்தால் கூட்டம் நடக்காது போகலாம்.வீரபாண்டியன் நேருக்கு நேர் வைத்து ஆளுங்கட்சியுடன், எப்போதோ ஒரு முறை தொடர்பு கொண்டிருந்த ஒருத்தரைபோட்டு வறுத்தெடுக்கலாம். ஓ… ஹிந்து தேசிய நாளிதழ் இல்லை? அப்படியானால், பிக்·பைட்டிலும் நிச்சயம்அதற்கு இடம் உண்டு. 24 X 7 சானலின் டி.ஆர்.பி ரேட்டு ஏறி, கோல்கேட் பேஸ்ட்டும் , வெர்ஸா காரும்,சானிட்டரி நாப்கின்களும் அதிகம் விற்பனை ஆகும்.

    இது அராஜகம் என்று டெல்லியில் இருந்து குரல் கொடுக்கும் இல. கணேசன், கூட்டணி பற்றிய பேச்சு வரும்போது, இதை நினைவில் வைத்திருப்பாரா?

    இது ஒரு புறம் இருக்க, இன்னொருத்தர் மனித சங்கிலி நடத்தி, அடுத்த ஆட்சிக்கான அஸ்திவாரத்தைதோண்டுவார். டான்சி தீர்ப்பு வந்தால், அந்த சங்கிலி பலப்படும். சில்லுண்டிக் கட்சிகளுடன் பேரம் துவங்கும்.நீங்கள் குத்தப் போகும் ஓட்டுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். நீங்களும் வெறுங்கழகத்துக்கோ, ஸ்பெஷல் கழகத்துகோ ஓட்டுப் போடப் போகிறீர்கள். திரும்பவும் யாரவது ஆட்சிக்கு வந்து ஒருசனிக்கிழமை அன்று சேகர் குப்தாவையோ, மாலனையோ , ஏதாவது காரணம் சொல்லி கைது செய்தால், வேறுயாராவது கருப்பு சனிக்கிழமை என்று கட்டுரை எழுதுவார்கள். ஏன் ராகவனே கூட எழுதலாம்.

    மிஸ்டர். ராகவன், என் கோபம் உங்கள் மீது அல்ல. எனக்கு அநியாயம் என்றால் மட்டும் உடனடியாக ஓங்கிகுரல் கொடுப்பேன். ஆனால், மற்ற விஷயங்களில் ஆராய்ந்து பார்த்து, நடு நிலைமையுடன் யோசித்து, தீரஆராய்ந்து, உண்மை நிலை என்ன வென்று அறிந்த பின், எனக்கு மூடு இருந்தால் மட்டுமே நான் எழுதுவேன் என்றநிலைப்பாட்டின் மீது மட்டுமே. அதுவும், பத்திரிகை உலகப் பிரதிநிதி என்றபடியால் தான் இந்தகேள்விகளை , ஐயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

    (ரா.காகிக்கு இத்தனை தூரம் அரசியல் ஆகாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அல்லது யாராவது
    அவர்கள் பிளாகிலே இடம் கொடுத்தால் எழுதுகிறேன் )

    Nov 8, 2003

    பகுப்புகள்: RKK · arasiyal